மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வரலாறின் பிள்ளை – இஸ்ரேல்

ஆச்சாரி

Sep 1, 2011


இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்(Tel Aviv ) செல்வதற்காக மத்திய தரைக்கடல் நாடான சைப்ரஸ் இல் உள்ள நிகோசியா நகர விமான நிலையத்தில் நுழைந்ததில் இருந்து எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. ஒரு நாட்டின் விமான நிலையத்தில் பொதுவாக அந்த நாட்டின் அதிகாரிகளே இருப்பார்கள். ஆனால் இங்கேயோ இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் சல்லடையாக என்னை சோதித்த பின்னரே என்னால் விமானத்தில் நுழைய முடிந்தது. தன்னுடைய நாட்டு மக்களை பாதுகாக்க இஸ்ரேல் நாடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இது ஒரு சிறிய உதாரணம். தன்னுடைய மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் யாரையும் நம்புவதில்லை என்பதற்கும் இது ஒரு உதாரணம்.

டெல் அவிவ் விமான நிலையத்தில் இறங்கி இரவில் நெடுஞ்சாலையில் டெல் அவிவ் இல் இருந்து ஹைபா(Haifa)  விற்கு வாடகைக் கார் விரைந்து கொண்டிருந்த போது இஸ்ரேல் எவ்வளவு வறண்ட பூமி என்பதும், அந்த வறண்ட பூமியை அவர்கள் எப்படி ஒரு நவீனமான, தொழிநுட்பத்தில்  தலைசிறந்த  நாடாக  மாற்றி இருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.  அறிவியல் ஆராய்ச்சியில் உலகின் தலை சிறந்த நாடுகளில் ஒன்று என்பதற்கு சான்றாக சாலையின் இரு மருங்கிலும் உலகின் தலை சிறந்த நிறுவனங்களின் பெயர்கள் வந்து போயின. எல்லா நிறுவனங்களும் பெரும்பாலும் இங்கு ஆராய்ச்சிக் கூடங்களை வைத்து உள்ளன.

இஸ்ரேல் ஹைபாவில் நான் தங்க வேண்டிய விடுதியில் நுழைந்து , அறை சாவியை வாங்கி கொண்டு, லிப்ட் இல் ஏறிய எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. நான் செல்ல வேண்டிய தளம் பத்தாவது தளம். நான் ஏறியது மூன்றாவது தளம். ஆனால் லிப்ட் நான்கு, ஐந்து என எல்லா தளங்களிலும் நின்று சென்றது. இவ்வளவுக்கும் லிப்ட் இல் நான் மட்டுமே இருந்தேன். எந்தத் தளத்திலும் யாரும் ஏறவில்லை.

அறைக்கு சென்ற உடன் விடுதியின் வரவேற்பறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் சொன்ன பதில் என்னை திகைப்பில் ஆழ்த்தியது. இன்று சனிக்கிழமை.  யூத மத வழக்கப்படி இன்று மின்சாரம் பயன்படுத்த கூடாது. அதனால் இந்த லிப்ட் மத நம்பிக்கை உள்ளவர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொத்தானை அழுத்தாததால் அவர்கள் மின்சாரம் பயன்படுத்தியதாக இருக்காது என்றார்!!!! இது தான் இஸ்ரேல். முரண்பாடுகளின் தலைநகரம். அறிவியலில் அளப்பரிய சாதனைகள் செய்யும் நாடு. ஆனால் தனது மத வழக்கத்தை பாதுகாக்க , அல்லது பாதுகாப்பது போல காட்ட எது வேண்டுமானாலும் செய்யும் நாடு. அது மட்டும் அல்ல. உலகில் உள்ள எந்த யூத மதத்தை சேர்ந்தவரும் தாங்கள் யூதர் என நிரூபித்தால் இங்கு வந்து வசிக்கலாம். உலகில் ஒரு மதத்திற்காக உள்ள நாடு இஸ்ரேல் மட்டும் தான்.

அடுத்த நாள் சாலையில் எனக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. நடந்து செல்லும் போது என்னை தாண்டி ஒரு பெரிய ராணுவ கவச வண்டி ( tank  ) சென்றது. அது வரை நான் கவச வண்டியை பார்த்தது இல்லை. சாலையில் சென்ற இளைஞர்களில் பலர் கையில் அதிநவீன இயந்திர துப்பாக்கிகள். இஸ்ரேல் எந்த அளவு ராணுவ மயப்படுத்தப்பட்ட நாடு என்பது எனக்கு அப்போது தான் உறைத்தது. அந்த நாட்டில் ஒவ்வொருவரும் கட்டாய ராணுவ பயிற்சிக்கு செல்ல வேண்டும். இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு அந்த மக்களை மனதளவில் எப்போதும் ஒரு விளிம்பில் வைத்து இருக்கிறது என்பதும் எனக்குப் புரிந்தது.

ஹைபா ஒரு துறைமுக நகரம். யூத மக்கள் குடியேறுவதற்கு முன்னர் அது ஒரு அரபு நகரமாக இருந்தது. தற்போது பத்து சதவீதத்திற்கும் குறைவான அரபு மக்களே அங்கு வசிக்கின்றனர். பெரும்பாலோனோர் ரஷ்யா போன்ற இடங்களில் இருந்து வந்து குடியேறிய யூத மக்கள். ஹைபா வில் ஒரு துறைமுகம் இருக்கிறது. இது இஸ்ரேலில் ஒரு முக்கிய துறைமுகம். ஹைபா வில் உள்ள பஹாய் தோட்டம் மிக அழகானது. ஹைபா வில் உள்ள ஒரு மலை உச்சியில் இருந்து அடிவாரம் வரை மிக அழகாக இந்தத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் இதன் உச்சியில் இருந்து ஹைபா நகரை பார்ப்பது ஒரு இனிய அனுபவம்.

அந்த வார சனிக்கிழமை வரலாற்று புகழ் மிக்க ஜெருசலேம் நகருக்கு சென்றேன். ஒரு உயரமான இடத்தில் இருந்து அந்த நகரத்தை பார்ப்பதற்கு ஏதோ கனவு நகரத்தை பார்ப்பது போல இருந்தது. அந்த நகரம் முழுவதும் சலவைக்கல் கட்டிடங்கள். ஜெருசலேம் நகரம் இரண்டு பிரிவாக இருக்கிறது. ஒரு பகுதியில் அரபு மக்களும், மற்றொரு பகுதியில் யூத மக்களும் வசிக்கிறார்கள். அரபு மக்கள் வசிக்கும் பகுதி சரியாக பராமரிக்கபாடாதது போல இருந்தது. நான் அங்கு இருந்த இரண்டு நாட்களும் அரபு மக்கள் எதாவது போராட்டம் செய்வதும், அதை காவல் துறை அடக்குவதும் அடிக்கடி நடந்தது. உண்மையில் ஜெருசலேம் நகருக்காக நடந்த போர்கள் போல வேறு எந்த நகரத்திற்கும் நடந்து  இருக்குமா என்பது சந்தேகம் தான். அது இன்று வரை தொடர்வது தான் வேதனை. இங்கு ஒவ்வொரு அடி நிலத்திற்கும் இன்று வரை சண்டை தொடர்கிறது.

அதன் பின்னர்   ஜெருசலத்தில்  உள்ள மேற்கு சுவர் அல்லது அழுகும் சுவர் ( wailing  wall  ) சென்றேன். இங்கு உலகம் முழுவதும் உள்ள யூதர்களும் மற்ற  மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள். இந்த சுவர் இருந்த இடத்தில் யூதர்களின் பழைய கோவில் இடிக்கப்பட்டதால் அதை நினைவு கூறும் விதத்தில் இங்கு யூதர்கள் வந்து வழிபடுவது வழக்கம். அங்கிருந்து உயர்ந்த கோவில் ( temple  mount  ) என்னும் இடத்திற்கு சென்றேன். இங்கு அப்துல் மாலிக் என்னும் அரேபிய மன்னரால் கட்டப்பட்ட  கற்கொபுரமும் ( dome  of  the  rock )  அல் அக்சா எனப்படும் மசூதியும் இருக்கின்றன.  இசுலாமிய மக்கள் நபிகள் இங்கிருந்து வானுலகம் சென்றதாக நம்புகிறார்கள். இது உலகெங்கும் வாழும்  இசுலாமிய மக்களுக்கு மூன்றாவது முக்கியமான வழிபாட்டுத்தளம். யூதர்கள் இங்கு தான் ஆபிரகாம் தன்னுடைய மகனை பலி கொடுத்தார் என நம்புகிறார்கள்.  இந்த இடத்திற்கு அவர்களும் உரிமை கொண்டாடுகிறார்கள். அதனால் இந்த இடம் இரு தரப்பு மக்களுக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறி விட்டது.

ஜெருசலேம் நகர் முழுவதும் மிகப் பழமையான சர்ச்சுகள், யூதக் கோவில்கள், மசூதிகள் போன்றவற்றை சுற்றிப் பார்த்த போது எனக்கு ஒன்று புரிந்தது. ஜெருசலேம் நகர் போல உலகின் மத நம்பிக்கையை பாதித்த நகரம் வேறு ஒன்றும் இல்லை. உலகின் மிகப் பழமையான மூன்று மதங்களின்  வரலாறு இந்த நகரின் வரலாறோடு பிணைந்து கிடக்கிறது. ஜெருசலத்தில் என்னுடைய பயணத்தை முடித்து கொண்டு இயேசு பிறந்த இடமான பெத்லேகேம் சென்றேன். இங்கு ஒரு சிறிய சர்ச் இருக்கிறது.அவ்வளவாக கூட்டம் இல்லை.  இந்த இடம் பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.  எங்கு நோக்கினும் வறுமையை காண முடியும்.

இரண்டு நாட்களில் வந்த வேலையே முடித்து விட்டு டெல் அவிவ் விமான நிலையம் வழியாக சைப்ருஸ் திரும்பும் போது என்னுடைய மனதில், இன்னும் இஸ்ரேல் பற்றிய பிரமிப்பு அடங்கவில்லை. எந்த வசதியும் இல்லாத , இயற்கை வளமும் இல்லாத ஒரு நாடு எந்த அளவு முன்னேற முடியும் என்பதற்கு இஸ்ரேல் ஒரு உதாரணம்.  அதே சமயம் இஸ்ரேல் அருகில் வாழும் பாலஸ்தீனிய மக்களின் வறுமையும், அவர்கள் உரிமைக்கான போராட்டமும் என்னுடைய மனதில் நெருடலை ஏற்படுத்தின.

Avoid http://www.essaysheaven.com/ content and assessment overload which is liable to produce a surface approach to learning see chapter

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “வரலாறின் பிள்ளை – இஸ்ரேல்”
  1. செந்தில் says:

    வரலாறு + இன் = வரலாற்றின்

  2. Gandhi says:

    Good Article. It would be great if you write a story of Isrel.

  3. மயிலாடுதுறை சிவா says:

    மிக அருமையான பதிவு.

    இன்னும் கொஞ்சம் செய்திகளை கொடுத்து இருக்கலாம்.

    நாம் வாழும் காலத்திற்குள் “பாலஸ்தீனம்” விடுதலை அடைய வேண்டும்…

    நன்றி
    மயிலாடுதுறை சிவா…

அதிகம் படித்தது