மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வழக்கு எண் 18/9 – விமரிசனம்

ஆச்சாரி

Jun 1, 2012

வழக்கு விசாரணை மற்றும் அதன் பின்னணி மூலம் விவரிக்கப்படுகிறது இப்படத்தின் கதை. வேலு (ஸ்ரீ) சாலையோர கடையில் வேலை பார்க்கும் இளைஞன். அதன் அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வேலைக்கார பெண்ணாக ஜோதி (ஊர்மிளா மகந்தா).ஜோதி வேலை பார்க்கும் வீட்டு முதலாளின் மகளான ஆர்த்தி(மனிஷா யாதவ்)  மற்றும் அதே குடியிருப்பில் வசித்து வரும் மாணவர் தினேஷ் (மிதுன் முரளி) . வேலுவுக்கு ஜோதி மீது பூக்கும் காதல், தினேஷ் ஆர்த்தி இடையிலான உறவு என இரண்டு கோடுகளாய் பயணிக்கும் இவர்களின் கதை, ஒரு புள்ளியில் இணைகிறது. தினேஷ் தனது அலைபேசியில் ஆர்த்தியின் தனிப்பட்ட அந்தரங்க தருணங்ளை கைப்பற்றி அதை தன் நண்பர்கள் பார்வைக்கு எடுத்துச் செல்கிறான். அதை ஆர்த்தி தெரிந்துகொள்ளும்போது, அவள் திகைப்பும், பயமும், கோபமும் கொண்டு    தினேஷை விட்டு விலக ஆரம்பிக்க, அதனால் சினமுறும் தினேஷ் ஆர்த்தி மீது அமிலம் ஊற்ற முடிவெடுக்கிறான். ஆனால் தற்செயலாக அதற்கு ஜோதி பலியாகிறாள். அரசு மருத்துவமனையில் தீக் காயத்துடன் இருக்கும் ஜோதியிடம் இருந்து வழக்கு விசாரணையை தொடங்குகிறார்  காவல்துறை அதிகாரி குமாரவேல்(முத்துராமன்). இந்த வழக்கில் யார் யார் சம்மந்தப்படுத்தப்படுகிறார்கள்? இறுதித் தீர்ப்பு என்ன? என்பது தான் திரைப்படத்தின் முடிவு.

இக்கதைக்கு மிகவும் நேர்த்தியான உயிரோட்டமுள்ள திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல். மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் ஏதும் இன்றி “உண்மைதான் அழகு – அழகு தான் உண்மை” என்ற சொல்லுக்கு ஏற்ப உள்ளது உள்ளபடி சொன்ன இயக்குனர் பாராட்டுக்குரியவர். வேலுவின் துயர்மிகு குடும்ப  வாழ்க்கை தொடங்கி, விவசாயமின்றி மண்மூடி மறைந்து போகும் ஊர் மக்களின் கவலை, பெற்றோர் இறந்ததைக் கூட மறைத்துவிடும் முறுக்குக் கம்பெனி முதலாளி, நடைபாதையில் பசி மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவனை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல, அவன் வயிற்றுப் பசியையும் தீர்த்து, வேலையும் வாங்கிக் கொடுக்கும் ஒரு பாலியல் தொழிலாளி, கிராமத்து கட்டைக் கூத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி வரும் சின்னசாமி, மகளைக் காக்க எல்லோர் மீதும் எரிந்து விழும் வயதான வேலைக்காரி, நீதிமன்ற வாசலில் தாக்கப்படும் ஒரு பெண்ணை காப்பாற்ற முன்வரும் பெண் வழக்கறிஞர்கள் என அனைத்தும் சமுதாய சிந்தனை உள்ள பதிவு. திரைக்கதையில் ஆபாச காட்சிகளை புகுத்த வாய்ப்புகள் பல இருந்தும் அதை தவிர்த்த இயக்குனரின் கண்ணியம் போற்றப்பட வேண்டிய ஒன்று.

விஜய் மில்டனின் ஒளிப்பதிவு, பிரசன்னாவின் இசை மற்றும் கதாபாத்திரங்களின் கச்சித நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத்  தவறாது என்பதில் ஐயம் இல்லை. சுய பணிகளுக்கு நடுவில் தன் பிள்ளைகளை கவனிக்க மறக்கும் மாடிவீட்டு பெற்றோர்களுக்கு இத்திரைப்படம்  ஒரு அபாய மணி.

பள்ளி செல்லும் மாணவர்கள் போதை மருந்துகளை பயன்படுத்துவது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

வியாபார நோக்கை பெரிதாய் கருத்தில் கொள்ளாமல் நேர்மையான படைப்பைத் தர முன்வந்த இப்படக் குழுவினருக்கு  நன்றி..

உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவோம் என்ற தமிழ் சினிமாவின் தாகத்துக்கு இந்த வழக்கு எண் 18/9   நிச்சயம் ஒரு இளநீர்.

It is important for your teen to know that trust is built over time, gps phone tracker free within www.besttrackingapps.com but and breaking the rules can damage that and take a long time to rebuild

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “வழக்கு எண் 18/9 – விமரிசனம்”
  1. rajendran.r says:

    படம்குறித்து…..
    அடித்தட்டுமக்கள் வாங்கிய கடனைத் திருப்பித் தர,

    உண்மை அற வாழ்வு வாழ முயன்று தோற்க
    மேல்தட்டு மக்கள் போலி வாழ்வுச் சுமையும்
    தாங்கும் வல்லமையற்ற காட்சி பிம்பம் பாராட்டுகள்

அதிகம் படித்தது