மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாகை சூட வா – திரை விமர்சனம்

ஆச்சாரி

Nov 1, 2011

இன்றைய சூழலில் வரும் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை தான் “வாகை சூட வா. 1960 களில் நம் கிராமங்களின் நிலையை அப்படியே பிரதிபலிக்கின்றது இப்படம். 60 களில் மூடநம்பிக்கை, படிப்பின்மை, அறியாமை – இவைதான் பெரும்பாலான கிராமங்களின் நிலை.  இப்படிப்பட்ட படங்களின் வழியாக மட்டுமே அக்கால மக்களின் வாழ்க்கை சூழலை இன்றைய இளைஞர்கள் காண முடியும்.

நகரத்தில் படித்த வாலிபன் ஒருவன் மாற்றத்தை கொண்டுவர விரும்பி, அப்படி ஒரு கிராமத்திற்குள் சென்றால், அவன் நிலை எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்பதையும் அவன் சந்திக்கும் சவால்களையும், இப்படம் தெள்ளத்தெளிவாக எடுத்து இயம்புகிறது.  இதுபோல வாலிபன்  ஒருவன், ஒவ்வொரு கிராமத்திற்கும் கிடைத்திருந்தால், தமிழகம் தலை நிமிர்ந்து நின்று இருக்கும். இப்போது படத்திற்குள் பயணிப்போம்.

முழுவதுமாக நகரத்திலேயே வளரும் கதையின் நாயகன் விமல். ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்துவிட்டு அரசாங்க வேலைக்காக காத்திருக்கிறான். அந்நேரம் அவனுக்கு  கிராம சேவை என்ற தனியார் அமைப்பிலிருந்து, கண்டெடுத்தான் காடு என்ற ஒரு கிராமத்தில் ஆசிரியர் பயிற்சி எடுக்க வாய்ப்பு வருகிறது.  ஆனால் அவனுக்கோ கிராமத்திற்கு சென்று பயிற்சி எடுக்க  விருப்பம் இல்லை.  அப்பாவிற்கு எப்படியாவது இவனை அரசாங்க வேலையில் பணி அமர்த்த வேண்டும், அதற்கு இந்த ஆசிரியர் பயிற்சி ஒரு முத்தாய்ப்பான தகுதியாகி விடும் என பணிக்கிறார்.  அப்பாவின் ஆசை நிறைவேற்றும் பொருட்டே கண்டெடுத்தான் காட்டிற்குள் நுழைகின்றான்.

கண்டெடுத்தான் காடு –  ஒரு குக்கிராமம், அக்கிராம மக்கள் தம் குடும்பத்தோடு செங்கல் சூளையில் வயிற்று பிழைப்பிற்காய் வேலை செய்கின்றனர். தங்கள் உழைப்பிற்கேற்ற கூலி கிடைக்காததைக் கூட அறியாதவர்கள்.  மழைக்கு கூட பள்ளியில் ஒதுங்காத சிறார், சிறுமியர்கள்.

அந்த கிராமத்தில் நுழைந்தவுடன், அவன் அங்குள்ள வைத்தியர் மூலம் தன நோக்கைத்தைக் கூறி, தங்குவதற்கு ஒரு இடம் கேட்கிறான்.  ஆட்டு கொட்டகையில் தங்க இடம் தருகின்றார் அந்த வைத்தியர். அந்த கிராமத்தில் தேநீர் கடை நடத்தும் ஒரு இளம் பெண், தினமும் சமைத்து தருகின்றேன் என வலுக்கட்டாயமாக தொகை ஒன்றை வசூலித்து விட்டு, சுவையான உணவு தராமல் இருப்பதும், சிறார், சிறுமியர்கள் இவனை ஏளனம், நக்கல், நையாண்டி செய்வதும்,  அங்குள்ள ஒருவர் ஒரு புதிர் கணக்கை போட்டு, பதில் சொல்ல சொல்லுவதும்.  ஒருவன் ஆட்டை வைத்து இவனை  விரட்டி மிரட்டுவதும்,  அந்த மக்களிடம் இவன் எடுத்து கூறியும் யாரையும் இவனிடம் படிக்க அனுப்பாமல் இருப்பதும், ஒரு பைத்தியக்கார தோற்றம் கொண்ட பெரியவர் ஒருவர் சட்டென இவனிடம் வந்து சம்பந்தமில்லாமல் பேசுவதுமாக, இவை அனைத்தும் சேர்ந்து இவனை வாட்டி வதைக்கிறது. ஊரைவிட்டு கிளம்பலாம் என முடிவெடுக்கும் போது, பைத்தியம் போன்ற தோற்றம் கொண்ட பெரியவர் வந்து , இவனிடம் நான் போறேன் , நீ இருக்கணும் என சொல்லி விட்டு , அடுத்தநாள் இறந்து விடுகிறார். அதன் பின் தான், பெரியவர் ஒருவர் மூலமாக புரிந்து கொள்கின்றான், அவர் பைத்தியம் அல்ல , ஞானி என்று.  இங்கே தான் படத்தின் திருப்பு முனையை  நகர்த்துகிறார் இப்படத்தின் இயக்குனர் சற்குணம்.  அதன் பின் , மக்களிடம் லாவகமாக படிப்பின்மையால் தான் , செய்யும் வேலைக்கேற்ற கூலி கூட சரியாக கணக்கு பார்த்து வாங்க முடியாமல் இருக்கின்றீர்கள் என புரிய வைப்பதும். பின், பெற்றோர் அனைவரும் மெல்ல மெல்ல திருந்தி தங்கள் பிள்ளைகளை படிக்க இவனிடம் அனுப்புகின்றனர்.  இதையறிந்த செங்கல் சூளை வைத்திருக்கும் முதலாளி, இவனை அடித்து ஊரைவிட்டு விரட்ட ஆள் அனுப்பி அடிப்பதும், இதைக்கண்ட ஊர் மக்கள் கொதித்து, அடிக்க வந்த அடியாட்களை நையப்புடைத்து  அனுப்புவதும் ஓர் அருமையான காட்சிப் பதிவு.

இதற்கிடையில் தேநீர் கடை வைத்திருக்கும் இளம் பெண் இவன்பால் காதல் வயப்படுவது தனிக்கதை .  பிள்ளைகள் அனைவரும் தாங்களே எழுத படிக்க ஆரம்பிக்கின்றனர்.  இந்நேரத்தில் இவனுக்கு அரசாங்க வேலைக்கு உத்தரவு வருகிறது . ஊரைவிட்டு  போக எத்தனிக்கின்றான். அந்நேரம் சிறுவன் ஒருவன் ஓடி வந்து,  ஐயா,  இங்க பாருங்க எங்க அம்மாக்கும்  எழுத படிக்க நான் கத்து கொடுத்தேன் இது அவங்க எழுதி இருக்காங்க சரி பாருங்க! என சொல்லி நம்மை எல்லாம் மெய் சிலிர்க்க செய்கின்றான்.  இதைப்பார்த்த அவனுக்கு ஊரை விட்டு கிளம்பும் மனநிலை சற்றே மாறுகிறது .

இசையில் நம்மை உறைய வைத்து விட்டார்கள். இந்த சிறந்த படைப்புக்காக  உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.  ஊரை விட்டு  கிளம்பினானா ?  அவன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றினானா  ?  தன்னை காதலித்தவளை கை பிடித்தானா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .  சிறகு எதிர் பார்த்த படம் போன்று அமைந்திருக்கிறது .  இயக்குனர் சற்குணம் – உங்களின் உழைப்பு வீண் போகவில்லை. மிகவும் அருமையான படைப்பு. வாகை சூடி விட்டீர்கள். விமல், இனியா மற்றும் அனைவரின் நடிப்பும் அருமை. இதைப்போன்ற படைப்புகள் தாங்கள் தொடர்ந்து தர சிறகு உங்களை மனமார வாழ்த்துகின்றது .

Section order-essay-online.net/ I writing at the university the ability to work independently and to take an active role in achieving your goals is a valued and crucial skill at the university and beyond

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாகை சூட வா – திரை விமர்சனம்”

அதிகம் படித்தது