மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வால் தெருவை ஆக்கிரமிப்போம்

ஆச்சாரி

Dec 1, 2011

ஜெர்மனியின் சிறந்த தத்துவ ஞானியான ஹெகெல் வரலாற்றுக்கென ஒரு தத்துவத்தை எடுத்துரைத்தார், அது என்னவெனில் “வரலாற்றில் பெரிய மாற்றங்கள் யாவும் முரண்பாடான சிந்தனைகளால் ஏற்பட்டவையே” என்பதாகும். எந்த ஒரு சிக்கலுக்கும் முதலில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சில காலத்துக்கு பிறகு பல்வேறு நிகழ்வுகளும் , யோசனைகளும் இணைந்து முன்னர் ஏற்பட்ட கருத்துக்கு முற்றிலும் மாறான ஒரு எதிர்க்கருத்துக்கு வழிவகை செய்கிறது. இது ஒரு முரண்பாட்டை விளைவித்து பிரச்சினையை கிளப்புகிறது. அதனை தீர்க்க பல்வேறு யோசனைகள் பலரால் சொல்லப்பட்டு கடைசியில் ஒரு உடன்பாடு எட்டப்படுகிறது. இந்த கருத்து எதிர்க்கருத்து,  முரண்பாடு-உடன்பாடு சுழற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு உடன்பட்ட கருத்தே சில காலத்தில் முரண்பாட்டுக்கு அடித்தளமாகிறது.

அமெரிக்க பொருளாதரத்தை 1920 முதல் நாம் ஆராய்ந்து பார்த்தால் மேற்சொன்ன  ஹெகெல்  தத்துவம்  அவ்வித ஆராய்ச்சிக்கு ஒரு கட்டாயமான  கருவியாக  நம்மை ஈர்க்கிறது. 1920 என்பது அமெரிக்காவின் செல்வ வளம் நிறைந்த காலமாக போற்றப்படுகிறது. அந்த சமயத்தில் எண்ணற்ற அமெரிக்க மக்கள் விவசாயத்தை விட்டொழித்து நகரங்களுக்கு படை எடுத்தனர். அமெரிக்க நடுத்தர வர்க்கம் நுகர்வு கலாச்சாரத்திற்கு சிறந்த சந்தையாக இருந்தது. அமெரிக்க சமூகம் கட்டுப்பாடான, இறை நம்பிக்கை கொண்ட நிலையில் இருந்து சுதந்திரமான, கட்டற்ற ஒன்றாக மாறியது.

ஆனால் இந்த வளம் நிறைந்த நிலை திடீரென 1929 ஆம் வருடம் சிதறியது, பங்குச்சந்தை பெருமளவு வீழ்ந்து, அதனால் ஏற்பட்ட கடன்/பண  பிரச்சினை அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தையே சரிவில் தள்ளியது. பல நாடுகள் வெளி வர்த்தக பரிமாற்றங்களை தவிர்த்தால் உலக வர்த்தகமே  செயலிழந்தது. வழமையான பொருளாதார யோசனைகள் தோற்ற இந்த நிலையில் ஜான் மய்னர்ட் கேன்ஸ் என்பவர் புதிய சர்ச்சைக்குரிய தத்துவத்தை முன்வைத்தார். அவர் கூறினார் “அரசானது, பொருளாதரத்தை தூக்கி நிறுத்த மற்றும் தேவையை அதிகரிக்க வலிமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்“. அதற்கு இரண்டு யோசனைகளை கூறினார். ஒன்று மக்களுக்கு வேலை வாய்ப்பை தர அரசு புதிய பொது கட்டமைப்புகளை (சாலைகள் , விமான தளங்கள், பாலங்கள்)  துவக்க   வேண்டும்.  இரண்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் சூதாட்ட  முயற்சிகளில் பணம் செய்ய முற்படுவதை தடுக்கவேண்டும்.  (சூதாட்ட முயற்சிகளாலேயே பங்கு சந்தை வீழ்ந்தது).

பிராங்க்ளின்  டெலானோ  ரூசெவேல்ட், தலைமையில் அமைந்த அமெரிக்க அரசு கேன்ஸ் அவர்களின் யோசனையை ஏற்றுக் கொண்டது. மிகப் பெரிய லட்சிய நோக்குடன் பெரும் செலவில் அரசால் ஒரு திட்டம் துவக்கப் பட்டது. இந்த திட்டமும், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க அரசு செய்த செலவும் ஒரு வழியாக அமெரிக்காவை சரிவில் இருந்து மீட்டது. சில காலத்தில் மிக செல்வம் நிறைந்த உற்பத்தி வழியும் ஒரு பொருளாதாரமாக அமெரிக்கா மாறியது. அது முதற்கொண்டு மேற்கு நாடுகளில் பொருளாதார சரிவின் போது அரசாங்கம் வங்கி மற்றும் அவை சார்ந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும், பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அரசு செலவு செய்ய வேண்டும் என்பது ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டு வந்தது.

இந்த கொள்கை அல்லது கருத்துக்கு, எதிர்க்கருத்து 1970களின் கடைசியில் ஏற்பட்டது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் உலக எண்ணெய் உற்பத்தியை பெரிதும் பாதித்தது. எண்ணெய் விலை பெரிதும் உயர்ந்த நிலையில் மேற்கு நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இந்த நிலையில் வழமையான அரசு செலவு , பொருளாதார நிமிர்வு தத்துவம் ஒத்து வரவில்லை, எதிர்பார்த்த வேகத்தில் பலனும் அளிக்கவில்லை.

இந்நிலையில் சிகாகோ பல்கலைகழகத்தின் பேராசிரியர்கள்  பழைய கேன்ஸ் தத்துவத்தை கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் கூறினர்  “அரசு எந்த நிலையில் பொருளாதரத்தில் தலையிடக் கூடாது, மேலும் அரசு செலவோ, நிறுவனங்களை கட்டுப்படுத்துவதோ கூடாது மாறாக பெரிய நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களின் வரியை குறைக்க வேண்டும், நட்டத்தில் இயங்கும் நிறுவனகளுக்கு பணம் தரவேண்டும் என்று வாதிட்டனர்.

1980களில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தாட்சர் மற்றும் அமெரிக்க அதிபர் ரீகன் ஆகியோர் கேன்ஸ் இன் பழைய கொள்கையை ஒழித்துவிட்டு புதிய கட்டற்ற பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்த  துவங்கினர். மேலும் வரி வருவாய் குறைந்து விட்டதால் அரசின் கடனை பெருமளவில் உயர்த்தினர். சமூகத்தில், இந்த கொள்கைகளால் செல்வப் பகிர்வில் பெருமளவு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படத் துவங்கின. பணம் படைத்தோர் பெரும் செல்வந்தர்களாக மாறினார், நடுத்தர வர்க்கம் தமது முதன்மையை இழந்தது. இவையன்றி சோவியத் நாட்டின் வீழ்ச்சியும், 1990களில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மாற்றங்களும் புதிய கட்டற்ற கொள்கையை பரப்ப உதவின. சொல்லப் போனால் 1990களில் புதிய பொருளாதார கொள்கையானது ஏற்கப்பட்ட கருத்தாகவும், கேன்ஸ் இன்  கொள்கைகள் வெறுக்கப்படவேண்டிய எதிர்க்கருத்தாகவும் மாறியது.

சட்டென்று தாவி 2011 நிலையை ஆராய்ந்தால் இதுவரை பின்பற்றப்பட்ட கட்டற்ற பொருளாதார கொள்கையானது ஏற்படுத்திய நாசங்கள் விளங்கும். ஆனால் இந்த கொள்கையை தூக்கி பிடிக்கும் கனவான்கள் இன்னும் இதனை ஆதரித்தே பேசி வருகின்றனர். ஐரோப்பாக் கண்டத்தின் பல நாடுகள் இன்று முறிந்து சாயும் நிலையில் இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த நாடுகளில் அரசின் கடன் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. இதனை மேலும் பணம் கடன் பெற்று சரி செய்ய பல நாடுகள் முயன்று தோற்றன. பொருளாதாரம் தேறும் எந்த அறிகுறியும் தென்படவில்லை. அமெரிக்காவின் வீடு கட்டும் தொழில் 2008 இல் சரிந்தது இன்னும் எழவில்லை. மேலும் அமெரிக்காவின் பொருளாதார நம்பகத்தன்மை குறியீடு 2011 ஆம் ஆண்டு குறைக்கப்பட்டது 230 ஆண்டு கால வரலாற்றில் நடவாத ஒன்று. கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் குறையவே இல்லை.

இந்த பொருளாதார கொள்கைகள் இந்த அளவுக்கு கொடுமையாக  இருந்தாலும் அதனை  அரசுகள் இன்னும் ஆதரித்தே வருகின்றன. வால் தெருவின் தரகு நிறுவனங்களை சூதாட்டத்தில் இருந்து தடுக்கும் வங்கி விதிகள் கடந்த 2000 ஆம் ஆண்டு, காற்றில் வீசப்பட்டு மீறப்பட்டதால் வீடு கட்டும் தொழிலில் பெரிய அளவு வீக்கம் ஏற்பட்டு அது வெடித்து சிதறியது. இதனை சரி செய்ய 700 பில்லியன் வெள்ளிகள் மக்கள் பணம் அமெரிக்க பாராளுமன்றத்தால்  வங்கிகளுக்கு  வழங்கப்பட்டது, அவற்றை கொண்டு மக்களுக்கு கடன் தரப்படும் என்று எண்ணிய வேளையில் அந்த நிறுவனங்கள் இந்த பணத்தை ஆசிய சந்தைகளில்  சூதாடின. சுருங்க சொன்னால் இந்த கொள்கைகள் பெரு வங்கிகள், நிறுவனங்கள், பணம் படித்தவர்களுக்கே  சாதகமாக உள்ளன,  மக்களுக்கல்ல.

மற்றொரு காரணத்தை ஆராய்ந்தால் பெரு வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தமது அதிகாரத்தை பெருமளவு உயர்த்தி உள்ளன, எப்படியென்றால்  அரசியல்வாதிகள்,  ஊடகங்கள் போன்றோருக்கு இவை கொள்ளை பணத்தை வாரி இறைத்துள்ளன. அனைத்து அரசு, பொது நிறுவனங்களும் பெரு வணிகர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, இதனாலேயே சிக்கலின் உண்மை காரணங்கள் ஊடகங்களில் வெளிவராமல் மறைக்கப் படுகின்றன. மக்கள் நாள் தோறும் தமது வேலை, சேமிப்பு, வீடு போன்றவற்றை இழந்த வண்ணம் உள்ள இந்த நேரத்தில் அரசிடம் உள்ள மக்கள் வரிப் பணம், தோல்வியுற்ற வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப் படுகிறது. இதனை கண்டு கொள்ளாது ஊடகங்களும், புத்திமான்களும் தோல்வி கண்ட பொருளாதார கொள்கைக்கு சாமரம் வீசி வருகின்றனர்.

திடீரென்று போதும்! என்று பொங்கி எழுந்தனர் சில இளைஞர்கள், அமெரிக்க நிலையை நெடுங்காலமாக கண்டு வெறுத்து போன இவர்கள் தன்னார்வ தொண்டர்களாக ஒன்றிணைந்து ஒரு இயக்கத்தை தோற்றுவித்து உள்ளனர். இவர்களின் நோக்கம் அரசு மற்றும் ஊடகங்கள் மீது வங்கிகளும், பெரு நிறுவனங்களும் கொண்டுள்ள அதிகாரத்தை வெளிச்சம் போட்டு காட்டுதல் மற்றும் கடல் போல பெருகி உள்ள சாமானியர்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே ஆன வருமான இடைவெளியை தகர்த்தல் என்பதாகும். அகிம்சை முறையிலான போராட்டங்களை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். வால் தெருவை ஆக்கிரமித்தல், அமைதியான போராட்டங்களை நடத்துதல் போன்ற செயல்களின் மூலம் அரசாங்க ஊழல், ஒரு தலைபட்ச ஊடக செயல்பாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, கொள்கை தோல்வி பெருநிறுவனங்களின் வரி ஏய்ப்பு போன்றவற்றை பரப்புரை செய்து சமநீதி சமுதாயத்தை கொணர முயல்கின்றனர்.

எகிப்தியர்களை போன்ற மக்கள் பங்குபெறும் போராட்டத்தையும், ஸ்பானியர்கள் போன்ற முடிவெடுக்கும் தன்மையையும் இணைத்து ஒரு நேர்மையான,அடிப்படையான,அகிம்சை முறையிலான மக்கள் போராட்டத்தை நடத்துகின்றனர். இவர்களை ஊடகங்கள் வழக்கம் போல கண்டுகொள்ளவில்லை, வேலைதேட திறனற்ற சோம்பேறிகள் அல்லது சமூக விரோதிகள் என்று முத்திரை குத்தி ஏளனம் செய்கின்றன.

பொது ஊடகங்களின் இந்த போக்கை எதிர் கொள்ள இந்த புரட்சியாளர்கள் பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பரப்புரை செய்கின்றனர். தங்களுக்கென்ற வாசகம் ஒன்றை தேர்வு செய்துள்ளனர்,  “நாங்கள் 99 சதவிகிதம்”, இதன் பொருள் என்னவென்றால் அமெரிக்காவில் ஒரு சதவிகிதமே உள்ள பணக்காரர்கள் 35 சதவிகித செல்வ வளத்தை கொண்டிருக்கிறார்கள்  என்பதே. இவர்கள் வேலையற்ற சோம்பேறிகள் என்ற கருத்துக்கு மாறாக பலர் வேலைவாய்ப்பு பெற்ற கடுமையாக உழைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் என்பதையும், தாம் கட்டும் வரி பெரு  நிறுவனங்களுக்கு  தாரை வார்க்க  படும் அவலத்தை கண்டே இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர் என்பதையும் விளக்குகின்றனர். இவர்களுக்கு சில பெரும் பணக்காரர்களே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது வியப்பை தரும் செய்தி. மேலும் கலைஞர்கள், கல்வியாளர்களும் ஆதரவு தந்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியவில்லை, இது ஒரு அரசியல் மாற்றத்துக்கு வழி வகுக்குமா என்று கூற இயலவில்லை. ஆனால் இந்த போராட்டம் இன்று உலகம் முழுவதும் தெரிந்து, உற்று கவனிக்கப்படுகிறது, பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. உலகம் பெருவணிக நிறுவனங்களின் கையில் சிக்கி உள்ளதை மீட்க நடைபெறும் இத்தகைய போராட்டங்கள் வரவேற்கப் படவேண்டியவை, ஏனென்றால் உலகின் எதிர்காலத்துக்கும், மனித குலத்தின் ஏற்றத்துக்கும்,  சமச்சீர்  பொருளாதார   வளர்ச்சிக்கும் இவை இன்றியமையாதவை.

Even more importantly, if these conversations were taken off of the app and into text messaging, spy cam app parents could continue to monitor their teens’ communication with these strangers and jump in if needed

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “வால் தெருவை ஆக்கிரமிப்போம்”
  1. Venkadesan says:

    பொருளாதாரத்தைப் பற்றின அறிவைப் பரவலாக்கும் விதம் இன்னும் நிறைய கட்டுரைகள் வெளிவர வேண்டும்…

  2. kasi visvanathan says:

    பொருளாதாரம் குறித்த கட்டுரைகள் சிறப்பாக உள்ளன. புதிய பொருளாதாரம், சந்தைமயமாக்கம் ஆகியவற்றையும், எளிமையாக ஒரு தொடர் போல் எழுதிவந்தால் சிறப்பாக இருக்கும். கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.

அதிகம் படித்தது