விஞ்ஞானம் தந்த வாழ்வு
ஆச்சாரிNov 1, 2011
குழந்தைகள் கதை
அன்பு நூலகத்தில் நுழையும் அதே நேரத்தில் மற்றொரு முக்கிய நபரும் அங்கு நுழைந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வூரை ஆண்ட மன்னர் தான் அவர். நீண்ட தூக்கத்தில் இருந்து மன்னர் விழித்து எழுந்து பார்த்தார். அருகில் அமைச்சர் சாந்தப்பன் காத்திருப்பதைக் கண்டார்.பகலிலே சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டேனோ என்று அமைச்சரைப் பார்த்து வினவினார் மன்னர். மன்னிக்கவும் மன்னரே நீங்கள் தூங்கியது சிறிது நேரம் இல்லை, பல ஆண்டுகளாகும். தற்போது நம் நாட்டை ஒருமுறை நகர்வலம் வந்து பாருங்கள் வியப்படைவீர்கள் என்றார் அமைச்சர்.
ஆகவே மன்னர் முதலில் நம் அன்பு வந்திருக்கும் அந்த நூலகத்திற்கு வருகை தருகிறார். நூலகத்தின் வாயில் இருக்கும் தானியங்கி கதவு மன்னர் அருகில் சென்றவுடன் தானே திறந்தது. “ம்ம், இந்த மரியாதை எப்பவும் மாறக்கூடாது, பரவாயில்லை மந்திரியாரே நூறாண்டுகள் உருண்டோடினாலும் நம் மக்கள் மனதில் மரியாதை கலந்த பயம் மாறவில்லை, நம் மக்கள் நம் மக்களே! இப்படியே இருந்தார்கள் என்றால் நாட்டுக்கு நல்லது என்றார். இப்படி கூறிகொண்டிருக்கையில் அதே நேரம் சிறுவன் அன்பு கதவை அடைந்தான் அவனுக்கும் கதவுகள் தானாக திறக்கப்பட்டதைக் கண்ட மன்னர் திடுக்குற்றார். இவன் யார் இந்த சிறுவன் அரச மரியாதையுடன் அவனுக்கும் கதவைத் திறந்து விடுகிறார்கள்? அவன் நம் அரச குடும்பத்தை சேர்ந்தவன் போல் இல்லையே? என்று வினவினார் மன்னர். அதுவா மன்னரே, இச்சிறுவன் பெயர் அன்பு. சாதாரண குடிமகன் தான். இவை தானியங்கி கதவுகள்! யார் கதவை நெருங்கினாலும் தானே திறந்து மூடும். மன்னன் மக்கள் என்று எந்த பேதமும் தானியங்கி கதவுகளுக்கு இல்லை என்றார் மந்திரி.
அமைச்சரின் பதிலில் முழு திருப்தி அடையாத மன்னர் பேச்சை தொடர்ந்தார். சரி எனது தாயாரை இன்று கிளம்பி இன்னும் இரண்டு நாட்களில் கொட்டியூர் வந்து காண வருகிறேன் என்று ஓலைச் சுவடி அனுப்பும் அமைச்சரே என்று ஆணையிட்டார் மன்னர். அப்படியே ஆகட்டும் மன்னா என்றார் அமைச்சர்.
அவர் அருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் அன்பு அலைபேசியை எடுத்து அவன் தாயிடம் நாளை காலை கொட்டியூர் வருவதாக கூறிவிட்டு அலைபேசியை அணைத்தான். அன்பு தன் தாயிடம் நேராக உரையாடியதை கேட்ட மன்னரின் காதுகளை அவராலேயே நம்ப முடியவில்லை. அந்த சிறுவன் பேசியதை கேட்டீரா அமைச்சரே?, இது எப்படி சாத்தியம்? நின்ற இடத்தில் நின்று கொண்டு வெகு தொலைவில், அதுவும் குதிரையில் சென்றால் இரண்டு நாட்கள் பயணிக்கும் அளவு தூரத்தில் இருப்பவருடன் நேரில் பேசுவதைப் போல் பேசுகிறானே. என்ன? மாயக்காரனோ இவன் என்று குழம்பினார் மன்னர். மன்னரின் குழப்பத்தை கண்ட அமைச்சர் அதுவா வேறொன்றுமில்லை அலைபேசி என்னும் கைபேசி மன்னா இது . இதன் மூலம் அயல் நாடுகளுக்குக் கூட இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே பேச மூடியும். ஓலை சுவடி அனுப்பி செய்தி சொல்லும் பழைய காலம் எல்லாம் போய்விட்டது என்றார் அமைச்சர்.
சிறிது நேரத்தில் மன்னர் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறும் போது நான்கு சக்கர வாகனம் ஒன்று சிறுவன் அன்பை அமர்த்திகொண்டு விரைவாக சாலையில் வழுக்கி உருண்டு ஓடுவதை கண்ட மன்னர் அமைச்சரை கேள்விக்குறியுடன் பார்த்தார்.
மன்னா இது மகிழ்வுந்து என்று அழைக்கப்படும் ஊர்தி. இழுவிசை இயந்திரத்தால் இயக்கப்படுகிறது . இது மணிக்கு நூறு மைல்கள் கடக்ககூடியது. நம்மிடம் இருக்கும் எந்த குதிரைகளும் இந்த ஊர்திகளுக்கு இணையாக ஓட முடியாது என்று விளக்கினார் அமைச்சர். என்ன அமைச்சரே. ஒரு காலத்தில் எனக்கு மட்டுமே இருந்த வசதிகளை விட அதிகமான வசதி நம் மக்களுக்கே இப்போது இருப்பது போன்று தெரிகிறதே. இந்த விஞ்ஞான வளர்ச்சி வேறென்ன மாற்றங்களை கொண்டு வந்துள்ளது அமைச்சரே? என்று வினவினார் மன்னர்.
வானத்தில் பயணிக்கும் வானூர்தி, மனித இயந்திரம் (ரோபோட்), கணினி(கம்ப்யூட்டர்), இணையம், பல தானியங்கி இயந்திரங்கள், இன்னும் பற்பல எல்லா துறைகளிலும் எண்ணில் அடங்கா வந்துவிட்டது மன்னா என்றார் அமைச்சர்.
ஆக மக்கள் வசதியாக வாழ்கிறார்கள். ஒரு மன்னருக்கான வேலைகள் என்று எதுவும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. நான் தொடர்ந்து ஓய்வில் இருக்கலாம் போல் என்றார் மன்னர். சற்று தயக்கத்துடன் தொடங்கி அமைச்சர் மாறுபட்டு பேசுவதற்கு மன்னிக்கவும் மன்னரே. நீங்கள் நினைப்பது போன்று ஓய்வில் இருப்பது தங்களுக்கு அழகன்று. எந்த வசதிகளும் இல்லாத போதே உங்கள் முன்னோர்கள் பெரும் அணைகள் கட்டினார்கள், கால்வாய் வெட்டினார்கள், அரண்மனை, கலைக்கூடம், ஆலயங்கள் கட்டினார்கள். இன்று இவ்வளவு வசதியுடன் மன்னராக இருக்கும் நீங்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் துணைகொண்டு மேலும் பல சாதனைகளை செய்யவேண்டும் மன்னா என்று முடித்தார் அமைச்சர்.
ஒரு நொடி தவறாக சிந்தித்துவிட்டேன் அமைச்சரே. நல் வழி காட்டியமைக்கு நன்றி அமைச்சரே. வாரும் நமக்கு நிறைய பணிகள் இருக்கிறது என்றார் மன்னர்.
என்ன குட்டிகளா நாமும் அன்பு மாதிரி தானே? அந்த காலத்து அரசர்கள் வாழ்க்கையை விட இன்று நாம் சிறப்பாக வாழ்கிறோம். அக்காலத்தில் எந்த வித வசதிகளும் இன்றி நம் அரசர்கள் எவ்வளவு சாதித்து இருக்கிறார்கள். ஏன் நமது தாய் தந்தையர்கள் கூட நமக்கு கிடைத்த வசதிகள் ஏதுமின்றி இருந்திருந்தாலும் எவ்வளவு சாதித்து இருக்கிறார்கள்? அப்போ நாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் இல்லையா? நீங்களும் சாதிப்பீர்கள் தானே?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
ச்சச்ச்ச்ச்ச
i like students
//எந்த வசதிகளும் இல்லாத போதே உங்கள் முன்னோர்கள் பெரும் அணைகள் கட்டினார்கள், கால்வாய் வெட்டினார்கள், அரண்மனை, கலைக்கூடம், ஆலயங்கள் கட்டினார்கள். இன்று இவ்வளவு வசதியுடன் மன்னராக இருக்கும் நீங்கள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் துணைகொண்டு மேலும் பல சாதனைகளை செய்யவேண்டும் மன்னா என்று முடித்தார் அமைச்சர்.//