மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காணாமல் மறையும் அஞ்சலகங்கள்,கடிதத் தொடர்பு..

ஆச்சாரி

Jun 1, 2012

உலகம், இரண்டு விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் மிக வேக வளர்ச்சி அடைந்தது. ஒன்று மின்சாரம். இரண்டு தகவல் தொடர்பு. இவை இரண்டும் இல்லாத இன்றைய உலகத்தை கற்பனையிலும் கணிக்க முடியவில்லை. தகவல் தொடர்பு வளர்ச்சியால் இன்று சில நிமிடங்களில் தகவல் பரிமாற்றங்கள் நடந்து விடுகின்றன. இதனால் மனித உறவுகளுக்கு நன்மை எனினும், சில இழப்புகளும் உண்டு. அரசர்கள் காலத்தில் தகவல் தொடர்புகள்- புறாக்கள் மூலமும் ஒற்றர்கள் வாயிலாகவும் நடைபெற்றது. பிற்காலத்தில் கடிதத் தொடர்பு ஏற்பட்டு தகவல் பரிமாற்றம் நடந்தது. செல்வந்தர்கள் வீட்டில் மட்டும் தொலைபேசி இருந்தபோது இந்தக் கடிதத் தொடர்பே உறவுகளை உணர்வுபூர்வமாய் இணைத்து வைத்திருந்தது. கிராம மக்கள் இதனை தங்கள் பேச்சு வழக்கில் ‘கடுதாசி” என்று குறிப்பிட்டனர்.

கடிதம் எழுதுதல் என்கிற  ஒரு பயன்பாடு,  மொழியின் வளர்ச்சி நிலைக்கும், உணர்வுகளின்  வெளிப்பாடுகளுக்கும் சரியான ஊடகமாக இருந்தது. தொலைவில் இருக்கும்  உறவுகளும்,  நட்புகளும் தொடர்பு கொள்ள இருந்த ஒரு மிகச் சரியான வழியாக  இருந்து வந்த கடிதம் எழுதும் பழக்கம்,  இன்று அழிந்து வருகிறது. தமிழ் மொழி  வரலாற்றில் கடித இலக்கியம் என்கிற ஒரு தொடர்பு ஊடகம் பல்வேறு சூழல்களைக்  கடந்து  அரசியல் இயக்கங்கள் வரை தனது பங்களிப்பைச் செய்திருக்கிறது. கடிதம் ஓர் அற்புதமான மொழி வடிவம். அதன் வீரியம் பேசும் சொற்களைவிட அதிகம். நாம் புரியவைக்க வேண்டிய அனைத்தையும் எந்த இடையூறுமின்றி வாங்கிக் கொள்ளும் காகிதக் குரிசில். ஒவ்வொரு வரிக்கும் இடையில் இடைமறிக்கும் குறுக்கீடுகள் இல்லை. கடிதத்தால் ஒவ்வொருவரின் தாய் மொழியின் பரிணாமங்களை உணர முடியும்.

கடிதத் தொடர்பு என்பது வெறும் தகவல் சொல்லும் வழியாக மட்டுமின்றி, எழுத்தை சுமந்து செல்லும் காகிதமாக மட்டுமல்லாமல் உறவுகளின் உணர்ச்சிகளை காட்டும் கண்ணாடியாகவும் இருந்தது. கடிதம் எழுதுவதில் இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு நிலை, வேறு எந்த ஒரு தொழில் நுட்பக் கருவிக்கும் இல்லாத ஒரு சிறப்புக் கொண்டது. அப்படிப்பட்ட ஒரு தகவல் தொடர்பை ‘இருந்தது’ என்று குறிப்பிட வேண்டிய நிலை இப்போது மெல்ல மெல்ல தோன்றி வருகிறது. எல்லாம் கைபேசி செய்த காரியம்தான். இணையம் வழியே தகவல் தொடர்பு என்பது செல்வந்தர்கள், படித்தவர்கள் இடையே நிலவுவது இயல்பானது.

படிக்காத கிராமத்துத் தாய்மார்கள் தொலைபேசி வசதி இல்லாத, கைபேசி கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளியூரில் வேலை பார்க்கும் தன் மகனுக்கோ, திருமணமான தன் மகளுக்கோ கடிதம் எழுதி நலம் அறிய அஞ்சல் நிலையம் சென்று அஞ்சல் அட்டையோ (post card) உறை அஞ்சலோ (inland letter)  வாங்கி வந்து, கடிதம் எழுத படித்த ஆட்களைத் தேடி அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டு வீடு திரும்பி ஆனந்தம் கொள்ளும் சம்பவங்கள் இப்போது அருகிக் கொண்டு வருகிறது.

‘அன்புள்ள மகன், மகளுக்கு நலம், நலம் அறிய ஆவல்’ என்று தொடங்கி, தன்னுடைய வீட்டின் சூழல்கள், இன்பங்கள், துயரங்கள், தன் உறவுகள் வாழும் இடத்தின் சூழல்கள், கால்நடைகள், விவசாய அறுவடைகள் என்று அத்துணை தகவல்களையும் உணர்ச்சியாகச் சொல்லி முடித்து – எழுதியதை படிக்கச் சொல்லிக் கேட்டு, விடுபட்ட செய்திகளை மீண்டும் சொல்லி எழுதி வாங்கிக் கொண்டு- கடிதம் எழுதிக் கொடுத்தவருக்கு பாசமுடன் நன்றி சொன்ன தாய்மார்களை கிராமங்களில் காண்பது இன்று அரிதாகிவிட்டது. தாம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் வருமா என்று தபால்காரரை தினமும் எதிர்பார்த்துக் காத்திருந்தோரின் எண்ணிக்கை இன்று வெகுவாகக் குறைந்து வருகிறது.

ஒருவர், ஒரு கடிதத்தைப் படிக்கும்போது, எழுத்து உருவில் அந்தக் கடிதம் எழுதிய உறவின் உருவத்தைக் கண்டார். ( இப்போது விஞ்ஞானம் தந்துள்ள 2ஜி, 3ஜி, கைபேசிகள் பேசுவோர் உருவத்தைக் காண்பிக்கும் நிலை இல்லாத காலத்திலேயே) கடிதம் அனுப்பியவர் எழுத்தறிவு அற்றவராக இருந்தாலும் அவர் முகம்தான் வாசிப்பவருக்கு கண்முன் வரும். ஆனால் இன்று பல கிராமங்களில் அஞ்சல் நிலையங்களே இல்லை. காரணம் காற்றில் கரைந்து விடும் சொற்களை காதுகளில் நுழைக்கும் கைபேசிகள் எங்கும் வியாபித்திருப்பதுதான். அழியாத காலச் சுவடுகளாய்த் திகழ்ந்த கடிதத் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அறுந்து வருகிறது. சாலை ஓரங்களிலும் தெருமுனைகளிலும் தொங்கிக் கொண்டிருந்த அஞ்சல் பெட்டிகள் தொலைந்து வருகிறது.

ஆங்கிலப் புத்தாண்டுக்கும் பொங்கல் விழாவுக்கும் வாழ்த்து அட்டைகள் வாங்கி, அஞ்சல் வில்லை ஒட்டி நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்த காலமும்- ஏழைத் தாய்கள், மகன் அனுப்பும் பணத்தைப் பெற தபால்காரரை தெருவில் நின்று எதிர்பார்த்துக் காத்திருந்து, பணம் பெற்றுக் கொண்ட மகிழ்வில் தபால்காரருக்கு அன்பளிப்பாக சிறிது சில்லரைப் பணம் கொடுத்த நிகழ்வும் மறைந்து விட்டது. கிராமத்தில் ஒரு வீட்டுக்கு தந்தி வருகிறது என்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பதற்றமும் அச்சமும் ஏற்படும். யாராவது இறந்தால் தந்தி மூலமே தகவல் வரும். இந்த நிலையும் இன்று இல்லை.  பதிவுத் தபால் முறை அரசுத் துறைகளில் மட்டுமே இன்னும் இருக்கிறது.

பக்கம் பக்கமாக கடிதம் எழுதிய காலம் மாறி வாழ்த்து அட்டைகளை கைப்படத் திறந்து குதூகலித்த காலம் மாறி குறும் செய்திகளும் தொலைபேசிக் குறிப்புகளுமாக வாழ்க்கை மாறிவிட்டது. பொறுமையாக கடிதமெழுதி அழகான கையெழுத்தில் முகவரி எழுதி முத்திரை ஒட்டி பக்குவமாக அஞ்சல் செய்யும் நிலைமை இன்று காணாமலே போய்விட்டது.  காகிதத்தில் எழுதிய வார்த்தைகளை அனுபவிக்கின்ற சுகம் இப்போது பாவனையில் இருக்கின்ற மின் அஞ்சல் மூலமாக கிடைக்கின்றதா?

கடிதம் எழுதும் கலையால் மொழி வளர்ச்சி பெறுகிறது. எழுதுவோருக்கு மொழியுடன் நெருக்கம் ஏற்பட்டு சிந்தனைத் திறமும் மொழி வளமும் மெருகேறுகிறது. எழுத எழுத கையெழுத்து அழகாகிறது. ஒருவர் தனக்கு வந்த ஒரு கடிதத்தை சில வருடங்கள் கழித்து காணும்போது சிறந்த ஆவணமாக அதனை எண்ணுகிறார். நீங்கள் முன்பு எழுதிய கடிதங்கள் உங்கள் கைவசம் இருந்தால் அவற்றை மீண்டும் வாசித்துப்பாருங்கள். பல சுவாரசியமான விடயங்களை அவை உங்களோடு பேசும். நீங்கள் அனுபவித்த அழகான நாட்களை மீண்டும் உங்கள் மனதில் மலரச் செய்யும். கடிதம் எழுதும் கலையானது இந்த தலைமுறைபோடு இல்லாதொழிந்து அடுத்த தலைமுறைக்கு வெறும் காட்சிப்பொருளாக மாறிவிடும் என நினைக்கும் போது கடிதங்களை உள்வாங்கி வாங்கிக் கொண்டிருந்த தபால் அஞ்சல் பெட்டிகளாக நம் மனம் திகழும் என்ற ஓர் ஆறுதல் நம்மைத் தேற்றும்.

கால மாற்றத்தில் கடிதத் தொடர்பு தோய்ந்து வருகிறது. என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சிகள் வந்தாலும் , எண்ண ஓட்டத்தை, உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும், அழுத்தமாகவும், பிரதிபலிக்கும் கையெழுத்து வடிவ தகவல் பரிமாற்றம் அழிந்து விடக்கூடாது என்பது காலமாற்றத்தின் கையில் இல்லை. நாம் நினைத்தால் கடித தொடர்பு முறையை வலுப்படுத்தலாம். அதன் மூலம் எழுத்து வழி தகவல் தொடர்புகள் மக்கள் மத்தியில் வளர வழிவகுக்கலாம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காணாமல் மறையும் அஞ்சலகங்கள்,கடிதத் தொடர்பு..”

அதிகம் படித்தது