மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விடியலைத் தேடும் மனங்களே, விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்

ஆச்சாரி

Jan 4, 2014

● இந்த வாழ்வைக் கடந்து செல்லும்

ஒவ்வொரு நாளும்

என்னுடைய உணர்வுகள் ஒரு அகன்ற

விருட்சமாய் வளர்ந்து விரிகிறது.

 

● என்னுடைய மனதின் தாழ்வாரங்களுக்குள்

எல்லைகளற்று பரந்து கிடக்கின்றன

ஏராளமான கனவுகள்

ஓயாது ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளாய்

எனக்குள் அவைகள் எழுவதும்

அடங்குவதுமாக

ஒவ்வொரு நொடியும் ஆர்ப்பரித்துக்

கொண்டிருக்கின்றன.

 

● இன்னும் வெளிப்படாத இரகசியங்கள்

ஒரு கடலின் அடியில் உறங்கிக்

கொண்டிருப்பதைப் போல

இப்போது வெளிப்படுத்துவதற்காய் எனக்குள்

வாழ்வின் இரகசியங்கள்

 

● மதிப்புமிக்கவைகளாய் இருந்தவைகள்

அனைத்துமே

மதிப்பிழந்து போய்விட்டன

மதிப்பில்லா ஒவ்வொன்றும்

அரியணையில் அமர்ந்திருக்கின்றன

 

● நியாய தருமங்கள் செத்துப்போன

காலங்களை

கடந்து கொண்டிருக்கிறோம் நாம்

உண்மைகள் எதற்கும் உதவாது என்று

உணர முற்படுகின்ற

ஒரு சமூகத்தில் வாழ்ந்து

கொண்டிருக்கிறோம் நாம்

 

● இந்த உலகம் பேராசையால்

மூடப்பட்டிருக்கிறது

ஒரே ஒரு மனிதனின் பேராசை

ஒரு சனத்திரளையே பெரும் துயரத்திற்குள்

தள்ளிவிட்டு

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

● முட்கள் ரோசாக்களுக்கு வேண்டுமென்றால்

அழகாக இருக்கலாம்

பாதைகள் எங்கும் முட்கள் இறைக்கப்பட்டால்

பாதசாரிகள் என்ன செய்வார்கள்?

 

● ஒரு கொடுங் கனவிலிருந்து

வேர்க்க விறுவிறுக்க

விழித்துக் கொள்பவனை

ஆற்றுப் படுத்தவோ அணைத்துக் கொள்ளவோ

யாருமே இல்லை

அச்சுறுத்தும் யதார்த்தம் தான் மீண்டும்

அவனுக்குத் துணையா?

 

● எல்லா விதைகளும் முளைப்பது கிடையாது

முளைக்கும் எல்லாமும் வளர்வது கிடையாது

ஆனாலும் கூட எல்லாமும் முளைக்கவும்

எல்லாரும் வளரவும் விருப்பம்

வேண்டுமல்லவா?

 

● ஒரு இளம் பெண்ணின் இதயம்

ஒரு குழந்தையின் மௌனம்

ஒரு தாயின் கரங்கள்

ஒரு தோழனின் வார்த்தைகள் என

பேரன்பிற்குரியதாக, வசீகரமுடையதாக,

அர்த்தம் நிறைந்ததாக, வழி நடத்துவதாக

இருந்த எல்லாமுமே

ஒன்றுமில்லாததாக மாற்றப்பட்ட பின்பு

மிச்சமாக என்ன இருக்கிறது சொல்லுங்கள்?

 

● உப்புச்சப்பில்லாத ஒரு வாழ்க்கையை

வாழ்வதற்காகவா

உயிரைப் பணயம் வைத்து

ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்

அச்சாணி கழட்டப்பட்ட சக்கரத்தைப்போல

ஏதோ ஒரு திசையில் ஓடுவதால் யாருக்கு

என்ன இலாபம்?

● பணம் படைத்தவர்களின்

அதிகாரம் மிக்கவர்களின்

சூழ்ச்சியாலும் வியாபார குணத்தாலும்

நம் தேசத்தின் ஒவ்வொரு மாணவர்களும்

பந்தயக் குதிரைகளாக

மாற்றப்பட்டிருக்கிறார்கள்

நம் தேசத்தின் ஒவ்வொரு ஆசிரியர்களும்

குதிரை ஓட்டிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்

 

● ஆக இந்தப் பிள்ளைகளின்

இலக்குதான் என்ன?

ஒரு மைதானத்தை ஒரே மாதிரி

ஆனால் வேகமாக

ஒரு பத்துமுறை சுற்றி வருவதா?

 

● குழப்பம்.

எல்லாவற்றிலும் குழப்பம்

கல்வி கலாச்சாரம் சமூக கட்டுமானம்

அனைத்துமே குழப்பப்பட்டிருக்கிறது.

 

● யாரோ மீன் பிடிக்க

யாராலோ குழப்பப்படுகிறது

என்ற சந்தேகம்

இன்னும் வரவில்லையா உங்களுக்கு?

 

● சொல்லுங்கள் உங்களைச் சுற்றி

என்ன நடந்து கொண்டிருக்கிறது – என்பதை

கவனிக்கிறீர்களா இல்லையா?

 

● விளைவுகளை மட்டும் அனுபவிக்கிறீர்களே

என்றாவது ஒரு நாள் விதைப்பவனைப் பற்றியும்

விதைகளைப் பற்றியும்

யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா!

● அடிப்பதை எல்லாம் வாங்கிக் கொண்டு

கொடுப்பதை மட்டும் பெற்றுக் கொண்டு

மறுப்பதையும் கூட ஏற்றுக் கொண்டு

என்ன மாதிரியான ஒரு வாழ்க்கையை

வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்?

 

● ஒதுங்கித் தனித்திருத்தல் இல்லாத

வாழ்க்கையின் வலிமையைப் பற்றி

உங்களில் எத்தனை பேர்

உணர்ந்திருக்கிறீர்கள் சொல்லுங்கள்?

 

● ஒற்றைச் சிறகடிப்பில் விலகிப் போகும்

பறவை போல

வெறுப்பிடமிருந்தும் தோல்வியிடமிருந்தும்

முற்றும் முழுவதுமாக விடுபட்ட

அழகிய ஆர்வமூட்டும் ஒரு வாழ்வை

நீங்கள் விரும்புகிறீர்கள் இல்லையா?

 

● வாழ்தலின் நோக்கமே

மகிழ்ச்சியாய் இருத்தல் தானே

அந்த மகிழ்ச்சியை விரும்பும் இதயங்கள்

இங்கே எத்தனை உண்டு சொல்லுங்கள்?

 

● அதிகாரமிக்க விரல்கள்

கையெழுத்துப் போடும்

ஒவ்வொரு ஒப்பந்தங்களும்

ஒவ்வொரு உடன்படிக்கைகளும்

நம்முடைய வாழ்க்கையை அமைதியை

எப்படிக் குலைத்துப் போடுகின்றன என்பது

எத்தனை பேருக்குப் புரிகிறது?

 

● எந்த ஒரு நாட்டினுடைய

எந்த ஒரு மக்கள் கூட்டமும்

எந்த ஒரு காலத்திலும்

யுத்தங்களை விரும்பாத போது

எதற்காக நடக்கின்றன

இத்தனை யுத்தங்கள்?

● போர் விமானங்களும் கீழே

கன்னிவெடிகளுக்கு நடுவில்

ஓயாத துப்பாக்கிச் சப்தங்களுக்குப் பயந்து

வீடுகளிலிருந்து பதுங்கு குழிகளுக்கும்

பதுங்கு குழிகளிலிருந்து மரத்தடிக்குமாக

பேரச்சம் சுமந்த ஒரு பெருங்கூட்டம்

அலைக்கழிக்கப்படுவது எதற்காக?

 

● தாயின் சிதறிப் போன உடலை

வாஞ்சையோடு தொட்டுத் தடவும்

ஒரு குழந்தையிடம் சொல்வதற்கு

என்ன இருக்கிறது?

பிரசவத்திற்குப் பிறகு இப்போது சவமாக

இரத்தம் தோய்ந்து கிடக்கும்

குழந்தையைப் பார்க்கும்

தாயின் மனநிலை என்னவாக இருக்கும்?

 

● கணவனை இழந்த ஒருத்தியின் ஆற்றாமை

காதலியை இழந்த ஒருவனின் கோபம்

குடும்பத்தின் எல்லா உயிரையும்

யுத்தத்திற்கு பறிகொடுத்துவிட்டு

ஒற்றையாய் எஞ்சிநிற்கும் ஒரு இதயம்

என்ன பாடுபடும் என்பது புரிகிறதா?

● நான் நேரடியாகவே கேட்கிறேன்

எல்லா யுத்தங்களும்

எல்லா படுகொலைகளும்

யாருடைய நலனுக்காக?

யாருடைய வசதிக்காக

யாருடைய வளர்ச்சிக்காக?

 

ஒவ்வொரு யுத்தமும் அமைதிக்காகவாம்

அமைதியை எல்லோரும்

விரும்புகிறார்கள் போல

 

● வரலாறு நெடுகிலும்

தொடர்ச்சியாக நடப்பது இதுதான்

ஒரு கொலைகாரன்

இன்னொரு கொலைகாரனை உருவாக்குகிறான்

ஒரு கொள்ளைக்காரன்

இன்னொரு கொள்ளைக்காரனை உருவாக்குகிறான்

ஒரு பேராசை பிடித்தவன்

போகும் இடமெல்லாம் பேராசையை

விதைக்கிறான்

ஒரு சுயநலம் கொண்டவன்

போகும் இடமெல்லாம்

சுயநலத்தைப் பரப்புகிறான்

 

● ஈரம் கொண்ட இதயங்களோ

ஈன சுரத்தில் முனகிக் கொண்டு

இருக்க இடமின்றி அலைந்து

கொண்டிருக்கின்றன.

● ஆயுதங்களும், அணுகுண்டுகளும் வெறுப்பும்

வன்முறையும் அல்லவா

உலகமயமாக்கப்பட்டிருக்கிறது – இதில்

மனிதாபிமானம் எங்கே போனது

மனசாட்சி எங்கே போனது?

 

● கொடியவர்களின் கரங்களிலிருந்து

பொய்யர்களின் கரங்களிலிருந்து

இந்த உலகம்

விடுவிக்கப்பட வேண்டும்

 

● இப்பொழுதேனும் விழிக்கவில்லை என்றால்

நிரந்தர உறக்கம் தான் மிஞ்சப் போகிறது

இன்னும் நீங்கள் இறந்துவிடவில்லை

எழுந்து வாருங்கள்

 

● இருந்தும் இல்லாததுமான

கடனும் கண்ணீருமான

இந்த வாழ்க்கையை நீங்கள்

விரும்பவில்லை அல்லவா?

 

● சத்தியம் நிறைந்த உங்களின்

ஆசைகளுக்கும், கனவுகளுக்கும்

கற்பனையில் உருவம் கொடுக்க

முயற்சிக்கப் போவதில்லை நான்.

● மெய்யாகவே நீங்கள்

விரும்பும் பட்சத்தில்

உங்களால் எதுவும் செய்ய முடியும்

ஆகவே

விரும்பக்கற்றுக் கொள்ளுங்கள்.

 

This service will be very similar to yelp, but geared towards humans topspyingapps.com

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விடியலைத் தேடும் மனங்களே, விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்”

அதிகம் படித்தது