வினை விதிக் கொள்கைகளும் ஆசீவகர்களும்
ஆச்சாரிSep 15, 2012
முனைவர் ர. விஜயலக்ஷ்மி பற்றி விவரங்கள் அறிய இந்த இணைப்பை சொடுக்குங்கள்: http://siragu.com/?p=4563
இன்று, கலிபோர்னியா ,வளைகுடாப் பகுதித் தமிழிலக்கியக் கூட்டத்தில் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன், பெருமைப்படுகின்றேன்.வினை விதிக் கொள்கைகளும் ஆசீவகர்களும் என்ற தலைப்பை நான் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் உண்டு. வினையும் விதியும் ஒரு பொருள் குறித்த இரு சொற்களாகவே இன்று தமிழில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த எண்ணம் தவறானது. வினைக் கொள்கை வேறு விதிக்கொள்கை வேறு என்பதை எடுத்துக்காட்டவே இந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டேன்.
1987 ஆம் ஆண்டு ஒரு நாள் நள்ளிரவில் ஆசீவகர்களைப் பற்றிய குறிப்புகளடங்கியதாகக் கருதப்படும் ஒரு கல்வெட்டை உருக்காட்டி (projector) துணைக் கொண்டு சுவரில் விழச்செய்து படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தூங்கிக் கொண்டிருந்த எனது ஒன்பது வயது மகன் எழுந்து, அம்மா! இந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எனக் கேட்டான். நான் ஒரு கல்வெட்டைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். அவன் அதற்குக் கல்வெட்டா ? அது என்ன எனக்கேட்டான். அத்துடன் என் அப்பா அறிவியலாளர். அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கிறார். அதனால் பயனுண்டு. நீ இவற்றை எல்லாம் படிப்பதால் உனக்கு என்ன பயன் என்றான். நான் அறிவியலால் பல நன்மைகளுண்டு. அறிவியல் நமக்கு இவ்வுலகில் நல்லபடி வசதியாக வாழ உதவுகின்றது. ஆனால் அது தவிர நமக்குள்ளே உள்ள உணர்வுகள், அவற்றின் வெளிப்பாடுகள், தகுந்த நன்னெறியில் வாழும் வழிமுறைகள் இவை எல்லாவற்றையும் ,இலக்கியங்கள், கலை, பண்பாடு .சமய நம்பிக்கைகள் போன்றவற்றின் அறிவு தான் நடத்திச் செல்கின்றது எனக் கூறினேன். அது அவனுக்கு புரிந்ததோ, புரியவில்லையோ, மீண்டும் தூங்கச் சென்று விட்டான். ஆனால் இந்த நிகழ்ச்சி என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இன்றைய சூழ்நிலையில் நம்முடைய சிறந்த மூளைகளெல்லாம் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளிலேயே சென்று விடுகின்றன. நிறைந்த பணம், வசதியான வாழ்க்கை, இவையே வாழ்க்கையின் குறிக்கோளாகி விடுகின்றது . இதன் விளைவாக இலக்கியம், தத்துவம், பண்பாடு போன்ற துறைகளில் ஆர்வமும், மதிப்பும்,ஈடுபாடும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து விட்டன. தமிழில் செய்திப் பெட்டகங்களாக விளங்கும் இலக்கியங்கள் பல படிப்பாரில்லாது கிடக்கின்றன. இவை எடுத்துரைக்கும் இலக்கிய நலன், சமயம், தத்துவம் பண்பாடு, இந்திய வரலாறு குறித்த செய்திகள் இன்னும் முழுமையாக ஆய்வு செயப்பட்டு உலகிற்கு அளிக்கப்படவில்லை. இன்னும் சில நூற்றாண்டுகளில் இவையெல்லாம் மறைந்த நூல்கள் என்ற பட்டியலில் சேர்ந்து விடுமோ என்ற அச்சமும் மனதில் எழுகின்றது.
இந்தியாவில் தோன்றி, இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி நின்று, இன்று இருந்ததற்கு அடையாளமாக அவர்கள் பெயர் கூட பெரும்பாலும் தெரியாதபடி மறைந்து போன ஒரு மதத்தினர் தான் ஆசீவகர்கள். இவர்கள் தான் விதிக்கொள்கையை இந்தியாவில் நிலை நிறுத்த முயன்றவர்கள். இக்கொள்கையை நிலை நாட்ட முயன்றவர் மக்கலி கோசலர் என்பவர்.
மக்கலி கோசலர், புத்தர், மகாவீரர் ஆகிய இருவரது சமகாலத்தவர். இவர்கள் மூவரும் மனிதனுக்கு மேற்பட்ட கடவுள் என்பது ஒன்றில்லை என்பதில் ஒற்றுமை உடையவர்கள். எல்லா உயிர்களும் வீடு பேற்றில் கடவுள் நிலையை அடையலாம் என்பது இவர்கள் கொள்கை. புத்தர் பௌத்த மதத்தை நிறுவியவர். மகாவீரர் சமண மதத்தில் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரர். இவர்கள் மூவரும் வேதங்கள் கூறும் யாகங்கள், ஏனைய கிரியைகள் ஆகியவற்றை எதிர்த்தவர்கள். தங்கள் கோட்பாடுகளை அதற்கு ஏற்ப அமைத்துக் கொண்டவர்கள்.
மகாவீரரும், மக்கலி கோசலரும் தொடக்க நிலையில் சிலகாலம் ஒருமித்திருந்தனர். மகாவீரரின் துறவுக்காலத்தில் ஒரு சமயம் நாளந்தாவிலுள்ள ஒரு நெசவாளியின் தொழிற் கூடத்தில் அவர் தங்கியிருந்தார். மகாவீரரின் தவச் சிறப்பைக் கண்ட மக்கலி கோசலர் தன்னையும் அவரது சீடராக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டார் . மகாவீரர் பதிலெதுவும் பேசவில்லை. இந்நிலையில் மகாவீரர் ஒருநாள் நாளந்தாவிற்கு அருகிலுள்ள கொல்லாக (kollaga) என்ற இடத்திலுள்ள பாகுல என்ற ஒரு பிராமணனைப் பார்க்கச் சென்றுவிட்டார். மகாவீரரைக் காணாத மக்கலி கோசலர் பெருந்துன்பமடைந்து தன் உடைமைகள் எல்லாவற்றையும் துறந்து இருந்த இடம் விட்டு வெளியேறினார். ஆனால் அவர் சில காலம் கழித்து மீண்டும் மகாவீரரைப் பார்க்கும் பேறு பெற்றார். ஆறு ஆண்டுகள் அவருடன் கடுந்தவம் புரிந்தார். இந்நிலையில் ஒரு தடவை மகாவீரரும் மக்கலி கோசலரும் குமாரகாம என்ற இடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். வழியில் பூத்துக் குலுங்கிய ஒரு எள்ளுச் செடியைக் கண்டனர். அதைப் பார்த்த மகாவீரர் இச்செடி ஏழு காய்களைத் தாங்கி நிற்கும் என்றார். இதைப் பொய்யென நிரூபிக்க வேண்டி மக்கலி கோசலர், மகாவீரர் அறியாமலே அச்செடியைப் பறித்து நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வரும்போது, அந்தச் செடி ஏழுகாய்களைத் தாங்கி நின்றது. இதைக்காட்டிய மகாவீரர் இந்த நிகழ்வு உயிர்கள் மீண்டும் உயிர் பெறுவதற்கு எடுத்துக் காட்டு எனக் கூறினார். இந்நிகழ்வினால் வெறுப்புற்ற மக்கலி கோசலர் மகாவீரரை விட்டுப் பிரிந்துவிட்டார். பின்னர் இவர் சாவத்தி நகரிலுள்ள ஹாலாஹல என்ற ஒரு குயப் பெண்ணின் தொழிற்கூடத்தில் தனது சீடர்களுடன் தங்கியிருந்தார். இங்குதான் இ வர் தனது எண்ணக் கோட்பாடுகளை ஒருமைப் படுத்தினார். தவிர்க்க முடியாத ஆறு பொருள்களான பெறுதல், இழத்தல், இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என்பவற்றின் உண்மையை ஆறு திசாச்சரர் எனக் கூறப்படும், அலையும் துறவிகளுக்கு எடுத்துரைத்தார். இவர்கள் சாண, கலந்த, கணியாரன், அச்சித்தன், அக்கிவேசாயணன், அச்சுண்ண கோமாயு புத்தன் என்பவர்களாகும். இவர்களே மக்கலி கோசாலரின் கோட்பாடுகள் எண்ணங்கள் ஆகியவற்றை எல்லாத் திசைகளிலும் பரப்பியவர்கள்.
புத்தர், மகாவீரர், இந்து மதத்தினர் கர்மாக் கொள்கையை ஏற்றுக் கொண்டது போல் மக்கலி கோசலர் கர்மாக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஏற்றுக்கொண்டது விதி எனப்படும் கொள்கையே. இதை நியதி ,தைவம் என்ற வேறு பெயர்களாலும் அழைப்பர். இவர்கள் கொள்கைகளடங்கிய ஆசீவகர்களால் எழுதப்பட்ட நூல் என்பது இதுவரை கிட்டவில்லை. மற்கலி நூல், ஒன்பதுவாங்கதிர், என்ற நூல்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஆசீவகர்களிடையே வழக்கில் இருந்ததாகத் தெரிய வருகின்றது (மணிமேகலை 27:165), இப்போது இவையும் கைக்குக் கிட்டவில்லை. அப்படியானால் இவர்களைப் பற்றி எங்கு அறிய முடிகின்றது?
ஆசீவகர்களைப் பற்றிச் சமண நூல்களும், பௌத்த நூல்களும்அங்காங்கே குறிப்பிடுகின்றன. இவர்களைப் பற்றி இந்நூல்களில் காணப்படும் குறிப்புகள் எல்லாமே இவர்களையும், இவர்கள் கொள்கைகளையும், இவர்கள் வாழ்முறைகளையும் ஏளனம் செய்து எழுதப்பட்டவைகளே. இவற்றை எல்லாம் தொகுத்து, ஆராய்ந்து “ஏ.எல். பாசம் (A.L.Basham) என்பவர் ஆசீவகர்கள் (Aijivikas)” என்ற நூலை எழுதியிருக்கிறார். இவரது நூலில் தமிழிலுள்ள செய்திகள் எதுவும் விரிவாகக் கூறப்படவில்லை. இவரது நூலைப் படித்த எனக்கு, இவர்களைப் பற்றித் தமிழிலுள்ள செய்திகளை ஒன்று திரட்டி ஒரு நூலாக எழுதவேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. அதன் விளைவாக எழுதப்பட்ட நூல் தான் ‘தமிழகத்தில் ஆசீவகர்கள்” என்ற எனது நூல்.
இன்றைய நிலையில் தமிழிலுள்ள மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் என்ற நூல்களில் தான் ஆசீவகர்களுடைய கொள்கைகள், வாழ்முறைகள் ஆகியவை தெளிவாக ஒரு கோர்வையாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இம்மூன்று நூல்களிலுள்ள செய்திகளும் ஆசீவகக் கோட்பாடுகளை மறுத்துத் தான் கூறுகின்றன. மணிமேகலை நூலிலுள்ள சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதையில், மணிமேகலை என்ற பாத்திரம் பூதவாதம், வைசேடிகம், சாங்கியம், பிரமவாதம், சைவம், வைணவம், ஆசீவகம், சமணம் ஆகிய மதத்தவர் கருத்துக்களைக் கேட்பதாகவும், இறுதியில் அவற்றை ஏற்காது புத்த மதத்தை தழுவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இங்கு கூறப்படும் ஆசீவகக் கருத்துக்கள் ஆசிரியர் சாத்தனார் ஆசீவகர்களைப் பற்றி அறிந்த அளவோடு மட்டும் தான் இருக்கும் என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். மணிமேகலைக்குப் பின் வந்த நீலகேசி சமண நூல். இது சமண மதத்தை பரப்பும் முழு நோக்குடன் எழுதப்பட்ட காவியம். இங்கு நீலகேசி என்ற பாத்திரம் பிற மதத்தலைவர்களுடன் அவர்களுடைய மதத்தின் குறைபாடுகள் குறித்து வாதிட்டு முடிவில் அவர்களைச்சமண மதத்தைப் பின்பற்ற வைக்கிறாள். இப்பகுதியில் தான் ஆசீவகர்களுடைய கொள்கைகள் பற்றி அறியமுடிகின்றது.
மணிமேகலை, நீலகேசி என்ற இருநூல்களையும் தவிர சைவசமயத்திலுள்ள மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான சிவஞானசித்தியார், தன் நூலிலுள்ள பரபக்கத்தில் பிற சமயக்கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்கின்றார். இப்பகுதியில் ஆசீவகர்களுடைய கருத்துக்களையும் மறுத்துச் செல்கிறார். இந்திய நூல்களிலேயே இம்மூன்று நூல்களும் தான் ஆசீவகர்களைப்பற்றிய அதிக செய்திகளை அளிக்கின்றன.
ஆசீவகர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட தொடக்க கால ஆய்வுகள் பல ஆசீவகர்களைச் சமண, பௌத்த மதங்களின் ஒரு கிளை என நம்பின. ஆனால் ஆசீவகர்கள் கூறும் விதிக்கொள்கை, சமணம், பௌத்தம், இந்து மதம் கூறும் கர்மாக் கொள்கையை ஒத்ததல்ல. எதிராக அது முற்றிலும் மா றுபட்டது.அப்படியானால்.கர்மாக் கொள்கைக்கும் விதிக் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கர்மாக் கொள்கைப்படி , ஒருவன் செயலுக்கு ஏற்ப ஒரு பலன் உண்டு. ஒரு செயலின் பயனை இன்றோ, நாளையோ, இப்பிறப்பிலோ, இன்னொரு பிறப்பிலோ அனுபவித்தே ஆகவேண்டும். கர்மாவின் பலனை அது நல்லதோ, கெட்டதோ அழித்தால் தான் உயிர் வீடு பேற்றினை அடைய முடியும். இந்த எண்ணத்தில் கர்மாக் கொள்கையை நம்பும் மதங்கள் ஒற்றுமையுடையன. ஆனால் கர்மபலனை அழித்து, வீடுபேறு அடையும் முயற்சிகளில் ஒவ்வொரு மதமும் சில வேறுபாடுகளை உடையனவாக விளங்குகின்றன. கர்மபலனை நம்பும் மதங்கள் ‘கிரியாவாதிகள்‘ (kriyavadins)எனப்பட்டனர்.இவர்களுடன் ஒத்துப் போகாத மதத்தினரான ஆசீவகர்கள் ‘அக்கிரியாவாதிகள்‘ (akriyavadins)என அழைக்கப்பட்டனர். இவர்களைக் “காரணம் வேண்டாக்கடவுட்குழாம்” எனவும் அழைப்பர்.
ஆசீவகர்கள் கொள்கைப்படி செயலுக்கும் உயிர்கள் இவ்வுலகில் அனுபவிப்பவைகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அதாவது ஒரு செயலைச் செய்தால் அதன் விளைவு பின்னர் ஏற்படும் என்றஎண்ணத்தை இவர்கள் நம்பவில்லை. இவர்கள் செயல், துய்ப்பு எல்லாமே முன்னரே விதியினால் நியமிக்கப்பட்டவை. மனிதனின் முயற்சியால் எதுவுமே நடப்பதில்லை என இவர்கள் எண்ணினார்கள். விதி என்ற எண்ணம் நியதி, தைவம் (daivam) பால், விதி என்ற சொற்களாலும் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதியை நம்புகின்ற ஆசீவகர்களுடைய விதிக்கொள்கையும், அதனுடன் தொடர்பான அவர்களுடைய ஏனைய கொள்கைகளும் என்ன? அவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்ன? என்பதை அடுத்து நோக்குவோம்.
இவர்களுடைய விதிக் கொள்கையும் அதனுடன் தொடர்பான அணுக்கொள்கை, அபிஜாதிக் கொள்கை, சதுவா நியதங்கள், தவிர்க்க முடியாத ஆறு (inevitables) என்பன இன்றியமையாதனவாகும். இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்ததற்கு ஆதாரங்களாக இலக்கியங்களையும் கல்வெட்டுக்களையும் கொள்ளலாம். தமிழிலக்கியங்களில் இவர்கள் கொள்கை ஊழ் என்ற சொல்லினால் தான் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் கூட, பொருத்தமுற, முதிர்தல், அலர்தல், உதிர்தல், முறையாக, முறை, மாறிமாறி என்ற பொருளிலும் ஊழ் என்ற சொல் சங்க காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இச்சொற்களில் பெரும்பாலானவை ஒரு ஒழுங்கு முறையை உணர்த்துவனவாகவே இருப்பதைக் காணமுடிகிறது . பருவங்கள் மாறி மாறி வருவதும் இயற்கையின் செயற்பாட்டில் செடி, கொடி மரங்கள் மலர்வதும், முதிர்வதும், உதிர்வதும் போன்ற செயற்பாடுகள் ஊழ் என்ற இச்சொல்லால் சுட்டப்படுகின்றன.
இவர்களுடைய இன்றியமையாத கொள்கைகளை விரிவாக நோக்கி இவை தமிழிலக்கியங்களில் எவ்வாறு ஊறிக்கிடக்கின்றன என்பதையும் கூடவே பார்ப்போம்.
அணுக்கள்:
ஆசீவகர்கள்.எண்ணப்படி எல்லாப் பொருள்களும் ஐந்து வகை அணுக்களாலானவைகளாகும். நிலம், நீர், தீ, காற்று, உயிர் என்ற ஐந்து அணுக்களும் ஒவ்வொரு பொருளின் உருவாக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டில் ஒன்று சேர்ந்து ,வேண்டிய போது பிரிந்து விடும். எல்லாப் பொருட்களிலும் உயிர் அணு தவிர்ந்த ஏனைய அணுக்கள் எல்லாம் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த அணுக்கள் ஒன்று சேர்ந்து ஒருபொருளை உருவாக்கும்போது உருவாகும் பொருளின் தன்மைக்கு ஏற்ப நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று (4:3:2:1) என்ற விழுக்காட்டில் இடம் பெறும் . இந்த அணுக்களை ஒன்று சேர்ப்பதில் உயிர் அணு இன்றியமையாத பங்கினை வகிக்கின்றது. இந்த அணுக்களுக்குக் குறிப்பிட்ட சிறப்புத்தன்மை, செயல்பாடு, என்ற இரண்டும் உள்ளன. அவற்றையே சீர், பால் எனப் பிற்கால இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. கீழ்கண்ட அட்டவணையில் ஒவ்வொரு அணுக்களுக்கும் உரிய குணம், செயல்பாடு ஆகியவை எடுத்துக்காட்டப்படுகின்றன.
அணுப்பெயர் | பால் (குணம்) | சீர் (இயல்பு) |
நீர் | சீதம் (குளிர்மை) | கீழ்ச்சீர் |
நிலம் | வற்பம் (கடினம்) | பணிந்த சீர் |
காற்று | வீசுதல், அசைதல் | விலங்குசீர் (குறுக்காக அசைதல்) |
தீ | எரித்தல் | மேற்சீர் |
உயிர் | அறிதல், அறிவித்தல் | மேற்சீர் |
நீலகேசி அணுக்களின் எண்ணிக்கையை மேற்கூறிய ஐந்தாகக் கொள்கிறது. ஆனால் மணிமேகலை இன்பம், துன்பம் என்ற இரண்டையும் இவற்றுடன் சேர்த்து அணுக்களெனக் கொள்கின்றது. மணிமேகலை இன்பம், துன்பம் என்ற இரண்டையும் அணுக்களாகக் கொள்வது போல், சிவஞான சித்தியார் புண்ணியம், பாவம் என்ற இரண்டையும் அணுக்களாகக் கூறுகிறது. ஆசீவகர்கள் கொள்கைப்படி அணுக்கள் ஒன்றிற்குள் ஒன்று நுழையாது. அதே போல் ஒரு அணு இரண்டாக பிரியவும் பிரியாது. இவை தான் எல்லாப் பொருள்களின் உருவாக்கமாக அமைகின்றன.
அபிஜாதி:
மனிதர்கள் வீடு பேற்றை அடையும் பாதையில் அவர்கள் ஆன்ம ஈடேற்ற நிலையை ஒட்டி அவர்களை ஆசீவகர்கள் ஆறுவகையாகப் பிரிப்பர். அத்துடன் ஒவ்வொரு படிநிலையிலுள்ள உயிர்கள் ஒரு குறிப்பிட்ட நிறத்தையுடையனவாக இருப்பர் எனக் கொள்வர் . இதை அபிஜாதி என்றழைப்பர்.
உயர் நிலையில் உள்ள உயிரை வெண்ணிறம் என்பர். அதைத் தொடர்ந்து பொன்னிறம், செந்நிறம், பச்சை நிறம், கருநீல நிறம், கரு நிறம் என உயிர்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இதையே மணிமேகலை பின்வருமாறு விளக்குகின்றது .
“கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம், பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்றிவ்வாறு பிறப்பினுமேவிப்
பண்புறு வரிசையிற் பாற்பட்டு பிறந்தோர்
கழிவெண் பிறப்பிற் கலந்து வீடணைகுவர்”
—— மணிமேகலை — 27:150-௧௫௫
இதையொத்த கருத்து சமணர்களிடையேயும் வழக்கிலுள்ளது. இதை லேசியக் கொள்கை (Lesyas)என அழைப்பர்.
சதுவாநியதம்:
ஆசீவகர்கள் சதுவாநியதம் என்ற கொள்கையை ஒன்றன் வளர்ச்சியை விளக்குவதற்குத் துணைகொள்வர். அதாவது எந்த நிகழ்வு நடந்தாலும் அது முன்னரே நியமிக்கப் பட்டபடி தான் நடைபெறும். அவை நான்கு நிலையினில் நடைபெறும்.ம் ஆவது ஆம், ஆமாங்குஆம், ஆம்துணை ஆம், ஆங்காலத்து ஆம் எனப்படும். இந்த நிலைகளே நான்கு நியதங்களாகக் கொள்ளப்பட்டுச் சதுவாநியதம் எனப் பெயர் பெற்றன . இதை நீலகேசி (704)
அதுவா வதுவு மதுவாம் வகையு
மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்
சதுவா நியதத் தனவா வுரைத்தல்
செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான்
எனக் கூறி நிற்கின்றது.
ஒரு பெண் குழந்தையின் வளர்ச்சியை எடுத்துக் காட்டாகக் காட்டி நீலகேசி இந்த எண்ணத்தை விளக்குகிறது. ஒரு பெண் குழந்தையாக இருந்து அரிவைப் பருவத்தை அடைவது ‘ஆவதுஆம்’ என்பதாகும். அதாவது குழந்தையாக இருந்த பெண் அரிவையாக வளர வேண்டும் என்பது முன்னரே நியமிக்கப் பட்டுவிட்டது. அதே போல் குழந்தையாக இருப்பவள் சரியானபடி வளர்ந்தால் அவள் அரிவையாகவே ஆக வேண்டும் என்பது “ஆமாங்குஆம்” என்பதாகும். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட உருவ அளவை அவள் அடைவது “ஆம்துணைஆம்”. இத்தனை கால நீட்டத்தில் அவ்வளர்ச்சி அவளுக்கு ஏற்படும் என்பது “ஆங்காலத்துஆம்” என்பதாகும். இந்த ஆங்காலத்து ஆம் என்ற எண்ணம் பின்வரும் ஒளவையாரின் மூதுரைப் பாடலிலும் உள்ளடங்கி இருப்பதைக் காணலாம் .
“அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா”.
–மூதுரை – 5.
எந்தச் செயலும் அது முன்னரே நியமிக்கப்பட்ட காலத்தில் தான் நிகழும் என்ற எண்ணத்தை இப்பாடலில் விளக்கப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம் .
ஆறு தவிர்க்க முடியாதவை:
ஆசீவகர்கள் கூறும் “ஆறு தவிர்க்க முடியாதவை” என்ற கொள்கை இவர்களுடைய எண்ணங்களில் முதன்மை பெறுகிறது. ஆறு தவிர்க்க முடியாதவைகளாகப் பேறு, இழப்பு, இடையூறு, உறு மிடத்து எய்துதல், துக்கமுறுதல். சுகமுறுதல் அவற்றினுடைய நீக்கம், பிறத்தல், சாதல் ஆகியவை கூறப்படுகின்றன. இதையே மணிமேகலை நூலும்,
பெறுதலு மிழத்தலும் மிடையூ றுறுதலும்
உலுமிடத் தெய்தலுந் துக்க சுக முறுதலும்
பெரிதவை நீங்கலும் பிறத்தலுஞ் சாதலும்
கருவிற் பட்ட பொழுதே கலக்கும்.
(மணிமேகலை 27:159-162)
எனக் கூறுகிறது. விதியினால் முன்னரே நியமிக்கப்பட்ட இவற்றை மனிதன் தன் ஆற்றலால் மட்டும் மாற்றி விட முடியாது என்ற எண்ணத்தையே இங்கு ஆசீவகர்கள் வற்புறுத்துகின்றனர். அதாவது வாழ்வில் ஒருவன் ஒரு பொருளைப் பெறுவதோ, ஒரு பொருளை இழப்பதோ, வாழ்வில் எதிர் கொள்ளப்படும் இடையூறுகளோ, சேர வேண்டிய இடத்தைச் சேருவதோ, வாழ்வில் வரும் துக்கங்களோ, சுகங்களோ, இவை மனிதனை விட்டு நீங்குவதோ, பிறப்பதோ, சாவதோ எல்லாம் முன்னரே நியமிக்கப்பட்டப்படி தான் நடக்கும். அதை வேறெந்த வழியிலும் மாற்ற முடியாது.விதியின் வலுவான தாக்கம் மனித வாழ்வில் இருப்பதால், எந்த நிகழ்வுமே மனிதனைப் பாதிக்கக் கூடாது. வாழ்க்கை என்பது ஆற்றில் செல்லும் தெப்பம் போல் விதியினால் நடத்திச் செல்லப்படுகின்றது என்ற இந்த எண்ணத்தின் தாக்கம் சங்க காலத்திலேயே மக்களிடை இருந்திருக்கின்றது என்பதை தமிழ் மக்களிடை நன்கு அறிந்த பின்வரும் பாடல் எடுத்துக் காட்டுகின்றது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலும் மிலமே மின்னொடு
வானம் தண்டுளிதலைஇ ஆனாது
கல்பொரு திரங்கும் மல்லற் பேரியாற்று
நீர்வழிப் படூஉம்புணை போல் ஆரூயிர்
முறைவழிப் படூஉமென்பது திறவோர்
காட்சியிற் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை இகழ்த லதனினு மிலமே
——புறநானுறு – 192
எல்லா ஊர்களும் நம்முடைய ஊரே எல்லாமக்களும் நம்முடைய உறவினரே. (நாம் அனுபவிக்கும்) தீமையும், நன்மையும் பிறர் கொடுத்து வருவதில்லை. துன்பமும், அவை தீர்வதும் அது போன்றதேயாகும். இறப்பு நமக்கு புதிதல்ல. வாழ்க்கை இனியது என்று கூறி மகிழ்ந்திருப்பதுமில்லை. வெறுப்பு உண்டான போது வாழ்க்கை இனியதன்று என்று கூறுவதுமில்லை. மின்னலுடன் வானின்று விழும் குளிர்ந்த நீர்த் துளிகளைக் கொண்டு விழும் மழையினால் பாறைகளை அலைத்து ஒலித்து வரும் அளவில்லாத ஆற்று நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல இந்த இனிய உயிர் முறையின் வழிப்பட்டுச் செல்லும் என்ற உண்மையை அறிவுடையோர் கண்ட உண்மைகளின்றும் நாம் தெளிந்து கொண்டோம். ஆதலினாலே உயர்ந்த பெரியார்களைப் பார்த்து நாம் வியப்பதும் இல்லை. சிறியோரைக் கண்டு அவர்களை இகழ்வது அதை விடவும் இல்லை.
இந்த புறநானூற்றுப் பாடல் ஊழ்க் கொள்கையை நன்கு உணர்த்துகிறது. முறை என்பதால் இங்கு ஊழே குறிப்பிடப்படுகின்றது. எல்லாமே ஊழ் வழிப்பட்டே செல்கிறது எனக் கூறி நிற்கும் இப்பாடல் தமிழர் வாழ்வில் ஊழ்க் கொள்கை
ஊறியிருந்தமையை விளக்கி நிற்பதாக இருக்கிறது. இப்பாடலை பாடிய கணியன் பூங்குன்றனார் ஆசீவகராகவே இருக்க வேண்டும். ஆசீவகர்கள் கணக்கர்களாகவும், சோதிடர்களாகவும் இருந்ததை வரலாறு கூறுகின்றது. கணியன் என்ற பெயர் கணக்கராக இருந்த பூங்குன்றனாருக்கு அடையாகியுள்ளது.
ஆசீவகர்களுடைய விதிக் கொள்கையும், கர்மாக் கொள்கையும் தமிழ் நாட்டில் தொடக்க காலத்தில் வெவ்வேறு சொற்களால் தான் தெளிவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன..கர்மா, தமிழில் வினை என்ற சொல்லால் தான் குறிப்பிடப்பட்டது.
“ஊழ்வினை உருத்து வந்தூட்டும்” என்ற சிலப்பதிகார அடிகளில் வினை என்பது கர்மாவையும், ஊழ் என்பது முதிர்தல் என்ற பொருளையும் உணர்த்தி நிற்கின்றன. அதே போல் தொல்காப்பியத்திலும் இவை இருவேறு சொற்களால் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.
காலமுலக முயிரே யுடம்பே
பால் வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயிரைந்தொடு பிறவு மன்ன
தொல்காப்பியம் – கிளவியாக்கம். 58
இச்சூத்திரத்தில் உயர்திணைச் சொற்களாக இருந்தும் உயர்திணை வினை முடிவை ஏற்காத பத்துச் சொற்களாக, காலம், உலகம், உயிர், உடம்பு, பால்வரை தெய்வவினை, பூதம், ஞாயிறு, திங்கள் சொல் என்பவை எடுத்துக் காட்டப்படுகின்றன. இங்கு பால்வரை தெய்வம் என்பது விதியையும், வினை என்பது கர்மாவையும் குறிப்பது நோக்கத்தக்கது.
ஆனால் பிற்கால உரையாசிரியர்கள் இவற்றிற்குச் சரியான விளக்கம் கொடுக்காதிருப்பது அவர்கள் ஆசீவகர்கள் கொள்கைகளை அறியாதிருந்தமையா லாகலாம். (பார்க்க ‘தமிழகத்தில் ஆசீவர்கள்’ - பக்கம் 45-50).
அற நூல்களில் ஒன்றான திருக்குறளும், ஊழ் என்ற ஒரு அதிகாரத்தை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இங்கு திருவள்ளுவர் ஒரு பொருளோ, செயலோஒ நிகழ்வதற்கு காரணமான ஊழை “ஆகூழ்” எனவும், ஒருவனை விட்டு ஒரு பொருள் செல்வதற்கான ஊழைப் “போகூழ்” எனவும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ஊழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் பல எண்ணங்களும், ஆசீவகர்களின் எண்ணங்களை விளக்கி நிற்பதாகக் காணப்படுகின்றன.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகாதம (திருக்குறள் 38:6)
என்ற குறளில்,
“ஊழினால் ஒருவனுக்கு நியமிக்கப்படாத பொருளை அவன் எப்படிக் கட்டிக்காத்தாலும் அது அவனிடம் தங்காது. ஊழின் வழி அவனுக்கு நியமிக்கப்பட்ட பொருளை அவன் எடுத்து வீசினாலும் அது அவனை விட்டுச் செல்லாது” – என்ற பொருள் விளக்கப்பட்டுள்ளது. இதையொத்த கருத்து, ஆசீவகர்களைப் பற்றி எடுத்துக் கூறும் பகுதிகளைக் கொண்ட ‘உவாச கதசாஓ” என்ற சமண நூலிற்கு அபயதேவர் எழுதிய உரையிலும் கூறப்படுவது நோக்கத்தக்கது.
“na hi bhavati yan na bhavyam
bhavati cabhavyam vina pi yatnena”
– Abhayadeva’s commentary to Uvasaga Dasao (Upasaka dasah) – edited by – A.F.R. Woernle. 2 Volumes, Calcutta, 1889-90).
என்ற அடிகளில், “எது ஒருவனுக்குச் சேராதோ, அது அவனுக்குச் சேராது. எது சேர வேண்டுமோ அது முயற்சி இன்றியே அவனை வந்து சேரும்” என்ற பொருள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஆசீவகர்கள் உயிர்கள் வீடு பேறு அடைவதை இரு வகையாகக் கொள்வர். செம்போதக நெறி, மண்டல நெறி என இருவகை வீட்டு நெறியினை இவர்கள் கொள்வார்கள். உலகிலுள்ள உயிர்களின் எண்ணிக்கை நிலை பேறானது. செம்போதக நெறியடைந்த நல்லுயிர்கள் மீண்டும் உலகிற் பிறப்பு எய்தாதவர்கள். மண்டல நெறியில் உள்ளவர்கள் மீண்டும் உலகில் பிறப்பார்கள். இவர்கள் எண்ணப்படி ஒரு உயிர் 8,400,000 மகாகல்பங்கள் கழிந்த பின்னரே வீடுபேறு அடைய முடியும்.
இவர்களின் தவமுயற்சிகள் மிக உக்கிரமானவை. உக்கிடிப்பதானம், வௌவால் தவம், முள் தவம், பஞ்சதபனம் என்று நான்குவகை தவங்கள் இவர்களிடை வழக்கிலிருந்தன. உக்கிடிப்பதானம் என்பது சம்மணம் கொட்டி உட்கார்ந்த நிலையில் தன்னைத்தானே வருத்தித் தவஞ் செய்வது. ஒன்றனைப் பிடித்துக் கொண்டு வௌவால் போன்று தொங்கிக் கொண்டு தவம் செய்வது வௌவால் தவம். முட்படுக்கையின் மீது படுத்துக் கொண்டு செய்யும் தவம் முள்தவம். ஐந்து நெருப்புகளின் நடுவே ஆற்றும் தவம் பஞ்சதபனம்.
இவர்களுடைய உயர்ந்த நிலைத்தவமாக மண்பானையுள் நுழைந்து இருந்து செய்யும் தவத்தைக் கொள்வர். இத்தகைய தவம் குறித்து தமிழ் நூல்களிலும் குறிப்புகள் உண்டு. அத்துடன் அகழ்வாராய்வுகளும் இத்தகைய தவம் செய்வதற்குப் பயன்படுத்திய தாழிகள் பற்றிக் பேசுகின்றன.
ஆசீவகர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தமைக்கு இலக்கிய சான்றுகள் தவிரக் கல்வெட்டுச் சான்றுகளையும் துணைக் கொள்வர் பேராசிரியர் பாசாம் பேராசிரியர் .ஹுல்ட்ச்(Hultczh) போன்றவர்கள் . இவ்வாறு எடுத்துக்காட்டப்பட்ட பதினேழு கல்வெட்டுக்களுடன் கூட அவர்களால் எடுத்துக்காட்டப்படாத , நானாகச் சேர்த்துக் கொண்ட நான்கு கல்வெட்டுக்களையும் என் ஆய்வில் சேர்த்துக் கொண்டேன் . அத்துடன் தென்னிந்திய கல்வெட்டுக்களில் பெரும்பாலானவற்றையும் ஆசீவகர்கள் பற்றி அறிவதற்காகப் படித்துள்ளேன். ஆசீவகர்கள் பற்றிய செய்திகள் உள்ளனவாகக் கொள்ளப்பட்ட கல்வெட்டுகள் தமிழ்நாடு, மைசூரைச் சார்ந்த கோலார், சித்தலகட்டா, குடிகள்ளி, முளுபாகலு போன்ற இடங்களைச் சார்ந்தவைகளாகும்.
இக்கல்வெட்டுகளிலுள்ள ஆசுவக்கடமை, ஆசுவிகாசு, ஆசுவிகள் பேர்க்கடமை, ஆசுவிமாக்கள், ஆசுவம்அவலம்பலம், ஆசுவக்காசு போன்ற சொற்றொடர்கள், ஆசீவகர்களைக் குறிப்பதாகக் பாசாம் போன்ற ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். இங்குள்ள ஆசுவி என்ற சொல் ஆசீவகர்களையே குறிக்கின்றது என இவர்கள் கொள்வர். ஆனால் இவை ஆசீவகர்களை குறிக்கின்றன எனக் கூற முடியவில்லை. எடுகோளாக ஒரு கல்வெட்டி னை இங்கு எடுத்துக் காட்டுகின்றேன். ஏனைய கல்வெட்டுக்களின் முழுமையான ஆய்வு எனது தமிழகத்தில் ஆசீவகர்கள் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
இராசேந்திர சோழதேவ மன்னருடைய (கி.பி.1072) மூன்றாவது ஆட்சிக் காலத்து கல்வெட்டொன்றில் …….
“காடு …. புன்செய் விளைந்த நிலங்களுக்கு அஞ்சில் ஒன்று மேல் வாரம் இடுவதாகவும் வேதர்க்கும்மரி விளைந்த நிலம் ஆயிரத்தைஞ்ஞாறு குழிக்கொரு புடவை கொள்வதாகவும் ஊர்க்கீழ் இரு …..க்குமாகச் சனம் வண்ணார் நல்வெருது நற்….பசு உள்ளிட்ட அந்த … குரால் இரண்டு, காசிடுவதாகவும் சிறு …. சுங்கத்துக்கு ஆசுவி மக்கள் ஆசுவம் உண்ணும் பெயரால் ஒரு காசிடுவதாகவும் …றையா விட்டால் ஒரு காசிறுப்பதாகவும் … ன்று …. த்துக்கு ஊர் முதலி … அடியால் …..”
இங்கு வரும் சொற்றொடரான “ஆசுவி மக்கள் ஆசுவம் உண்ணும் பெயரால் ஒரு காசிடுவதாகவும் ...” என்ற வரியில் ஆசுவிமக்கள் என்ற சொல் குதிரை வளர்ப்போரையே குறிப்பதாக நான் எ ண்ணுகின்றேன். அதாவது குதிரை வளர்ப்போர் மேய்ச்சல் நிலத்துக்காகக் கொடுத்த வரியையே இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது . இவ்வாறு மேய்ச்சல் நிலத்திற்கு வரி கொடுப்பது குறித்து பிரான்சிஸ் புசாணன் (Francis Buchanan) என்ற அயல் நாட்டுப் பயணி ஒருவர் தனது பயண நூலில் விளக்கிச் செல்கிறார். குதிரை வளர்ப்போரால் கொடுக்கப்பட்ட வரியே ஆசுவக்கடமை, ஆசுவக் காசு, ஆசுவிகாசு, ஆசுவிகள் பேரார்காசு, ஆசுவிகள் பேர்க்கடமை போன்ற சொற்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆஸ்வி (asvi) என்ற குதிரைக்காரனை குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லே ஆசுவி எனத் தமிழில் வழங்கப் பட்டிருக்கவேண்டும். s,v என்ற கூட்டு மெய்களடங்கிய சமஸ்கிருதச் சொற்கள் தமிழாக்கம் பெறு ம் போது அவ்வெழுத்துக்களுக்கிடையில் ஒரு உகரத்தை சேர்த்துக் கொள்வது வழக்கம். எடுத்துக்காட்டாக aasvalaayaniiyam என்ற சமஸ்கிருதச் சொல் ஆசுவலாயனீயம் எனவே தமிழில் எழுதப்படுகிறது.
எனவே ஆசுவி என்ற சொல்லடங்கிய கல்வெட்டுக்கள் அனைத்தும் குதிரைக்காரர்களையே குறித்திருக்க வேண்டுமேயொழிய ஆசீவகர்களையோ, அவர்கள் மேல் இடப்பட்ட வரியையோ குறித்திருக்க முடியாது என்றே கொள்ளவேண்டும்.
இவை தவிர கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிம்மபோதவர்மன் காலத்துக் கல்வெட்டொன்றில் (Early South Indian Paleography;. Annual Report on Indian Epigraphy, 360 of 1954-55) T.V. Mahalingam, Madras University of Madras 1974. P.189) ஆசீவகர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டிலுள்ள “ஆஜீவ தர்சன்” (Ajiivika darsan) என்ற சொற்றொடர் தமிழ் நாட்டில் ஆசீவகர் வாழ்ந்ததைக் காட்டுவதாக அமைகிறது எனலாம் .
இலக்கியங்களும், கல்வெட்டுச்சான்றுகளும் , இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்ததை உறுதிப் படுத்தினாலும், காலப்போக்கில் இவர்கள் வாழ்முறைகளால் மக்களிடையே பெருமதிப்பைப் பெறமுடியவில்லை. எல்லாமே முன்னரே விதியினால் நியமிக்கப்பட்டுவிட்டது என்ற எண்ணம் இவர்களிடையே வலுப் பெற்றிருந்ததால் தங்கள் செயல்களுக்கு எந்தப் பொறுப்பையும் இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மது அருந்துதலும் , மாமிசம் உண்ணுதலும் கட்டுப்பாடுகளற்ற பெண்கள் உறவுகளும் இவர்களிடையே வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. இத்தகைய பழக்கங்களாலேயே மக்களிடை மதிப்பிழந்து இவர்கள் காலப் போக்கில் மறைந்து விட்டனர் எனலாம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அம்மா,
எனக்கு தாங்கள் எழுதிய தமிழகத்தில் ஆசிவகர்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும், எனது தொலைபபேசி எண் 9443115930.
வேலிக்கு ஓணான் சாட்சியா..? ஒரு பொருள்/வஸ்து அல்லது கருத்தாக்கம் மாறலாம் ஆனால் மறையாது.. இது ஒரு வரலாற்று திரிபுவாதம்..புடம் போட்ட புரட்டல்வாதம்….
பேரா விஜயலக்ஷ்மி அவர்களுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் உங்கள் “தமிழகத்தில் ஆசீவகர்கள்” என்ற நூலை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில் வாங்கினேன். மேலும் சில படிகள் அங்கு இருக்கலாம். ஆசீவகர்கள் கொள்கையும், வினைக்கும் ஊழுக்கும் இடையே உள்ள கருத்தியியல் வேறுபாடுகளும் சிந்திக்கத் தக்கன. அண்மைக்கால அறிவியல் கோட்பாடுகளும், ஒரு மனிதரின் தன்மை ஏறத்தாழ அவரது பிறப்பிலேயே முழுமை பெற்று விடுகின்றன, வளர்ப்பின் தாக்கம் வெகு குறைவே என்ற கருத்தும் தன் இச்சை (ஃப்ரீவில்) என்ற கோட்பாட்டுக்குச் சான்றுகள் இன்மையும் இவர்கள் கவனித்திருக்க வேண்டும். அவர்கள் கோட்பாடு மறைந்து விட்டிருப்பது பற்றியும் அவர்கள் ஊழின் வலிமை என்றே கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் ஏன் கடுந்தவம் புரிந்தார்கள் என்று புரியவில்லை. விளக்க இயலுமா? நன்றி.
மணி மு. மணிவண்ணன்
மணிவண்ணன்,
எனது கட்டுரையிலும்,நூலிலும் கூறியபடி , ஆசீவகர்களுடைய கோட்பாடுகள் அடங்கிய, ஆசீவகர்களால் எழுதப்பட்ட நூல்கள் எதுவும், இன்று கிடைக்கவில்லை. அவர்களைப்பற்றியும் அவர்களுடைய பழக்கங்களை ப் பற்றியும் சமண , பௌத்த ஏளனக் குறிப்புகள் வழிதான் அறியமுடிகின்றது. சமண நூலான பகவதி சூத்திரம்(15:1:543) மக்கலி கோசாலரின் கடுமையான தவங்கள் பற்றிக் கூறுகிறது .அதேபோல பௌத்த நூ லான நங்குத்த ஜாதகம் ஆசீவகர்களுடைய கடுந்தவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது . இதுபோல் இன்னும் பல நூல்கள் இவர்களின் கடுந்தவம் குறித்துப் பேசுகின்றன. விதிக்கொள்கையில் நம்பிக்கை கொண்ட இவர்கள் கடுந்தவம் புரிந்தது ஒருகால் இவர்களின் தலைவரான கோசாலர் தொடக்க காலத்தில், கடுந்தவம் புரிந்த சமண மதத்தினருடன் கொண்ட தொடர்புகளின் தாக்கமாக இருக்கலாம் .
ர. விஜயலக்ஷ்மி
திரு காசி விசுவநாதன் அவர்களுக்கு:
எனது தமிழகத்தில் ஆசீவகர்கள் என்ற நூ ல் ,சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது. தற்போது இந்த நூ ல் கிடைக்கவில்லை என அறிகிறேன் .நான் சென்னை திரும்பியதும் இதன் மறுபதிப்பிற்கு வேண்டிய முயற்சி யை எடுக்கலாம் .
கணியன் என்ற சொல்லும் அத்தொழிலுடன் ஆசீவகர்கள் தொடர்பு படுத்தப்படுவதும் அறிந்ததே .யாதுமூரே என்ற பாடலில் உள்ள ஆசீவகர் கருத்தும், அதை எழுதிய பூங்குன்றனார் தன் பெயருடன் கணியன் என்ற அடையைச் சேர்த்திருப்பதும் இவர் ஆசீவகராக இருந்திருக்கலாம் என்று நினைக்கத்தூண்டுகின்றது.
கட்டுரையிலேயே சமணர் கருத்தும் அதனின்றும் வேறுபட்ட ஆசீவகர் கருத்தும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேலும் சந்தேகமிருந்தால் என்னுடன் தொடர்புகொள்ளலாம் .
ர. விஜயலக்ஷ்மி
எனது தமிழகத்தில் ஆசீவகர்கள் என்ற நூ ல் ,சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது. தற்போது இந்த நூ ல் கிடைக்கவில்லை என அறிகிறேன் .நான் சென்னை திரும்பியதும் இதன் மறுபதிப்பிற்கு வேண்டிய முயற்சி யை எடுக்கலாம் .
கணியன் என்ற சொல்லும் அத்தொழிலுடன் ஆசீவகர்கள் தொடர்பு படுத்தப்படுவதும் அறிந்ததே .யாதுமூரே என்ற பாடலில் உள்ள ஆசீவகர் கருத்தும், அதை எழுதிய பூங்குன்றனார் தன் பெயருடன் கணியன் என்ற அடையைச் சேர்த்திருப்பதும் இவர் ஆசீவகராக இருந்திருக்கலாம் என்று நினைக்கத்தூண்டுகின்றது.
கட்டுரையிலேயே சமணர் கருத்தும் அதனின்றும் வேறுபட்ட ஆசீவகர் கருத்தும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேலும் சந்தேகமிருந்தால் என்னுடன் தொடர்புகொள்ளலாம் .
கணியன் என்பதனை கணிப்பவன் என்ற பொருளில் – வானியல் கணிப்பவன் என்றும், காலத்தை கணிப்பவன் என்றும் பொருள் இருப்பதாக கணியன் பூங்குன்றன் பிறந்த ஊரைச் சேர்ந்த பண்டிதமனி மு.கதிரேசனார் கூறியுள்ளார். இதுகாறும் பூங்குன்றனார் சமணத்தைச் சார்ந்தவர் என்ற கருத்து விலகி, வள்ளுவருக்கும் ஆசீவகர்களின் தாக்கம் இருப்பதுபோலும் உரைக்கப்படுகின்றது. தாங்கள் எழுதிய ’தமிழகத்தில் ஆசீவர்கள்’ என்ற நூல் எங்கு கிடைக்கும் ?? இந்த தலைப்பு குறித்த கூடுதல் தகவலும் விவாதமும் தேவை என விரும்புகின்றேன். நன்றி.