மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விருந்தினர் பக்கம் – சித்ரா

ஆச்சாரி

Sep 1, 2011

தமிழ் இனத்தின் அடையாளம்

தமிழ் ஆர்வம் கொண்ட தமிழர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம்.

அவ்வப்பொழுது,  எனக்கு மூளையில்  ஆராய்ச்சி மணி அடிக்கும்.  அப்படி ஒரு நன்னாளில்,  சமீபத்தில் தோன்றிய கேள்வி:  தமிழ் இனத்தின் அடையாளம் என்ன?

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் அந்த இனமா?  தமிழ் பேசும் அனைவரும் தமிழ் இனமா? தமிழ் பற்று கொண்டவரே தமிழ் இனமா? தமிழ் கலாச்சார காவலர்களே தமிழ் இனமா?  ஒரே மாதிரியான கேள்விகளை, பல வழிகளில்  – தமிழ், தமிழர், தமிழ் இனம் என்ற வார்த்தைகளை  திருப்பி விட்டு கேட்டாலும், பதில் என்னமோ ஒன்று தான் : ” சரியா தெரியலைங்க. தமிழ் மொழியோ, தமிழ் நாடோ, தமிழ்  இனத்தை அடையாளம் காட்டும் என்று நினைக்கிறேன்.” என்று தான் பலரிடம் இருந்து பதில் வரும்.

தமிழ் இனம் – திராவிட நிறமான கருமை நிறத்தில் இருக்குமோ?  சிவப்பாக – வெள்ளையாக இல்லாவிட்டால்,    அழகு இல்லை – தன்னம்பிக்கை இருக்காது – வேலை கிடைக்காது  – வாழ்க்கையில வெற்றி பெற முடியாது -  பெண்களுக்கு,  ஆண்கள் பார்வை தன் மேல் திரும்பாது – என்றெல்லாம்  நிமிடத்துக்கு இரண்டு முறைகளாவது “சிகப்பு அழகு கிரீம்”  விளம்பரங்கள் மூலம் டிவி தேவதை போதித்துக் கொண்டு இருக்கிறதே.   முக்கியமாக,  “சிவப்பா இருக்கிறவுக,  பொய் சொல்ல மாட்டாவுக…” என்று பெரும்பாலான தமிழ் இனம் எண்ண ஆரம்பித்து விட்ட நேரம், இது.  தன் நிறத்தை ஏற்று  அங்கீகரிக்க விடாமல், வெள்ளாவி வச்சு வெளுக்க வைக்கும் காலம் இது.

தமிழ் இனம் – பாரம்பரிய உடைகளான பட்டு வேஷ்டி – சட்டை மற்றும் பட்டு பாவாடையும் பட்டுத்  தாவணியிலும்  வலம் வரும் இனமாக இருக்குமோ? அப்படி என்றால்,   அப்படி ஒரு இனம் அழிந்து விட்டது என்றல்லவா அறிக்கை விட வேண்டியது வரும்.  காலத்துக்கேற்றாற்போல மாறி வரும் ஆடை அணிகலன்களில் தமிழ் இன அடையாளம் இல்லை என்று மட்டும் தெரிகிறது.

தமிழ் இனம் – தமிழ் மொழி பேசும் இனமாக இருக்குமோ?  இருக்கலாம்.  ஊருக்கு ஒரு வட்டார வழக்கில் தமிழ் பேச்சு  தழைத்து வந்தாலும்,   எல்லாவற்றையும் புறம்பே தள்ளி விட்டு –   வியாபார நோக்கோடு – தமிழ் மக்கள் அதிகம் கொண்டாடும் தொலைக்காட்சிகள் மற்றும்  பல தமிழ்  பத்திரிகைகளில் – ஹிந்தித்  தமிழ் – ஆங்கிலத் தமிழ் -  புகுந்து விளையாடுகிறதே.  அந்த தமிழுக்கு எதிர்ப்பு காட்டாமல், அதை சாதரணமாக எடுத்துக் கொள்ளப்  பழகி, தங்கள் பேச்சிலும் கலந்து கொள்ள  விட்ட தமிழ் இன மக்களின் தமிழ் மொழிப்பற்றே சரணம்!
“still , யா …… தமிள் எனக்கு சரியா பேச – not  coming யா…”

“அகர முதல எழுத்தெல்லாம்” – என்ற குறள் வெண்பா  இலக்கண சுத்தமாக ஆரம்பித்த தமிழ்,  “இங்கே அமர்ந்து கொள்ள இயலுமா? ” என்று செந்தமிழாக வந்து – “மாமு,  குந்திக்கவா?” என்று  உருமாறி , “முடியுமா, உட்கார இங்கே நானும்?” என்கிற விளம்பர தமிழ்  அளவுக்கு  தேய்ந்து  வந்து நிற்கிறது.  இருந்தும்:   “டமில் வாலுமே நல்லா.  ஆக்குமே, நம்மை ஸ்ட்ராங்கா . ”

தமிழ் இனம் – தமிழ் கலாச்சாரத்தில் இருக்குமோ? ஆனால், தமிழ் கலாச்சாரம் என்று பொதுவாக பேசப்படுகிறதே தவிர இதுதான் தமிழ் கலாச்சாரம் என்று உறுதியாக யாருக்கும் சொல்லித்  தருவதில்லையே.   ஊருக்கு ஒரு கலாச்சார முறை – ஜாதிக்கு ஒரு கலாச்சார முறை – குடும்பத்துக்கு ஒரு கலாச்சார முறை என்று பிரிந்து திரிந்து வருகிறதே .  ஒரே சாம்பார்தான்.  ஆனால்,  வீட்டுக்கு வீடு சாம்பார் ருசி மாறி வருவது போல அல்லவா தமிழ் காலாச்சார முறை மாறி போய் இருக்கிறது.

தமிழ் இனம் அடையாளம்  -  தமிழர்களின் குணத்தில்  இருப்பதாக நாமக்கல் கவிஞர் தெளிவு படுத்தி இருக்கிறார்.
“தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்”  ………….. நாமக்கல் கவிஞர்.

மேலும் :
நூல் : புறநானூறு,
பாடியவர் : இளம்பெழுவழுதி

உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத் தமியர் உண்டனும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்;பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்;அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன்தாள்
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே

அமிழ்தமமே  கிடைத்தாலும் பிறர்க்குக் கொடுக்காமல் தாம் உண்ண மாட்டார்கள்;

வெறுப்பும் சோம்பலும் இல்லாதவர்கள்;

பயம் கொள்வதற்கு பயந்தவர்கள்;

புகழ் என்றால் உயிரையும் கொடுப்பவர்கள்;

பாவம்,  பழி வரும் என்றால் உலகம் முழுவதுமே  கிடைத்தாலும் வேண்டாம் என்பார்கள்;

சோர்வடைந்து போகாதவர்கள்;

அத்தகைய நற்பண்புகள் உடையவராய், தமக்கு மட்டும் என முயற்சி செய்யாமல், பிறர்க்கு எனப் பெருமுயற்சி செய்பவர்கள்.

கலித்தொகை பாடல்கள் வழியாகவும் –   தமிழர்களின்  வாழ்வியல்,  பழக்க வழக்கங்கள், குணங்கள்,   பண்பு நலன் முதலியவற்றைத்  தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணம்:  கலித்தொகை பாடல் எண் 133, நெய்தற்கலி பாடல் எண் 16
அந்த   பாடல்கள் மற்றும் அதன் விளக்கங்கள் எல்லாம், நான் இந்த கட்டுரையில் சொல்வதை விட –    தமிழ் சினிமா பட பாடல்கள் எழுதும் கவிஞர் ஒருவர் அவருக்கே உரிய  தனித்தமிழ் முறையில்  எழுத  – “அட்ரா ரா ரா …….நாக்க முக்க …நாக்க முக்க ….. ”  தமிழ் சினிமா பாடல்  மெட்டில்  யாராவது இசை அமைத்து தந்தால், தமிழ் மக்கள் அனைவரையும் விரைவில் சென்று  சேருமோ?  இருக்கலாம்.

The https://eduessayhelper.org body consists of one or more paragraphs

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

7 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “விருந்தினர் பக்கம் – சித்ரா”
  1. Krishnaraj says:

    கட்டுரைப் பதிவுகள் நன்றாக உள்ளன. என்னுடைய தனிப்பட்ட கருத்து – “தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், தமிழ் நாட்டினைச் சேர்ந்தவரும் தமிழ் இனத்தவர் என்பேன்.”

  2. Poornachandran says:

    நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் எத்தனையோ காலம் முன்பே விவாதிக்கப் பட்டு விட்டது என்பதை ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்ற விதத்தில் நான் அறிவேன். இருந்தாலும் நல்ல
    பதிவு. வாழ்த்துக்கள்.

  3. ராஜபாளாயத்தான் says:

    மிகவும் சரியான விளக்கம், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று .இந்த கட்டுரை வெளிவர பணியாற்றிய அனைவருக்கும் நன்றி !!!
    இனைய தளத்தில் உள்ள புகைப்படத்தை(ஹ்ய்பெர் லின்க்) கிளிக் செய்தால் கட்டுரை பகுதி கிடைப்பது இல்லை…, இதை சரி செய்தல் மிகவும் நன்றாக இருக்கும்

  4. ராஜபாளாயத்தான் says:

    மிகவும் சரியான விளக்கம், அனைவரும் அறிந்து
    கொள்ள வேண்டிய ஒன்று .இந்த கட்டுரை வெளிவர பணியாற்றிய அனைவருக்கும் நன்றி !!!இனைய தளத்தில் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்தால் கட்டுரை பகுதி கிடைப்பது இல்லை…, இதை சரி செய்தல் மிகவும் நன்றாக இருக்கும்

  5. Gandhi says:

    நன்றாக உள்ளது

  6. பிரபு says:

    அருமையான பதிவு.

  7. visa says:

    சிந்தனையை தூண்டும் ஒரு மிக நல்ல பதிவு. உங்களுக்கு ஓர் வேண்டுகோள். பழந்தமிழ்ப் பாடல்களின் விளக்கங்களை எளிய நடையில் கருத்துப் பகுதியில் தயவு செய்து தரவும். இது இந்தப் பதிப்பை நிறைவு செய்யும் என நினைகின்றேன். மேலும் படிப்பவர்களை நின்று சில நிமிடங்கள் யோசிக்கச் செய்யும். நன்றி!

அதிகம் படித்தது