மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விழித்தெழவைத்த தமிழ்ப் புத்தாண்டு விழா

ஆச்சாரி

Feb 1, 2012

திருவள்ளுவர் ஆண்டு 2043 தொடக்கப் புத்தாண்டு விழா, தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் 14.1.2012 அன்று இரவு காந்தி சிலை பின்புறம் சிறப்பாக நடந்தேறியது. தமிழர் எழுச்சி இயக்கத்தினர் மக்கள் அதிகமாகக் கூடும் கடற்கரையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களைப் போன்று தமிழ் புத்தாண்டை பெரிய விழாவாக கொண்டாடி தமிழர் அடையாளத்தை நினைவேற்றியது உணர்வுபூர்வமாக இருந்தது.

பெண்கள், குழந்தைகள் என  நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள்- குளிரையும் பொருட்படுத்தாது கூட்டம் கூட்டமாக வந்திருந்து தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடியது, தமிழுணர்வு தழைக்கவில்லை என்றாலும் பட்டுப்போய்விடவில்லை என்பதை எடுத்துச் சொன்னது. பெருநகரச் சூழலில் வாழ்ந்தாலும் தமிழர் பண்பாட்டியலிலிருந்து பிறழ மாட்டோம் என்பதைக் காட்டுவதாகவும் அமைந்தது இந்த விழா.

தமிழன்னையைப் போற்றும் பாடலுடன் விழா தொடங்கிற்று. கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், உரி அடித்தல், பழம் உரித்தல் போன்ற விளையாட்டுக்களை இளைஞர்களும் பெண்களும் சிறுவர்களும்  விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் இணைந்து கூட்டு நடனமாடினர். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

விழாவில் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த  திரு.சி.மகேந்திரன், வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் திரு.வெள்ளையன், திரு.அறிவுக்கரசு மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்குபெற்று- தமிழர்களின் உயர் பண்புகளையும் தமிழ் புத்தாண்டின் பெருமைகளையும் எடுத்துரைத்து விழாவைச்  சிறப்பித்தனர்.

தமிழ்ப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடக் கூடாது என்று முதலில் தடை விதித்தது காவல் துறை. பிறகு ஏனோ- தமிழ் உணர்வாளர்கள் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடிவிட்டுப் போகட்டும் என்று அவர்களுக்கு ஏற்பட்ட கழிவிரக்கத்தாலோ அல்லது திடீரென்று அவர்களுக்கும் பொங்கி எழுந்த தமிழ் உணர்வாலோ(!) அனுமதி அளித்தனர். தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாட முதலில் மறுப்பு பிறகு அனுமதி. எப்படித் தெரியுமா? பெரும் காவல்துறையினர் திரண்டு நின்று கொண்டு அனுமதி அளித்தனர். (ஆங்கிலப் புத்தாண்டு அன்று காவல்துறையினரே வாழ்த்துச் சொல்வார்கள். பல தமிழர்களும் அதை ‘உற்சாகத்தோடு’ ஆமோதிப்பார்கள்.)

திருவள்ளுவர் நாளான 16.1.2012 அன்று மாலை சென்னை மயிலை திருவள்ளுவர் சிலை அருகில் ‘தமிழர் கலைகளை மேடையேற்றுவோம்’ எனும் பொருளில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், மானாட்டம் போன்ற தமிழர் கலை ஆட்டங்கள் நடைபெற்றன.

தமிழர் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. வேலுமணிஅவர்கள்   இதுகுறித்து கூறும்போது, “கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக தமிழ் புத்தாண்டு விழாக்களை நடத்தி வருகிறோம். தமிழர் பண்பாட்டை, கலைகளை, விழாக்களை காக்க வேண்டும் என்பதே எங்கள் இயக்கத்தின் குறிக்கோள்” என்றார்.

இந்த விழா நமக்கு உணர்த்துவது- பெரும் நகரங்களில் வாழ்ந்தாலும் அயல் நாகரிகத்துக்கு அடிமையாகாமல் தமிழர் விழாக்களை, தமிழர் கலைகளை மக்களிடம் அவ்வப்போது நினைவுபடுத்துவது மிகவும் தேவை. அதற்கு தமிழ் ஆர்வலர்கள் சிறு சிறு அமைப்புகளைத் துவங்கி இந்த விழாக்களை நடத்த வேண்டும் என்பதே.

Projects and dissertations have www.paper-writer.org always been viewed as an effective means of research training and of encouraging a discovery approach to learning, through the generation and analysis of primary data

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விழித்தெழவைத்த தமிழ்ப் புத்தாண்டு விழா”

அதிகம் படித்தது