விஸ்வரூபம் – விளங்கும் உண்மைகள்
ஆச்சாரிFeb 15, 2013
விஸ்வரூபம் திரைப் படம் இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக போராட்டங்கள் கிளம்பியிருக்கும் இவ்வேளையில் வழக்கம்போல் இஸ்லாமியர்களுக்கெதிரான ‘தீவிரவாதி’, ‘பயங்கரவாதி’ பட்டங்கள் இணையத்திலும், ஊடகவெளிகளிலும் பறக்க விடப்படுகின்றன. எனது இக்கட்டுரையின் நோக்கம் இஸ்லாம் மார்க்கத்தை ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ அல்ல. உலக அளவில் கடந்த சில பத்தாண்டுகளாகத் தீவிரவாதி, பயங்கரவாதிப் பட்டத்தை சுமந்து கொண்டிருக்கும் உலகின் அதிக மக்கள் தொகையுள்ள சமூகமாக இஸ்லாமியர்கள் விளங்குகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரை அவர்கள் சிறுபான்மையோராக இருப்பதால் அவர்களை மத ரீதியாக இல்லாவிட்டாலும், சிறுபான்மையோர் என்ற விதத்தில் ஒரு சிறுபான்மை இனம் என்றே கூற வேண்டும். இந்தக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தால் சில நியாய வாதங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ள முடியும்.
உலக மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்களை தன்னகத்தே கொண்டிருந்த கம்யூனிச நாடுகளின் போட்டி, சோவியத்தின் சரிவுக்குப் பின் அகன்றதுபோல் ஒரு மாயை ஏற்படுத்திட அமெரிக்க சார்பு ஆற்றல்கள் பிறிதொரு எதிரி இலக்கை உருவகப்படுத்தின. ஆக இஸ்லாமியர்களுக்கு உலக அளவில் தீவிரவாதி, பயங்கரவாதி என்ற பட்டங்கள் சோவியத்தின் சரிவுக்குப் பின் தயாரித்து தரப்பட்டதாகக் கொள்ளலாம். உண்மையில் அவர்கள் அப்பட்டத்துக்கு உரியவர்கள்தானா? அவர்களில் சிலர் (சில பிரிவுகள்) மேற்கொள்ளும் வன்செயல்கள் அதுபோல்தானே அமைந்திருக்கின்றன என்று கேட்கத் தோன்றும்.
வன்முறைக்குள்ளாக்கி திருப்பித் தாக்கும் எல்லா சிறுபான்மையோரும் பொதுவாகத் திருப்பித் தாக்குவதற்கு பயன்படுத்தும் ஆயுதத்தை வைத்தே வருணிக்கப்படுகின்றனர். அதாவது, திருப்பித் தாக்குவோர், அரசு பயன்படுத்தும் அதே வகை ஆயுதங்களை பயன்படுத்துகின்றனரா? இல்லையா? என்பதே அளவுகோல். தமிழகத்தை மட்டும் எடுத்துக்காட்டாக் கொண்டால் திருப்பித் தாக்கும் பல்வேறு சிறுபான்மையோர் பிரிவுகள் உண்டு. சில வேளைகளில் திருப்பித் தாக்கும் தலித்துக்கள் எளிய நாட்டு வகை ஆயுதங்களான வெட்டரிவாள், தடி, அடி, உதை போன்ற வழிமுறைகளையே கையாளுகின்றனர். எனவே அவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப் படுவதில்லை.
ஆனால் இஸ்லாமியர்களும், ஈழத்தமிழர்களும் அரசு பயன்படுத்தும் அதே வகை ஆயுதமான வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தினர். அதுபோலவே நக்சல் போராளிகளும், தமிழரசன் விடுதலைப்படையினரும் அரசு பயன்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் பயங்கரவாதிகள் என்று அரசால் முத்திரை குத்தப்பட்டனர். இதனால் அரசுகள் இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழர்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிட்டன. அதை பெரும்பான்மைச் சமூகத்தினாரான, இந்திய இந்துக்களும், இலங்கைச் சிங்களர்களும் வழிமொழிந்து வருகின்றனர். உலக அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இதுவே நடந்தது எனலாம். அரசுகள் பயன்படுத்தும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் என்று அரசுகளால் சொல்லப்பட்டனர். தம்மைத் தவிர வேறு எவரும் தாம் பயன்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் ‘கெட்டவர்கள்’ என்று அரசுகள் நிறுவும் மேலாண்மைப் பார்வையே இது.
தமிழீழத் தமிழர்கள், தலித்துக்கள் அனுபவிக்கும் எல்லாவிதக் கொடுமைகளையும் இந்திய இஸ்லாமியர்கள் அனுபவித்தும், எதிர்நோக்கியும் வருகின்றனர். எனவே அவர்களது எதிர்ப்பை மத அடிப்படைவாதமாக மட்டும் சித்திரிப்பது சரியல்ல. சிறுபான்மை என்ற ரீதியில் எந்த நேரத்திலும் பெரும்பான்மையோரால் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற அச்சத்திலேயே வாழுமாறு நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வகையில் அவர்களுக்கெதிராக ஒரு சிறு கலாசாரத் தாக்குதல் நடந்தாலும் அவர்கள் தங்கள் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று எண்ணுவது தவறில்லை. இதுவே ‘விஸ்வரூபம்’ திரைப்படம் எதிர்கொள்ளும் எதிர்ப்பு.
உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்தியாவில் பிற மாநிலங்களில் திரையிடப்படுகிறது. அந்த நாடுகளில், மாநிலங்களில் எதிர்ப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் எதிர்ப்பு என்று கேட்கிறார்கள்? திரைப்படத்தைத் தயாரித்தவர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் என்பது முதல் எளிய விடை. அதைத் தொடர்ந்து, கமலஹாசனின் கடந்த கால திரையுலக வரலாறு எண்ணற்ற வகுப்பு (சாதி மோதல்களுக்கு) இட்டுச்சென்றிருப்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
அது மட்டுமின்றி கமல் தயாரித்து வெளியிடும் பெரும்பாலான படங்கள் வெளிநாட்டு (செராக்ஸ்) நகல்களே. எடுத்துக்காட்டிற்கு அவரது படங்களாகிய ‘ராஜபார்வை’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘எனக்குள் ஒருவன்’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘இந்திரன் சந்திரன்’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘வெற்றி விழா’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘குணா’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘மகளிர் மட்டும்’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘நம்மவர்’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘சதி லீலாவதி’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘அவ்வை சண்முகி’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘பஞ்ச தந்திரம்’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘தெனாலி’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘அன்பே சிவம்’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘ஹே ராம்’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘தேவர் மகன்’ ஆங்கிலப் படத்திலிருந்தும், ‘விருமாண்டி’ ஆங்கிலப் படத்திலிருந்தும் நகல் (செராக்ஸ்) செய்து (ஈயடிச்சாங்காப்பியாக) தயாரிக்கப்பட்டவையே. இவ்வாறு பல ஆங்கிலப்படங்களை அட்டைக் காப்பியடித்து தயாரித்துத் தானே கதையை உருவாக்கியதைப் போல தமிழக, இந்திய ரசிகர்களை இத்தனை காலமும் ஏமாற்றி வசூல்ராஜாவாக விளங்கும் ஒரு திரையுலக முதலையே கமல்.
தன்னை ஒரு அறிவுஜீவியாக, பெரியாரின் வழித்தோன்றலாகக் காண்பித்துக் கொள்ளும் ஒரு மனிதர், இப்படி சரமாரியாகப் பிற படங்களைச் சுட்டுப் படங்கள் எடுத்து, அதனை இவரே சொந்தமாகச் செய்ததுபோல் ஜம்பம் அடித்து (இதில் ஆஸ்கர் ஆஸ்கர் என்ற கூக்குரல் வேறு) விளம்பரப்படுத்துவதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது. இன்னொரு விசயம்: பொதுவாக, எஸ். ஏ. ராஜ்குமார், தேவா போன்றோர் பிற படங்களின் பாடல்களைக் காப்பியடித்தால், நாம் அவர்களுக்கு அளிக்கும் பட்டம் என்ன? ’ஜெராக்ஸ்’ என்பது. ஆனால், மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோர் அதையே செய்தால், அதனை ‘இன்ஸ்பிரேஷன்’ என்று பூசி மெழுகும் வேலையை செய்கிறவர்கள் தன்மதிப்பான சிந்தனாவாதிகளாக இருக்க முடியாது.
‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் ஆஃப்கானிஸ்தான் நிகழ்வுகளையே படமாக்கியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதே கமல்தான் முன்பொரு பேட்டியில், ‘ஈழப் போரைப் பற்றி படமெடுக்க எனக்கு ஆசை இருக்கிறது, ஆனால் துணிச்சல் இல்லை’ என்று தெரிவித்திருந்தார். அப்படியிருக்க, மற்றொரு வெளிநாட்டு நிகழ்வைப் பற்றி 100 கோடி ரூபாய் செலவில் படமெடுக்க இவருக்கு துணிச்சல் பிறக்கிறது என்றால் அது என்ன வகை துணிச்சல்? என்று எண்ண வேண்டும். இவர் நினைத்தால் ஈழப் போரைப் பற்றி படமெடுக்க முடியாதா? (அப்படியொரு படமெடுத்தால் அதில் உண்மைகளை மட்டுமே சொல்ல முடியும். பொய் சொன்னால் கமல் தமிழகத்தை விட்டு ஓட வேண்டியதாகி விடும். இதுதான் அவருக்குள்ள ஒரே பிரச்சினை. அதனால்தான் ஈழப்போரைப் பற்றி வெறும் 5 கோடி ரூபாய் செலவில் கூட அவரால் படமெடுக்க முடியவில்ல. அது மட்டுமின்றி ஈழப்போர் என்பது இந்தியா அதிகாரவர்க்கத்திற்கு சவால் விடும் ஒரு வரலாற்று நிகழ்வு என்பது நினைவில் இருக்க வேண்டும்.).
இஸ்லாமியர்களின் எதிர்ப்பைப் பொறுத்தவரை பல இஸ்லாம் அமைப்புக்களும் (அவற்றில் சவூதி அரேபிய வகையைச் சேர்ந்த அமைப்புக்கள், தனிநபர்கள். தலைவர்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது) தங்கள் மீது பெரும்பான்மைச் சமூகத்தினர் மனதில் கட்டியமைக்கப்பட்டிருக்கும் எண்ணத்தின் வெளிப்பாடே இந்தத் திரைப்படத்திலும் வெளிப்படுகிறது என்று சிந்திப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களது எதிர்ப்பை கலாச்சாரத் தீவிரவாதம் என்பதோ, சகிப்புத் தன்மையற்ற செயல் என்பதோ குறித்த திரைப்படத்தை விடப் பன்மடங்கு அளவு கூடிய பெரும்பான்மைக் கூக்குரல்களே.
ஏனெனில் இஸ்லாமியர்கள் இத்திரைப்படம் தொடர்பில் என்னவகை எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்களோ அதே வகை எதிர்ப்பை மற்ற மதத்தினரும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். முன்பு ஜெயலலிதாவை அன்னை மேரியாகச் சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டபோது, கிறிஸ்தவ அமைப்புக்கள் போராட்டக்களம் குதித்ததை நினைவு கொள்ளலாம். நகைச்சுவை நடிகர் விவேக் இந்து மத மூடநம்பிக்கைகளைத் தன் நடிப்பில் வெளிப்படுத்திக் கண்டித்ததற்காக இந்து அமைப்புக்கள் அவருக்கெதிராக அணி திரண்டதை மறக்க முடியாது. அந்த எதிர்ப்புகளெல்லாம் பயங்கரவாதமாக, கலாச்சாரத் தீவிரவாதமாக ஒருவர் கண்ணிலும் படவில்லை. இஸ்லாமியர்கள் என்றால் மட்டும் உடனே ‘கலாச்சாரத் தீவிரவாதம்’, ‘பயங்கரவாதம்’ என்று சொல்லப் புறப்படுவது ஆளும் வர்க்கம் இஸ்லாம் பற்றிக் கட்டியமைத்திருக்கும் கயமை நிறைந்த பார்வையே. உலகம் தழுவிய அளவில் ஏகாதிபத்தியங்களின் பார்வையை, இந்திய ஏகாதிபத்திய அடிவருடி அரசு தன்னுடையதாகப் பரப்புவது, பெரும்பான்மைச் சமூக மக்கள் மனதில் நியாயம் என்று பதிய வைக்க திரைப்படம் போன்ற வலுமிகுந்த கலாச்சார சாதனங்கள் பெரும் உதவி புரிகின்றன.
எனவே கமலின் இப்படம் ஆளும் வர்க்கச் சார்புடையது என்பதில் ஐயமில்லை. ஆஃப்கானிஸ்தான் நிகழ்வுகளைப் பற்றி படமெடுத்தவர், குஜராத் நிகழ்வுகளை படமாக்க ஒருமுறையேனும் எண்ணியிருப்பாரா?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
“ஈழப்போர் என்பது இந்தியா அதிகாரவர்க்கத்திற்கு சவால் விடும் ஒரு வரலாற்று நிகழ்வு” என்பது எப்படி என்று கட்டுரையாளர் இன்னொரு கட்டுரையில் விளக்குவாரா? ஈழப்போர் பற்றிய படமெடுத்து எல்லாப் பக்க உண்மைகளையும் சொன்னால் படம் யாருக்குமே பிடிக்காது. அவரவர் அவரவருக்குப் பிடித்த ‘உண்மைகளை’ மட்டுமே கேட்கவும் பார்க்கவும் விரும்புகின்றோம். அதை நாம் தன்னுணர்வாகத் தாண்டி அடுத்தப் பக்கச் செய்திகளையும் தெரிந்து கொள்ளா விட்டால் மேற்கண்டது போன்ற ‘மாயை’யில் தான் உலவ நேரிடும். ‘இகலுக்கு எதிர் சாய்தல் ஆக்கம்’ (திருக்குறள்: 858) பற்றற்ற பொறுப்புணர்ச்சி தான் நம்மை சரியாக வழி நடத்திச் செல்லும்.
நடிப்பவர்கள் பிறரைப் போன்று ஒரு தொழில் செய்பவர்கள். அதிலும் அவர்கள் அட்டைக் கத்தி வீரர்கள். போலித் தனத்தைக் காசாக்குபவர்கள். நம் முட்டாள்தனத்தில், மயக்கத்தில் வணிகம் நடத்துபவர்கள். டாஸ்மார்க் போதைக்கும் சினிமா போதைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதா? ஆல்கஹால் மருந்தாகப் பயன்படுவது போல் சினிமாவைப் (கலை) பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அதிலும் இன்றுள்ள அதி தொழில்நுட்பத்தில் நடிப்பவரின் திறமைக்கு எவ்வளவு பங்கு? எடுத்துக் காட்டாக, ஒருவர் பாட்டு எழுதி, இன்னொருவர் இசை அமைத்து, மற்றொருவர் பாடி இருக்க, நடித்து உதடு அசைத்தவர் பெயரில் அப்பாடல் அழைக்கப்படும் பொய்மை நமக்குத் தெரியாமலா இருக்கிறது? என்றாலும் மயங்குகின்றோம்.
60, 70 ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பவர்கள் என்றால் கேவலமாகக் கருதப் பட்டதிலிருந்து இன்று நடிப்பவர்கள் அரசியலையும் ஆட்டுவிக்கும் வண்ணம் ஆகி உள்ளது சரியான வளர்ச்சியா? இந்தப் புற்றுநோய் வளர்ச்சியிலும் அதன் தீர்விலும் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாட்டில் ‘தமிழ்ப்’ பள்ளிகள் நடத்தி தாய்மொழியைப் பேணி வரும் சிறந்த ஆக்க வேலைக்கு எதிராக தமிழ்ச் சினிமாவையும் அதன் போலிகளையும் தூக்கிப் போற்றிப் பரப்பி வரும் இன அழிவு வேலையையும் முன்னின்று செய்து வருகின்றார்கள்.
இந்தியத் துணைக்கண்டத்தில் சினிமா மோகம் குறைந்த இனங்களின் (குஜராத்தியர்) மனப்பான்மை வேறுவிதமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். சினிமா போதை குறையாமல் தமிழர்களின் (ஈழத்தமிழர்கள் உள்பட) போக்கில் ஆரோக்கிய மாற்றம் வரும் என்று நினைப்பது பகற்கனவு.
கலை உணர்வற்ற கல்மனம் கொண்டவனின் புலம்பல் அன்று இது. நல்ல தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் போற்றுபவனே. திருக்குறளிலிருந்து கற்றுக் கொள்ளும் சில கருத்துகளைத் திரைப்படப் பாடலிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி வருபவனே. கலையைப் போற்றுவது போதையாகி விடக் கூடாது. போலித்தனத்தைப் போற்றும் வரை அடிமையாகத் தான் இருக்க முடியும். போலித்தனத்தில் பொருள் (அர்த்தம்) தேடி விமர்சிப்பது (அதன் முகத்திரையைக் கிழிப்பதற்கு அப்பால்) வீண் வேலை.
இன்றைய நிலையில் நாம் தமிழ் சினிமாவைப் பார்த்து ஆதரிக்காமல் இருந்தாலே போதும்; அதுவே தமிழ் இன, மொழி மறுமலர்ச்சிக்குச் செய்யும் நம்மளவிலான தொண்டாகும்.
இதை விட மட்டமான கட்டுரையை வாசிக்கணும் என்றால் இவரது பிற கட்டுரைகளைத்தான் வாசிக்கணும்.
Well said and well did. This article is a comprehensive research over the present scenario over the ” SOCIAL ENGINEERING ” . We appreciate the author to deliver his social responsive thoughts to Tamil society on all current affairs. This article will lead many of the public to think what is going on. Hats off Mr. Nilavarasu kannan. Proceed, not stop..
dont try to write these type of articles. it is really peculiar.
padu mosamaana katturai. muttaal thanamaana vaathangal. it is so absurd.