மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வீட்டிலேயே காய்கறிகள் பயிரிட்டு பலன் பெறுவது எப்படி?

ஆச்சாரி

Sep 15, 2013

வளர்ந்து வரும் விலைவாசி ஏற்றத்தால் காய்கறிகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால் நாம் அன்றாடம் உணவிற்காகப் பலவிதமான காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இதனால் மாதாமாதம் காய்கறிக்கென்றே ஒரு தனி நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது. இதனைத் தவிர்க்க நாம் நமது வீட்டில் வாசல் புறமோ, அல்லது கொல்லைப் புறமோ இருக்கும் சிறு இடத்தில் காய்கறிகளைப்  பயிரிட்டு வளர்த்தால் நமது பெரும்பாலான பணம் சேமிக்கப்படும். நகரத்தில் வசிப்பவர் சிறு தொட்டிகளிலும், மாடிகளிலும் இந்தக் காய்கறித் தோட்டத்தை அமைக்கலாம்.

விதை வாங்க:

அரசு விதைப் பண்ணைகளிலும், வேளாண்மைத் தோட்டக்கலைத்துறை  அலுவலகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் அல்லது பண்ணை மற்றும் ஆராய்ச்சி மையங்களில் தரமான விதைகளை வாங்கலாம். தற்போது சில விதை உற்பத்தி நிறுவனங்கள் “வீட்டுத் தோட்ட விதைப் பெட்டிகள்” என்ற பெயரில்  பல்வேறு விதைகள் கொண்ட சிறு பெட்டிகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.

இனி எந்த வகையான காய்கறிகளை, கீரைகளை வீட்டில் வளர்க்கலாம். அதன் மருத்துவ குணங்கள் என்ன என்பதை இனி பார்க்கலாம்.

மணத்தக்காளிக் கீரை:

மணத்தக்காளிக்கீரை என்பது ஒரு மூலிகைச் செடி போன்ற சத்துமிக்க கீரையாகும். மற்ற கீரைகளில் வெறும் சத்து மட்டுமே இருக்கும். ஆனால் மணத்தக்காளியில் மருத்துவ குணம் இருக்கின்றதாம். பொதுவாக மணத்தக்காளிக் கீரைச்செடி பெரிதாக வளரக் கூடிய செடியாகும். ஆனால் கீரைக்காக மட்டுமே என்றால், நம் வீட்டு கொல்லைப்புறமோ, நம்  வீட்டு முன்போ வளர்க்கலாம். நன்றாக வெயில் படும் இடத்தில் இக்கீரையை வளர்க்க வேண்டும். இதை வளர்க்க செம்மண்ணும், மணலும் கலந்து, கொஞ்சம் சாண உரமும் கலந்து மண் தொட்டிகளிலோ, தகர டப்பாக்களிலோ, பிளாஸ்டிக் வாளிகளிலோ  இக்கீரையை நன்கு வளர்க்கலாம். இச்செடிகள் 1 ½  அடி உயரம் வந்ததும் பிடுங்கி உணவுக்காகப் பயன்படுத்தலாம்.

மணத்தக்காளிக்குத் தனியாக விதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வளர்ந்த இரண்டு செடிகளை காய்க்க விட்டால் போதும். இதன் பழங்களைப் பறித்து விதையாக எடுத்துக்கொண்டு நடலாம். இப்பழத்தையும் சாப்பிடலாம். தவிர இப்பழத்தை நன்கு காயவைத்து உணவுக்கு வற்றலாகவும் பயன்படுத்தலாம்.

மருத்துவகுணம்:

இக்கீரையானது வாய்ப்புண்ணுக்கும், வயிற்றுப்புண்ணுக்கும் சிறந்த மருந்தாகும். மேலும் சளி, ஆஸ்துமா போன்ற தொல்லைகளையும் நீக்கும். அதனால் வாரத்தில் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

பாலக்கீரை:

பாலக் ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச்செடியாகும். இக்கீரையின் தாயகம் ஐரோப்பாவாகும். இதுவும் வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். இந்தப் பாலக்கீரை வளர வளமான மண் தேவை. இது மணலிலும், வண்டல் மண்ணிலும் நன்கு வளரும். இது வளர எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

பாலக்கீரை ஒரு அடி முதல் இரண்டு அடி வரை வளரக் கூடியது. தவிர ௦.75 அடி முதல் 1.5 அடி வரை பக்கவாட்டிலும் வளரும். வீட்டில் ஒரு தொட்டியில் இக்கீரையை விதைத்து 3 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது. இதை விதை 10 வது நாளில், இக்கீரை நாற்றுகள் வளரத் தொடங்கும். பின்  30 வது நாளில் இந்த இலைகளைப் பறித்துச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். இவ்வாறு அறுவடை 6 அல்லது 8 முறை செய்யலாம். இந்த இலைகளை பூ விடும் முன்பு பறித்துவிட வேண்டும் பாலக் விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவ குணம்:

பாலக்கீரை தலைவலியைக் குணப்படுத்தும். மூளை வளர்ச்சிக்கு உதவும். இதன் இலைகளைச் சாப்பிடுவதால் குடல்புண்களை குணப்படுத்தும். நம் தலை முடி உதிர்வதையும், வழுக்கையையும் தடுக்கும். இதன் சாறு புற்றுநோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பருப்புக்கீரை:

இந்தப் பருப்புக்கீரையை வளர்க்கச் செம்மண் நிரம்பிய மண் தொட்டியில் இதன் விதிகளையோ அல்லது இக்கீரைத்தண்டை நட்டோ வளர்க்கலாம். இக்கீரை வளர நன்கு நீர் தேவைப்படும். இக்கீரையின் இலைகள் நீள்வட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும், தடிப்பானதாகவும் இருக்கும். இந்தக் கீரைச் செடி நட்டு  20 நாளில் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. மாட்டுச்சாணத்தை உரமாகப் பயன்படுத்தினால் நன்கு வளர்ச்சி பெறும். நட்டு ஒரு மாதத்தில் மூன்று முறை அறுவடை செய்து சமைக்கலாம்.

மருத்துவ குணம்:

இக்கீரை கல்லீரல் வீக்கத்தைப் போக்கும், பித்தக்கோளாறு தீர்க்கும். இதன் இலை, விதைகளை அரைத்துப் பூசினால் தீப்புண் குணமாகும். இக்கீரை வயிற்றுக் கிருமிகளை அழிக்கும். பெண்கள் உண்டால் தாய்ப்பால் சுரப்பதோடு, மாதவிடாய் கோளாறுகளை குணமாக்கும்.

தக்காளி:

நன்கு பழுத்த தக்காளியை எடுத்துப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும். விதைகள் தனியே பிரியும். பின்பு இந்நீரை வடிகட்டி எடுத்து சிறிது மண் அல்லது சாம்பல் உடன் சேர்த்து கலந்து ஒரு தாளில் காயவைத்துவிட வேண்டும். இப்போது தக்காளிச்செடி விதை தயார். இந்த விதைகள் நன்கு காய்ந்ததும் வீட்டில் உள்ள செம்மண் நிரம்பிய தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டுத் தூவி தண்ணீர் ஊற்ற வேண்டும். மண் காய்ந்து போகாத அளவிற்கு நீரை ஊற்றினால் போதுமானது.

பின்பு  25 நாட்களுக்குள் தக்காளி காய்க்கத் தொடங்கி விடும். தக்காளி காய்ப்பதால் இச்செடியின் கனம் தாங்காமல் ஒடியக் கூடும். அதனால் இதன் அருகே ஒரு சிறிய கம்பை ஊன்றி விட வேண்டும். இதன் காய் காய்க்கும் சமயத்தில் இக்காம்புடன் செடியைக் கட்டிவிட வேண்டும். இது வளர்ந்து  40 வது நாளில் தக்காளியைப் பறிக்கலாம். இது 45 செ.மீ வளரக் கூடியது. இதில் 8 முறை தக்காளியை பழுக்கப்பழுக்கப் பறிக்கலாம்.

மருத்துவகுணம்:

தக்காளி வயிற்றுப்புண்ணை ஆற்றும் சிறந்த உணவாகும். தவிர புற்றுநோய், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்கும். இது ரத்தத்தைச் சுரக்கும் ஆற்றல் கொண்டது. தவிர தக்காளி சூப் அருந்தினால் சருமம் மென்மையாகும். தக்காளியை தினமும் உணவில் சேர்த்தால் உடல் எடை அதிகரிக்காமல் வைக்கும்.

மிளகாய்:

மிளகாயை வீட்டில் வளர்க்க செம்மண் நிரம்பிய ஒரு தொட்டியில் மண்ணைக் கிளறிவிட்டு காய்ந்த மிளகாய் விதைகளைத் தூவ வேண்டும். பின்பு நீர் ஊற்ற வேண்டும். சாணத்தை அதன் மேற்பரப்பில் இட்டால் இவை வளர நன்கு உரம் கிடைக்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விதையாக இருக்கும் போது நீர் ஊற்ற வேண்டும். 30 நாளில் மிளகாய்ச் செடி வளர்ந்து விடும். பின் வாரம் ஒரு முறை நீர் ஊற்றினால் போதுமானது. 40 வது நாளில் மிளகாய் பறிக்கலாம்.

மருத்துவகுணம்:

இது பசியைத் தூண்டவும், குடல் வாயுவை அகற்றவும் பயன்படுகிறது. இது நம் உடலுக்குப் போதிய வெப்பத்தைத் தருவதோடு ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது. பழுத்த மிளகாயில் வைட்டமின் சி சத்து உள்ளது. இம்மிளகாயை அளவுக்கு அதிகம் உண்டால் குடல் உறுப்புகள் கெடவும் வாய்ப்பு உண்டு.

கறிவேப்பிலை:

இதை வளர்க்க ஒரு தொட்டியில் மணல் கலந்த செம்மண் அல்லது வண்டல் மண்ணை இட்டு நிரப்ப வேண்டும். பின்பு கறிவேப்பிலைச் செடியை ஒரு அடி ஆழத்தில் நட வேண்டும். இதற்குள் மாட்டு சாணத்தையும் மண்ணோடு கலந்து விட வேண்டும். நட்ட பின் மூன்றாம் நாள் ஒரு முறையும் பின்பு வாரம் ஒரு முறையும் நீர் ஊற்றி வர வேண்டும். இவ்வாறு செய்து வர  40  வது நாளில் 10 செ.மீ. உயரம் வரை வளர்ந்த பின்பு பறித்துச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். அதன் பின் தினமும் இதைப் பறித்துப் பயன்படுத்தலாம்.

மருத்துவகுணம்:

அஜீரணம், வயிற்றுப்போக்கு, இளநரை, முடியின் வேர்கள் வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கு கறிவேப்பிலை உதவுகிறது. மேலும் கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின் சி உயிர்ச்சத்தும் இதில் உள்ளது.

புதினா:

ஒரு தொட்டியில் மணல் கலந்த செம்மண்ணை சாண வரட்டி கலந்து நிரப்ப வேண்டும். அதில் அரையடி குழி பறித்து புதினாச் செடியை நட்டு, நன்கு நீர் ஊற்ற வேண்டும். முதல் நாள் நீர் ஊற்றிய பின் மூன்றாம் நாள் நீர் ஊற்றினால் போதுமானது. இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றி வரும்போது  45 வது நாளில் புதினா நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் . புதினா வேரிலிருந்து 3 செ.மீ விட்டு, 25-30 செ.மீ நீளம் உள்ள தழைகளை அறுவடை செய்யலாம். இதைத் தொடர்ந்து அறுவடையை 55-60 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம். அறுவடையைக் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் செய்யலாம். பின்பு அதை சமையலுக்கு நாம் நன்கு பயன்படுத்தலாம். இது வளர மித வெப்பம் தேவை. டிசம்பர் மாதத்தில் இவை நன்கு வளரும் தன்மை கொண்டது. ஒரு முறை நட்ட செடிகள் குறைந்தது  3 ஆண்டுவரை பலன் தரும்.

மருத்துவகுணம்:

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவில் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, இரும்பு, வைட்டமின் ஏ, கால்சியம், நார்ச்சத்து எனப் பல சத்து நிறைந்த கீரையாகும். இது அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும், வாய் நாற்றம் அகலும், பசியைத் தூண்டும், மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்சனை தீரும். தவிர மஞ்சள்காமாலை, வாதம், ரத்தசோகை, நரம்பு தளர்ச்சிக்குச் சிறந்த மருந்தாகும்.

கொத்தமல்லி:

செம்மண், வண்டல் மண் அல்லது கரிசல் மண் நிரப்பிய தொட்டியில் மணலையும் கலந்து மல்லியை இரண்டாக உடைத்து, அம்மண்ணைக் கிளறிவிட்டு தூவி விட வேண்டும். இதன் உரத்திற்கு மாட்டுச்சாணக் கரைசலைப் பயன்படுத்தலாம். இதன் வளர்ச்சிக்காக அதிக நீர் ஊற்றினால் இதன் வளர்ச்சி குன்றும். ஆகவே முதல் நாள் நீர் ஊற்றிய பின் மூன்றாம் நாள் நன்கு நீர் ஊற்ற வேண்டும். அதன் பின் 7 முதல்  10 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றிவர வேண்டும். இவை விதைத்த 8 முதல் 15 வது நாளில் இந்த மல்லி விதை முளைக்கத் தொடங்கும். பின் 30-ம் நாளில் இளங்கீரையாகவும், 60 நாட்களுக்கு மேல் இதன் இலைகளைப் பறித்து பயன்படுத்தலாம். இதன் காய்கள் நன்கு முதிர்ந்து பச்சை நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறும் போது அறுவடை செய்வது நல்லது. இது 30 செ.மீ உயரம் வரை வளரும்.

மருத்துவகுணம்:

எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதன் விதை, இலை இரண்டுமே மருத்துவ குணம் கொண்டது. உடலின் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பைத் தடுக்கிறது. கண் பார்வை தெளிவடைய வைக்கும். மாலைக்கண் நோய் உள்ளவர்கள் இந்தக்கீரையை அவசியம் உண்ண வேண்டும். ரத்தத்தை சுத்தம் செய்து புதிய ரத்தம் உண்டாக்கும். தோல் நோய்களை குணமாக்கி மன அமைதியையும், தூக்கத்தையும் கொடுக்கும் கொத்தமல்லி ரசம் சளிக்கு நல்லது.

கற்றாழை:

இது ஆப்பிரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு தாவரமாகும். இதை நம் வீடுகளில் அழகுக்காக மட்டுமல்ல முதலுதவிக்கான மருந்துப்பொருளாகக் கூட வளர்க்கலாம். இது வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துப் பயிராகும். நம் வீட்டில் இதை வளர்க்க, மணல், செம்மண் கலந்து ஒரு தொட்டியில் நிரப்ப வேண்டும். பின்பு நன்கு வேர் விட்ட கற்றாழைச் செடியினை இதனுள் நட்டுவிட வேண்டும். இந்தக் கற்றாழைச் செடிகளுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படாது. ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது. இவ்வாறு நட்ட 5 மாதத்தில் இதன் இதழ்களைப் பறித்துப் பயன்படுத்தலாம். ஒரு கற்றாழைச் செடிக்கு 3 கிலோ வரை இதழ்கள் கிடைக்கும்.

மருத்துவகுணம்:

இந்தக் கற்றாழைச்சாறு இருமல், சளி, குடல் புண் ஆகியவற்றிக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. கரும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு, வெட்டுக்காயங்கள், ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்பால் ஆன உலர்ந்த சருமம் எனும் சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாற்றை தினமும் முகத்தில் தடவி வர நல்ல பொழிவு பெறும். இது மனிதர்களை என்றும் இளமையாக வைப்பதால் இதற்குக் ‘குமரி’ என்ற பெயரும் உண்டு.

பசலைக்கீரை:

செம்மண், மணல் கலந்த இக்கலவை மண்ணை ஒரு மண் தொட்டியில் வைத்து நிரப்பிக் கொள்ள வேண்டும். இதன் மேற்புறத்தில் சாணத்தைப் பரப்பிவிட்டு பசலைக்கீரைச் செடியினை நட்டு விட வேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றி வர வேண்டும். இவ்வாறாகச் செய்து வர 25-ம் நாளில் பசலைக்கீரையைப் பறித்து பயன்படுத்தலாம். அதிலிருந்து 15-வது நாளில் மீண்டும் பறிக்கலாம். இதை மூன்று விரல் அளவு விட்டுக் கீரைகளை செடியில் இருந்து அறுவடை செய்யவேண்டும். இவ்வாறு ஒரு முறை நட்டு விட்டால் இதிலிருந்து 8 முறை அறுவடை  செய்து பயன் பெறலாம்.

பசலைக்கீரையில் இருவகை உண்டு. ஒன்று கொடிப்பசலை இன்னொன்று தரைப்பசலை. கொடிப்பசலை பச்சை நிறம் உடையது, இலை பெரியதாக இருக்கும். இது கொடியாகப் படரும். தரைப்பசலை, தரையில் படரும் இளஞ்சிவப்பாகவும், பச்சை நிறத்திலும் காணப்படும். இதன் இலை சிறியதாக இருக்கும்.

மருத்துவகுணம்:

பாசிப்பருப்புடன் இக்கீரையை சமைத்து உண்டால் நீர்கடுப்பு நீங்கும். உடலின் சூட்டைக் குறைத்துப் பித்தத்தையும் தணிக்கும். நல்ல பசியைத் தரும். குழந்தைகளின் தேக பலன் வளர்ச்சிக்கு இது நல்ல உணவாகும். தலைவலி, ரத்த சோகையைப் போக்கும், கண்பார்வைப் பொலிவு பெறும்.

With so much of their life focused on a computer screen small enough to www.cellspyapps.org fit into their pocket, isn’t it time to start paying attention to what they’re doing and making sure it won’t hurt them in the future

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வீட்டிலேயே காய்கறிகள் பயிரிட்டு பலன் பெறுவது எப்படி?”

அதிகம் படித்தது