மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வீட்டுக்குள் ஒரு உலகம்

ஆச்சாரி

Jan 14, 2012

அவசர கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையின் ஊடே-  நமக்கு முழுக்க முழுக்க மன நிறைவைத் தருவனவற்றை நாம் கைக்கொள்வதில்லை. அதில் முதன்மையானது நூலகம்.

நூலகம் என்பதை ஏதோ- எழுத்தாளர்கள், கவிஞர்கள், மேதாவிகள்   மாணவர்கள், இவர்களுக்கு மட்டுமே தேவையான ஒன்று என இன்றும் பலர் பாவித்துக்கொண்டு நூலகத்துக்கு தனி உலகத்தைப் படைத்து விட்டனர். ஆனால் நம் அன்றாடச் செயற்பாடுகளில் நூலகம் செல்லுதலும்  ஓர் அங்கம் என்பதை மறந்து விட்டோம்.

“சொர்க்கம் என்பது ஒரு மாபெரும்

நூலகம் என்றே நான் எப்போதும்

கற்பனை செய்துகொண்டிருக்கிறேன்”

என்று ஒரு மேலைநாட்டு அறிஞர் கூறுகிறார்.

“வீட்டுக்கு ஒரு நூலகம் அமையும்

காலமே அறிவின் பொற்காலம்”

என்று இன்னொரு அறிஞர் அறிவிக்கிறார்.

மழை வளத்துக்காக வீட்டுக்கொரு மரம் வளர்த்தோம் – மன வளத்திற்காக நாம் வீட்டுக்கொரு நூலகம் அமைத்தோமா? இல்லை.

காலை முதல் இரவுமட்டும் வாழ்க்கை நலத்திற்காக  பலவற்றைத் தேடுகிறோம்- அறிவுத் தேவைக்கு என்ன தேடுகிறோம்? சற்று ஓய்வு கிடைத்தாலும் தொலைக்காட்சிக்குள் தொலைந்து போகின்றோம்.

தினமும் ஒரு மணி நேரத்தை நூலகத்தில் செலவிட்டுப் பாருங்கள்- அவசர உலகம் நமக்கேற்படுத்தும் மன உளைச்சல் மறைந்து மனத்துள் அமைதி அரங்கேறும். காரணம் புத்தகம் படித்தலும் மனதை ஒருநிலைப்படுத்தும் கலையே.  இந்த தியானத்தில் அமைதியோடு சேர்ந்து அறிவும் செறிவாகிறது.

பள்ளி, கல்லூரி வாசிப்பெல்லாம் அரசுப் பணிக்காகவும் அல்லது மற்ற பணிகளுக்காகவும் அதன் மூலம் வருமானம் ஈட்டுதலுக்காகவும் என்றே பொருளாதாரத்தோடு தொடர்புகொண்டதாயுள்ளது. ஒரு நல்ல பணி கிடைத்து பெரும் தொகையை  ஊதியமாகப் பெற்றால் – வாழ்க்கை வண்டிக்கு அச்சாணி கிடைத்ததாகப் பெருமூச்செறிந்து பயணம் தொடர்கிறோம். புத்தகம் வாசித்தலுக்கு நேரமே இல்லை என்று கூறி சில பயனற்ற  கேளிக்கைகளுக்கு நேரத்தைச் செலவிடுகிறோம்.

தொடர்ந்து நூல்களை வாசிப்பு நம் பொருளாதாரத் தேவைகளையும் நிறைவு செய்யும் என்பதையும் நாம் என்னவாக ஆக விரும்புகிறோமோ அந்த நிலைக்கு நம்மை உயர்த்தும் என்பதையும் உணரத் தவறுகிறோம்.

புத்தகத்தைத் திறக்கும்போது நல்ல தகவல்கள்  அதனுடைய ஒவ்வொரு பக்கத்திலும் ஊற்றெடுக்கின்றன. நம் அணுக்கத் தோழன் அக்கறையுடன் சொல்வதுபோல நல்ல ஆலோசனைகளையும் வாழ்க்கையின் உண்மைகளையும்  நமக்குத் தருகின்றன.

புத்தகங்களைப் படிக்கப் படிக்க நம்மையே  அறியாமல் அந்த நூல்களிலிருந்து பெற்ற நல்ல செய்திகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம் . அது நம் மீது- நண்பர்களும் உறவினர்களும் உடன் பணியாற்றுவோரும் கொண்டுள்ள எண்ணத்தையும் மதிப்பையும் உயர்த்தும்.

‘நூல் பல கல்’ என்றார் ஔவை மூதாட்டி.

“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக”

என்றார் வள்ளுவர்.

அதனால்  நம் வாசிப்பு வழக்கம் விரிவடைய வீடுகளில் நூலகம் அமைப்பது அவசியம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். அதைப்போல புத்தகப் படிப்பு இல்லாமல் ஒருநாளும் கழிய வேண்டாம் எனும் எண்ணத்துடன்  நூலகங்களை நாடுவோம். அரசின் நூலகங்களும் நிறைய உள்ளன. அங்கு சென்றும் வாசிக்கலாம்.

ஆனாலும் நம் வீட்டுக்குள்ளேயே சிறிய நூலகம் இருந்தால் நாம் நினைத்த நேரத்தில் படிக்கலாம். நாம் படிப்பதைக் கண்ணுறும் நம் பிள்ளைகளுக்கும் அந்த ஆர்வம் தோன்றும்- அதனால் அவர்களின் எதிர்காலம் ஏற்றமிக்கதாய் அமையும். சீராக்கப்பட்ட சிந்தனைகள் கொண்டவர்களாக அவர்கள் வளர்வார்கள். புத்தகத்தின் உடனான தொடர்பு பள்ளி- கல்லூரியோடு  முடிந்து விடுவதல்ல- எப்போதும் தேவையான ஒன்றென அவர்கள்  தெரிந்துகொள்வார்கள்.

மாதம் ஒருமுறை  நம் வருவாயில் மிகச் சிறிய தொகையை புத்தகம் வாங்குவதற்காகச்  செலவிட்டால் அதுவே நாளடைவில்  நிறைய புத்தகங்களாகி நம் வீட்டில் சிறிய நூலகம் அமைந்துவிடும். புத்தகம் வாங்குதல் செலவல்ல மிகச் சிறந்த சேமிப்பு. ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தினரும் இப்படிச் செய்தால் எவ்வளவு பயன் கிட்டும் என்பதை எதிர்காலம் உணர்த்தும்.

இப்போது விஞ்ஞான வளர்ச்சியால் மின்னணுப் புத்தகம் போன்றவைகள் வந்துவிட்டன. எங்கு சென்றாலும் உடன் கொண்டு செல்லும் முறையில் சிறிய வகை கணினிகள் (laptop) இருக்கின்றன. நமது வெளியூர் பயணங்களின்போது இவைகள் மூலமாகவும் புத்தகங்களை வாசித்தபடி செல்லலாம்.

நாம் எல்லோருமே நம் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் அக்கறை எடுத்துக் கொள்வதைப்  போல நம் வீட்டில்  ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்பதிலும் முனைப்புக்காட்டி நூலகமும் அமைத்து விட்டால் அந்த வீடு அறிவுக் கருவூலமாகத் திகழும். குடும்பத்தினருக்குள் தினமும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி நாடகம் பற்றியோ அல்லது திரைப்படம் குறித்தோ பேசுவார்கள்.

அந்த வீட்டில் ஒரு நூலகமும் இருந்தால் ஒரு புத்தகத்தைப் பற்றி- விவாதித்து அந்தப் புத்தகம் என்ன சொன்னது? அது சொன்ன புதிய தகவல் என்ன? என்பது குறித்து பேசலாம்- அதனால் நம் சிந்தனை விரிவடையும். அங்கு வீண் பேச்சுக்களுக்கு இடமில்லை.

தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் விரும்புகிறார்கள். பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்க  விரும்புகிறார்கள். இதற்காக குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுப்பது, கூடுதல் நேரம் படிக்க வைப்பது தனி ஆசிரியரிடம் படிக்கவைப்பது  என பலவித அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.

இவற்றைவிட வீட்டில் சிறு நூலகம் இருந்தாலே குழந்தைகளின் ஆர்வம் இயல்பாகவே கல்வியின் பக்கம் திரும்பிவிடும் என்கிறது அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழக ஆய்வு. 20 ஆண்டு காலம் இதற்கான ஆய்வு நடந்தது. ஒரு வீட்டில் குறைந்தபட்சம் 500 புத்தகங்கள் இருப்பின் குழந்தைகளின் ஆர்வம் புத்தகத்தின் பக்கம் திரும்புவதாக அந்த ஆய்வில் தெரியவந்தது. எனவே வீட்டில் நூலகம் அமைப்பது எவ்வளவு அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் நூல்களில் இல்லாத தகவல்களா எனுமளவிற்கு நம் தமிழ் நமக்கு

அறிவுச் சுரங்கமாகத் திகழ்கிறது. வாழ்வை செறிவாக்க நெறிகள் சொல்லும் திருக்குறள்- படிக்கப் படிக்க இனிக்கும் சங்க இலக்கியங்கள்- தமிழரின் வீரம் தெறிக்கும் வரலாறுகள் என விரவிக்கிடக்கும் தமிழ் நூல்களை வாங்கி வீட்டு நூலகத்தில் வைத்தால்- வாசித்து வந்தால் பேரின்பமும் பெரும் பயனும் உண்டாகும் என்பது உறுதி. ‘முகத்தில் இரண்டு புண்ணுடையார்” என்று வள்ளுவர் பரிகசித்துப் பகர்வது பள்ளிப் படிப்பு அறியாதோரை  மட்டுமல்ல – படிக்கத் தெரிந்தும் படிக்காமல் இருப்பவர்களுக்கும்தான்.

நண்பர்கள்- உறவினர்களின் திருமண விழாக்களிலும் பிற விழாக்களிலும் விலை உயர்ந்த பரிசுப் பொருளை அன்பளிப்பாக அளிப்பதையே பெருமையாகக் கருதுகிறோம். அந்தப் பரிசுப் பொருளின் விலையில் சற்று குறைத்து அந்தப் பணத்தில் ஒரு புத்தகம் வாங்கி பரிசுப் பொருளோடு சேர்த்தளித்தால் சிறப்பாக இருக்குமல்லவா?

ஆலயம் செல்வது சாலவும் நன்றோ இல்லையோ- நூலகப் படிப்பு நாளும் நன்று. எந்திரம் போல் இயங்கும் வாழ்க்கையில் படிப்பது தேவைதானா என்று பலர் நினைக்கலாம். இந்த எந்திரமயத்தில் சிக்கி நம் மனமும் எந்திரத் தன்மைகொண்டதாகி விடக்கூடாது. அன்றலர்ந்த மலர் போல மனம் இருக்க தினமும் புத்தகப் பூங்காவில் உலவ வேண்டும்.

அமெரிக்காவில் பணக்காரர்கlள் குறித்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வில்- பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் வீடுகளில் எல்லாம் நூலகம் இருப்பதை கண்டறிந்தனர், நேர்மாறாக நடுத்தரமான வருமானமுள்ள வீடுகளில் எல்லாம் பெரிய பெரிய தொலைக்காட்சிகள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறதா? வீட்டுத் திரையரங்கு (home theatre)  இருக்கிறதா? என்றெல்லாம் ஆடம்பரப் பொருட்களின் பெயர்களைப் பட்டியலிட்டு நாம் பிறரிடமும் மற்றவர்கள் நம்மிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். உங்கள் வீட்டில் நூலகம் இருக்கிறதா? என்று யாரும் கேட்பதில்லை அப்படிக் கேட்கும் நிலை உருவாக வேண்டும். நாம் உருவாக்க வேண்டும்.

இல்லம்தோறும் நூலகம் செய்வோம்- இல்லை

அது வீடில்லை எனச் சொல்வோம்.

Evaluate the accuracy of this statement, paper-writer.org addressing how and for whom this statement might apply

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “வீட்டுக்குள் ஒரு உலகம்”
  1. ayyampeumal says:

    நல்ல கருத்து ஆனால் நடைமுறை சாத்தியம் ஆகா நெடுநாள் ஆகும்.

  2. ayyampeumal says:

    நல்ல கருத்து, ஆனால் நடைமுரை சாத்தியம் ஆக நெடுனால் ஆகும்.

  3. Bala says:

    I agree with the concept. But 70% of Indian population are below or at poverty level. Even if the books are bought where there is space. I remember my younger days when there is rainy season I have to sleep out side or I have to sleep on the bench because the floor is wet. I see the same situation in the villages even to day.
    What can be done?
    Every street should have a library built strongly to accommodate the books and if necessary once a week free mid day meal can be given.
    Indian villages have a long way to go to achieve the dream of having a library at home.

அதிகம் படித்தது