மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள்

ஆச்சாரி

Mar 1, 2013

“திரைகடல் ஒடியும் திரவியம் தேடு’’ இந்த வாசகம் தமிழில் தோன்றிவிட்டதாலோ என்னமோ சங்க காலம் தொட்டு இன்றுவரை பொருளீட்டுதல் காரணமாக ஒரு கட்டத்தில் கணவன்மார்கள் தன் மனைவியைப்  பிரிந்து செல்லவே செய்கிறார்கள். இந்நிகழ்வைப் பிரதிபலிக்கும் வண்ணம் அன்றே தமிழ்  இலக்கியத்தில் “பொருட்வயிற்பிரிவு” என்ற ஒரு பிரிவே, மனைவியைப் பிரிந்து, கடல் கடந்து பொருள் தேடச் செல்லும் கணவன்மார்களின் நிலையையும், அவர்களை நினைத்து மனைவிமார்கள் இல்லத்தில் ஏங்கிக் கொண்டு இருக்கும் நிலையை அன்றே நம் தமிழ் இலக்கியங்கள் பேசின என்றால் இந்தக்காலத்தில் கேட்கவா வேண்டும்?

சங்க காலத் தலைவன் பொருளீட்டும் நோக்கத்தோடு ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை தலைவியைப் பிரிந்து செல்வதும் அவர்களை கார்காலம் வருத்துவதும். வாடைக் காற்று வாட்டுவதும் இயல்பான மரபுகளில் ஒன்றாக இருந்து வந்தது.

அதன் பரிணாம வளர்ச்சியாக இன்றைய கணவன்மார்கள் அதிக வருவாயின் காரணமாக கும்பல் கும்பலாக அயல்நாடுகளுக்குப்  படை எடுத்துச் செல்கிறார்கள்.

இத்தகைய படைவீரர்கள், வாழ்க்கையுடன் போராடுகிறார்களோ இல்லையோ நிச்சயம் தன் மன உணர்வுகளுடன் போராடுகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

என் மகன் அமெரிக்காவுல கை நிறைய சம்பாதிக்கிறான்… “என் புருசன் துபாயில வேல பாக்கிறாரு’’ என்று சமூகத்தில் ஆங்காங்கே கேட்கும் இந்தப்  பெருமைக் குரல்கள் எத்தனை எத்தனையோ கண்ணீர் கதைகளைத் தாங்கிய பெட்டகங்களாகத் தான் இருக்கின்றன.

இவ்வாறு வாழும் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் வாழ்வியல் நிலை எப்படி இருக்கிறது…? அவர்கள் மன உணர்வுகள்  என்ன? குடும்பச் சூழல் என்ன? எத்தகைய இடர்பாடுகளை இவர்கள் எதிர் கொள்கின்றனர்?  அவற்றைப் பற்றி சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

தேவை, மோகம், வறுமை,  கடன் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு வேலைக்குத் தள்ளப்படும் நம்மூர் இளைஞர்கள் எவ்வளவு நிறைவான வருமானத்தை ஈட்டினாலும் அங்கே தம்மை ஒரு அகதியைப் போலவும் அனாதைப் பிள்ளைகளாகவும் தான் உணர்கிறார்கள்.

தாயின் கதகதப்பான அரவணைப்பும், தந்தையின் பாதுகாப்புணர்வும் அப்போது அவர்களுக்கு கிடைப்பதில்லை. அருகில் இருக்கும்பொழுது புலப்படாத தாயின் பாசம் தனியாக தன் துணிகளை தானே துவைக்கும் பொழுதும், தன் உணவினை தாமே சமைத்துச்  சாப்பிடும் பொழுதுதான் தெரிகின்றது. இதுதான் அவர்களை வாட்டும் முதல் பாதிப்பு.

சில காலம் கழித்து ஊரில் இவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்து விடுவார்கள். “பொண்ண எல்லாம் பார்த்துப்  பேசி முடிச்சிட்டோம்டா, நீ  வந்து தாலி கட்டவேண்டியது தான் பாக்கி… அம்மாவுக்கு வேற வயசாயிடுச்சில்ல’’ என்றவாறு தொலைபேசி குரல்கள் தொல்லைபடுத்தும்.

இவரும் முட்டி மோதி மேலிடத்திலிருந்து அனுமதி வாங்கி, திருமணத்திற்காக இரண்டு மாதங்கள் விடுமுறை பெற்றுச்  சொந்த ஊருக்கு மகிழ்ச்சியாகத் திரும்பி வருவார்.

திருமணம் கோலாகலமாக நடைபெறும்,  இல்லறம் சிறக்கும் வாழ்வில் வசந்தம் வீசும், புது மனைவியுடன் இனம் புரியாத இன்பம் உண்டாகும். இந்நிலையில் கண்மூடித் திறப்பதற்குள் இரண்டு மாத விடுமுறையும் -ஒடிப்போகும்.

பிறகென்ன, அழும் மனைவிக்கு ஆறுதல் வார்த்தை கூறிவிட்டு கூடிய விரைவில் உன்னையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என்று சமாதானப் படுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிவிடுவார் இவர்.

வெளிநாட்டிற்குச் சென்ற பின் மேலும் இரண்டு மாதம் கழியும். அப்பொழுது  மீண்டும் ஊரிலிருந்து தொலைபேசி அழைக்கும். அதிலிருந்து ஒரு குரல் “தம்பி ஒரு நல்ல செய்திடா… உம்பொண்டாட்டி மாசமா இருக்கா! என்று  சொல்லும்.

அவ்வளவு தான் அதைக் கேட்டவுடன் நம்மவர் நொந்து போவர். என்ன ஒரு அவல நிலை இது? ஆசை மனைவியை அருகே உடனிருந்து அரவணைக்க வேண்டிய கணவன், எங்கேயோ இருந்து மகிழ்ச்சி அடைந்தாலும் அவளுக்கு அருகே இருப்பது போல் வருமா?.

 

இது ஆண்களின் நிலை மட்டும் தான்… இதனை அடுத்து அவர்களை மணம் முடித்த பெண்களின் நிலை என்ன ஆகிறது. அதையும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரு பெண், திருமணத்திற்கு முன்பு முழுக்க முழுக்க தன் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் வளர்கிறாள். ஆண்களைப் போல வெளியில் செல்லும் சுதந்திரம். அவர்களுக்கு இல்லை, ஆகவே அந்தப்  பெண்ணுக்கு குடும்பமே உலகமாக இருக்கிறது அவளது இன்ப துன்பங்களும் அதற்குள்ளாகவே தான் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அப்பொழுது திடீரென வரும் திருமண பந்தம் அதுவரை அவர்கள் வாழந்த வாழ்வை தலைகீழாகப்  புரட்டிப் போடுகிறது.

அது, அத்தனை நாட்களாக அவருக்கிருந்த ரத்த உறவுகளை வெட்டி எறியச் செய்கிறது, பாசப் பிணைப்பில் கூடு கட்டி வாழ்ந்த குடும்பத்திலிருந்து முழுமையாக பறிக்கப்படுகின்ற அவள் அந்நிலையில் எதிர்கொள்ளும் துயரம் மரணத்தை விடக் கொடுமையானதாகும்.  அந்தத்  துயரத்தை புகுந்த வீட்டில் மறக்கச் செய்யும் ஒரே ஒரு உறவு அவளது கணவன் மட்டும் தான். அந்தக் கணவனும் வேலையின் காரணமாக பிரிந்து செல்லும் போது மிகுந்த மனவேதனைக்குள்ளாகிறாள் அந்தப் பெண். அதிலும் கர்ப்பக்காலத்தில் நேரும் அந்த பிரிவு மிகுந்த வேதனைக்குரியதாகும்

முதன் முதலாக தனக்கு  நேரும் சின்னச் சின்ன இயற்கை மாற்றங்களைப் பற்றிக் கணவனிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது… நிறை மாதத்தில் நிகழும் குழந்தையின் அசைவுகளைக் காட்டி மகிழ முடியாது. வளைகாப்பு போன்ற மங்கள காரியங்களில் கணவன் அருகில் இருக்கமாட்டார் அதோடு குழந்தை பிறந்தவுடன் புத்தம் புதிதான குருத்துப் போன்ற அந்த பிஞ்சு உருவத்தை முத்தமிட்டு ரசிக்கக் கூடிய யோகம் கூட  கணவன்மார்களுக்குக் கிடைப்பதில்லை. இதுபோன்ற விசயங்கள் அந்தப் பெண்ணை மிகவும் பாதிக்கச் செய்கிறது.

இத்தகைய  குடும்பங்களில் கணவன் மனைவி மட்டுமல்ல அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் கூடப்  பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாடும் பொழுது அப்பா அருகில் இருப்பதில்லை. திருவிழாக் கூட்டங்களில் மற்ற குழந்தைகள் தந்தையுடன் இருப்பதைப் பார்த்து இவை ஏக்கம் கொள்கிறது.  மேலும் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நிகழும் போது அதில் பெற்றோர்களும் கலந்து கொள்வார்கள். மற்ற குழந்தைகள் என் அப்பா இங்கே இருக்கிறார்.. என் அப்பா அங்கே நிற்கிறார் என்று சொல்லும். ஆனால் இந்தக் குழந்தைகள் தன் அப்பாவைக் காட்ட முடியாமல் தவிக்கும்.

சிறுவயதிலேயே நிகழும் இந்தப் பிரிவும் பாதிப்புகளும் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையில் இருக்க வேண்டிய பாசப்பிணைப்பினை முறியச் செய்துவிடுகிறது.  பாசப் பிணைப்புடன் இருக்க வேண்டிய இவர்கள் பொருள் தேடுதலால்  அந்நியர்களாக மாறிவிடுகின்றனர்.

பொருளீட்டும் நோக்கத்துடன் நிகழக்கூடிய இந்த அயல்நாட்டுப் பிரிவு  குடும்பத்தில் எத்தனை எத்தனையோ வேதனைகளை உண்டாக்குகிறது.

இவ்வாறு வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் ஆண்களில் புத்திசாலித்தனமாகப் பணத்தை சேமித்து விரைவில் தன் நாட்டிற்குத்  திரும்பி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் உண்டு.

ஆடம்பர மோகத்தில் திளைத்து சம்பாதித்தவற்றை எல்லாம் ஊதாரித்தனமாக செலவழித்து கடைசிவரை தன் குடும்பத்துடன் இணைய முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்களும் உண்டு.

இதில் மற்றொரு ரகமும் இருக்கிறது. அவர்கள் அதி புத்திசாலிகள் வெளிநாட்டிலேயே ஒரு பெண்ணுடன் தொடர்புகொண்டு அவளுடன் பிள்ளைகளைப் பெற்று அங்கேயே ஒரு குடும்பத்தை அமைத்துக்கொண்டு. காலத்தைக் கடத்திவிடுவர். இத்தகையவர்களின் மனைவி மற்றம் குழந்தைகளின் கதி இங்கே அதோகதிதான்!

இந்நிலை காலங்காலமாக தமிழகத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஏன் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான்  இருக்கின்றது, பெற்ற தாயின் மரணத்தின் போதும் அருகில் இருக்க முடியாமல் இறுதிச் சடங்குகளை லேப்டாப்புகளில் பார்க்கச் செய்கிறது இத்தகைய வாழ்வியல் நிலை.

இத்தகைய வாழ்க்கை முறை தேவைதானா?  இது பற்றி தனி மனிதன் எவராலும் கருத்து கூற முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குடும்பச் சூழல் இருக்கும்.  அதைப் பொருத்துதான் அவர்களின் வாழ்க்கையும் பயணிக்கும்.

இதில் புத்திசாலிகள் சாமர்த்தியமாகக் கணக்குப் போட்டுப்  பிழைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் சிக்கலில் மூழ்கித்  தவிக்கிறார்கள்.

ஆகவே, ஆழம் தெரியாமல் காலைவிட நினைக்கும் ஆண்களும், பெண்களும் இத்தகைய வாழ்வியல் முறையில் புகுவதற்கு முன்பு நன்கு ஆராய்ந்து சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. அதுவே நல்லதொரு குடும்ப அமைப்பிற்குச் சிறந்தது.

Another popular method parents www.spying.ninja/ favor is passive monitoring

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

9 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “வெளிநாட்டு வாழ் தமிழர்கள்”
  1. Ashok Kumar says:

    ஓனுமெ புரியலயெ – ஐயோ ஐயோ.

  2. Al-Shahina says:

    ணிசெ டெஅர் – நல்லா இருகு பா! அனுபவம் பெசுது இல்ல !

  3. Ramu Vellaikannu says:

    ஆம் இது உன்மை தான்.

  4. Balaji Tamil says:

    நல்ல சிந்தனை

  5. Famitha says:

    Unga padaipu nalla iruku!

  6. Kather says:

    Super – very nice ma!

  7. Sameer says:

    Good very nice, but very Big story. Very good sentiment.

  8. Syed says:

    Nice – Smart thinking, Your have really impressed me with your message! Because i have learned something from this.

அதிகம் படித்தது