மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வேதம்: புரியாத புதிரா? ஐரோப்பியர் எதிரா?

ஆச்சாரி

Jun 15, 2012

[ஆசிரியர் சங்கத் தமிழ்மொழி, காப்பிய வடமொழி, வேதவடமொழி ஆகியவற்றில் நேரடி ஆய்வுத்தேர்ச்சி பெற்றவர்; மொழியியல்வழியாக வேதங்களிற் காணும் அயல்மொழிச் சொற்களைக் கொண்டு அதன்வழி வரலாற்றுக்காலத்துக்கு முந்திய இந்தியத்துணைக்கண்டத்தின் [s1] மொழி நிலைமையைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்; அவர் அண்மையில் அது தொடர்பாக Electronic Journal of Vedic Studies என்ற ஆய்வுத் தவணையத்தில் வெளியிட்டுள்ள Pleonastic Compounding : An Ancient Dravidian Word Structure என்ற கட்டுரையைப் பார்க்கவும்]

[ “குயவனின் இளமங்கையர் இருவட்டும் சாகட்டும்” அல்லது “நான்மறை சொல்லினும் மெய்தனை அறி?”என்ற முன்னைய கட்டுரைக்குச் சிலர் தெரிவித்திருந்த கருத்துகளைக் கண்டு இந்தக் கட்டுரை]

முன்னுரை:

வேதங்களிலும் அவைபோன்ற சமயஞ் சார்ந்த மற்ற வடமொழி நூல்களிலும் உள்ள எதிர்பாராத செய்திகளைத் தெரிவிக்கும்பொழுது சிலருக்கு அவற்றை ஏற்கமுடிவதில்லை. உடனே அந்த ஏலாமையினால் அந்தச் செய்திகளை மறுப்பதும் எதிர்ப்பதும் அவர்களிடையே மிகவும் வழக்கமாகி விட்டது. அதன்காரணம் இன்று அவர்கள் பெருமையாக நினைக்கும் கொள்கைகளுக்கு எதிரான பழக்கவழக்கங்கள் வேதங்களிலே இருப்பதைத் தாங்கமுடியாமையே ஆகும்.

இருக்கு வேதத்திலே குயவன் என்கிற எதிரியின் இளமங்கையர் இருவரும் சிப்பா ஆற்றின் கரைச்சரிவிலே சாகட்டும் என்று வேண்டிக்கொள்ளும் செய்யுளைச்[i] சுட்டிக்காட்டினாலும்;  அதர்வண வேதத்திலே நோயோட்டும் பொழுது அந்தநோய் பிறமக்களான மூசவந்தர்கள் பல்கிகர்கள் போன்றவர்களை அடையட்டும் சூத்திரப்பெண்ணை அலைக்கழிக்கட்டும் என்று[ii] வேண்டுவதைச் சுட்டினாலும் மறுக்கிறார்கள். அந்த மறுப்பாளர்கள் சொல்லும் காரணங்கள் என்ன? (1) அப்படி மொழிபெயர்த்த மேலைநாட்டாருக்குப் பண்பாடு புரியாது அல்லது கெட்ட எண்ணம் கொண்டவர்கள் என்பது. இது மேலைநாட்டாரை எதிரிகளாக்குகின்றது. (2) வேதவடமொழி தெரிந்தவர்களிடமோ  வேதச்சொற்களை வெளிப்படையான் பொருளால் உணரக்கூடாது அவற்றின் மறைமுகப்பொருளைத்தான் காணவேன்டும் என்பது. இது வேதத்தைப் புதிராக்குகின்றது; உண்மையை அறிய 20-ஆம் நூற்றாண்டின் அரவிந்தர் போன்றவர்களின் உரைகளைப் படிக்கச்சொல்கிறார்கள். அவர்கள் எதிர்ப்புத் தகுமா என்று காண்போம்.

ஐரோப்பியர் உரைகளும் பழையவுரைகளும் மாறுபடவில்லை

முதலில் ஐரோப்பியர் வேதப்பண்பாடு புரியாமலோ கெட்ட எண்ணங்கொண்டோ மொழிபெயர்ப்பது உண்மையென்றால் அவர்களின் உரை 14-ஆம் நூற்றாண்டில் கருநாடகத்திலே விசயநகரப் பேரரசில் வாழ்ந்த சாயணர் என்ற உரையாசிரியரின் வேதவுரையிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கவேண்டும்.

ஆனால் சாயணர் உரை[iii] அந்தக் குயவனின் இளமங்கையர் பற்றிய செய்யுளின் “… குயவஸ்ய யோஷே ஹதே தே ஸ்யாதாம் ப்ரவணே சிபா2யா:” (இருக்குவேதம் 1.104.3) என்ற பகுதிக்குச் சொல்வதென்ன?

வடமொழியில்: “குயவநாம அஸுர: … அஸுரஸ்ய பா4ர்யே … தாத்3ருச்யௌ ஸ்த்ரியௌ சிபா2நாம நதீ3; தஸ்யா: நிம்நே ப்ரவேஷ்டும் அசக்யே அகாத4தே3சே நஷ்டே ப4வேதாம்! ஹே இந்த்ர! த்வம் பரேஷாம் த4னம் அபஹ்ருத்ய அந்யையர் துரவகா3ஹே உத3கஸ்ய மத்4யே வஸமாநம் குயவம் ஸகுடும்பம் அவதீ4ர் இத்யர்த2:”

தமிழிலே: “குயவன் என்ற பெயர்கொண்ட அசுரன் … அசுரனின் இருமனைவியர்… அத்தகைய மங்கையர் … சிபா என்ற பெயர்கொண்ட ஆறு; அதன் பள்ளத்தில் (ஆழத்தில்) நுழைவதற்கு இயலாத ஆழமான இடத்தில் அழிந்தவர்கள் ஆகட்டும்! ஏ இந்திர! நீ, பிறரின் செல்வத்தைக் கவர்ந்து மற்றவர்களால் நுழையமுடியாத நீரின் நடுவிலே வாழ்கின்ற குயவனைக் குடும்பத்தோடு கொன்றுள்ளாய் என்று பொருள்”.

இதனைப் 19-20 நூற்றாண்டில் வாழ்ந்த கிரிபித்து (Griffith) என்ற ஆங்கிலேய அறிஞரின் மொழிபெயர்ப்போடு[iv] ஒப்பிடவும்: “Both wives of Kuyava … may they be drowned within the depth of Sipha.”

இரண்டுக்கும் வேறுபாடில்லை! இரண்டுமே குயவனின் மனைவியர் இருவரும் சாகட்டும் என்றுதான் சொல்கின்றன. இப்படியேதான் ஆர்வர்துப் பல்கலைப் பேராசிரியர் விற்றுசலின்[v] செருமன் மொழி பெயர்ப்பும் அமைந்துள்ளது. சாயணர் உரை “குடும்பத்தோடு கொன்றுள்ளாய்” என்று கொஞ்சம் இன்னும் கடுமையாகவே உள்ளது என்றுகூடச் சொல்லலாம்! எப்படியும் இதிலிருந்து மேலைநாட்டாருக்கு வடமொழியோ வேதப்பண்பாடோ புரியாமல் இல்லை யென்றும் அவர்கள் எந்தக் கெட்ட எண்ணத்தோடும் பொருளைத் திரித்துச் சொல்லவில்லை யென்றும் தெளிகிறோம்.

சாயணரும் வேதச்சொற்களை வெளிப்படையான பொருள்கொண்டே மொழிபெயர்த்துள்ளார்; சொல்லப்போனால் முதன்முதலில் வெளிவந்த  வில்சன் போன்றோரின் ஐரோப்பிய மொழிபெயர்ப்புகள் சாயணர் உரையை நேரடியே மொழிபெயர்த்தன.  பிறகு உரையில் எங்கெங்கெல்லாம் சாயணரே தெளிவின்றிச் சொல்லியிருந்தாரோ அங்கெல்லாம் மற்ற ஆராய்ச்சி செய்து ஒப்பிட்டுத் தெளிவாக்கினர்; அதற்கு மற்ற வடமொழிநூல்கள், இரானிய அவெசுதா (Avesta) நூல்கள், மொழியியல் போன்ற பல கருவிகளைப் புழங்கினர்.

நவீன எதிர்ப்பாளர்கள்தாம் தாங்களே வேதத்திற்குப் புதிதாகப் பொருளை வலிந்து புனைந்து சொல்லப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு.

உயிர்ப்பலியை மறைக்கும் குறியீட்டுப் புதிர்!

அதேபோக்கில்தான் அசுவமேதம் (குதிரைப்பலி)  போன்ற வேள்விகளுக்கான யசுர்வேதம் போன்றவற்றின் பொருளையும் குறியீடுகொண்டு குழப்புகிறார்கள். யசுர் (யஜுஸ்) என்பது  யாக நடவடிக்கைகளின் பொழுது ஓதும் மந்திரத்திற்குப் பெயர். அந்த யசுர்வேதத்திற்குக் குறியீட்டுமுறையில் உரைசொல்ல முயல்பவர்களுள் ஒருவர் கசியப்பு (R.L. Kashyap) என்கின்ற மின்பொறியியற் பேராசிரியர்; அவர் யசுர்வேதத்தின் மொழிபெயர்ப்பினை வெளியிட்டுள்ளார்[vi].  அதில் வேண்டுமென்றே எல்லாவற்றிற்கும் தத்துவக்குறியீடு கொண்ட விளக்கம் மட்டுமே பொருளாக உரைத்துள்ளார். யசுர்வேதச்சொற்கள் வெளிப்படையாகச் சொல்வதைப் “புறவேள்வி” என்றும் அவர் தாமே சொல்லிக்கொள்ளும் குறியீட்டுப்பொருளை “அகவேள்வி” என்றும் குறிக்கிறார்.

சான்றாகக் கொலைசெய்து பலியாகக் கொடுக்கும் விலங்கினைப் பசு என்னும் சொல்லால் யசுர்வேதம் குறிக்கிறது; ஆனால் அந்தச் சொல்லுக்குக் கசியப்புச் சொல்லும் குறியீட்டு விளக்கமென்ன?: “முழுமையடையும் பொருட்டாக அகத்தீயில் இடுகின்ற உடம்பின் பல்வேறு உறுப்புக்களின் தொகுதி; அது நம்முள் இருக்கும் தீய அல்லது அரக்கத்தனமான எல்லாப் பண்புகளாகவும் இருக்கலாம்” என்பதாகும்!

ஆனால் பண்டைய வடமொழி இலக்கியங்களிலேயே வேதியர்கள் உயிர்ப்பலிகொடுப்பவர்கள் என்பதற்குச் சான்றுகள் உண்டு. காளிதாசன் தான் இயற்றிய அபிஞானசாகுந்தலம் என்ற நூலிலேயே “வேதங்கேட்டுப் பயின்றவன் பலிவிலங்கைச் சாகடிக்கும்  செய்கையால்  கொடியவனாயினும் கருணையால் மென்மையானவன்தான்” என்று பாடுவதைக் காணவேண்டும்: “பசுமாரண கர்மதா3ருண: அநுகம்பாம்ருது3ர் ஏவ ச்ரோத்ரிய:

அகநானூறு கண்ட ஆமைப்பலி வேள்விக் காட்சி மாயமா?

மேலும் வேதவேள்விகளில் உயிர்ப்பலி கொடுப்பதைக் கண்கூடாகக் கண்டு இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே சங்க இலக்கியம் பாடுகிறது. அகநானூற்றிலே வேள்வியின்பொழுது நீர்வாழ் ஆமையைப் பலிகொடுக்கும் காட்சியைக் காண்கின்றோம்:

கரியாப் பூவிற் பெரியோர் ஆர

அழலெழு தித்தியம் அடுத்த யாமை

நிழலுடை நெடுங்கயம் புகல்வேட்டாங்கு” (அகநானூறு: 361:10-12[vii])

அதன் பொருள்: “கரியாத பூவினை அணியும் தேவர்கள் அருந்தும்பொருட்டுத் தீயழல் எழும் அடுக்கில் (அக்நிசிதியின்கீழ்) பலியுற வைத்துள்ள ஆமையானது நிழலுடைய ஆழமான குளத்தினைப் புகுவதை விரும்பினாற்போல”.[s2] இங்கே தித்தியம் என்பது வேள்வித்தீயைக் கொண்டுள்ள அக்நிசிதி என்கிற மேடையாகும்[viii]. அந்த மேடையின்கீழ் உயிரோடு ஆமையைப் புதைத்து அடுக்கினை எழுப்புவது[ix] அக்நிசயனம் என்கிற மிகப்பெரிய வேள்விச் செய்வினையாகும். அந்த மிகத்தொன்மையான வேள்விச் செய்வினை இன்னும் தொடர்ந்து கேரளாவில் நடக்கிறது. அண்மையில் அங்கே நடந்ததன் படங்களை இங்கே காணலாம்:  http://en.wikipedia.org/wiki/Agnicayana

இந்தப் பாட்டின் புலவர் கண்டதும் வெறும் மாயமென்று மறுக்கமுடியாது. எனவே நாம் இந்த நவீன எதிர்ப்பாளர்கள் உயிர்ப்பலிகளை மறைக்கச் சொல்லும் குறியீட்டு உரைகளுக்கு எந்தச் சான்றும் இல்லையென்று தேறலாம்.

ஐரோப்பியரின் வடமொழி ஆர்வம்:

மேலும் எதிர்ப்பாளர்கள் தூற்றுவதுபோல் மேலைநாட்டார் 18, 19, 20 நூற்றாண்டுகளிலே இந்தியப் பண்பாட்டினை வெறுத்தழிக்கும் நோக்கொடு ஏதும் செய்யவில்லை, அதற்கு நேரெதிராக அதனை விரும்பிப் பேணினர் என்று சான்றுகள் காணலாம். மேலும் அவர்கள்தாம் வடமொழி நூல்களை அழியாமல் காத்தனர். இதனை மோரீசு வின்றர்நீற்சு (Maurice Winternitz) என்ற புகழ்பெற்ற 19-20ஆம் நூற்றாண்டுச் செருமானிய வடமொழி அறிஞரின் இந்திய இலக்கிய வரலாறு (History of Indian Literature) என்ற நூலின் முன்னுரையிலே[x] காணலாம்.

சர் வில்லியம் சோன்சு (Jones) (1746-1794) என்ற வங்காள மண்டல நீதிபதி வடமொழியின் செம்மையைப் புகழ்ந்து சொல்லியுள்ளார்; அவர் காளிதாசனின் சாகுந்தலத்தை ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து வெளியிட்டார்; அதன்வழிச் சாகுந்தலம் செருமானியக் கவிஞர் கோதேவுக்கு எட்டிப் புகழ்பெற்றது. செருமானியர்கள் வடமொழியிலே ஈடுபட்டனர். அவருக்குப் பின் கோல்புருக்கு என்ற ஆங்கிலேயர் பேரளவில்[s3] வடமொழியைக் கற்று ஆராய்ந்தார்; அவர் தம்முடைய பணத்திலே £10,000 (பவுன்றுகள்) செலவழித்து வடமொழிச் சுவடிகளைத் தொகுத்து இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று ஆய்வுக்கு அடிகோலினார். 210-ஆண்டுகளுக்கு முன்பு £10,000 என்பது இன்றும் மிகப் பெரிய தொகையாகும்; அதன் இன்றைய மதிப்புத் தோராயம் £322,000 ($500,000 அரை மில்லியன், ) ஆகும்.

செருமானிய அறிஞர் வில்கெம் உம்போல்து (Wilhelm von Humboldt) (1767-1835) “வடமொழியில் ஆழமான அறிவின்றி மொழிகள்பற்றிய அறிவியலிலோ வரலாற்றிலோ எதனையும் ஆற்றமுடியாது” என்று சொல்லியுள்ளார். செருமானிய அறிஞர் சோப்பனாவர் (Schopenhauer) உபநிடதங்களை “மிக உயர்ந்த மனித அறிவின் படைப்புக்கள்” என்று பாராட்டியுள்ளார்.  அவர்காலம் செருமனியில் அயற்பண்பாடுகளைப் பற்றி அறியும் ஆர்வம் மிகுந்த (Romanticism) காலமாகும். நவீன எதிர்ப்பாளர்கள் இந்தப் பாராட்டல்களையும் வேதப்பண்பாடு புரியாத பேதையரின் பேச்சு என்று புறக்கணிக்க ஆயத்தமா? நடுநிலைமையோடு எதையும் ஆராய வேண்டும்.

இப்படியே கணக்கற்ற ஐரோப்பிய வடமொழி ஆய்வாளர்களையும் பற்றாளர்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களைப்போய் வேதப்பண்பாட்டினை வெறுப்பவர்கள் என்பது பொருந்தாது. அப்படியென்றால் அவர்கள் சுவடிகளைக் கொளுத்தி அழித்திருக்க முடியுமே! ஆனால் உண்மையில் பார்த்தால் வேதியமரபினர் சிலர்தாம் உ.வே.சாமிநாதையர் கண்டதுபோல் திருநெல்வேலிக் கோவில் ஒன்றில் தமிழ்ச்சுவடிகளை ஓமத்தீயிலே எரித்தனர்!

12-ஆம் நூற்றாண்டு வைணவராகிய இராமாநுசர் அத்துவைதக் கோட்பாட்டைக் கண்ட ஆதிசங்கரரை மறைமுகப் பௌத்தர் (“ப்ரச்சந்ந பௌத்த”) என்று வைவதைக் காண்கிறோம். அவர்களில் யார் பண்பாட்டு எதிரி? எனவே ஐரோப்பியர்கள் வருவதற்குமுன் இந்தியத்துணைக் கண்டத்தில் கருத்து/சமய வேறுபாடோ பகையோ இல்லை என்று நினைத்துக்கொள்வது தகாது.

வேதத்தை மறுக்கும் பண்டைய இந்திய மரபுகள் உண்டு!

வேதம்பற்றி எதிர்பாராத செய்திகளைச் சொல்லும் ஐரோப்பியர்களைத் தூற்றும் இந்த எண்ணத்தின் அடிப்படைகளுள் ஒன்று ஐரோப்பியர்தாம் முதன்முதலில் வேதமரபினைப் பற்றிக் குறைசொல்பவர்கள் என்ற ஒரு நினைப்பாகும். அதாவது, ஐரோப்பியர் வரும் வரைக்கும் இந்தியத் துணைக்கண்டத்தில் ஊன்றியிருந்த எல்லா மக்களும் மரபுகளும் வேதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டதுபோலவும் ஏற்றுக்கொண்டு அவர்கள் ஒருதுளியும் தங்களுக்குள் வேறுபாடினின்றி உடன்பட்ட கருத்துக்கொண்டிருந்தது போலவும் நினைக்கிறார்கள்.  ஆனால் உண்மை அப்படியில்லை. இதுபற்றி நன்கு தெரியத் து.நா. சா (D N Jha) என்னும் அறிஞரின் “இந்து அடையாளத்தை மறுவாராய்தல்” (Rethinking Hindu Identity[xi])  என்ற நூலைப் படிக்கவும். அவர் சுட்டும் சில சான்றுகளையும் சேர்த்து இனிக் காண்போம்.

கி.மு. 400-500 என்கிற காலக்கட்டத்திலே மகாவீரரால் தொடங்கிய சைனம் என்கிற கோட்பாடு வேதங்களின் தலைமையை ஏற்கவில்லை; புத்தரின் கோட்பாடும் அப்படியேதான். அதனால்தான் அவர்களை “நாத்திகர்” என்றனர். வேதங்களின் தலைமையை ஏற்பதில்லை என்பவர்கள்தாம் நாத்திகர் எனப்பட்டனர்; அச்சொல் இன்று கடவுளில்லை என்பவர்களைக் குறிக்கும் சொல்லாகிவிட்டது இன்று.

ஏறக்குறைய அதேகாலத்து முண்டக உபநிடதம் இருக்குவேதம் முதலான நால்வேதங்களையும் அவற்றின் துணையான ஆறு அங்கங்களையும் “மேலல்லாத அறிவு” (“அபரா வித்யா”) என்ற வகையிலே சேர்க்கிறது! அழியாமையை (அக்ஷரம்) எதனால் அடைகிறதோ அந்த அறிவே மேல்வகை (“பரா”) என்று சொல்லி வேதங்களை இரண்டாம் மட்டத்திற்குத் தள்ளுகிறது.

“தத்ர அபரா ருக்வேதோ யஜுர்வேத3: ஸாமவேதோ3 அதர்வவேத3: சிக்ஷா |

கல்போ வ்யாகரணம் நிருக்தம் ச2ந்தோ ஜ்யோதிஷம் இதி

அத2 பரா யயா தத் அக்ஷரம் அதி4கம்யதே”  (முண்டகோபநிடதம்: 1.1.5).

வேதங்களை மட்டந்தட்டும் பகவற்கீதை:

ஏன் பகவற்கீதைகூட வேதங்களையும் வேதப்பற்றாளர்களையும் மட்டந்தட்டுகிறது. இது பகவற்கீதையைத் தோராயமாக 2000 யாண்டுகள் முன்பு இயற்றின புலவர்(கள்) வேதக்காலத்திற்குப் பின்தழைத்த கோட்பாடுகளைப் பின்பற்றினவர்(கள்) என்று தெற்றெனக் காட்டுகிறது. கீதையின் இரண்டாம் படலத்தின் ஐந்தாறு செய்யுள்கள் (கீதை:2:41-46) இதற்குப் பெயர்போனவை. வேதப்பேச்சிலே இன்புறுவோரை அறிவிலிகள்[xii] (“அவிபச்சித: வேதவாத ரதா:”) என்றும், ஆசைக்குணத்தினர் (“காமாத்மாந:”) என்றும், வேதநெறியை இன்பமும் ஆளுமையும்  குறித்த செய்வினைகள் மலிந்தது (“க்ரியா விசேஷ ப3ஹுலாம் போ4கைச்வர்யகதிம் ப்ரதி”) என்றும் சொல்கின்றது. கடைசியில் வேதங்கள் பயனற்றவை என்று கருதி  “எவ்விடத்திலும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள கிணற்றின் தண்ணீருக்கு எந்த அளவு மதிப்போ அந்த அளவே பகுத்தறிகின்ற பிராமணனுக்கும் அனைத்து வேதங்களிலும் மதிப்பு உண்டு” என்றும் சொல்கிறது:

“யாவாந் அர்த2: உத3பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத3கே | தாவாந் ஸர்வேஷு வேதே3ஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத: ||” (கீதை:2.46).

இவற்றிலிருந்து தென்னாசிய மரபுகளுக்குள்ளேயே வேதங்களை ஏலாமையும் மட்டந்தட்டுவதும்  இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. வேதங்களில் உள்ள கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வோர் இந்துச் சமயத்திற்கு எதிரி என்றால்   கீதை இந்துச் சமயத்திற்கு எதிரியா? இப்படியிருக்க வேதங்களை அறிவார்வத்தோடு துருவி ஆராய்ந்து மொழிபெயர்க்கும் ஐரோப்பிய அறிஞர்களைத் தூற்றுவது கொஞ்சமுந் தகாது.

இது நுணுக்கமான அறிவையும் பேச்சினையும் தேவையற்றதாக்கி விடும். ஒரு சான்றாக செயமோகன் என்னும் எழுத்தாளர் அண்மையில் வேதங்களைக் குறிக்கும் “சுருதி” என்ற சொல்லுக்கு முன்னறிவு என்று தவறாகப் பொருள் சொல்லியுள்ளார்; ஆனால் அதற்குப்பொருள் (காதாற்) “கேட்டல்” ஆகும்; சங்கப்பாடல்கள் வேதங்களைக் கேள்வி என்று சொல்லும்.  முன்பே கண்ட கசியப்பு என்ற மின்னியற் பேராசியர் வேண்டியவாறு யசுர்வேதத்திற்குத் தத்துவப் பொருள் சொல்வதைப் பார்த்தோம். அவர் ஒருவரே இன்னும் பலவேதநூல்களுக்கு உரையெழுதியுள்ளாராம்! ஆனால் மேலைநாட்டுப் பல்கலைகளின் வடமொழி ஆய்வாளர்கள் அனைவரும் சேர்ந்துகூட நூறு ஆண்டுகளுக்கு இரண்டொரு உரைகூட வெளியிடுவதில்லை. செருமன் மொழியிலே 80 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் பேராசிரியர் விற்றுசலின் குழுவினரின் உரைவெளிவருகிறது!

வேதம் பற்றி அறிவியற்படி ஆயும் மேலைநாட்டாரை இப்படிக் கடுமையாகத் தூற்றுபவர்கள் வசதிக்கு ஏற்ப  மரபினைப் பின்பற்றுகிறவர்கள் எனலாம். அவர்கள் வேதம் சொல்வதெல்லாம் உண்மைதான் மறுப்பதற்கேதும் இல்லை என்றால் வேதம் சொல்லும் மருத்துவத்தைப் பின்பற்றலாமே?  நோய்விரட்ட அதர்வணவேதம் சொல்லும் மந்திரங்களை ஓதுவித்து நோயிலிருந்து தங்களைத் தேற்றிக் கொள்ளலாமே? ஏன்  தமக்கு நோய் என்கிற பொழுது மட்டும் மேலைநாட்டார்  கண்ட முறையை நாடுகிறார்கள்? ”ஐரோப்பியனுக்கு ஆசியன் உடம்பைப் புரியுமா?” என்று கேட்பதில்லையே?

முடிவுரை:

ஆகவே அறிவியல்படி மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் நிகழ்த்தும் வேத ஆய்வினைக் குறைசொல்வோர் சான்றுகள் இன்றிப்பேசுவோர் ஆவர். எனவே அவர்கள் வேதங்களைப் புதிராக்க முயன்று அறியாமையையும் சமுதாயக் கேட்டினையும் வளர்க்கிறார்கள். வேதங்களைவிட  இன்னும் 1000 ஆண்டுகள் பழைய, இன்றைக்கு 4600 ஆண்டுகள் முந்தைய, சுமேரிய எகிப்புத்திய எழுத்துக்களைக் கூட அறிஞர்களால் படிக்க முடிகிறது. எனவே சிலர் தேவையற்ற புதிரை வளர்க்க முயல்கிறார்கள்.


[i] “க்ஷீரேண ஸ்நாத: குயவஸ்ய யோஷே; ஹதே தே ஸ்யாதாம் ப்ரவணே சிபா2யா:” (இருக்குவேதம் 1.104.3)

[ii] “தக்மந் மூஜவதோ கச்ச2, பல்ஹிகாந் வா பரஸ்தராம் |

சூத்3ராம் இச்ச2 ப்ரப2ர்வ்யம், தாம் தக்மந் வீவ தூ4நுஹி ||” (அதர்வண வேதம்: 5: 22:7)

[iii] RGVEDA SAMHITA with the commentary of Sayanacarya, Vol I., Tilaka Maharashtra Vidyapitha, 1995.

[iv]Griffith:  Rig Veda: 1.104: http://flaez.ch/cgi-bin/rv.pl?nr=104&txt=shppgr

[v] Witzel, Michael. „Mit Milch baden des Kuyava beide junge Frauen. Die beiden moegen im Abhang (des Fluesses) Sipha getoetet werden“

[vi] Kashyap, R.L., Krishna Yajur Veda, Taittiriya-Samhita, Vol. 1, Sri Aurobindo Kapali Sastry Institute of Vedic Culture, 2002.

[viii] Sudalaimuthu Palaniappan on the Indology mailing list: http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9807&L=INDOLOGY&D=0&I=-3&P=24843

[ix] Frits Staal (1983) Agni, the Vedic ritual of the fire altar

[x] Winternitz, Maurice. A History of Indian Literature, Motilalal Banarsidass Publishers, Delhi,  1996

[xi] Jha, D.N., Rethinking Hindu Identity, Equinox, London, 2009.

Parents use these tools www.trymobilespy.com/ to gain information and encourage teachable moments for discussing online safety issues

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “வேதம்: புரியாத புதிரா? ஐரோப்பியர் எதிரா?”
  1. வேம்பையன் தொல்காப்பியன் says:

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் பண்புகளுக்கு (நல்ல / தீய) இன்றைய தமிழர்கள் உரிமை உடையவர்களாக நினைத்துக் கொள்வது போதையும் புரியாத்தன்மையும் ஆகும். அதே போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த ஆரியர்களின் பண்புகளுக்கு (நல்ல / தீய) இன்றைய பிராமணர்கள் உரிமை உடையவர்களாக (அவர்களும் பிறரும்) நினைத்துக் கொள்வது போதையும் புரியாத்தன்மையும் ஆகும்.

    வரலாற்றைத் தள்ளி நின்று பற்றற்று நடுநிலையோடு பார்க்கும் பழக்கம் முதலில் படித்தவர்களுக்கு வர வேண்டும். நம்முடைய இன்றைய எண்ணம், சொல், செயலே நம்முடைய இன்றைய பெருமை/சிறுமைக்கு அளவு கோல்களாக‌ வேண்டுமே தவிர பழங்காலப் பெருமையோ சிறுமையோ நம்மைப் பாதிக்கக் கூடாது.

    இப்படிச் சொல்வது நம் மரபு, பண்பாட்டு வேரை அறுத்துக் கொள்வதாகாது. நம் மரபு, பண்பாடுகளை அப்பழுக்கற்றச் சொத்துகளாக நினைத்து இன்று நாம் முரண்பட்டு முட்டிக் கொள்வதை நிறுத்திக் கொள்வதாகும். இதை யார் முதலில் செய்வது என்று கேட்டு தாமதித்துக் கொண்டிராமல் புரிந்தவர்கள் பின்பற்றினால் நாளடைவில் புரியாதவர்களுக்கும் புரிந்து விடும்.

    திரைப்படத்தை நடுவில் இருந்து பார்த்தால், கதையை நடுவிலிருந்து படித்தால் எப்படியிருக்கும்? அது போல் நம்முடைய வரலாறு (மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, போர், நாடு, உறவுகள்…) இல்லாவிடில் நமக்கு என்று நிற்க ஒரு நிலையே இருக்காது. வரலாறுதான் நம் கதை. ஆனால் கதை எப்படி மேற் செல்ல வேண்டும் என்பது நம் கையில் உள்ளது. சிந்தனை விடுதலை (கதையில் மயங்காமல்) இருந்தால் கதை காதலாய் உயிர்க்கும்; இல்லையெனில் கதை கந்தல் ஆகி விடும். நாம் அனைவரும் கதையில் இப்போது ‘சிந்தனை விடுதலை’ அத்தியாயத்தை எழுதிப் படித்துக் கொண்டுள்ளோம்.

  2. கார்த்திக் says:

    சிறப்பான கட்டுரை. நன்றி சிறகு.

  3. க. தில்லைக்குமரன் says:

    ஆசிரியர் சந்திரசேகரனுக்கு கோடி நன்றிகள்! வேதத்தில் புதைந்து கிடக்கின்றச் செய்திகளை வெளிக்கொணரும் முயற்சி செவ்வனே தொடர்க!
    இது போன்ற அருமையானதும் தேவையானதுமான கட்டுரைகளை வெளியிட்டுவரும் சிறகிற்கு பாராட்டுகள்! தொடரக உங்கள் தமிழ்ப்பணி

  4. kk says:

    மற்றுமொரு அருமை யான கட்டுரை. தொடருட்டும் கருத்துப் போர்.

அதிகம் படித்தது