மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு

ஆச்சாரி

Oct 1, 2011


இந்தியா- பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வீரர்கள் வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்தனர், அந்த 22 வீரர்களின் பல வருடக் கனவு , போராட்டம், அர்ப்பணிப்பு அனைத்தையும் மட்டைகளின் லட்சிய வேகத்தில் பறந்த பந்துகள் மட்டுமே அறியும்.  பதற்றம் ,பயம் அனைத்தையும் லட்சிய பிடிகள் தகர்த்தன, விடாமுயற்சி, குழு செயல்பாடு, சாதுர்யம் எல்லாம் களத்தில் நர்த்தனம் ஆடின. இறுதியில் இதோ அந்தத் தருணம் வந்தது, பதற்ற மூச்சுகள் நிம்மதி பெரு மூச்சுகளாயின, அனல் பறந்த கண்களில் ஆனந்த கண்னீர் ததும்பியது. லட்சியமே சுவாசமாய் வாழும் அந்த வீரர்களுக்கு லட்சியம் வெற்றியடையும் தருணம் என்பது வாழ்வின் உச்ச மகிழ்ச்சி அல்லவா, வந்தே விட்டது அந்த தருணம். இறுதியில் இந்திய அணி வீரர்கள் வெற்றி பெற்று, இந்திய அணியை வெற்றி அணி ஆக்குகின்றனர்.  இனி என்ன. குவியப்போகிறது பாராட்டுகள், பரிசுகள், ஆர்ப்பாட்டங்கள், வருமான வேட்டைகள் என்ற இயல்பான கனவோடு தான் தாயகம் திரும்பினர் அந்த வீரர்கள், ஆனால் நம்புங்கள் அவர்களுக்கு வரவேற்பு இல்லை, பாராட்டுகள் இல்லை பரிசுகள் இல்லை.

ஆம். அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் அல்லவே , அவர்கள் கேவலம் ஹாக்கி வீரர்கள் தானே.  கடந்த செப்டம்பர் 11 அன்று ‘ஆசிய கோப்பை’ இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி  சாம்பியன்’ பட்டத்தை வென்று வந்த இந்திய ஹாக்கி வீரர்களுக்குத்தான் இந்த நிலை அவர்களுக்கு பரிசாக ’ஹாக்கி இந்தியா’ வாரியம் அறிவித்துள்ள தொகை வெறும் 25,000 தான். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கோடி கோடியாய் வாரியிரைத்ததாலோ என்னவோ பாவம் ஹாக்கி வீரர்களை ஊக்குவிக்க பணமில்லை ! இந்திய ஹாக்கி வீரர்களும் ஹாக்கி இந்தியா’ வாரியத்தின் வறுமை நிலையை கருதி அதனை வாங்க மறுத்தும் உள்ளனர்

ஹாக்கி இந்தியா’ வாரியத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளின் நிலை எவ்வளவு இருளில் இருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது,

ஹாக்கி வீரர்கள்

காலணி வாங்க கூட

பணமில்லாமல் உள்ளனர் ,

ஒரு காலணி விளம்பரத்திற்கு

கோடி கோடியாய் வாங்கும்

கிரிக்கெட் வீரர்கள்

இருக்கும் தேசத்தில் !

‘ஹாக்கி இந்தியா வாரியத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவில் ஹாக்கியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும், வளர்ந்து வரும் பல இளம் ஹாக்கி வீரர்களை துவண்டு போகச் செய்யும், நாங்கள் கேட்பது கோடி கோடியாய் பணமும் விளம்பரமும் அல்ல, ஒரு குறைந்தபட்ச அங்கீகாரமே’ – எனத் தனது குமுறல்களை தெரிவித்துள்ளார் இந்திய ஹாக்கி அணித்தலைவர் ’ராஜ்பால்சிங்’.

இச்சம்பவத்தின் மூலம் இந்திய விளையாட்டு நிலை குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளன சர்வதேச அளவில் கிரிக்கெட்டை தவிர ஏன் இந்தியா மற்ற விளையாட்டுகளில் சோபிப்பதில்லை என்ற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது,  கிரிக்கெட்டை மட்டும் ஊக்குவிப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணிகளும் பகிரங்கமாக ஒரு விவாதத்திற்கு வந்துள்ளது.

இந்திய சமூக நிலையில் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் விளையாட்டை லட்சியமாக எடுத்துக்கொண்டு வெல்வதற்கு  பின் குடும்பத்தின் வசைகள், சமூகத்தின் இளக்காரங்கள், பொருளாதார பரிதவிப்புகள், இங்கிருக்கும் சாதீய உள்ளரசியலை வெல்லும் போராட்டங்கள் என எத்தனையோ வலிகள் இருக்கிறது. அப்படி வலிகள் தாண்டி வருபவர்களை மேலும் வலிக்குள்ளாக்குவது என்ன கொடுமை!

இந்திய விளையாட்டு வாரியங்களில் பிதாமகர்களாக இருப்பவர்கள் விளையாட்டு வீரர்களாக இல்லாவடினும் குறைந்தபட்சம் விளையாட்டு, சமூக ஆர்வலராகவாவது இருக்கலாமே , தங்கள் சாதீயையும், தொப்பையையும் வளர்த்துக் கொண்டு போக விளையாட்டு வாரியங்கள் ஒன்றும் சாதிய சங்கங்கள் அல்லவே , அவர்களது தொப்பைக்குப் பின் பல விளையாட்டு வீரர்களின் சுமைகள் இருக்கின்றன.

இவற்றையெல்லம் தாண்டி , உலகறிய வெற்றி பெற்றவர்களுக்கே இந்த நிலையென்றால் வளர்ந்துவரும் வீரர்களின் கதியை நினைத்தாலே கலங்குகிறது, வளர்ந்து வரும் போது உள்ளே சாதிய அரசியலென்றால் , ஜெயித்தாலும் விடாமல் துரத்துகிறது வியாபார அரசியல், மார்க்கெட் நிலையை வைத்து ஸ்பான்சர்ஷிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு விளையாட்டை ஊக்குவிப்பது, அரசின் செயல்பாடாக இருக்கலாமா ? இந்திய சந்தையை சிலர் கைப்பற்றுவதற்கு கிரிக்கெட் தவிர்த்த எத்தனை விளையாட்டுகளும் வீரர்களும் பலியாவது ?

உலகில் சில நாடுகள் தங்கள் நாட்டு விளையாட்டுத் திறமையை கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் தேடி எடுத்து ஊக்குவித்து வெற்றி பெற வைக்கின்றன, இங்கோ தன்முனைப்பாக ஜெயித்து வருபவனையே புறக்கணிக்கும் நிலை , 120 கோடி மனித வளம் கொண்ட நாட்டில் எத்தனை கிராமங்களிலோ, சேரிகளிலோ உண்டிவில்லோடு துப்பாக்கி சுடும் வீரர்களும் , கண்மாய்களில் குட்டிகரணம் அடித்துக்கொண்டு நீச்சல் வீரர்களும் , பக்கத்து ஊரோடு மல்லுக்கட்டிக் கொண்டு குத்துச்சண்டை வீரர்களும் இருக்கிறார்கள், அவர்களை இனம் கண்டு வடிவமைப்பது ஒரு அரசாங்கத்தின் விளையாட்டுத்துறையின் கடமையே ஆகும் என்று இந்தியாவில் நாம் கோரிக்கை வைப்பது இயலாத காரியம் , குறைந்த பட்சம் ஜெயித்து வருபவர்களுக்கு அங்கீகாரத்தையாவது அளித்தாலே போதும்

கிரிக்கெட் பார்த்து உணர்ச்சிவயப்படுவது மட்டுமே தேசபக்தி ,கிரிக்கெட் தகவலை அறிந்திருப்பது மட்டுமே பொது அறிவு என்று தேசத்தையே கிரிக்கெட்டின் பின்னால் நிறுத்தும் வியாபார அரசியலை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் , கிரிக்கெட்டில் காட்டும் தேசபக்தியை நம் குடிமகன்கள் ஏன் மற்ற விளையாட்டில் காட்டுவதில்லை ? ஆகவே தேசபக்தியும் இங்கு கிரிக்கெட்டின் மூலம் வியாபாரமாக்கப் பட்டுவிட்டது.
சாதனையாளர்கள் கிரிக்கெட்டில் மட்டும் உருவாகும் தேசத்தில் ஏன் மற்ற விளையாட்டுகளில் உருவாவதில்லை என்பதையும் ,  மக்கள் சிந்திக்க வேண்டும். ஆகவே தேசபக்தியும் இங்கு கிரிக்கெட்டின் மூலம் வியாபாரமாக்கப் பட்டுவிட்டது.

கல்வியே வியாபாரமாயிருக்கும் தேசத்தில், விளையாட்டு வியாபாரமாயிருப்பது அதிசயமா என்ன?

Auch hier achten unsere ghostwriter http://www.best-ghostwriter.com/ darauf, sodass sie sicher sein knnen, dass ihr research proposal von den wissenschaftlichen instituten und stellen anerkannt wird

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு”
  1. Venkat says:

    //கிரிக்கெட் பார்த்து உணர்ச்சிவயப்படுவது மட்டுமே தேசபக்தி ,கிரிக்கெட் தகவலை அறிந்திருப்பது மட்டுமே பொது அறிவு என்று தேசத்தையே கிரிக்கெட்டின் பின்னால் நிறுத்தும் வியாபார அரசியலை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் , கிரிக்கெட்டில் காட்டும் தேசபக்தியை நம் குடிமகன்கள் ஏன் மற்ற விளையாட்டில் காட்டுவதில்லை ? ஆகவே தேசபக்தியும் இங்கு கிரிக்கெட்டின் மூலம் வியாபாரமாக்கப் பட்டுவிட்டது.
    சாதனையாளர்கள் கிரிக்கெட்டில் மட்டும் உருவாகும் தேசத்தில் ஏன் மற்ற விளையாட்டுகளில் உருவாவதில்லை என்பதையும் , மக்கள் சிந்திக்க வேண்டும். ஆகவே தேசபக்தியும் இங்கு கிரிக்கெட்டின் மூலம் வியாபாரமாக்கப் பட்டுவிட்டது.//

    Really True.

  2. Rajkumar Palaniswamy says:

    நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

  3. thigu says:

    மிக அருமையான கட்டுரை

அதிகம் படித்தது