மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள?’

ஆச்சாரி

Mar 15, 2012

பெண்கள் நாட்டின் கண்கள். தன்னை வருத்தி தன்னைச்சார்ந்தவர்களுக்காக நித்தமும் ஓடும் தியாகத்தின் பிரதிபலிப்பு. ஒரு கிலோ எடையைக்கூட அடிக்கொருதரம் கைமாற்றுபவர்களுக்கிடையில், தன் வயிற்றில் சுமக்கும் மழலையை  பத்து மாதம் பேணிக்காக்கும் உன்னதம். தன் குழந்தைக்கு  உதிரத்தையே பாலாய் புகட்டும் உயர்வு. பெண்ணாய்ப் பிறப்பதும் மாதவமே.

அன்று பருவமடைந்த பெண் பள்ளிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது.  அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என பெண்களின் அன்றாட வாழ்வு அடுக்களையிலேயே கழிந்தது.  கருத்துரிமை கிடையாது. அந்நிய ஆணிடம் பேசுவதற்கே அஞ்சினார்கள்.  இளவயதிலேயே  திருமணம் செய்துவிடுவதால் வெளிஉலகம் அறியும் முன்னே  வாழ்க்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.  ஒவ்வொரு நிலையிலும், தந்தை, சகோதரன், கணவன் என ஆணுக்கு கட்டுப்பட்டு அவர்களைச் சார்ந்தே  தன் சுயம் இழந்து வாழ்ந்தார்கள்.  இளவயதிலேயே கணவனை இழந்தாலும் தன் வாழ்வு அதோடு முடிந்துவிட்டதாகவே வெறுமையான வாழ்வை மேற்கொண்டனர் விரும்பியோ, விரும்பாமலோ.

இன்றைய பெண்கள் தங்களின்  வாழ்வை அவர்களே  நிர்ணயம் செய்து கொள்ளும் வல்லமை கொண்டுள்ளார்கள்.  பருவமடைந்த பிறகும் பட்டங்கள் பல வென்று பதவிகள் பல வகிக்கிறார்கள்.  ஆண்களிடம் பேசுவதற்கே அஞ்சியவர்களும் இன்று ஆண்களிடம் பாலினம் கடந்த  நட்பு பாராட்டும் அளவிற்கு அவர்களின் இன்றைய நிலை உயர்ந்துள்ளது.  அந்தி நேரத்தில் வெளியில் செல்ல தயங்கியவர்களும் இன்று பணி காரணமாக அதிகாலை வீடு திரும்புகின்றனர்.  இன்று தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் பக்குவமும், உரிமையும் பெற்றுள்ளனர்.

இன்றைய பெண்களின் வளர்ச்சி வியப்பையே அளிக்கிறது.  நாடாளுகிறாள்..  விண்வெளியில் பயணம் என  வளர்ந்து ஆணுக்கு சமமாக அனைத்துத் துறையிலும் ஒளிவீசி வருகிறாள்.  வீடே உலகமென இருந்தவர்கள் கணினி, இணையம் என உலகத்தையும் வீட்டில் காண்கிறாள். ஆண்களுக்கே உரிய விளையாட்டிலும் கூட பெண்கள் பங்குகொண்டு அசாத்தியமான சாதனை படைக்கிறார்கள்.  பொருளாதார ரீதியாகவும் இன்று வலுப்பெற்றுள்ள பெண்கள் தங்களுடைய தேவைகளுக்காக யாரையும் எதிர்பார்க்காமல்  தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.  திருமண வாழ்வு சரியில்லாது போனால் அதை நேர்செய்து தன் வாழ்வை அமைத்துக்கொண்டு சுதந்திரமாக செயல்படுகின்றனர்.

சமூக அமைப்பில் பெண்கள் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இருப்பினும் முழு அளவில் அவர்களது சமூகப் பார்வை திருப்திகரமாக இருக்கிறதா என்றால் இல்லை என்பதே வருத்தமான உண்மை. இன்றும் சமூகம் சார்ந்தவர்களை உதாரணம் சொல்லவேண்டும் எனில் அன்னை தெரசா, நைட்டிங்க் கேர்ள் என அழைக்கப்பட்ட  சரோஜினி நாயுடு போன்றோரைத் தான் உதாரணம் காட்டி வருகிறோம். அன்னை தெரசாவைப் போல் முழுவதும் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அளவு இன்னும் பெண்களிடையே மனப்பக்குவம் வரவில்லை என்பதே உண்மை.

இன்றைய பெண்கள் பொருளாதாரத்திலும் மற்றும் அனைத்து துறையிலும் முன்னேற்றம் அடைந்திருப்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு இன்றும்  பல இடங்களில் பெண்கள் மதிக்கப்படுவதில்லை என்பதும் உண்மையே. ஆணுக்குச் சமமாக பதவி வகிப்பதையும், ஆண்களைப் போல் உடையணிவதையுமே சுதந்திரம், வளர்ச்சி முன்னேற்றம் என திருப்தியடையும் பெண்கள் பலர். முதலில் ஒரு பெண்ணை  மற்றொரு பெண் சமமாக பாவிக்க வேண்டும். அந்தப் பக்குவம் இன்னும் இன்றைய பெண்களிடம் இல்லாதது துரதிருஷ்ட வசமானது.  பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம், சுதந்திரம் என்பது என்ன என்பதை முதலில் உணர வேண்டும். நாகரீக ஆடை அணிவதும், ஆணுக்கு சமமான நட்பு போற்றுவதும், பொருளாதாரத்தில் வளர்ச்சியும், கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக தன் மனம் நினைத்தபடி வாழ்வை தீர்மானம் செய்வது மட்டும் அல்ல முன்னேற்றம்..உண்மையான முன்னேற்றம், வளர்ச்சி என்பது வீட்டில் துவங்க வேண்டும்.  எப்பொழுது ஒரு தாய், தகப்பன், சகோதரன் மட்டும் அல்ல கணவன், மாமியார், மாமனார் என அனைவரும் ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர்களை ஊக்கமளித்துப் பாராட்டுகிறார்களோ அப்பொழுதுதான் அது உண்மையான வளர்ச்சியாக கருதப்படும்.

வீட்டில் கிடைக்கும் ஊக்கமே பெண்களை சமூகத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்புவதற்கு உதவியாக இருக்கும். என்று ஒரு கணவன் தன் மனைவி தெரசாவாகவும், ஜான்சிராணியாகவும், நைட்டிங்க் கேர்ள் அம்மையாராகவும் பிரதிபலிக்க வேண்டும் என விரும்பி ஊக்கப்படுத்துகிறானோ அன்றுதான் பெண்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகும். இன்று வளர்ச்சியில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பெண்கள் வளர்ச்சியை மட்டும் அடைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு செயல்படவேண்டும்.

The best tracking apps for android devices should be able to offer you the ability to view or read apps to track phones from phonetrackingapps.com/ all text messages in some form

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

8 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள?’”
  1. சே.குமார் says:

    அழகாக எழுதப்பட்ட முற்போக்கு சிந்தனை கொண்ட கட்டுரை.

    கவிதையில் கலக்கும் அக்காவின் கட்டுரை படித்ததும் கட்டுரை வடிப்பதிலும் அக்காவின் எழுத்துத்திறன் வியக்க வைத்தது.

  2. josh says:

    அருமையான கட்டுரை…காயு …

  3. p.s.narayanan. says:

    பாரதியின் மனம் எனும் பெண்ணே வரிகள் சில!
    மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
    நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
    இத்தனை நாட்போல் இனியுநின் நின்பமே
    விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
    முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;

    உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட
    சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
    உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்……ஆணென்ன.பெண்ணென்ன?
    அன்புக்கு பால் பேதம் உண்டா?ஆணின் மோகம் பெண்ணிடம்..பரிமாண
    பிரிகை அவ்வளவே!காதலியாய்,சோதரியாய்,நண்பியாய்,மணாட்டிப்பெண்ணாய்,
    வழிநடை பகவதியாய்…இவனது சக்தி “பிரமிப்பு”…வேகாது தீ மூட்டியபின்னும்.
    தற்காலம் பெண்ணின் பெருமை உணர்ந்த,ஆணால்..மட்டும்(?)அவளின் பங்களிப்பை
    பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் காலம்.பெண்மை பெருமைக்குரியவள்.தெரியுமே !
    என் மனைவி வந்தவுடன் என் சோதரியை,அன்னையை மறந்தேன்…ஏனெனில் இவள் அவர்களை
    விஞ்சி விட்டாள் அன்பினால்.

  4. thanesh thanga kumar says:

    பெண்மை பற்றிய மிகச் சிறந்த கட்டுரை.கட்டுரை படைப்பாளிக்கு என் வாழ்த்துக்கள்… ஆனால் இன்னும் அனைத்து பெற்றோர்களுக்கும் கிராமப்புற பெண்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும்..

  5. காயத்ரி says:

    தோழமைகளின் கருத்துக்கள் ஊக்கமளிக்கின்றன..என் கட்டுரையை பிரசித்த ஆசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

  6. kasi visvanathan says:

    //முதலில் ஒரு பெண்ணை மற்றொரு பெண் சமமாக பாவிக்க வேண்டும். அந்தப் பக்குவம் இன்னும் இன்றைய பெண்களிடம் இல்லாதது துரதிருஷ்ட வசமானது. பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம், சுதந்திரம் என்பது என்ன என்பதை முதலில் உணர வேண்டும்.//
    //இன்று வளர்ச்சியில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பெண்கள் வளர்ச்சியை மட்டும் அடைய வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு செயல்படவேண்டும்.//
    கட்டுரை ஆசிரியருக்கு நன்றி. தெளிந்த சிந்தனையுடன் பெண்களின் நிலை உணர்ந்து அவர்களின் வாழ்வும், அவர்கள் சார்ந்த சமூகமும் சிறக்க நடு நிலையான சிந்தனையை வெளிப்படுத்தும் கட்டுரை. சீரிய சிந்தனைகளை வெளிக்கொணரும் சிற்கு இதழுக்கும் நன்றி.

  7. kondraivendhan says:

    அருமையான கட்டுரை. மாதர்சங்கங்கள் என்ற பெயரில் நகை அணிந்து, காஞ்சிபுரம் சென்று பட்டுச் சேலை வாங்கி புகைப்படம் எடுத்து அதனை ஊடகங்களில் மாதர் சங்க செயல்பாடுகளாய் போட்டு பெருமிதம் கொள்ளும் மக்களுக்கிடையில் அழகிய முற்போக்கு சிந்தனை கொண்ட கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு நமது பாராட்டுக்கள்.

அதிகம் படித்தது