மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

2014 தேர்தல் முடிவும் தமிழ் தேசியத்துக்கான அரசியல் வழியும்

கார்த்திகேயன்

May 24, 2014

தமிழகத்தில் வந்த தேர்தல் முடிவுகள் பொதுவாக எதிர்பார்த்தது தான் என்றாலும். அ.தி.மு.க பெற்ற வாக்குவிகிதமும் தி.மு.க தக்கவைத்த தன்னுடைய வாக்குவங்கியும் பல கருத்துகளை உருவாக்கியுள்ளன. அதனால் இந்தத் தேர்தல் முடிவுகளை சற்று நாம் உற்று நோக்கி அலசவேண்டியுள்ளது.

கடந்த பதினைந்து ஆண்டு கால தேர்தல் முடிவுகள் எப்பொழுதும் இந்த கணக்கு விகிதத்திலே அ.தி.மு.க, தி.மு.க என இரண்டு கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும். தி.மு.க பெற்றால் பா.ம.க மற்றும் பல கட்சிகளுடன் சேர்ந்து  கூட்டணியுடன்  அது திக்குமுக்காடி 29% சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெறும். அ.தி.மு.க 26% சதவீத வாக்குகள் பெற்று சில தொகுதிகள் பெற்று வெற்றி பெரும். அதேபோல் அ.தி.மு.க வெற்றிபெறும் தருணத்தில் குறைந்த பட்சம் 34 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும். திமுக 24% சதவீத வாக்குகள் பெற்று மிகக் குறைந்த இடங்களைப் பெற்று தோல்வி அடையும். மொத்தம் உள்ள 100% சதவீத வாக்கு பதிவில் 55-60 வாக்கு வங்கியை இந்த கட்சிகளே பிடிக்கும். இதே நிலைதான் இன்றும் தொடர்ந்துள்ளது ஆனால் இந்தமுறை அ.தி.மு.க கூடுதல் 10% சதவீத ஓட்டுகளைப் பெற்றுள்ளது. தி.மு.க குறைந்தபட்சம் 3% சதவீத வாகுகளை இழந்துள்ளது. இருந்தும்  இரண்டாம் வலிமையான கட்சியாக வாக்குவிகிதத்தில் தன்னுடைய வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது.

தமிழ்தேசியம் சார்ந்த அரசியலை விரும்பவர்களுக்கு  திமுக படுதோல்வி அடைந்தது மகிழ்ச்சி என்றாலும் திமுக தன்னுடைய வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது சோர்வடைய வைத்துள்ளது. காரணம் திமுக வின் அந்த குறைந்த பட்ச வாக்குவங்கியை உடைக்க முடியவில்லை என்பதே. அதற்கு முக்கிய காரணம் திமுக வுக்காக வாக்களிக்க கூடியவர்கள் அ.தி.மு.க வுக்கோ பா.ச.க போன்ற கட்சிகளுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள். இந்த வாக்கு வங்கியை பெற திமுக சார்ந்த ஒரு கொள்கை உடைய மூன்றாம் அணி உருவாக வேண்டும். இந்த தேர்தல் அதை கொடுக்கவில்லை.

அப்படி உருவானால் இப்பொழுது இருக்கும் இன்னும் 5% சதவீத ஒட்டு சதவீதத்தை கண்டிப்பாக தமிழ் தேசியத்தை உருவாக்க நினைப்பவர்கள் உடைக்க முடியும்.

இந்த முறை கூடுதலாக 10% வாக்குகள் பெற்ற அதிமுக விற்கு ஒட்டு போட்டவர்கள் நிச்சயம் புதிய வாக்களர்கள் இளம் தலைமுறையினர். இந்த ஒட்டு கண்டிப்பாக திமுக வாங்க வழி இல்லை. இனி என்றுமே வழியில்லை. திமுக வின் கடந்த கால ஊழல்கள், அராஜகம், தமிழ் இன அழிப்புக்கு துணை போனது இவையாவும் முக்கிய காரணம். இவர்கள் தெளிவாக மூன்றாம் அணியை ஆதரிக்காமல் அதிமுக வை தேர்ந்தெடுத்தது இவர்கள் மோடி அலையை ஏற்காமல் இருக்கலாம் அல்லது தேமுதிக பாமக போன்ற கட்சிகளை ஏற்காததாக இருக்கலாம் ஆனால் அதிமுகவின் நிர்வா கத்திறனோ ஜெயலலிதாவின் மீது உள்ள நம்பிக்கையோ கண்டிப்பாக இருக்காது. இவர்களிடம் இருந்த மூன்றாம் அணி மீது இருந்த அவ நம்பிக்கை எனலாம். இருந்தும் இந்த ஓட்டுகள் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுக்கு விழாமல் அது அதிமுக விற்கு விழுந்தது இந்த வாக்களர்கள் இன நலன் சார்ந்த  ஒரு அரசியலை கண்டிப்பாக எதிர் பாக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. அதே போல் நோடாவில் விழுந்த ஓட்டுக்கள் சில அரசியல் அதிருப்தியாளர்கள் அரசியலை வெறுப்பவர்களால் விழுந்தாலும் அதில் ஒரு கணிசமான வாக்கு வங்கி ஒரு இன நலன் சார்ந்த மூன்றாம் அணியை விரும்புகிறது எனலாம்.

ஆக இந்த தேர்தல் இன நலம் சார்ந்த ஒரு அரசியல் கதவுகளை மூடவில்லை மாறாக திறந்திருக்கிறது எனலாம். இந்த சூழலுக்கு முதன்மையான காரணம் கண்டிப்பாக தமிழக மாணவர்களே அவர்களின் முயற்சி நிச்சயம் வெற்றி அடைந்துள்ளது. இதை மனதில் வைத்து நம்மையே நாம் ஒரு முறை சுயபரிசோதனை செய்துகொண்டு 2016 தேர்தலுக்கு இப்பொழுது இருந்தே அடிக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அவை

1. முதலில் தமிழ்த் தேசியவாதிகள் பெரியாரை வசைபாடுவதை நிறுத்தவேண்டும். இது தமிழ் தேசியத்தை நோக்கி வரும் பழைய கொள்கை பிடிப்பு உள்ள திராவிட அரசியலை விரும்பும் திமுக வினரை மீண்டும் திமுகவை நோக்கியே நகர்த்தும்.

2. இன்றைய திராவிட அரசியல் என்பது எவ்வளவு மோசமான சூழலில் இருந்தாலும் அதன் ஆரம்பம் என்பது ஒரு அறிவார்ந்த அரசியல் (Intellectual Politics). பெரியார், அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், என இது மிக நீண்ட பட்டியல். இன்று தமிழ் தேசியத்தின் நிலைமையோ வெறும் உணர்வு அரசியல் என்ற நிலையில் உள்ளது (Emotional Politics). வெறும் உணர்வு அரசியல் மிதமான (Moderate People) சிந்தனை கொண்டவர்களை என்றும் ஈர்க்காது. தமிழ் தேசிய அரசியலை உணர்வு நிலையில் இருந்து அறிவு பாதையில் நகர்த்தி செல்லும் சூழல் கொண்ட ஒரு தலைவர்களையும் இன்று வரை காண முடியவில்லை. அறிவாளித்  தலைவர்கள் ஒருபுறம் குறைந்த பட்சம் அறிவார்ந்த எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு மதிப்பாவது இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. சற்று வியூக அரசியல் பேசினால் கூட அவர்கள் இன துரோகி பட்டம் எளிமையாக வாங்கி விடுவார்கள் என்ற நிலை தான் இன்று.

3. வெறும் இனம் சார்ந்த அரசியல் மட்டும் பேசாமல் பல கோணங்கள் கொண்ட அரசியல் கொள்கை உருவாக்குவது. இன்று தமிழகத்தில் உள்ள மின்சார தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு, நீர் நிலைகளை பாதுகாத்தல், ஆக்கரிப்புகளை அகற்றுதல், கோயில் மற்றும் வரலாற்று சின்னங்களை பாதுகாத்தல், மணல் கொள்ளையை தடுத்தல், மற்ற இயற்கை வளங்களை பாதுகாத்தல், முழுமையான் சூரிய சக்திக்கு தமிழகத்தை எடுத்து செல்லுதல், கட்டமைப்புகளை மேன்படுத்துதல் (Infrastructure development), ஊழல் லஞ்சம் ஒழித்தல், அரசாங்க அலுவலங்களை கணினி மயமாக்கல், ஆக தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்லுதல்  என பல சமூக பொருளாதார முன்னேற்றம் பற்றி பேசியே ஆகவேண்டும்.

இந்த தேர்தலில் நாம் கவனிக்க வேண்டிய மற்றவைகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக நின்று படுதோல்வி அடைந்ததே. இவர்கள் வலிமையாக இருப்பதாக இவர்களே நினைத்த  பதினெட்டு தொகுதியில் வாங்கிய மொத்த ஓட்டுகள் 4 லட்சம். இந்த அளவு பெரிய அடி வாங்கியுள்ளது தமிழக தொழிலாளர் வர்க்கம் இவர்களை கம்யூனிஸ்ட்டுகளாகவே அங்கீகரிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஈழவிடுதலை, முல்லைப்பெரியாறு, கூடன்குளம் என பல்வேறு போராட்டங்களில்  தமிழகத்தின் எண்ணங்களை தேசிய தலைமையிடம் எடுத்துச்  செல்லாமல் மாறாக தேசிய தலைமையின் எண்ணங்களை தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிராக திணித்ததற்கு தமிழகத்தின் தொழிலாளர் வர்க்கம் நல்ல பாடம் புகட்டியுள்ளது. பிரணாப் முகர்சியை வங்காளி என்ற ஒரே காரணத்துக்காக தனிப்பட்ட முறையில் வங்காள பாசத்துடன் தேசிய தலைமை ஆதரித்ததை கண்டிக்காமல் விட்டது என இவர்கள் இந்த தேசத்துக்கு செய்த துரோகம் மிக அதிகம். தொழிலாளர்களுக்கென்று ஒரு இடது சாரிகொள்கை கொண்ட அரசியல் தலைமை தேவை தான். அப்படி ஒரு தேவை இருப்பின் தமிழகத்துக்கென ஒரு அரசியல் கட்சியை தொழிலாளர்கள் உருவாக்கிக்கொள்ளலாம் இனி எந்த தேசிய கட்சிக்கும் இந்த மண்ணில் இடமில்லை என தொழிலாளர் வர்க்கம் உரக்கச்  சொல்லட்டும்.

அடுத்து தோல்வி அடைந்த தே.மு.தி.க வைப் பற்றி இங்கு யாரும் பரிதாபப்படத் தேவையில்லை. இந்த தேர்தலில் அமைந்த மூன்றாம் அணியில் அதிகம் வெற்றி அடைந்தது தே.மு.தி.க என்பதுதான் உண்மை. அவர்கள் இன்று தேர்தலில் தோல்வி அடைந்திருக்கலாம் ஆனால் விசயகாந்த் இன்னும் 10 வருட அரசியலுக்கு தேவையான பணபலத்தை இந்த தேர்தலில் கண்டிப்பாக பெற்று இருப்பார். அதனால் தமிழகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை கண்டிப்பாக தக்க வைத்துக்கொள்வார்.

பா.ம.க ஒரு தொகுதியை பெற்றுள்ளது. தமிழகத்தில் இருந்து 37 புழு பூச்சிகள் செல்லும் பொழுது தமிழர்களுக்கான குரல் ஒலிக்கப்படுமா என்பது கேள்வியே. அன்புமணி ஒருவரால் ஓரளவு தமிழகத்துக்குத் தேவையான குரல் ஒலிக்கும் என நம்புவோம். பா.ம.க வுக்கு மந்திரி பதவி கொடுக்கும் பட்சத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் பா.ம.க பா.ச.க வுடனே கூட்டணி வைக்கும். தே.மு.தி.க வும் அதே நிலைப்பாட்டில் இருக்கும்.

இந்த தேர்தலில் கிடைக்காத ஒரே தகவல் பா.ச.க வின் உண்மையான பலம். அதிலும் முக்கியமாக மோடி அலையின் பலம் எப்படி என்று பரிசோதிக்கமுடியாமல் போனது. ம.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, பா.ச.க என்று பல்வேறு திசையில் பயணம் செய்யும் இந்தக்  கூட்டணி ஒரு ஒவ்வாத கூட்டணி. இந்தக் கூட்டணி அழுத்தமான வாக்குவிகிதம் மட்டுமே வாங்க முடியும் என்றும் வெற்றிக் கூட்டணி ஆகிவிட  முடியாது.

ம.தி.மு.க – இந்த தேர்தலில் பரிதாபத்துக்கு உரியவர் வை.கோ மட்டுமே. என்றுமே தமிழக மக்கள் வை.கோவிற்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுத்துள்ளனர். இனி வைகோ  தேர்தல் அரசியலை விட்டு தமிழகத்தில் ஒரு மூத்த தலைவர் என்ற வகையில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கு மாறாக வரும் அணியை தேர்தல் அரசியலில் பங்கு பெறாமல் ஆதரிப்பதே அவரின் எதிர் கால அரசியலில் அவருக்கு முக்கிய பங்கினை நிலைத்திருக்கச்செய்யும்.

கடைசியாக அண்ணன் உதயகுமார் அவர்களின் தோல்வி. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான தோல்வி. இதில் கற்க வேண்டிய பாடம். கொள்கை ரீதியலான அரசியலை முன்னெடுத்து செல்லும் பொழுது கொள்கை பிடிப்பு உள்ள மக்கள் அல்லது விழிப்புணர்வு  கொண்ட ஊரில் தேர்தலில் போட்டியிடுவதே சரி. அதற்கான இடமாக கன்னியாகுமரி அமையவில்லை என்பதே வருத்தம். ஆம்ஆத்மி யில் போட்டியிட்டது பின்னடைவுதான் என்றாலும் அது மிகப்பெரிய தவறாக இங்கு கருதமுடியாது. இன்றைய நம்முடைய கடமை மீண்டும் போராட்டக்களத்தில் அண்ணன் உதயகுமாருக்கு துணையாக இருந்து அவருக்கு வலிமை சேர்ப்பது.

இந்த தேர்தல் தந்த பாடம் ஒருபுறம் ஆனால் அதிமுக பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாகியுள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இந்திய ஊடகங்கள் இனி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஜெயலலிதாவின் குரலை ஒலித்தே ஆகவேண்டும். ஒலிப்பது தமிழர்களுக்கான குரலாக இருக்கட்டும்.

Today, we couldn’t be prouder knowing that our work to protect children everywhere has http://www.trackingapps.org gotten parents everywhere one step closer to keeping kids safe online

கார்த்திகேயன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2014 தேர்தல் முடிவும் தமிழ் தேசியத்துக்கான அரசியல் வழியும்”

அதிகம் படித்தது