உள்ளதா படைப்பாற்றல்
ஆச்சாரிJul 1, 2011
தொழில் துறையாக இருந்தாலும், கலைத் துறையாக இருந்தாலும் இன்றைய நாளில் படைப்பாற்றல் (creativity) மிக அவசியமான தேவையாக ஆகிவிட்டது. எந்த ஒரு செயலிலும் அளவற்ற கற்பனைத்திறனும் (imagination), கனவுகளும் இருப்பது பல புதிய யோசனைகளும்,படைப்புகளும் உருவாக பேருதவியாக இருக்கும். அறிவுத்திறன் (Intelligence Quotient) மட்டுமன்றி படைப்புத்திறனும் அவசியம் என்பதை தற்போது வல்லுனர்கள் உணர்ந்துள்ளனர். அதனால் அத்தகைய படைப்புத்திறனை கண்டறியவும், அளக்கவும் புதிய சோதனை முறைகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளது. இந்த கட்டுரை, அத்தகைய படைப்பாற்றல் சோதனை ஒன்றை அறிமுகம் செய்கிறது.
உங்கள் கற்பனைத்திறனை பயன்படுத்தி கீழ்காணும் பொருட்களை என்னென்ன விதமாக பயன்படுத்தலாம் என்று யோசித்து பட்டியல் இடுங்கள்.
- செங்கல்
- போர்வை
இந்த வித கேள்விமுறையை பன்முக சோதனை(divergence test) என்று அழைக்கிறார்கள். அதாவது ஒருமுகமாக (convergence) ஒற்றை பதிலைத் தேடும் கேள்விகளுக்கு மாறாக பன்முக சிந்தனையை வளர்க்கும், அளக்கும் முறையாம் இது. உங்கள் கற்பனைத் திறனைக் கொண்டு பல்வேறு கோணங்களில் சிந்தனை செய்யத் தூண்டும், மற்றும் எத்தனை தனித்தன்மை வாய்ந்த பதில்களை உங்களால் தர முடியும் என்று உணர்த்தும் சோதனையாகும். படைப்பாற்றலுக்கு மிகவும் நெருக்கமான ஒரு அறிவை அளந்து வெளிக்கொணரும் இந்த சோதனை மிகவும் சவால் நிறைந்ததாகும்.
பிரிட்டன் நாட்டின் ஒரு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஹட்சன் என்ற மாணவர் கீழ் காணும் பதில்களை மேலே சொன்ன கேள்விக்கு அளித்திருந்தார்,
செங்கல்: அடித்து உடைத்து திருடலாம், வீட்டை கட்டலாம், ரஷ்யன் ரவுலட் எனும் விளையாட்டில் பயன்படுத்தலாம், படுக்கையில் விரிப்பு நழுவதிருக்க அனைத்து முனைகளிலும் கட்டலாம், காலி பாட்டில்களை உடைக்கலாம்.
போர்வை: படுக்கையில் விரிக்கலாம், தவறு செய்யும் போது மறைப்பாக பயன்படுத்தலாம், கூடாரம் அமைக்கலாம், நெருப்பு,புகை சமிக்ஞை செய்ய பயன்படுத்தலாம், படகுகளில் பயன்படுத்தலாம், துண்டுக்கு மாற்றாக உபயோகிக்கலாம், குறிபார்த்து சுட இலக்காக உபயோகிக்கலாம், உயர்ந்த கட்டிடங்களில் இருந்து கீழே விழும் மக்களை பிடிக்க பயன்படுத்தலாம்.
மேலே கண்ட பதில்களை கொண்டு அந்த மாணவனின் சிந்தனை, செயல்பாடுகளை கூட ஓரளவுக்கு நம்மால் ஊகிக்க முடியும். ஒரு ஒப்பீடுக்காக லாரன்ஸ் என்ற மற்றொரு மாணவனின் பதில்களை பார்ப்போம்.
செங்கல்: வீடு கட்டலாம், எரிந்து விளையாடலாம்.
போர்வை: குளிரை தடுக்கலாம், நெருப்பை அணைக்கலாம், மரங்களில் கட்டி ஊஞ்சலாக பயன்படுத்தலாம், நோயுற்றவரை தூக்கி செல்லலாம்.
இந்த மாணவனின் சிந்தனை ஒரு வட்டத்தை தாண்டி வெளியே செல்லவில்லை. முதலாம் மாணவனின் சிந்தனை ஆற்றல் நன்றாக உள்ளது என்று தோன்றுகிறது அல்லவா, கொஞ்சம் கீழே படியுங்கள், மற்றொரு மாணவனின் பதிலை.
செங்கல்: கிணற்றின் ஆழத்தை கண்டறியலாம், ஆயுதமாக பயன்படுத்தலாம், பெண்டுலமாக பயன்படுத்தலாம், வடிவங்களை செதுக்க பழகலாம், சுவர்களை கட்டலாம், ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை நிலைநாட்டலாம், ஆற்றில் பொருட்களை இறக்க கூட சேர்த்து கட்டலாம், சுத்தியலாக உபயோகப்படுத்தலாம், கதவை திறந்தே வைக்கலாம், செருப்பை தேய்த்து துடைக்கலாம், கட்டிடங்களில் ஜல்லியாக கொட்டலாம், எடை கல்லாக நிறுக்கலாம், ஆடும் மேசையை நிலை நிறுத்த, காகிதங்கள் பறக்காமல் இருக்க பயன்படுத்தலாம், உருவமற்ற சிற்பங்களை செதுக்கலாம், குளிர் காயும் அடுப்பில் உபயோகிக்கலாம், ஜன்னல்களை உடைத்து திருடும்போது பயன்படுத்தலாம், எலிவளைகளை அடைக்கலாம்.
மால்கம் கல்டுவெல் என்ற ஆசிரியரின் புத்தகமான outliers இல் இருந்து எடுக்கப்பட்டது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உள்ளதா படைப்பாற்றல்”