மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக வயல்களின் வளத்தை அழித்து வரும் களைகள்.

ஆச்சாரி

Nov 15, 2013

தமிழக இயற்கை வளங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை. தமிழகத்தின் செல்வ செழிப்பைக் கொள்ளையடிக்க பிற நாட்டவர் நம்மீது போர்த்தொடுத்தனர் எனும் வரலாறே நமக்குச் சான்று.

வளங்களைச் சுரண்டுவது ஒருபுறம் என்றால்  மூலதனச் செல்வங்களை அழிப்பது இன்னொரு வகைச் சுரண்டல். வேளாண்மையை ஆதாரமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழகத்தின்  நிலவளத்தைச் சீரழிக்கவும்  பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஏரிகளையும் காடுகளையும் ஆக்கிரமித்துள்ள வேல மரங்கள், விளைநிலங்களைப் பாதிக்கும் பார்த்தீனியச் செடிகள், உணிச் செடி என்று சொல்லக் கூடிய  ‘லாண்டனா கமரா’ போன்ற கொடிய தாவரங்கள் வெளிநாட்டு தீய சக்திகளின்  மூலம் பரப்பப்பட்டிருக்கின்றன. முதலில் பார்த்தீனியச் செடிகளின் ஆதிக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.

அமெரிக்க நாட்டில் மெக்சிக்கோ வளைகுடாப் பகுதியில் தோன்றியவை பார்த்தீனியச் செடிகள். அமெரிக்காவிலிருந்து கோதுமைத் தானியங்களோடு பார்த்தீனியம் விதைகளும் கலந்து இந்தியாவிற்கு மும்பைத் துறைமுகத்தின் வழியாக 1956 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டன.

பார்த்தீனியம் பூண்டு, சீதேவியார் செங்கழுநீர் , செவ்வந்தி போன்ற தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடி ஆகும். ஒன்றரை மீட்டர் உயரத்துக்கும் மேலாக வளரக் கூடியது. பார்த்தீனியச் செடிகள் காலியிடங்கள், தரிசு நிலங்கள், பயிர் நிலங்கள் , குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள், பழத் தோட்டங்கள் , சாலையோரங்கள், கரையோரங்கள் என அனைத்து இடங்களிலும் வளர்ந்து வருகின்றன.

பார்த்தீனியச் செடிகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் பரவி, நெருக்கமாக முளைத்து,    ‘பச்சைக் கம்பளம் ’ விரித்தது போல நிலத்தை மூடிவிடுகின்றது. இச்செடியானது அதிக எண்ணிக்கையிலான பூக்களையும், குறைந்த எடையுடைய விதைகளையும் உற்பத்தி செய்கிறது. அதன் விதைகள் குறைந்த எடை உள்ளதால் காற்றின் மூலம் மற்ற இடங்களுக்கு எளிதில் விரைவாகப் பரவுகிறது. ஒரு பார்த்தீனியம் செடியானது 2500 முதல் 5000 வரையிலான விதைகளை உற்பத்தி செய்கிறது. மேலும், பார்த்தீனிய விதைகள் முளைப்பதற்குத் தேவையான சூழ்நிலைகள் இல்லாத போது, சாதகமான சூழ்நிலை வரும் வரை 20 ஆண்டுகள் கூட உறக்கத்தில் கிடந்து முளைக்கக் கூடிய தன்மை வாய்ந்தது. பார்த்தீனியம் செடியானது இந்தியாவில் 35 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் பரவியுள்ளது.

பார்த்தீனியம் செடிகளின் கீழ் செடி கொடிகள் எதுவும் வளர முடிவதில்லை. தண்ணீருக்காகவும், சூரிய ஒளிக்காகவும், வேர்ப்பிடி மண்ணுக்காகவும் செடிகள் போராடிச் சாகின்றன. இவற்றின் மீது பார்த்தீனியச் செடிகள் நஞ்சூட்டி அழிக்கிறது.

பார்த்தீனியம் – பார்த்தீனியன், அம்புரோசின் போன்ற நச்சு வேதிப்பொருள்களைச் சுரக்கிறது. இந்த நச்சுப் பொருட்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் நமது நாட்டுத் தாவரயினங்கள் அழிந்து விடுகின்றன. பார்த்தீனியச் செடியானது கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. வேளாண்மைப் பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. வேளாண்மை உற்பத்தியில் 30% குறைக்கிறது.

அவரையினப் பயிர்களின், சிறப்பாக அவற்றின் வேர்களில் ‘இரைசோபியம் ’ பாக்டீரியாக்களைக் கொண்ட வேர்முடிச்சுகள் காணப்படுகின்றன. இவை, நைட்ரஜன் வாயுவைத் தாவரங்கள் உறிஞ்சக் கூடிய அயனி நிலைக்கு மாற்றித் தருவதுடன், வளி மண்டபத்தில் நைட்ரஜனின் சமநிலையைப் பேணியும் வருகின்றன. பார்த்தீனியச் செடிகளின் நஞ்சுகள் இந்த வேர் முடிச்சுகளையும் விட்டு வைப்பதில்லை என தாவரவியல் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அடுத்தத் தாவரக் கொள்ளியான  ‘உனித்தாவரம்’ பற்றிப் பார்ப்போம். அழகான கொத்து மலர்கள் மூலமாகவும், சிறுகொத்தாக இருக்கும் கருமை நிறப் பழங்களின் மூலமாகவும், பறவைகள், மற்றும் விலங்கினங்களைக் கவர்ந்து அவற்றின் மூலமாக விதைகளை மற்ற இடங்களுக்கு பரப்புகின்றன. மத்திய அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த லாண்டனா எனும் உனிச்செடி, உலகிலேயே மிகக் கொடிய தாவரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.

உலகெங்கிலும் பல லட்சம் ஹெக்டேர்களில் பரவிக் காணப்படும் புதர் வகையைச் சேர்ந்த இத்தாவரம் அந்தந்த நாடுகளில் விளையும் தாவரங்களுக்கு மிகப்பெரும்   அபாயங்களை     விளைவிக்கிறது. காப்பி, அரிசி, தேயிலை, கரும்பு, பருத்தி மற்றும் தென்னை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் இவை விவசாயத்தில் பெரும்பங்கு வகிப்பவை.

கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்கு ஆராய்ச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட இத்தாவரம் அங்கிருந்து தப்பித்து மிகக்குறுகிய காலத்தில், இந்தியா முழுவதும் தனது ராஜாங்கத்தைத் தானே அமைத்துக் கொண்டது. இத்தாவரங்கள் (லாண்டனா) வளரும் காட்டுப் பகுதிகளின் நிலமானது மழைக்காலங்களில் நீரை உறிஞ்சி நிலத்தடிக்குள் அனுப்பும் பண்பை இழந்து விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள்.

அடுத்து தமிழகம் முழுவதுமுள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள கருவேலங் காடுகளின் தீமைகளைத் தெரிந்துகொள்வோம்.  ஏரி, குளங்களில் அடர்ந்து கிடக்கும் இந்த கருவேல மரங்கள் மக்களின் எரிபொருள் தேவைக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன என்கிற காரணத்தோடுதான் நம் நாட்டிற்குள் புகுத்தப்பட்டன. ஆனால் அதன் உண்மையான பின்னணி வேறு. தமிழகத்தில் விவசாயத்திற்கு இயற்கை உரத்தைப் பயன்படுத்தி வந்தனர். குப்பை எரு, ஆடு மாடுகளின் சாணம் அதோடு ஏரிகளில் படிந்திருக்கும் வண்டல்மண் போன்றவற்றைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவந்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பொருளாதார மந்தத்தைப் போக்க புது சந்தைத் தேவைப்பட்டது. எனவே வல்லரசுகள், செயற்கை உரத்தை உலகம் முழுவதும் சந்தையிடத் துணிந்தன. இயற்கை உரங்களைத் தடைசெய்ய வண்டல்மண் எடுப்பதை அரசாங்கத்தின்  உதவியை நாடின. அரசும் ஏற்றுக் கொண்டது. விளைவு  செயற்கை உரங்கள் சந்தையை ஆக்கிரமித்தன. மண் வளமும் முற்றிலுமாக மாறி தன்னுடைய தன்மையை இழந்துவிட்டன.

வல்லரசுகளின் இது போன்ற வணிக நோக்கம் கொண்ட சிந்தனையினால் தமிழகம் போன்ற வளரும் விவசாய பகுதிகள் தன்னுடைய சுய அடையாளத்தை இழந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் தற்போது இருக்கும் வல்லரசுகளின் ஆதிக்கம் இன்னும் வலுப்படும்.

You pro-academic-writers.com should anticipate that your readers will have their own suggestions that they will want you to act on and changes and revisions that they will want you to make

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக வயல்களின் வளத்தை அழித்து வரும் களைகள்.”

அதிகம் படித்தது