மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விழிப்புணர்வில்லா மக்களைக்கொண்ட கழிப்பறையற்ற தேசம்

ஆச்சாரி

Nov 23, 2013

மனக்கழிவுகளை மனிதர்கள் மத்தியிலும், மலக்கழிவுகளை இயற்கையின் மத்தியிலும் கழித்து வாழ்ந்தான் ஆதிமனிதன். மலைக்குகையிலும், மரப்பொந்துகளிலும் தங்கி வாழ்ந்த ஆதிமனிதன் காலப்போக்கில் நாகரீக, விஞ்ஞான வளர்ச்சி பெற்றதும் சுயநல நோக்கில் தனக்கென தனிவீடு கட்டி வசிக்க ஆரம்பித்தான். தற்போது அதே வீட்டில் படுக்கை அறை, உணவு அறை, பூஜை அறை, அமர்ந்து பேச அறை, கழிப்பறை என வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இதனால் இயற்கையில் மலம் கழித்துவந்த மனிதஇனம் அவசரகாலத் தேவையின் காரணத்தினாலும், நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும் தன் வீட்டிற்குள்ளேயே அனைத்து வேலைகளையும் முடித்துக்கொள்ள முற்பட்டு வந்தது.

நிற்க, தற்போது வாழும் மக்களில் எத்தனை பேருக்குச் சொந்த வீடு இருக்கிறது? அவ்வாறு இருந்தாலும் அவ்வீட்டில் போதிய கழிப்பறை வசதிகள் இருக்கிறதா? கொஞ்சம் தலையை சொறியத்தான் வேண்டி இருக்கிறது. தற்போது தேசிய சுகாதாரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடமென்று தற்போது தமிழ்நாட்டை ஆளும் தலைமை, அறிக்கை வாசிக்கிறது. இவர்கள் கூறியது போல கழிப்பிட சுகாதாரத்தில் நாம் தன்னிறைவு அடைந்து விட்டோமோ என்பதைக் காண்போம்.

உலகத்தில் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவோரில் 58% பேர் இந்தியர்கள் என்றும், சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வெறும் 5% மக்கள்தான் திறந்த வெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் நிறுவனமும் தன் அறிக்கையில் கூறியுள்ளது. இதில் மேலும் கழிப்பறை வசதியை நான்கு விதமாக இந்த அறிக்கை பிரித்துக்காட்டுகிறது. ஓன்று வெட்டவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்துகிறவர்கள், இரண்டு சுகாதாரக் குறைவான கழிப்பிடங்களைப் பயன்படுத்துகிறவர்கள், மூன்று பொதுக்கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்துகிறவர்கள், நான்கு தண்ணீர் வசதி நன்றாக உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறவர்கள் என்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தக் கழிப்பறையின் பயன்பாடு மிகக்குறைவு என்றுதான் கூறவேண்டும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அரசு பொதுக்கழிப்பறை இருந்தாலும் அதன் நிலை, மாட்டுத்தொழுவத்தை விட கேவலமாக இருக்கிறது. இதனால் பெருவாரியான நகரவாசிகள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவலம் நிகழ்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. காரணம் பெரும்பாலும் ஆண்களை விட கழிப்பறைகளை அதிக நேரம் பயன்படுத்தும் தேவை பெண்களுக்கே உள்ளது. ஆகவேதான் பெண்களுக்கும், ஆண்களுக்குமான கழிப்பிட வசதிகள் 2:1 என்ற விகிதத்தில் இருப்பது நல்லது என்று உலக அளவிலான ஐ.பி.சி (International Plumping Code) தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மேலைநாடுகள், ஆண்களுக்கு ஒரு கழிப்பிடம் கட்டினால் அந்த இடத்தில் பெண்களுக்கு இரண்டு கழிப்பிடங்கள் கட்ட வேண்டும் எனச் சட்டம் இயற்றி உள்ளன. சரியான கழிப்பறை வசதி பெண்களுக்கென தமிழ்நாட்டில் இல்லாததால் பெண்களின் கல்வி, கௌரவம், ஆரோக்கியம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின்றன. குறிப்பாகப் பள்ளியில் பயிலும் மாணவிகள் தங்கள் படிப்பைத் தொடராமல் இடைநிறுத்தம் செய்வதற்கு தாங்கள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள கிராமங்கள் இந்த விசயத்தில் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. கிராமத்தில் காலை எழுந்ததும், “வெளிய போறேன், காட்டப்பக்கம் போறேன், ஆத்துப் பக்கம் போறேன்” என்றால் மலம் கழிக்கச் செல்கிறார்கள் என்று அர்த்தம். கிராமங்களில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் ஏரிகள், குளங்கள், சாலை ஓரங்கள், வயல் வெளிகள், கண்மாய்கள் போன்ற இடங்களில் காலைக்கடன்களை முடித்துக்கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளது. இதிலும் குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் படும் சிரமத்திற்கு அளவே இல்லை. இருள் பிரியாத அதிகாலை நேரத்தையும், இருள் கவ்வும் மாலை நேரத்தையும் மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் அவர்கள் தொற்றுநோய், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். சில பெண்கள் இந்த இரவு நேரத்தில் அவசரத்திற்கு சாலை ஓரத்தில் போகும் போது, அப்போது வரும் வாகன வெளிச்சம் பட்டதும் சட்டென்று எழுந்து நின்று, தன் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் நிலை கொடுமையிலும் கொடுமையானது.

நம்நாட்டில் தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி விதவிதமான கடைகள் பல இருக்கின்றன. ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை. இதனால் பலர் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு புறப்பட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. நகர்ப்புறத்திலும், கிராமத்திலும் பலர் அவசரத்திற்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து அல்லல்படும் சூழல் இருக்கிறது. இதில் அவசரத்திற்கு ஒதுங்க எவரும் தன் வீட்டில் இடம் தருவதில்லை. இதற்குச் செல்லவேண்டும் என முகம் தெரியாத ஆட்களிடம் எப்படிக் கேட்பது? என்ற தயக்கத்தால் கழிவுகளை அடக்கி வைக்கும் நிலை உருவாகிறது. இதனால் பல சிறுநீரக சம்பந்தமான, மூலம் சம்பந்தமான நோய்கள் வருவதை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்கிறோம் என்பது பலர் அறியாத உண்மையாகும்.

தமிழ்நாட்டில் மக்கள் கூடும் இடங்களில் பெரும்பாலும் கழிப்பறைகளே இருப்பதில்லை. ஆயிரம், ஆயிரம் பேர் கூடும் கோயில்களில் கூட வரும் பக்தர்கள் ஒதுங்குவதற்கு கழிப்பிடங்கள் இல்லை. தவிர பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், கடைவீதிகள், புகைவண்டி நிலையங்கள், கடற்கரைகள் , பூங்காக்கள், காய்கறிச் சந்தைகள் என மக்கள் கூடும் பெரும்பாலான இடங்களில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் பொது இடத்தையும், வெட்ட வெளிகளையும், வீட்டுச்சந்துகளையும், மின்சாரக் கம்பங்களையும் மக்கள் பயன்படுத்தும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவதால் பொதுமக்கள் பல நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

 இந்தியா அதில் சாதித்துள்ளது, இதில் சாதித்துள்ளது என்று பெருமை பேசிக்கொள்ளும் நாம், கேவலம் கழிப்பறை கட்டக்கூட வக்கில்லாத நாடாக இந்தியா இருப்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித்தலைகுனிய வேண்டியுள்ளது. இந்தியாவில் மழைக்காலங்களில் விரைவாக நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. காரணம் போதிய கழிப்பறை இல்லாமல் திறந்தவெளியை மக்கள் கழிப்பறையாகப் பயன்படுத்துவதில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் பல்விதக் கழிவுகளிலிருந்து வரும் தொல்லையே இந்த நோய்கள்.

சென்னையில், பேருந்து நிறுத்தம் உள்ள இடங்கள், நடைபாதைகள், புகை வண்டித் தடங்கள், தெருக்குப்பைகள் கொட்டும் இடங்கள், மின் கம்பங்கள் போன்ற பகுதிகள், மற்றும் மெரினா, கோவளம், மாமல்லபுரம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், திருவொற்றியூர், சாந்தோம் போன்று இருக்கும் கடற்கரைப் பகுதிகள் என அனைத்து இடத்திலும் பொதுமக்கள், மீனவர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட பலரும் பலவிதக் கழிவுகளை இவ்விடங்களில் இட்டுச் செல்கின்றனர்.

இதே போல் நான் பீகார், ஆந்திரா, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குப் பயணப்பட்டபோதும் இதே நிலைதான் அங்கும் நிலவுகிறது. இதில் கேரளாவில் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. கேரளாவில் ஓரளவிற்கு நல்ல சூழலில் பல இடங்களில் கழிப்பறைகள் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் பலரும் கழிப்பறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விசயத்தில் அதற்கு நேர்மாறாக தமிழர்கள் கழிப்பறை விசயத்தில் பின்தங்கியே இருக்கின்றனர். உலகிலேயே கழிப்பறை வசதியில்லாத மக்கள் அதிகம் வசிப்பது இந்தியாவில் மட்டும்தான் எனக்கூறும் ஆய்வு முடிவுகள் நமக்கு வருத்தத்தை அளிக்கின்றன.

ஒரு நாடு தொழில் நுட்பத்தாலும்,  ஏவுகணைகள் விடுவதாலும் வல்லரசு ஆகிவிட முடியாது. எந்த ஒரு நாடு சுகாதாரமான கழிப்பறை விசயத்தில் தன்னிறைவடைகிறதோ அதுதான் நம்மைப் பொறுத்தவரை வல்லரசாக இருக்கமுடியும். கழிப்பறை வசதியில்லாமல் நாட்டுமக்கள் பல தொற்று நோய்களுக்கு ஆளாகி மரணிக்க நேரிடும்போது இந்தியா ஏவுகணை விட்டு என்ன பயன்? நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மட்டும் 1 லட்சம் டன் மலங்கள் வயல்வெளிகளிலும், காய்கறித்தோட்டங்களிலும், நீர் நிலைகளிலும் சேர்கின்றன. இவைகள் உரமாகின்றன என்று ஒரு பிரிவினர் பிரச்சாரம் செய்தாலும் உண்மையில் இவை உரமாகுவதில்லை. மாறாக பலவித நோய்களையே உண்டாக்குகின்றன என்பதே உண்மை.

இந்தியாவில் 75% உள்ள நீர்நிலைகளில் மனிதர்களாலும், தொழிற்சாலைகளாலும் அசுத்தமடைந்துள்ளன என ஒரு அறிக்கை கூறுகிறது. இந்திய நகரங்களில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தினமும் நமது உணவுகளில் மலங்கள் வந்து சேருகின்றன என மத்திய நகர்புற அமைச்சகம் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் இத்தகைய சுகாதாரக் குறைபாடுகளால் ஏற்படும் டயரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் தினமும் ஆயிரம் குழந்தைகள் மரணிக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் 2,40,000 கிராமங்களில், வெறும் 24,000 கிராமங்களில் மட்டும்தான் பூரணக் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 கோடி டன் மலம் அகற்றப்படாமல் திறந்த வெளிகளில் விடப்படுகின்றன எனவும், ஒவ்வொரு கிராம் மலத்திலும் 10 மில்லியன் வைரஸ்களும், 1 மில்லியன் பாக்டீரியாக்களும், ஆயிரம் பாக்சைட் கிருமிகளும் இருக்கின்றன என ஐ.நா அவையின் அறிக்கை கூறுகிறது.

அரசுதிட்டங்கள்:

நாம் எல்லாக் குற்றத்தையும் அரசாங்கத்தின் மீதும் போட்டுவிடமுடியாது. இந்த விசயத்தில் தனிமனித ஒழுக்கமும், சமூக அக்கறையும் தேவை. ஏதோ அந்த நேரத்திற்கு நம் வேலை முடிந்ததா? என நினைத்துச் செயல்படுவதை நிறுத்த வேண்டும். மத்திய அரசு கழிப்பறைகள் கட்ட மானியங்களை வழங்குகிறது. ஆனால் இந்த மானியங்களைப் பெற்று எத்தனை பேர் தம் வீடுகளில் கழிப்பறை கட்டியுள்ளனர்? தவிர அரசு பொது சுகாதாரம், தனிமனித சுகாதாரத்தைப் பற்றிய பிரச்சாரங்களையும் நடத்துகிறது. 2003-ல் அரசு திறந்த வெளியில் மலம் கழித்தல் முறையை அகற்ற முடிவு செய்து திட்டம் தீட்டி திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்கும் கிராம சபைகளுக்கு விருது வழங்கவும் முடிவு செய்து அமல்படுத்தியது. ஆனால் இதைப் பயன்படுத்திய பயனாளர்கள் மிகக்குறைவு என்பதேஉண்மை.

இந்தியாவில்  6.26 கோடிப்பேருக்கு பாதுகாக்கப்பட்ட கழிப்பிட வசதி கிடையாது. இவ்வாறு இருப்பதற்கு பாரம்பரிய காரணங்கள், கல்வி அறிவின்மை, வறுமை, சுத்தமின்மை ஆகியனவே என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிசனர் சி.சந்திரமவுலி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் போதிய நீர் வசதி இல்லாமையாலும், சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றும் வசதிகள் இல்லாமையாலும் மக்களிடம் சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும் கழிப்பறைகள் என்பது பகல் கனவாகவே இருக்கின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் உதவியோடு குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தக்கூடிய கழிப்பறைகளை உருவாக்கி வருகின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். இது பல மக்களுக்கு பெரும்பயனாக அமையும் என்கின்றனர்.

இனி கழிப்பறைத் தேவை தீர்க்கும் வழிமுறைகளாவன:

1. சக்கரங்கள் பொருந்திய நடமாடும் அல்லது நகரும் நவீன கழிப்பறைகளை கழிப்பறை வசதிகள் இல்லாத பகுதிகளில் அரசு செயல்படுத்த வேண்டும். 10 ஆண்டு உத்திரவாதத்துடன் பல நிறுவனங்கள் இத்தகைய கழிப்பறைகளை விற்பனை செய்கின்றன.

2. இந்தியாவிலேயே முதன் முறையாக நாணயம் போட்டதும் இயங்கும் “நவீன இயந்திரக் கழிப்பறை” திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நாணயத்தை நுழைவாயிலில் உள்ள இயந்திரத் துவாரத்தில் போட்டதும் கதவு திறக்கும், மின் விளக்கு எரியும், அதன் பின் உள்ளே சென்று கழிப்பறையைப் பயன்படுத்திவிட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தவுடன் தானாகவே தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும். இந்த முறையை தமிழகமெங்கும் பயன்படுத்தினால் மக்கள் பெரும் பயனடைவர்.

3.அரசு “முழுச் சுகாதார இயக்கம்”(Total Sanitation Companign) செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்ட அரசு மானித்தொகையாக ரூ.4500 கொடுக்கிறது. ஆனால் இந்தப் பணம் மக்கள் கைகளில் வந்து சேரும்போது 2000, 3000 ரூபாயாகவோ தான் கிடைக்கும். அப்படி 4500 கிடைத்தால் கூட விற்கின்ற விலைவாசியில் கழிப்பறை கட்டமுடியுமா? என்பது சந்தேகமே. ஆகவே ஒரு கழிப்பறை கட்ட நடைமுறையில் விலைவாசியில் என்ன தொகையோ, அதைக் கொடுத்துக் கட்டச்சொல்வதோடு அதற்கான தண்ணீர் வசதிகள் மற்றும் கழிவுகளை அகற்றும் செயல்பாடுகளையும் அரசே செய்ய வேண்டும்.

4.வெட்டவெளிகளில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளம்பரப்படுத்துவதோடு, அதைப் பின்பற்ற சட்டமியற்ற வேண்டும். அவ்வாறு மீறுபவர்களை தண்டிக்கப்படவும் வேண்டும்.

5.பொதுமக்கள் கூடுகின்ற சந்தைகள், கோயில்கள் போன்ற இடங்களில் சுகாதாரமான கழிவறைகளை அரசே கட்டிப் பராமரிக்க வேண்டும்.

6. மக்கள் அதிகம் பேர் சென்று வரக்கூடிய பேருந்து நிறுத்தங்களில் கழிப்பறை வசதி அமைக்க வேண்டும்.

7.அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு கழிப்பறை வசதிகள் செய்துதரப்பட வேண்டும்.

8.அனைத்து அரசு அலுவலகத்திலும், அரசு அலுவலர்களுக்கு மட்டுமல்லாது, இந்த அலுவலர்களை நாடி வரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் கழிப்பறை வசதிகளை அரசு செய்து தரப்பட வேண்டும்.

9.இவ்வாறாக கழிப்பறைகளை சிறப்பாகப் பயன்படுத்தும் கிராமம், நகராட்சிகளுக்கு அரசு ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டினால் மற்ற நபர்களும் இதைப் பின்பற்ற தூண்டுகோலாக இருக்கும்.

எது எப்படி ஆனாலும் அரசும், மக்களும் மனது வைத்தால் மட்டுமே “கழிப்பறைச் சுதந்திரம்” என்பது நம் நாட்டுக்கு வந்து சேரும். தெருவுக்கு தெரு கோவில் கட்டுவதைவிட, வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்டி வாழ்வதே அனைவருக்கும் நலம் தரும் செயலாகும்.

 

He refrains from saying more than facts allow notice the qualification (in the specimen examined by me) see

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “விழிப்புணர்வில்லா மக்களைக்கொண்ட கழிப்பறையற்ற தேசம்”
  1. N POONGODI says:

    நல்ல கட்டுரை

அதிகம் படித்தது