மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஈழக்கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் கைதும் பின்னணியும்.

ஆச்சாரி

Nov 30, 2013

வ.ஐ.ச. ஜெயபாலன் பற்றி:

1944-ஆம் ஆண்டு ஈழத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க ஈழத்து எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். அதிக கவிதைகளையும், சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். 2011-அம் ஆண்டில் வெளிவந்த ‘ஆடுகளம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் ‘பேட்டைக்காரன்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உலகெங்கும் அறியப்பட்டவர்.

சூரியனோடு பேசுதல் (1986), நமக்கென்றொரு புல்வெளி(1987), ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987), ஒரு அகதியின் பாடல் (1991), வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் -2002 போன்ற கவிதை நூல்கள் எழுதியுள்ளார்.

இலங்கையின் நெடுந்தீவிலே பிறந்து, வன்னிக்கிராமத்திலே வளர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் சிறப்புப் பட்டதாரி ஆவார். பல்கலைக்கழக மாணவனாக இருக்கும் போது மாணவர் அவைத்தலைவருக்கான போட்டியில் நின்று அதிகவாக்கு பெற்று 1947ல் வெற்றி பெற்றார். இவரைப் பற்றி பேரா. கைலாசபதி அவர்கள் குறிப்பிட்டது “ஒரு முரடன் ஆனால் நல்ல கவிஞன்” என்றார்.

இவரது கவிதைகள் இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினர் வெளியிடப்பட்ட தமிழ் பாடம் புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளன. கவிஞர் வைரமுத்து தொகுத்த “எல்லா நதியிலும் என் ஓடம்“ எனும் கவிதைத் தொகுதியில் ஜெயபாலனின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

எதற்காக கைது?

கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் (79) அவர்கள் இலங்கையின் வடக்குப் பகுதியான மாங்குளத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது நார்வே நாட்டில் வசித்து வருகிறார். மாங்குளத்தில் உள்ள தனது தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக இலங்கை வந்தவரை நவம்பர் 22-ம் தேதி அன்று சிங்கள காவல்துறையினர் கைது செய்தனர். தனது தாயாரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இலங்கைக்கு சுற்றுலா அனுமதியுடன் சென்ற இவர் யாழ்ப்பாணத்தில் சில கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மாங்குளம் பகுதியில் வைத்து இவரை இலங்கைக் காவல் துறையினர் கைது செய்தனர். இவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் எனத்தெரிகிறது. சுற்றுலா அனுமதியில் வந்திருந்த ஜெயபாலன் அதன் விதிமுறைகளை மீறியதாகவும், இலங்கையில் இனப்பிரச்சனையைத் தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபட்டதாகவும் போலிசார் கூறியுள்ளனர்.

நவம்பர் மாதத்தின் இறுதி வாரமானது, தமிழ் இனத்தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தை ஒட்டியதாக இருப்பதால் தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படுவது இலங்கை காவல்துறையின் வழக்கமான ஒன்றாகும் என்றாலும் இக்காலகட்டத்தில் கவிஞர் ஜெயபாலன் அவர்களின் வருகையும், இவர் காட்டிய பரபரப்பும், இந்த அசம்பாவிதங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். மேலும் இவரின் முதுமையையும், சூழலையும் கவனத்தில் கொண்டு, கவிஞரை விடுதலை செய்து, நார்வே நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கைதானது இலங்கைத் தமிழர்களின் பேச்சுரிமை முதல் அனைத்து உரிமைகளும் முடக்கப்பட்டுள்ளன, கண்காணிக்கப்படுகின்றன என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. இவரின் கைது குறித்து இலங்கை போலிஸ் அதிகாரி அஜித் ரோகனா கூறுகையில் “வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், இந்த நாட்டின் எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. ஆனால், நாட்டின் அமைதியைக் குலைக்கும் முயற்சிக்கு அனுமதி கிடையாது” என்றார். அப்படி என்னதான் இவர் வந்து இலங்கையின் அமைதியைச் சீர்குலைத்தார் என்று தெரியவில்லை. அவ்வாறு இவர் வந்து அமைதியைச் சீர் குலைக்க என்ன செய்தார்? என்று இவர்கள் எந்தச் செய்தியையும் வெளியிடாது வெறுமனே கைது செய்வது என்பது அடக்குமுறை என்றே நமக்குத் தோன்றுகிறது.

உல்லாசப் பயண விசாவில் வந்தவர், உல்லாசப் பிரயாணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எந்தவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்று இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கைகளை, மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாகப் பின்பற்றத் தொடங்கப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு உல்லாசப் பிரயாண அனுமதியில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், இலக்கிய  நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்துச் சுதந்திரப் பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாகச் செய்துவரும் இலங்கை அரசாங்கம் இந்த விதியையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் சமீப காலமாக இந்த வடிவத்திலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இதன் மூலம் இலங்கை அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் உள்ளவர்கள் ஆனாலும் எங்களுக்கு எதிராகக் கருத்துச் சொல்லித் தப்பிவிட முடியாது என்பதே. இதுமட்டுமல்ல இவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் மீள விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமல் போன நிகழ்வும் நடந்திருக்கிறது. பிறந்த மண்ணுக்குப் போக முடியாததை எவர்தான் ஜீரணிப்பார். மேலும் இவர்களிடம் விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்களைப் புடுங்குகிற வேலைகளையும் சிறப்பாகச் செய்து வருகின்றனர் என்ற செய்தியும் உண்டு. இதன் அடிப்படையிலே பலருக்கும் அனுமதி ரத்தாகி உள்ளது.

தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அவை கவிஞராக புதுவை ரத்தினதுரை மற்றும் ஜெயபாலன் ஆகியோர் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர். இவர் இலங்கையில் உள்ள தமிழ்-முஸ்லீம் உறவு குறித்தும் நல்லிணக்கம் குறித்தும் கரிசனையுடன் செயல்பட்டவர். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செயல்பட்டவர் இவர். இவ்வாறு சமத்துவச்சிந்தனை உள்ளவரான இவரின் கைது என்பது அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள் கருத்துச் சுதந்திரப் போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை ஆகும்.

கவிஞர் ஜெயபாலனின் கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. இந்நிலையில் தம்மை விடுதலை செய்ய நண்பர்கள் பலர் முயற்சித்துக் கொண்டிருப்பதாக ஜெயபாலன் குறிப்பிட்டுள்ளார். ஜெயபாலன் தொலைபேசியில் உரையாடுவதற்கு இலங்கை அதிகாரிகள் அனுமதியளித்துள்ளர்.

எனவே இந்தக் கைதுக்கு எதிராக அனைத்துத் தமிழர்களும் முழுஅளவில் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. உலகத் தமிழர் பலர் இவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி விண்ணப்பம் ஏற்படுத்திய ஒரு சில நாட்களிலே பல்லாயிரக்கணக்கானவர்கள் அதில் கையொப்பமிட்டது தமிழர்களின் உள்ளுணர்வைக் காட்டுகிறது. இலங்கை அரசிற்கு உலகெங்கிலும் கண்டனம் வரத் துவங்கியதும் அரசும் இவரை விரைவில் விடுதலை செய்யவுள்ளதாக நாம் அறிகிறோம்.

It is by expanding on your descriptive information in these ways that your writing can begin get more to become analytic

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “ஈழக்கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் கைதும் பின்னணியும்.”
  1. Jeyachandran says:

    Srilanks government immediately release kavinar mr.Jeyapalan

அதிகம் படித்தது