மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காந்தியம் தேவையா-பகுதி2

ஆச்சாரி

Dec 7, 2013

தமிழ்நாட்டை ஆண்ட சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் பிற்கால சோழப்பேரரசு பரம்பரையில் வந்த முதலாம் பராந்தகன் (கி.பி.907-955) உத்திரமேரூர் கல்வெட்டு, மக்களாட்சியை பற்றிய செய்தி, கிராமநிர்வாகம் போன்றவற்றைத் தெரிவிக்கின்றது.

கிராம நிர்வாகத்திற்கு தேர்தலில் ஒருவர் வேட்பாளராக இருக்க வேண்டும் எனில் அவருக்குத் தேர்தலில் போட்டியிட கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.

1. சொந்தமாக (கால்வேலி) நிலம் இருக்க வேண்டும்.

2. அந்த ஊரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

3. அவரின் வயது 35-க்கு மேல் 70-வயதுக்குள் இருக்க வேண்டும்.

4. அவர் குறைந்தபட்ச கல்வி பெற்றிருக்க வேண்டும்.

5. கடந்த மூன்று ஆண்டுகளில் அதே பதவியில் இருக்கக் கூடாது.

தேர்தலில் போட்டியிடுபவர் அவர்களின் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றவில்லை எனில் அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் எனக் கொள்ளப்படும்.

1. அவரின் பதவி முடியும் பொழுது வருமானத்தைக் கணக்குக்காட்ட வேண்டும்.

2. ஒரு காலகட்டத்தில் ஊழல் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்றால் அவர் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது இரத்த உறவினர்கள் அடுத்த 7 தலைமுறைகளாகத் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

3. வரிப் பணம் செலுத்தத் தவறியவர்.

4. மனைவியைத் தவிர மற்ற பெண்களுடன் உறவு வைத்திருத்தல்.

5. கொலைகாரர்கள், பொய்யர்கள் , குடிகாரர்கள்.

6. மற்றவர்களின் பணத்தை வஞ்சித்தவர்.

7.மனிதர்கள் உண்ணக்கூடாத உணவை உண்பவர்கள். அதாவது மது போன்ற போதை பொருள்கள் பழக்கம் உள்ளவர்கள்.

மேற்கண்ட பண்புகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர்கள். இது போன்ற விதிமுறைகளை 1100 ஆண்டுகளுக்கு முன்பே வகுத்து ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள். மேலும் அவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்றவர் கிராமநிர்வாகத்தில் அவரின் பதவி ஒரு ஆண்டு நீடிக்கும் பதவியின் பொழுது தவறு செய்தால் அவரை நீக்கும் உரிமை உண்டு. மற்றும் தவறான செயல்களுக்கான அபராதத்தை குற்றவாளிகள் கிராமசபையின் முன் செலுத்த வேண்டும். அதே நிதி ஆண்டில் செலுத்தும் தேதி நேரம், தவறினால் அதற்கும் சேர்த்து அபராதம் செலுத்த வேண்டும். இதில் இருந்து தனது பதவி பணம் பலத்தைக் காட்டி கிராமசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கூடத் தப்பிக்க முடியாது. மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் தங்கத்தைப் பரிசோதித்து அதன் தரத்தைக் கண்காணிக்கும் குழுவும் இருந்தது. இவர்கள் தங்கத்தைப் பரிசோதித்து அது வணிகத்திற்குச் சிறந்தது, தரமானது என்று சான்று அளிக்க வேண்டும். இவர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை சபையோரின் முன், கூட வேண்டும். அப்பொழுது நான் எந்த மோசடியும் செய்யவில்லை என்று சத்தியம் செய்ய வேண்டும். பிறகு அவர்கள் அதை நிரூபிக்கத் தங்கள் உயிரையும் விடத் தயாராக இருக்க வேண்டும்.

இது போன்று நீர்நிலைகளைப் பேணிகாத்து நீர் பகிர்ந்தளித்தல் குழு, தோட்டக் குழு போன்றும்  பல குழுக்கள் இருந்தன. அனைத்தும் நிர்வாகக் குழு ஆட்சியின் கீழ் இருந்தது. இது போன்று தேர்தல் விதிமுறைகள் நிர்வாக விதிமுறைகளை அமைத்துத் தேர்தல் நடத்தி, மக்களால் கிராமசபைத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் போன்ற இந்த அமைப்பு உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லாத காலகட்டத்தில் அமைந்த தமிழனின் ஆட்சிச் சிறப்பாகும். இது மட்டும் இன்றி இன்னும் சில இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் அளவில் நிர்வாகத்தில் பழமைபெற்று இருந்தவர்களில் குறிப்பிடக் கூடியவர் அசோகர். அவரின் கல்வெட்டுகளில் ஆணை-III—கிர்னார்(கல்வெட்டு) வாசகம்.

புனித கருணையுள்ள மேன்மைதங்கிய மன்னர் இவ்வாறு கூறுகிறார். “நான் முடிசூட்டிக்கொண்ட பன்னிரெண்டாவது வருடத்தில் இந்த ஆணை என்னால் வெளியிடப்படுகிறது. என்னுடைய அதிகாரத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருக்கும் சார்நிலை அலுவர்கள், ஆளுனர், மாவட்ட அலுவலர், போன்றோர் தர்மநெறிச் சட்டத்தை அமலாக்கும் பொருட்டு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் பெற வேண்டும்”.

அலுவல்களை விரைவாகச் செயல்படுத்துதல்:

நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது நான் அந்தப்புரத்தில் இருக்கும்போது அல்லது எனது தனி அறையில் இருக்கும் போது அல்லது கால்நடைக் கொட்டகை, குதிரை லாபம் போன்ற இடங்களில் இருக்கும்போது அல்லது பயணம் செய்து கொண்டிருக்கும் போது அல்லது உல்லாச மைதானத்தில் இருக்கும்போது என எந்த நேரமானாலும் மக்கள் பற்றிய செய்திகளை எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

எல்லா இடத்திலும் நான் மக்களின் தேவைகளைக் கவனிப்பேன். தற்செயலாக நான் வாய்வழியாக ஒரு நன்கொடை வேண்டி உத்தரவிட்டாலோ, அல்லது எதற்காவது தடைவிதித்தாலோ, உயர் அதிகாரிகளுக்கு அவசரமான ஆணை பிறப்பித்தாலோ அமைச்சரவையில் கருத்து வேற்றுமை அல்லது ஒத்திவைப்பு நிகழ்ந்தாலோ, அது பற்றிய செய்தி எனக்கு உடனே கொடுக்கப்பட வேண்டும் இது எனது கட்டளை.

எல்லா மக்களுடைய நன்மைக்காகவும் நான் உழைக்க வேண்டும். மக்களின் நலன்தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை. இது அசோகரின் கல்வெட்டு செய்தி.

இதில் கூறப்பட்டுள்ளது போன்ற நிர்வாகம் தேர்தலில் போட்டியிடத் தகுதி மற்றும் தகுதியில்லாதவர்கள் என்று நாம் அவர்களை அடையாளம் கண்டுள்ளோமா? அல்லது நமது பெருமையை அறிந்துள்ளோமா? இது போன்று விதிகளை அமைத்துத் தேர்தல் நடத்தியதை நமது பெருமையை நாமே மறைத்துச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் மேலைநாடுகளின் அரசியல் அமைப்புகளில் இருந்த சட்டத்தினைக் கொண்டு நமது அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்க அரசியல் அமைப்பு சுமார் 1787-ல் பிலடெல்பியா(Philadelphia) என்ற இடத்தில் (Georg washington) ஜார்ஜ் வாசிங்டன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தொடங்கிய அமெரிக்கச் சட்டம் இதுவரை சுமார் 200 ஆண்டுகள் மேலோங்கியும் 27 முறைகள் மட்டுமே சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் அரசியல் சட்டம் உருவாக்கத்தில் விவசாயிகள், படித்தவர்கள், வியாபரிகள், சட்டம் படித்தவர்கள், வங்கிகள் நடத்துபவர்கள் போன்று பலரின் கூட்டமைப்பில் சட்டம் இயற்றினார்கள். மற்றும் அவர்களின் பழமைகளையும் உணர்ந்து இருந்தனர். எனவேதான் அவர்கள் 4 மாதத்தில் சட்டம் இயற்றிமுடித்தனர் மற்றும் சட்டத் திருத்தம் 27 முறை மட்டுமே நடைபெற்றுள்ளது.

ஆனால் நாம் நமது பழமையும், பெருமையையும் மறந்து அரசியல் சட்டம் இயற்றியதில் விவசாயிகள், நடுத்தரமக்களின் பங்களிப்பு, வியாபாரிகள் போன்றோர்கள் இல்லாமல், சில உயர்மட்டத்தினரின் கல்வியறிவின் மூலம் 60 நாடுகளின் அரசியலமைப்பை சேர்த்து 2 ஆண்டுகள், 11 மாதம், 18 நாள் எடுத்து 64 லட்சம் ரூபாய் செலவில் நமது அரசியலமைப்பை உருவாக்கியுள்ளோம். 1950-ல் 395 Articles மற்றும் 8 Schedules உருவாக்கினார்கள். உலகின் மிகப்பெரிய எழுத்துவடிவ அரசியலமைப்புச் சட்டம் என்ற பெருமையுடன் நாம் அதனை 63 ஆண்டில் 118 தடவை சட்டத்திருத்தம் செய்து 444 Articles, 22 Parts, 12 Scheduled, 117364 Words in its English language translation என்று அமையும் படி செய்து உள்ளோம்.

காந்தி அகிம்சையைப் பின்பற்ற பெரிதும் காரணமாக இருந்ததும் தமிழ். காந்தி, உருசிய அறிஞர் தால்சுதாய் எழுதிய “உன்னூர் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்னும் நூல் படித்தார். அதில் தால்சுதாய் தம் நூலில்,

“இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்.”

                           -திருக்குறள்

என்னும் திருக்குறளையே மொழிபெயர்த்து எழுதியிருந்தார். அதனைப் படித்த காந்தியடிகள் திருக்குறள் மீதும், தமிழ் மீதும் தனிப் பற்று கொண்டார்.

காந்திக்கும் இன்னா செய்யாமையானது அகிம்சையைக் கற்றுத் தந்தது தமிழன் இதனை எல்லாம் மறைத்துவிட்டதில் வந்த விளைவுகள் இது. நமது தமிழரின் பெருமையையும் பழமையும் உணர்ந்து செயல்பட்டால் உயர்வு நிச்சயம்.

நமது அரசியலமைப்பை இனியாவது நன்குணர்ந்து செயல்படுவோம் அலுவலர்களையும், நிர்வாகிகளையும், அரசியல் தலைவர்களையும் பதவியில் உள்ளவர்களையும் சரியான முறையில் செயல்பட வைப்போம். ஏற்றம் பெறுவோம்.

Scoring and score reporting analytical writing measure for the analytical writing measure, each essay receives a score from go over here two readers using a six-point holistic scale

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காந்தியம் தேவையா-பகுதி2”

அதிகம் படித்தது