மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மங்கள்யான் வெற்றியும் இந்திய வானியல் ஆராய்ச்சி வரலாறும்

ஆச்சாரி

Dec 7, 2013

1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாளில் மனிதனை நிலவுக்கு விண்கலம் மூலம் அமெரிக்கா அனுப்பியது. மனித குலத்தின் மாபெரும் சாதனையாக விளங்கிய இந்தச் செய்தியை மேற்கத்திய ஊடகங்கள் வெகுவாகக் கொண்டாடிய பொழுது, இந்தியா பற்றி கேலியான செய்தியும் ஒன்று ஒரு நாளிதழில் வெளியானது. “இந்திய கிராம பெரியவர்கள் அம்மாவாசை தினத்தன்று(July 15 1969, அதாவது விண்கலம் ஏவப்பட்ட முந்தைய நாள் அம்மாவாசை)விண்கலம் ஏவினால் அது எப்படி நிலவைச் சென்று அடையும் என்று கேள்வி கேட்கிறார்கள்” என்றும், அறிவியல் வளர்ச்சி இல்லாத நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் ஒரு பத்திரிக்கைக்காரர் எழுதிருந்தார். இப்படிப் பேசப்பட்ட ஒரு தேசம், இன்று 44 வருங்டகளுக்குப் பின்பு, சுமார் 5.5 கோடி கி.மீ தொலைவில் உள்ள ஒரு கோளுக்கு விண்கலம் அனுப்பி உள்ளது என்ற செய்தி நம்மிடையே  வியப்பை ஏற்படுத்தவில்லையா?.

வானியல் சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தியாவில் 2000 வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. கி.பி 500 வருடத்தின் அருகில் வாழ்ந்த ஆர்யப்பட்டா (Aryabhatta) என்ற மாபெரும் இந்தியக் கணித விஞ்ஞானி, வானியல் தொடர்பான மிகப்பெரும் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தர். இவர் எழுதிய ஆர்யபாட்டியம் (Aryabhattium) என்ற நூலின் முலம், பூமி தன் அச்சின் மூலம் தன்னைத் தானே சுழகிறது என்றும், சூரியனை மையமாகக் கொண்டு வட்ட பாதையில் சுற்றுகிறது என்றும் கூறியுள்ளார். புவியின் சுற்றளவு மற்றும் சூரியனில் இருந்து அதன் தூரம்  குறித்தத் தகவல்களை ஆய்வு செய்து, பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் மொத்த நாட்கள் 354 ஆக இருக்கும் என்று எழுதியுள்ளார். இது கிட்டத்தட்டத் துல்லியமான கண்டுபிடிப்பு. சூரியச் சந்திர கிரகணங்கள் எப்படி உருவாகிறது என்பது பற்றியும் வெகுவாக விளக்கியுள்ளார்.

இதற்குப் பின் காலத்தில் வந்த  பிரம்மகுப்தா, பாஸ்கரா, மாதவா போன்ற இந்திய விஞ்ஞானிகள் வானியல் மற்றும் கோள்கள் சுற்றுளவு, இயக்குப்பாதை பற்றிப் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுப்ரமணியம் சந்திரசேகர் (Subramanium Chandrasekar) என்ற இந்திய பௌதிக விஞ்ஞானி, நட்சத்திரங்கள் பிறப்பு, இறப்புப் பற்றி அரிதான கண்டுபிடிப்பை நிகழ்த்தினர். நட்சத்திரம் பற்றிய ஆராய்ச்சியில் இது ஒரு மிகப்பெரும் மைல் கல். இந்தக் கண்டுபிடிப்பு பௌதிகத்தில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்புக் கொள்கை (Thoery of Relativity) சமந்தமான ஒரு உண்மையைப் பறைசாற்றியது. ஆனால் இந்த கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்கச் சந்திரசேகர் நடத்திய போராட்டத்தைப் பற்றி ஒரு புது கட்டுரையே எழுதலாம். அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிலையம் (NASA) இவரின் சாதனைகளுக்குப் பல வகையில் கௌரவித்து உள்ளது.

இந்திய சுதந்திரதிற்குப் பின்பு, அதாவது 1947  வருடத்திற்கு பின்பு, குஜராத்தில் பிறந்த விக்ரம் சாரபாய்(Vikram Sarabhai) என்ற இந்தியப் போதிக ஆராய்ச்சியாளர் இந்தியவினருக்கு என்று விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்று வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். இவருடன் மற்றொரு விஞ்ஞானியான ஹோமி பாபா (Homi Bhaba) வும் வானியல் சமந்தப்பட்ட ஆய்வு நிலையம் நாட்டுக்குத் தேவை என்று மத்திய அரசிடம் வற்புறுத்த, 1969 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (ISRO) உருவானது. இந்த ஆய்வு நிலையத்தின் முதல் உரையில் பேசிய விக்ரம் சாரபாய்,” எங்களின் குறிக்கோள் நிலவிற்கோ, செவ்வாயிற்கோ விண்கலம் அனுப்புவது அல்ல. ஏழை நாடான இந்தியாவிற்கு இந்த ஆராய்ச்சி நிலையம் தேவைதானா? என்று பணக்கார நாடுகள் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றன. அவர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் எங்களைப் போன்ற வளரும் நாடுகளும் வானியல் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியம். நாங்கள் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை”.

இப்படிக் கம்பிரமான உரையுடன் ஆரம்பித்த இஸ்ரோ (ISRO)  சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது. திருவனந்தபுரம் கடலோரம் அருகே இருந்த தும்பா (Thumbha) என்ற இடத்தில் முதல் ராக்கெட் ஆராய்ச்சி நிலையம் அமைக்க விக்ரம் சாரபாய் முடிவு செய்தார். ஒரு தென்னந்தோப்பிற்கு நடுவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. அருகில் இருந்த மாதா கோவில் (St.Mary Magladane Church) விஞ்ஞானிகளின் மைய அலுவலகமானது. அங்கு இருந்த கால்நடைத் தொழுவம் மற்றும் பாதிரியாரின் வீடு விஞ்ஞானிகளின் ஆய்வு நிலையமாகவும், ராக்கெட் பாகங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையாகவும் மாறியது. இந்த ஆரம்பநிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுள் நமது அப்துல் கலாமும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது.

1971 ஆம் ஆண்டு சென்னை அருகே 150 கி.மீ தொலைவில் இருந்த ஸ்ரீஹரிகோட்டா(Sriharikota) என்ற இடத்தில் முக்கிய ராக்கெட் ஏவுதளம் ஒன்று அமைக்கபட்டது. பிற்காலத்தில் முக்கிய துணைக்கோள்கள் மற்றும் ராக்கெட்கள் ஏவும் தளமாக இது மாறியது. சவுண்ட்டிங் ராக்கெட்(Sounding rocket) என்ற ராக்கெட்களை இஸ்ரோ ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போட்டது. 1975 ஆம் ஆண்டு ரஷ்ய விண்கலம் முலம் இந்தியாவின் முதல் துணைக்கோள் ஆர்யப்பட்டா (“Aryabhatta”) விண்ணுக்கு ஏவப்பட்டது. படிப்படியாகத் தகவல் தொழில்நுட்ப துணைக்கோள்(INSAT), வானிலைத் துணைக்கோள்(IRSSAT) என்று இன்று அதிநவீன பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துணைக்கோள்(RISAT) வரை இஸ்ரோ உருவாக்கி விண்ணுக்கு அனுப்பி உள்ளது.

SLV(Satallite launch vehicle), ASLV(Augmented SLV), PSLV(Polar SLV),GSLV(Geosynchronous SLV) போன்ற விண்கலங்களை உருவாக்கிப் பல உள்நாட்டு வெளிநாட்டு துணைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி உள்ளது. PSLV விண்கலம் இன்று வரை இஸ்ரோ வின் மிகுந்த பயன்மிக்க ஏவுகளமாக (work horse)  உள்ளது. இது வரை 64 உள்நாட்டு, வெளிநாட்டு துணைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை செய்து உள்ளது. இதில் நிலவிற்கும் செவ்வாய்க்கும் அனுப்பிய துணைக்கோளும் அடக்கம். அதிக எடை கொண்ட துணைக்கோள்களை ஏவ GSLV பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த விண்கலம் குறிப்படத்தக்க வெற்றியை இன்னும் அடையவில்லை. இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது, வருங்காலத்தில் வெற்றி பெற்று, மிகுந்த எடை கொண்ட துணைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் விண்கலமாக GSLV இருக்கும் என்று நம்பலாம்.

2009 ஆம் ஆண்டு நிலவிற்கு சந்திராயன்(Chandrayaan I) என்ற ஒரு விண்கலம் அனுப்பி, விண்வெளி ஆராய்ச்சியில் தான் ஒரு வல்லரசாக மாறி விட்டதை இந்தியா உலகிற்கு உணர்த்தியது. நிலவில் பல கோடி வருடகளுக்கு முன்பு தண்ணீர் இருந்தது என்று ஒரு புதிய உண்மையை சந்திராயன் கண்டுபிடித்தது. சந்திராயன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற  பெயரில் ஒரு விண்கலம் அனுப்பி அதன் முதற்கட்ட வெற்றியும் அடைந்து உள்ளது. திசம்பர்  1 2013 அன்று பூமி சுற்றுப்பாதையை விட்டுச் செவ்வாய்க்குச் செல்லும் பாதைக்கு மங்கள்யான் வெற்றிகரமாகத் தள்ளப்பட்டது.

மங்கள்யான் முதற்கட்டமாக வெற்றி பெற்ற போதும், இன்னும் சுமார் 75 கோடி கிலோமீட்டர் தொலைவைக் கடக்க வேண்டும். இந்த மராத்தான் ஓட்டதில் கிழ்கண்ட சிக்கல்கள் உள்ளன. மங்கள்யான் செல்லும் பாதையில் நிறைய கதிர்வீச்சு உள்ளது, இது துணைக்கோளில் உள்ள மின்னிலுவையில் கருவிகளைச் சேதப்படுத்தி விடாமல் இருக்க வேண்டும். சுமார் பத்து மாத காலத்திற்குப் பின் துணைக்கோளின் இயந்திரம் மீண்டும் இயக்கப்படும் அப்போது அது சீராக வேலை செய்ய வேண்டும். பயணிக்கும் பாதை மிகுந்த குளிர் வாய்ந்த பகுதி, ஆதலால் மங்கள்யானில் உள்ள கருவி ஏதேனும் பழுது அடைந்து விடக்கூடாது. மேலே கூறியவற்றை விட கொஞ்சம் சிக்கலான பிரச்சனை இது தான், பூமியில் இருந்து செவ்வாய்க்கு ஒரு கட்டுப்பட்டு சமிக்ஞை(control signal) அனுப்பினால் அது சென்றடைய ஆகும் நேரம் சுமார் இருபது நிமிடம்.

இதற்கு மறுமொழி வர இன்னும் ஒரு இருபது நிமிடம். ஆக இந்த இடைபட்டத் தகவல் மாற்றத்திற்கு நாற்பது நிமிடம் ஆகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் துணைக்கோள் எதிலும் தவறான இயக்கம் ஆனால் விஞ்ஞானிகள் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி இந்தத் தடங்கல்கள் எல்லாத்தையும் தாண்டி செவ்வாயைத் துணைக்கோள் அடைந்தால் அது மாபெரும் வெற்றியாக இருக்கும்.

செவ்வாய்க் கிரகத்தை நோக்கி இஸ்ரோ அனுப்பிய விண்கலத்திற்கு உள்நாட்டு மக்களிடமும் வெளிநாட்டு விஞ்ஞானிகளிடமும் அதிக வரவேற்பு இருந்த போதும் பல குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்து உள்ளது. 2012 ஆகஸ்ட் மாதம் இந்தியப்பிரதமர் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பப்போகிறோம் என்று அறிவித்த நாள் முதல், இந்தியா ஒரு ஏழை நாடு இதற்கு ஏன் இவ்வளவு செலவு? இது அதிகமான தேவையல்லாத ஆராய்ச்சி என்று கேள்விகள் எழும்பின. 2010 ஆம் ஆண்டு ஐ.நா உலக வறுமை பற்றி வெளியிட்ட ஒரு தகவலில் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற எட்டு மாநிலத்தில் வாழும் வறுமை கோட்டுக்குக் கிழே வாழும் மக்கள் எண்ணிக்கை சுமார் 42 கோடி. இது ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள 26  ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களைக் காட்டிலும் அதிகம் என்று தகவல் வெளியிட்டு இருந்தது. மங்கள்யான் உருவாக்க ஏற்பட்ட மொத்த தொகை 460 கோடி. இந்தத் தொகையை நாட்டின் வறுமையைப் போக்க வழிசெய்து இருக்கலாம் என்று விமர்சர்கள் குறை கூறி இருந்தனர்.

முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மாதவ நாயர்(Madhava Nair),  இன்னும் வேறு மாதிரி விமர்சிக்கிறார். “இந்த மங்கள்யான் திட்டம் பூகோள அரசியல் காரணமாக அவசரப்பட்டு எடுத்த முடிவு, அதிக எடை கொண்ட துணைக்கோளை ஏவ உருவாக்கப்பட்ட GSLV விண்கலம் இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது. GSLV திட்டத்தில், முதலில் கவனம் செலுத்தி, வெற்றி பெற்று இருந்தால், இன்னும் அதிக அறிவியல் கருவிகள் கொண்ட துணைக்கோளை செவ்வாய்க்கு அனுப்பி இருக்கலாம். இப்போது அனுப்பிய துணைக்கோள் ஒரு தீப்பெட்டி அளவு கொண்டதாகும். இதனால் பெரிய பயன் எதுவும் இல்லை” என்கிறார்.

உள்நாட்டிலேயே இவ்வளவு விமர்சனம் இருக்க,மேற்கத்திய பத்திரிக்கைகள் சகட்டுமேனிக்கு இந்தத் திட்டத்தை குறை சொல்லி இருந்தது. நிறைய பத்திரிக்கைகள் இந்தத் திட்டத்தின் முதல் வெற்றியை சில வரிகளில் புகழ்ந்து விட்டு, பல பத்திரிக்கைகளில் இந்திய வறுமையைக் காரணம் காட்டி விமர்சித்து இருந்தது. வெளிகிரகங்களுக்கு விண்கலம் அனுப்புவது பணக்கார நாடுகளுக்கு மட்டுமே உரிமம் என்றும், இந்தியா போன்ற ஏழை நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டால் அது முட்டாள்தனம் என்று சாடி இருந்தது.

இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய இந்தியா வல்லுனர்கள், 2013 ஆம் ஆண்டின் மொத்த பட்ஜெட் தொகை சுமார் 16 லட்சம் கோடி என்றும், அதில் 27 ஆயிரம் கோடி ஏழை விவாசாயிகள் நலனுக்கும், 33 ஆயிரம் கோடி மகாத்மா காந்தி தேசிய ஏழை மக்கள் நலத்திட்டத்திற்கும் ஒதுக்கி உள்ளது என்றும் விளக்கினர். இந்த இரண்டு தொகைகளை ஒப்பிடுகையில் 460 கோடி என்பது இந்திய மக்கள் தீபாவளி தினத்தன்று விடும் மொத்த பட்டாசு செலவு போன்றதாகும். சர்தார் வல்லபாய் படேலுக்கு நர்மதை ஆறு அருகே குஜராத் மோடி அரசு மாபெரும் சிலை வைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஆகும் மொத்த செலவு சுமார் 2200 கோடி. இது எந்த அளவிற்கு ஏழை மக்களுக்கு உதவும் என்று தெரியவில்லை. இதை ஒப்பிடும் போது நாட்டு அறிவியல் வளர்ச்சிக்கு 460 கோடி செலவு பண்ணுவதில் எந்தத் தவறும் இல்லை என்று வாதிட்டனர்.

விண்ணில் பறக்கும் போது, காகிதத்தில் எழுத, அமெரிக்கர்கள் பல கோடி செலவு செய்து ஒரு பேனாவை உருவாக்கினர். ரஷ்யர்களோ விண்ணுக்கு ஒரு பென்சிலை எடுத்து சென்று பல கோடி மிச்சம் செய்தனர். மேல் கூறிய இந்த உவமை போல செவ்வாய்க்கு இந்தியர்கள் அனுப்பிய விண்கலத்தின் மொத்த செலவு அமெரிக்கர்களின் விண்கலத்தை விட 6 மடங்கு குறைவு. இந்த விலை குறைந்த மங்கள்யான் திட்டம், வருங்காலத்தில் வெளிகிரகங்களுக்கு விண்கலம் அனுப்பும் தொழில் சந்தையில் இந்தியாவுக்கு என்று தனி இடத்தை ஏற்படுத்தும்.

1969 ஆம் ஆண்டு மனிதனை, அமெரிக்கா நிலவிற்கு அனுப்பியது. இது அமெரிக்கா மாணவர்களிடம், ஏன் உலக மாணவர்களிடம் விண்வெளி பற்றிப் படிக்க புதிய ஆர்வத்தை உருவாக்கியது. பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் விண்வெளி சந்தப்பட்ட புதிய படிப்புகள் கொண்டு வரப்பட்டன. இதே போல் மங்கள்யான் வெற்றி பெற்றால் இந்தியா மாணவர்களிடம் விண்வெளி அறிவியலைப் பற்றித் தெரிந்துகொள்ள, மேலும் படிக்க ஆர்வத்தை உருவாக்கும்.

திருமணத்திற்குப் பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ தேடுபவர்கள், இதில் எவருக்கேனும்  செவ்வாய் தோசம் இருந்தால் கல்யாணம் நடப்பது கஷ்டம் என்பார்கள். அது போல செவ்வாய்க்கு அனுப்பும் விண்கலங்களுக்கும் ஒரு தோஷம் இருக்கிறது. இது வரை அனுப்பிய 2/3 விண்கலங்கள் தோல்வியிலே முடிந்து உள்ளது. இது வரை எந்த நாடும் எடுத்த முதல் முயற்சியில் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பவில்லை. அந்த தோஷத்தை நமது மங்கள்யான் முறியடிக்கும் என்று நம்புவோமாக. அதற்கு நாம் 10 மாதம் பொறுமை காக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 24 –  2014  வரை.

வெற்றி நமதே! வாழ்க விண்வெளி அறிவியல், வாழ்க விஞ்ஞானிகள்.

இவ்வாறு உருவான நிலையங்களின் வெற்றிகளைப் போற்றுவோம், விஞ்ஞான வளர்ச்சி பெறுவோம்.

Masters candidates homework help online with http://pro-homework-help.com late-filing fee you are allowed days after the final examination to submit approved copies of the thesis to the graduate school

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மங்கள்யான் வெற்றியும் இந்திய வானியல் ஆராய்ச்சி வரலாறும்”

அதிகம் படித்தது