மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் திரு.சி.மகேந்திரன் அவர்களின் நேர்காணல்

ஆச்சாரி

Dec 28, 2013

 

 

 

திரு.சி.மகேந்திரன் – நேர்காணல்   (இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் )

                               நேர்காணல் காண்பவர்: திரு.தியாகராஜன்

குறிப்பு: திரு.சி.மகேந்திரன் அவர்கள் வட அமெரிக்கத் தமிழ் சங்க விழாவில் கலந்து கொண்டபோது சிறகு இணைய இதழுக்காக அளித்த நேர்காணல்.

கேள்வி: முதலாவதாக உங்களது இளமைப்பருவம், பள்ளிப்பருவம், அதோடுமட்டுமல்லாமல் எவ்வாறு நீங்கள் சமூக அக்கரைக் கொண்டு அந்த மாற்றம் உங்களோடு எவ்வாறு ஏற்பட்டது என்பதைப் பற்றிக்கூறவும்?

பதில்: நான் பிறந்தது தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ள கீழவட்டிப்பட்டு என்ற கிராமம். அந்தக் கிராமம் உழைக்கிற மக்களைக் கொண்ட விவசாயப்பின்னணியைக் கொண்ட ஒரு கிராமம். அந்த கிராமம் தான் என் சொந்தக் கிராமம். அது மிகப்பெரிய அளவில் முன்னேறியது என்று சொல்லமுடியாது. இன்றும் கூட அந்த ஊருக்குப் பேருந்து போகவில்லை. காரணம் என்னவென்றால், மக்களே என்ன கூறினார்கள் என்றால் அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுதான் இருக்கிறது, நாங்கள் நடந்தே வந்துவிடுவோம் அதனால் பேருந்து வீட்டின் அருகில் வருவதால் ஒரு சோம்பேறித்தனமாக இருப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று சொன்ன கிராமம். அந்தக் கிராமத்தில் நான்தான் முதல் பட்டதாரி. முதலில் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியிலும் பின்னர் திருவாரூர் கலைக் கல்லூரியிலும் என்னுடைய முதுகலைப்பட்டத்தை நான் முடித்தேன்.

தஞ்சையில் செல்வராஜ் உயர்நிலைப்பள்ளியில் தான் நான் படித்தேன். அந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள். அவர்கள் இருவருமே இறந்துவிட்டார்கள். ஒருவர் பெயர் பாரதிபித்தன், இன்னொருவருடைய பெயர் தங்கபாலு. அந்த இரண்டு ஆசிரியர்கள்தான் பொதுவுடமைக் கருத்துக்கள் என்னுள்ளே ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள். நல்ல தமிழறிஞர்கள். பொதுவுடமை மீது மிக முக்கியமான ஈடுபாட்டைக் கொடுத்தவர்கள். அந்தக் காலபின்னணி என்பது மிக வித்தியாசமான காலபின்னணி. 1967 என்பது திராவிட முன்னேற்ற கழகம் கொடிகட்டிப் பறந்த காலம். அந்தக் காலத்தில்தான் இந்த ஆசிரியர்களின் மூலமாக பொதுவுடமை இயக்கத்திற்கு வந்தேன்.

பொதுவுடைமை இயக்கம் என்பது கிட்டத்தட்ட என்னுடைய ஒன்பதாவது வகுப்பிலேயே எனக்குப் பொதுவுடமை கருத்துக்களிலும், கொள்கைகளிலும் ஈடுபாடு வந்தது. படிக்கிற காலத்தில் பள்ளியில் சிறந்த மதிப்பெண்களைப் பெறக்கூடிய மாணவனாகவும், அதேபோல் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கக்கூடிய மாணவனாகவும், கட்டுரை எழுதக்கூடியவனாகவும் என்னை என்னுடைய ஆசிரியர்கள் வளர்த்திருந்தார்கள். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் பத்தாம் வகுப்பு நான் படிக்கின்ற பொழுது தமிழகம் தழுவிய அளவில் “நான் ஒரு தலைசிறந்த மாணவன்” என்கின்ற ஒரு கட்டுரைப்போட்டியை ஆனந்த விகடன் நடத்தியது. அந்தப்போட்டியில் தமிழகத்தில் நான் மூன்றாவது பரிசை நான் பெற்றேன்.

அதன் பிறகு கல்லூரிக் காலம் என்பது சிறிது வித்தியாசமான காலம். அந்தக் காலங்களில்தான் தமிழ்நாட்டினுடைய அரசியல் பொருளாதார நெருக்கடியில் இளைஞர் மாணவர்களின் தீவிரவாதக் குழுக்கள் தோன்றின. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்பது நக்சலைட் மாணவர்களுடைய மையமாகவும், அதேபோல தமிழகத்தினுடைய பல பகுதிகளில் மாணவர்கள் மிகவம் தீவிரமாக இருந்தார்கள். மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அந்தக் காலத்தில் தொடுக்கப்பட்டது. அப்பொழுது நான் திருவாரூர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு தீவிர உணர்வு வந்தது. நான் காவல் துறையினால் விசாரிக்கப்பட்டு, நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவன் என்று அவர்களே ஒரு முடிவுக்கு வந்து பின்னர் அந்த அமைப்பினுடைய செயல்பாட்டிலிருந்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் என்றொரு அமைப்பு மாணவர்களுக்கான அமைப்பு. அது இந்திய கம்யூனிஸ்ட்டியால் துவக்கப்பட்டாலும்  பண்டித ஜவர்ஹலால் நேரு போன்றவர்கள் 1936ம் ஆண்டிலேயே பங்கேற்ற அமைப்பு அது. அந்த அமைப்பினுடைய தஞ்சை மாவட்டத்தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். அதன் பிறகு நான் படிக்கிற காலத்திலேயே கம்யூனிஸ்ட்டுடைய மாவட்ட நிர்வாகக்குழுவிற்கு வந்துவிட்டேன். அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு அந்தப் பொறுப்பில் என்னை வைத்தார்கள்.

1979க்குப் பிறகு  கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தமிழக மாணவர் பொறுப்பை ஏற்பதற்காக தஞ்சையிலிருந்து நான் வரவழைக்கப்பட்டேன். 1979ல் துவங்கி இப்பொழுது 2013 வரை சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மாணவர் அரங்கம், பின்னர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் என்ற இயக்கங்களில் எல்லாம் பங்குபெற்று கட்சியினுடைய மாநில துணைச்செயலாளர் என்ற பொறுப்பையும் அதேபோல் 1959ம் ஆண்டு ஜீவாவால் துவக்கப்பட்ட தாமரை இலக்கியதழ் இந்த இலக்கிய இதழ் வரலாற்றில் மிகவும் முக்கியப் பணியாற்றினேன்.

கேள்வி: இப்பொழுது நீங்கள் தமிழ்நாட்டில் 2013ல் மாணவர் போராட்டம் பெரிய அளவில் வெடித்திருக்கிறது. 1965ம் ஆண்டு மாணவர் போராட்டம் நடந்தது. இந்த இரண்டு போராட்டங்களில் சிறப்பம்சம் என்ன?, வித்தியாசம் என்ன என்று கூறுங்கள்?

பதில்: இந்த நடைபெற்ற போராட்டம் என்பது ஒரு வரலாற்று சிறப்புமிகுந்த போராட்டம் என்றுதான் கூற வேண்டும். மாணவர்களுடைய கொதிநிலைக்குப் பல காரணங்கள் உண்டு. இது வெளிப்படுவதற்கான முக்கிய காரணம் எது என்று சொன்னால் அது பாலசந்திரனுடைய மரணம். அந்த மரணத்திலே ஒரு சிறுவன் குழந்தை முகத்தோடு அப்பாவித்தனமாக ஏதோ சாப்பிட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது அதற்கு அடுத்த காட்சியில் அதே குழந்தை ஐந்து குண்டுகளை மார்பில் சுமந்து கள்ளம்கபடமற்ற அதே முகத்துடன் தரையில் வீழ்ந்து கிடக்கிறது.

இந்தச் செய்தி என்பது மிகப்பெரிய அளவில் மாணவர்ளையும், தமிழக மக்களையும் பாதித்துவிட்டது. அதற்கு முதலில் சேனல் 4 க்கு நன்றியைச் சொல்லவேண்டும். இதை உலகஅளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியதற்காக நாம் நன்றி பாராட்ட வேண்டும். அதனுடைய வேகம் மாணவர்கள் மத்தியிலே அது அலை அலையாக எழுந்து பல்வேறு சமூக அமைப்புகள் இந்த மாணவர்களுடைய போராட்டத்தை ஊக்குவித்து, இதுவரை தமிழக மாணவர் வரலாற்றில் இல்லாத அளவிற்கு எல்லா மாணவர்களும் பங்கேற்றார்கள். 1965ல் நடந்த போராட்டமானது, காங்கிரசு தோல்வியடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி வருவதற்கு அந்த மாணவர் போராட்டம் காரணமாக இருந்தது. ஆனால் உண்மை என்னவென்று சொன்னால் இந்த மாணவர் போராட்டம் என்பது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட போராட்டமாக இருக்கிறது. இந்தச் சூழலில் மாணவர்கள் எந்தப் போராட்டத்திலும் ஈடுபடாத வகையிலே புதிய சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக சுயநிதிக் கல்லூரிகள் எல்லாம் மாணவர்கள் எந்தப் போராட்டத்திலும், இயக்கங்களிலும் பங்குபெறாத அளவிற்கு ஒரு சூழலையும், நெருக்கடியையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மாணவர் அரங்கத்திலிருந்து வந்தவன் என்றமுறையில் விளையாட்டாகச் சொல்வதுண்டு.

தமிழகத்தினுடைய சிறைச்சாலைகளை விட பெரிய மதில் சுவர்களை எழுப்பி மாணவர்களை சிறைக் கைதிகளாக இன்று சுயநிதிக் கல்லூரிகள் எல்லாம் வைத்திருக்கிறது என்று சொல்வதுண்டு. அந்தச் சிறைக்கதவுகளை எல்லாம் உடைத்துக்கொண்டு மாணவர்கள் எல்லாம் வெளியே வந்துவிட்டார்கள் இதுதான் இந்தப் போராட்டத்தினுடைய மிக முக்கியமான ஒரு அம்சமாக நான் கருதுகிறேன். தமிழ்நாட்டினுடைய மாணவர்களின் எண்ணிக்கை இன்று ஒரு கோடியே அறுபத்து ஐந்து லட்சம் பேர். அதில் பத்திரிக்கையாளர்களும், மற்றவர்களையும் கணக்கிட்டு சொல்வது 70 சதவீத மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்குபெற்றார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் 21 வது நூற்றாண்டில் உலகில் கூடுதலாக மாணவர்கள் பங்கெடுத்தப் போராட்டம் என்கின்ற சாதனையை தமிழக மாணவர் போராட்டம் பெற்றிருக்கிறது. அந்தப் போராட்டத்தினுடைய வேகம் எல்லாம் மிகவும் சிறப்பிற்குரியதாகவே அமைகிறது. ஆனால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் மாணவர்கள் ஏதோ கோபத்தில் எழுந்து திரும்பி அடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.

இந்தப்போராட்டம் ஏன் இன்னும் உடனடியாக தொடரவில்லை? என்பதற்கு, தொடருவதற்கான காரணங்கள் குறைவு. மாணவர் போராட்டம் எதில் வெடித்தது என்றால் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்ற அளவிற்குப் போனது. ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. குறையோடு நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அந்தக் கட்டத்தோடு போராட்டம் நின்றுவிட்டது. அந்தப்போராட்டம் என்பது மற்றப் பத்திரிக்கையில் எழுதுவதுபோல் பிசுபிசுத்து முடியவில்லை ஒரு கோரிக்கை, அந்தக் கோரிக்கைக்காகத் துவங்கியது, ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டவுடனே, நின்று தேர்வு இந்த மாதிரியான விடயங்களில் ஈடுபட்டுவிட்டார்கள். மீண்டும் இதே பிரச்சனை மிகவும் வேகமாக வரும்பொழுது மாணவர்களிடம் மீண்டும் ஒரு கொந்தளிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. அது ஒரு பேரெழுச்சியை மாணவர்கள் மத்தியில் உருவாக்கும் என்று நம்புகின்றேன். ஈழ மக்களின் அரசியல் விடுதலையிலும், தமிழகத்தினுடைய எதிர்கால அரசியலிலும் இப்பொழுது நடைபெற்ற மாணவர் போராட்டம் என்பது புதிய மைல்கல், ஒரு திருப்புமுனை என்பதுதான் என்னுடைய அடிப்படையான மதிப்பீடாகும்.

கேள்வி:மாணவர் அமைப்புக்கள் ஒரு சிறுசிறு குழுக்களாக அங்கங்கு செயல்படுகிறமாதிரி ஒரு சில செய்திகள் வந்தது இந்த சிறு சிறு குழுக்களை ஒன்றாக இணைப்பதற்காக முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறதா?

பதில்: பொதுவான மாணவர்கள் மத்தியில் குழுக்களை ஊக்குவிப்பதற்கான மனநிலை இல்லை. ஆனால் சில அரசியலமைப்புகள் அல்லது இந்தச் சூழலை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு சிலர் என்னசெய்கிறார்கள் என்றால் இதில் சில குழப்பங்களை உருவாக்குகிறார்கள் மாணவர் ண்போராட்டம் என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் அதன் முழுநோக்கமும் ஈழமக்களின் அரசியல் விடுதலைக்காகத்தான். அந்த விடுதலையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டுபோய் நிறுத்தக்கூடாது. உதாரணமாக முழு இந்தியாவும் இன்னும் தனி ஈழம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை, உலகத்தின் பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தனிஈழம் என்பதை முன்னனியில் இருக்கும் யாரும் மறுக்கவில்லை. ஒரு Satirical approach என்று சொல்லுவார்கள். அதாவது இந்தியா சுதந்திரம் பெறுகிற போராட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் முதல் கட்டத்தில் அவர்கள் dominion அந்தஸ்துதான் கேட்டார்கள். அவ்வாறு கேட்கிறபொழுது வேறு சில ஊர்களும் இந்தியாவிற்குப் பூரணவிடுதலை வேண்டும் என்கிற கோசமும் சிறிதாக இருந்தது. ஆனால் இது அனுபவ வளர்ச்சியில் முழுவிடுதலையை நோக்கி இந்திய சுதந்திரப்போராட்டம் வந்தது. அதேபோல் பெருவாரியான மக்களை இணைக்க வேண்டும் என்று சொன்னால் பல்வேறு குழு கோசங்களை வைத்து மக்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை அவர்களை முன்னேற்றி அழைத்துவரவேண்டும். மிகவும் தீவிரமான குழுகோசங்களை வைத்து அவர்களுக்குப் புரியாமல், தெளிவுபடாமல் இருக்கிற நேரத்தில் தீவிரமான கோசங்களை வைத்தால் அது என்ன ஆகும் என்றால் ஒரு சிறு குழு, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக முடிந்துபோகும். புரியாத விடயத்தை அவர்களுக்குப் புரியவைத்து அதிலிருந்து கொள்கைகளை, கோசங்களை மாற்றிக்கொண்டு வரவேண்டும். அதைப் புரிவைத்து, தெளியவைப்பதற்குப் பதிலாக ஏனென்றால் இப்பொழுது ஈழப்பிரச்சனையின் மையம் என்பது மனித உரிமைப் பிரச்சனையாகவும், இன அழிப்புப் பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. அதற்கான நியாயத்தைத் தெளிவாக கேட்கப்படுகிற பொழுது திடீரென்று சிலபேர் தனித்தமிழ் நாடு வேண்டும் என்பது அல்லது தனியாக மாணவர்களோடு அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பது இப்படிப் பல்வேறு விதமான போக்குகள் வந்தது. அவ்வாறு போக்குகள் வந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. அவை சிறிது சிறிதாக குறைந்து மாணவர்கள் போராட்டம் என்பது ஈழமக்களின் அரசியல் விடுதலை, இனஅழிப்புப் போரை எதிர்த்த ஒன்று, இனஅழிப்புப் போருக்கு எதிரான எல்லாச் செயல்பாடுகளிலும் நின்று செயல்படக்கூடிய ஒன்று என்ற அளவில் அந்தப் போராட்டம் புரிதலோடு நகர்ந்து சென்றது என்பதுதான் அதை உற்று கவனிக்கும் பொழுது நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.

கேள்வி: அரசியலில் காங்கிரசு அரசாங்கம் 10 ஆண்டுகள் ஆண்டு முடிக்கப்போகிறது, அதன் முன் பாரதிய ஜனதா அரசாங்கம் காங்கிரசு அரசாங்கம்தான் பெரும்பாலும் இந்தியாவை ஆட்சிசெய்தது. பாரதிய ஜனதா, காங்கிரசு இந்த இரண்டும் அல்லாத மூன்றாவது அணி அமைய வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சாத்தியம் இருக்கிறதா? அதைப்பற்றிய உங்கள் கருத்து?

பதில்: இந்திய அரசியல் இன்று எதையுமே தெளிவாகச் சொல்லமுடியவில்லை. பாரதிய ஜனதா கட்சியினுடைய செல்வாக்கு என்பது, மோடி பொறுப்பு ஏற்பதற்கு முன்பு ஒருவிதமாகவும் மோடி பொறுப்பேற்றப்பின்பு இன்னொரு விதமாக இருக்கிறது. நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில் அவர் manipulation அரசியலை மிகவும் நுட்பமாக, மக்களை பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி வெற்றிபெறுவதில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவர் அவர். நரேந்திரமோடியை முன்னிறுத்தி இந்தியாவின் பெரும்பகுதியைப் பெற்றுவிடலாம் என்று பாரதிய ஜனதா கட்சி காங்கிரசு அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு நினைக்கிறது. பாரதிய ஜனதாகட்சிக்கு எந்த மாநிலத்தில் அதிக இடங்களைப் பிடிக்கமுடியும் என்று பார்த்தீர்கள் என்றால் குஜராத் மாநிலம் பிடிக்கலாம் அது ஒரு 28. உத்திரப்பிரதேசம் மிகப்பெரிய மாநிலம் 80 இடங்களைப் பெற்றது அதில் வரமுடியாது. அதேபோல் தென்மாநிலங்களிலும் வெற்றிபெற்று வரமுடியாது. அதன் இன்னொரு வலிமை வாய்ந்த ஒரு பகுதியாக இருந்தது பீகார். அதில் நிதிஷ் குமாருக்கும் அவர்களுக்கும் பிரச்சனை வந்தது. அதனால் ஒட்டுமொத்தமாக இடங்கள் அதிக எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

இப்பொழுது காங்கிரசு கட்சியைப் பொறுத்தவரையில் அது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அதனுடைய செயல்பாடுகள் கடந்த காலத்தில் இருந்தது. அதே போல் காங்கிரசு கட்சியினுடைய வலிமை வாய்ந்த கோட்டையாக இருந்த ஆந்திரப்பிரதேசத்தில் ஒருவரும் வரமுடியாது, உத்திரப்பிரதேசத்திலும் வரமுடியாது, பீகாரிலும் வரமுடியாது, கர்நாடகத்தில் வரலாம், ஆனால் அதுவும் குறைந்த எண்ணிக்கை. இந்தியா முழுக்க பாரதிய ஜனதா கட்சியும் அல்லது காங்கிரசு கட்சியும் நிச்சயமாக வெற்றிபெறுவதற்கான சூழ்நிலைகள் எதுவும் இல்லை. ஆனால் இந்த இரண்டையும் எதிர்த்து வெற்றிப்பெறுவதற்கான சாத்தியத்தைப் பல மாநிலங்கள் பெற்றிருக்கிறது.

80 இடங்களைக் கொண்ட உத்திரப்பிரதேசம், அதேபோல் 58 இடங்களைக் கொண்ட பீகார் மாநிலம், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இது எல்லாவற்றையும் பார்த்தீர்கள் என்றால் மூன்றாவது அணி அல்லது மாற்று அணி அதாவது இந்த இரண்டும் அல்லாத ஒரு மாற்று அணியில் ஒரு பெரிய எண்ணிக்கையில் பலபேர் ஒருங்கிணைந்து கொண்டுவந்தால் நல்லது. ஆனால் ஒருங்கிணைந்து கொண்டுவருவதுதான் பிரச்சனை. வெற்றிபெறுவதில் பிரச்சனை இல்லை. வெற்றிபெற்று அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அதற்கு ஒரு திட்டத்தைத் தயார் செய்து அந்தத் திட்டத்தில் நின்று வெற்றி பெறுவதற்குரிய சாத்தியங்களைச் செய்தால் மிக வரவேற்பிற்குரியதாக இருக்கும்.

கேள்வி: தமிழ் தேசியம், திராவிடம், இந்தியதேசியம் இந்த மூன்றுக்குரிய ஒப்பீடு கொடுக்கிறீர்களா?

பதில்: ஒரு தேசியம் பற்றிப் பேசுவது என்பது தேசிய இனங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதாக புரிந்துகொள்கிறார்கள். அது சரியில்லை என்பது என்னுடைய கருத்து. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்ததாலேயே மாற்றங்கள் வந்துவிடும் என்று புரிதல் இல்லாமல் வந்தால், என்ன குழப்பம் வரும் என்பதற்கு திராவிட இயக்கங்கள் மிகச்சிறந்த உதாரணம். திராவிட இயக்கங்களை யார் ஆதரித்துக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தார்களோ அந்தப் பகுதி மக்களுக்கே இது வேண்டாம் என்ற உணர்வுகள் வந்துவிட்டது. தமிழ் என்பது ஒரு தொன்மையான தமிழ்மொழி, அது கடந்த 3000 ஆண்டுகாலமாக வேறு எந்த மொழிகளையும் விட இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியோடு நிற்கிறது அதுதான் அதனுடைய சிறப்பு. மொழியும் அதன் தொன்மையும் உள்ளடக்கிய ஒரு அரசியலை வளர்த்தெடுக்கவேண்டும். ஒரு கட்சி அதன்பெயரால் ஆதாயம் எடுப்பதை விட தமிழ்தேசியம் என்கின்ற ஒரு கருத்துநிலையை இன்றைய உலகமய பின்னணியில் இந்திய அரசாங்கம் மக்களுக்குத் தேவையான சலுகைகளை செய்வதற்காகப் பல்வேறு மொழிபேசும் மக்களையும், மொழி சார்ந்த மக்களையும் மிகக் கொடுமையான முறையில் துன்பத்திற்கு ஆளாக்குகின்றது. அதாவது அவர்களின் நிலத்தைப் பறிக்கின்றது, வாழ்க்கையைப் பறிக்கின்றது, அவர்களுடைய கலாச்சார விழுமியங்களை எல்லாம் தகர்ப்பதற்கு பல்வேறு சதிகள் செய்கிறது.

இப்படிப்பட்ட நெருக்கடி என்பது எல்லா மொழிக்குடும்பங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக நாம் தமிழ் பேசுகிறோம், வடகிழக்கு மாநிலங்கள் ஒன்பது கன்னிகள் அதாவது சப்தகன்னிகள் என்று சொல்லுவார்கள். அந்த ஒன்பது மாநிலங்களிலும் அவர்களுடைய மொழி, கலாச்சாரம் என்பது இந்தியாவிற்கு எந்தவிதத்திலும் சம்மந்தமே இல்லாதது. அதைச் சிறிது சிறிதாக இந்தியா ஆதிக்கப்படுத்திக்கொண்டிருக்கிறது. அதே போல் மராட்டிய மொழி என்பது ஒரு தொன்மையான மொழி என்றாலும் இந்தி-யால் இந்தி சினிமாவால் அது அழிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் பஞ்சாப் மொழி என்பது தன்னுடைய வடிவத்தை சிறிது சிறிதாக இழந்து இந்தியின் ஒரு அங்கமாக மாறிவிடுமோ என்கின்ற அச்சம் பஞ்சாப்பின் பூர்வகுடி மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இவையெல்லாம் பொதுவான ஒரு நெருக்கடி. இந்த நெருக்கடிகளையெல்லாம் எதிர்த்து ரொம்பகாலத்திற்கு முன்பு நின்று போராடி வெற்றிபெற்ற அமைப்பு என்ற முறையில் தமிழக மக்கள்தான் அல்லது தமிழக தலைவர்கள்தான், தமிழகத்தினுடைய புலமை சார்ந்த அறிவாளிகள்தான் இந்தியாவிற்கே இந்தப் பிரச்சனையை அதாவது எப்படியெல்லாம் ஆதிக்கம் வருகிறதென்பதை கொண்டுசெல்லவேண்டும்.

தமிழ்தேசியம் என்பது இந்திய நிலைமையை புரிந்துகொள்ளக்கூடிய பொழுது நாடே என்ன வைத்தார்கள் என்றால் அரசியல் சட்டம் உருவாக்கும் பொழுதே வேற்றுமையில் ஒற்றுமை தான். ஏனென்றால் வேற்றுமைதான் அதிகம் இருக்கிறது. அதற்குள் தேடிப்பிடித்து ஒரு ஒற்றுமையை உருவாக்கவேண்டும் என்பதுதான் அரசியல் சட்டத்திலே எழுதப்பட்டிருக்கிறது. நாட்டினுடைய புரிதலே அதுதான். வேற்றுமையோடு இருக்கிறோம் ஆனால் அந்த வேற்றுமைக்கான உரிமை இருக்கிறதா? என்றால் இல்லை. அதனால் தமிழ் தேசியம் என்பதை இந்திய உணர்வுகளோடு இணைந்து பார்க்க வேண்டும். இப்பொழுது நடைமுறையில் நாம் என்ன செய்கிறோம் என்றால் அதைப்பிரித்துத் தனியாகப் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வருவது என்பதற்காகப் பேசப்படுகிறது. தமிழ்தேசியம் என்கிற பெயரில் இன்னொரு தப்பு நடக்கிறது.

அதுஎன்னவென்றால் ஒரு நானூறு, ஐநூறு வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்தோ, கேரளாவில் இருந்தோ தமிழ்நாட்டில் குடியேறி தமிழின் ஒரு அங்கமாக மாறிவிட்டார்கள் பலர். இவர்கள் எல்லாரும் தமிழரே கிடையாது இவர் தெலுங்கர்கள், இவர்கள் கன்னடியர்கள் என்றால், ஆந்திராக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் பேசுகிற தெலுங்கு தெலுங்கே கிடையாது தமிழையும் இதையும் கலந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறான் என்கிறான். இந்தமாதிரியான பிரிவினையை நாம் ஊக்கப்படுத்தக்கூடாது. தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழ் பண்பாட்டை முன்னேற்றுவதற்கு யாரெல்லாம் பாடுபடுகிறார்களோ அவர்கள் எல்லாம் தமிழ்தேசியத்திலே உணர்வுகளைக் கொண்டவர்கள்தான். இந்தப் புரிதல் மிகவும் அவசியம். இந்திய நிலைமையோடு தமிழ்தேசியத்தை இணைத்துப் பார்க்க வேண்டும். இன்றைய உலகமய பின்னணியில் தமிழ்தேசியத்திற்கான சாத்தியம் என்ன? என்பதை கூர்ந்து கவனிப்பது என்பது அவசியமானது.

கேள்வி: தமிழகத்தில் சாதி சம்மந்தப்பட்ட மரணங்கள் அதிகரித்துவிட்டன. இளவரசன் இறந்ததிலிருந்து சாதி சம்மந்தப்பட்ட கலவரங்கள் அதிகரித்துவிட்டன. இந்திய பொதுவுடமைக்கட்சி சாதி ஏற்றத்தாழ்வுகளை கழைய எந்தமாதிரியான முயற்சிகள் மேற்கொண்டுள்ளது?

பதில்: தமிழ்நாட்டிற்கு ஒரு அவமானத்தை ஏற்படுத்திய நிகழ்வுதான் இந்த இளவரசனின் மரணம். அது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இளவரசனின் ஊருக்கு சென்று பார்த்தோம் அந்த ஊர் சாதிவெறி இருந்த ஊர் கிடையாது. ஒரு காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஊன்றி நின்ற மக்கள். அந்த ஊரில் இப்பவும் அதற்கான நினைவுச்சின்னங்கள் எல்லாம் இருக்கிறது அப்படிப்பட்ட கிராமம். ஆனாலும் கூட ஒரு குறுகிய அரசியல் இலாபங்களுக்காகச் சாதி அரசியலை வலிமையாக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கொடுமை நடைபெற்றிருக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

இதே மாதிரி சாதி தகராறுகள், மோதல்கள் கூடுதலாகிக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில் சாதிஒழிப்பிற்கு முன்னணியில் நின்றவர் தந்தைப் பெரியார். ஆனால் பெரியார் படத்தைப்போட்டே சாதியை வளர்க்கின்ற ஆட்கள் இருக்கிறார்கள். இது ஒரு ஆழமானப்பிரச்சனை. இந்தப்பிரச்சனையின் தாக்கத்தைப் பார்க்கிற பொழுது, தலித் ஒன்றுசேரும்பொழுது மற்றவர்கள் ஏன் ஒன்றுசேரக்கூடாது? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். தலித் ஒன்றுகூடுகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் தங்கள் மீது இந்து மதம் சுமத்யிதிருக்கக்கூடிய தீண்டாமைக்கொடுமையிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக ஒன்றுகூடுகிறார்கள். யாரையும் ஆதிக்கப்படுத்துவதற்கு இதே தலித் போகிறது என்றால் இதை எதிர்க்கவேண்டும்.

இன்னொரு மனிதனையோ மற்றவனையோ ஆதிக்கப்படுத்தவேண்டும் என்பதற்கு தலித்துகள் ஒன்றுகூடி பணி செய்கிறார்கள் என்றால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் தலித்களும் மற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுகூடி தலித் மக்களின் சமத்துவ வாழ்க்கைக்காக ஒரு போராட்டம் எடுக்குமானால் அந்தப்போராட்டத்தை நாம் முற்றும் முழுவதுமாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதனால் இதனை நாம் புரிகிறபொழுது மற்றவர்கள் நடத்துகிற போராட்டத்தையும் ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்துகிற போராட்டத்தையும் சரியாக வைக்கக்கூடாது. இரண்டிற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. இப்பொழுது தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாமே ஒட்டுமொத்தமாக இவ்வாறாக குறுகிய நோக்கம் கொண்ட சாதிய உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் இப்படிப்பட்ட போக்குகளை அரசியலிலிருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கிவைக்கவேண்டும். அந்த அரசியல்தான் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிற்கு நல்லது.

தமிழ்நாட்டு இளைஞர்கள் குறிப்பாக அதில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். உடனடியாக சாதியை ஒழிக்க முடியாது. ஒரு மனிதன் தமிழ்நாட்டிலேயே அல்லது இந்தியாவிலேயோ பிறக்கிறபொழுது ஏதாவது ஒரு சாதியில்தான் பிறக்கவேண்டும். விரும்பி எந்த சாதியிலும் பிறக்கமாட்டான். உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிறந்திருக்கவேண்டும் என்றால் இது வேண்டாம் என்று சொல்லியிருப்பீர்கள், நானே சொல்லியிருப்பேன், இன்னொருவரே சொல்லியிருப்பார். ஒரு சாதியில் பிறப்பது என்பது இந்திய சூழலில் ஒரு மனிதனுக்கு விதிக்கப்பட்டதாக இருக்கிறது. குறைந்தபட்சம் எந்த சாதியில் எவன் பிறந்தாலும் சரி எல்லாரும் சமமமானவர்கள் என்ற உணர்வுதான் இங்கு மிகவும் முக்கியமானது. அந்த அடிப்படையில் இதைப்புரிந்துகொண்டு எதிர்காலத்தில் நம்முடைய செயல்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி: இடஒதுக்கீட்டினால் பயனடைந்து இப்பொழுது நல்லநிலையில் உள்ளவர்கள்,இந்த இடஒதுக்கீடே வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் அதில் உங்கள் கருத்து?

பதில்: அது தவறான கருத்து, இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கிராமப்புறங்களிலும்  ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். பழங்குடி மக்கள், தலித் மக்கள் அதே போல் பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழ்மை நிறைந்தவர்கள் அதாவது முன்னேற முடியாத அளவிற்கு நெருக்கடி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்தச் சூழல் மாறுகிற வரையிலும் இந்த இடஒதுக்கீடு இருந்துதான் தீரவேண்டும். எப்படி உடல் ஊனம் என்று சொல்கின்றோமோ அதேபோல் சமூக ஊனம் இது.

சமூகம் என்பது நீண்ட அடிப்படையில் அதனுடைய வளர்ச்சிப்போக்கில் இந்த மாதிரியான சிரமங்களைப் பெற்றிருக்கிறது. அதனால்தான் இந்த இடஒதுக்கீடு என்பது இன்றைய தேவை. சாதிக்கு இடஒதுக்கீடுதான் காரணம் என்று பலபேர் புரிந்துகொள்கிறார்கள் அது அல்ல. சாதிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. இடஒதுக்கீடு சாதியால், சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்ட காரணத்தால் அவனால் எழுந்து நிற்க முடியவில்லை, படிக்க முடியவில்லை என்பதற்காக தரக்கூடிய ஒரு உதவிதானே ஒழிய ஒரு சாதியாக நின்று கொள்வதற்கு அது உதவவில்லை. அப்படிப்பட்ட போக்குகள் வருகிறது என்றால் சில இடங்களில் வருகிறது அதை இல்லை என்று மறுக்கவில்லை.

அது ஒரு அறிவார்ந்த மனரீதியான போராட்டங்களின் மூலம்தான் மாற்றியமைக்கவேண்டுமே ஒழிய அதற்காக இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்வது தவறான வழிமுறையாக இருக்கும். இன்றும் இடஒதுக்கீடு என்பது நம்முடைய தமிழ்நாட்டிற்குத் தேவைப்படுகிறது.

கேள்வி: சாதியை விரட்டாமல் தமிழ்தேசியம் என்பது சாத்தியப்படுமா? தமிழ்தேசியம் அமையவேண்டும் என்றால் சாதியம் தடைபடவேண்டுமா? அதைப்பற்றிய உங்கள் கருத்து?

பதில்: சாதியை ஒழித்துவிட்டுத்தான் தமிழ்தேசியம் கட;டமுடியும் என்றால் கட்டவே முடியாது. சாதியை உங்களால் ஒழிக்க முடியாது. சாதியைப் பற்றிய சரியான புரிதலைக்கொண்ட தமிழ்தேசியம் உருவாக்கப்படவேண்டும். சாதி என்பது இன்றைய காலத்தில் இது தேவையற்றது. திருமண உறவுகள், மரணச் சடங்குகள் அந்த மாதிரியான நோக்கங்களோடு அதை நிறுத்திக்கொள்ள வேண்டுமே ஒழிய அரசியலாகவோ, மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவோ சாதி இருக்கக்கூடாது.

சாதி ஊக்கம் பெற்றால் தமிழ்தேசியம் பின்னுக்குத்தான் தள்ளப்படும். சாதித்தமிழன் பாதித் தமிழன் என்று பாரதிதாசன் கூறுவார். தமிழ்தேசியத்தை நாம் கட்டுகிற பொழுது, தமிழ் தேசியத்தின் ஊக்கங்கள், தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளை மிகப்பெரிய அளவில் உருவாக்கி வருகிற பொழுது இந்தச் சாதி உணர்வு சிறிது சிறிதாக மங்கத் துவங்கிவிடும்.

கேள்வி: இந்திய அரசாங்கம் இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. அது உணவைப் பாதுகாத்து மக்களுக்குக் கொடுக்கும் திட்டமா அல்லது உணவை அந்நிய நாடுகளுக்கு தாரை வார்க்கும் திட்டமா?

பதில்: அவர்கள் சூழ்ச்சியோடு இதைச் செய்கிறார்கள். இந்திய மக்களுக்குத் தேவையான உணவைப் பாதுகாத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்கிற நோக்கம் கொண்டதே இச்சட்டம். அந்தச் சட்டம் வரவேற்கக் கூடியது. வால்மார்ட் போல பல அமைப்புகள் இந்திய விவசாயத்தில் ஒரு நெருக்கடியை உருவாக்கி, அந்த நெருக்கடியின் மூலம் அவர்கள் நம்முடைய நிலங்களையெல்லாம் விற்பதற்கான நிர்ப்பந்தத்தைக் கொடுத்து விளைநிலங்களுடைய அளவு குறைந்துகொண்டே வருகிறது, வீட்டு மனைகளின் அளவு கூடிக்கொண்டே வருகிறது.

இதையெல்லாம் தடுக்கவேண்டும் என்றால் ஒரு ஒருங்கிணைந்த சட்டம் வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல்  இருக்கக்கூடாது. நாள் போக போக அமெரிக்கா போன்ற இன்னும் பல நாடுகள் முதலாளித்துவ முறையில் விவசாயம் செய்கிறார்கள். அங்கு  1000 ஏக்கர், 5000 ஏக்கர், 10,000 ஏக்கரில் தொழில் செய்கிறார்கள். ஆனால் நம்ம ஊர் விவசாயத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொருவரும் 1 ஏக்கர், ½ ஏக்கர் விவசாயம் செய்து, அவரவர் குடும்பத்திற்குத் தேவையானதை அவனே உற்பத்தி செய்து மீதம் இருக்கக்கூடிய சிறியதை விற்கக்கூடிய வாழ்க்கைதான் கூடுதலான வாழ்க்கை. அப்பொழுது அது அழிந்துவிட்டது என்றால் மிகநெருக்கடி ஏற்படும்.

அதனால் உணவுப் பாதுகாப்பு என்பது அதை சேமித்து, மக்களுக்கு பாதிக்கப்பட்ட காலங்களில் கொடுப்பது என்பது சிறந்த விடயம். ஆனால் அதை அந்நிய நிறுவனங்களும், மற்றவர்களும் பயன்படுத்துவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக ஒரு பக்கம் கோதுமை உபரியாக இருந்தது. அந்தக் கோதுமை இந்திய உணவுக் கழகங்களைக் கடந்து வெளியே வரவில்லை ஆனால் அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்து விற்கத் துவங்கிவிட்டது. இந்த மாதிரியான சூழ்ச்சிகளை ஏன் செய்கிறார்கள் என்றால் அதில் நிறைய பங்குத்தொகை (commission) கிடைக்கிறது. பத்தாயம் (godown) இருப்பதை விற்றால் பத்தாயம், பங்குத்தொகை கொடுக்காது. ஆனால் வெளிநாடுகளிலிருந்து செய்தீர்கள் என்றால் கிடைக்கும். இந்த மாதிரியான தவறுகளை களைந்து உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினால் அது தமிழக இந்திய மக்களுக்கு நன்மை பயக்கும்.

கேள்வி: உலகமயமாக்கல் என்ற காரணியால் தமிழக மக்கள்,இந்திய மக்கள்,நம் மொழி இழந்தது என்ன ?

பதில்: பெரிய அளவில் இழந்திருக்கிறது. உதாரணமாக இந்தியா தன்னிறைவு பெற்ற நாடு. 1950 -லிருந்து தொடங்கி, கிட்டத்தட்ட 1980, 85 வரையிலும் ஒரு பொதுத்துறை வளர்ந்தது, ஒரு சுயசார்புத்தன்மை கொண்டதாக இருந்தது. இன்றைக்கு அவை எல்லாவற்றையுமே முழுமையாக அழித்து விட்டது உலக மயம். தொழில் வந்து நம் நாட்டு தொழிற் சங்கங்கள் மற்றவர்கள் கையில் இல்லை. அது இன்று ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளது. அதனால் பாதிப்புகள் ஏற்படுகிறது.

இரண்டாவது இந்த உலகமயம் விவசாயத்தை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கி விட்டது. இன்னும் சிறிது காலங்கள் பிறகு விவசாயம் செய்ய ஆள் இருக்குமா? என்ற கேள்வி வரத்துவங்கிவிட்டது. அதனால் உலகமயத்தால் பெரிய இழப்பு, அதேபோல் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு இவையெல்லாம் எதிர்காலத்தில் மிக நெருக்கடியைத் தரக்கூடியது. அதனால் உலக மயத்தை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய பாரம்பரிய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை பார்த்து கண்காணித்து அதை முறியடிப்பது என்பது அவசியம்.

கேள்வி: ஈழப்பிரச்சனையில் 13 வது சட்டத்திருத்தம்,நாடாளுமன்றத்தை நிறைவேற்றி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதை நீர்த்துப்போகச் செய்வதற்கான செயல்கள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்கிறது. அதைப்பற்றி தாங்கள் கருத்து?

பதில்: மிக வன்மையாகக் கண்டிக்கக்கூடியது. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை அது எவ்வாறு பொறுப்பில்லாத கட்சியாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். ராசீவ் காந்தி மேல் மிக மரியாதையாக இருக்கிறோம் என்கிறார்கள். ராசீவ் காந்தியும், ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்ட 13 -வது சட்டத்திருத்தத்தை யாரையும் கேட்காமல் இந்த இலங்கை அரசு கிழித்து போட்டுவிட்டது. ஒரு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வடக்கு கிழக்கு மாநிலங்கள் இந்த இரண்டும் ஒன்றாகதான் இருக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு எது பாதுகாப்பு என்றால் இவர்கள் ஒன்றாக இருப்பதுதான் பாதுகாப்பு.

இலங்கை அரசிற்கு மக்கள் இரண்டாகப் பிரிந்தால் தான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு, நலம் பயக்கக்கூடியது. 13 வது அரசியலமைப்புச் சட்டம் இதை இரண்டாகப் பிரிக்கக்கூடாது, ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று கூறுகிறது. அதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய அரசாங்கம் அதற்கான மிகக்கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு அரசியல் அழுத்தங்களையும் இலங்கை அரசாங்கம் கொடுத்திருக்கிறது. இரண்டு நாடுகள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறினால் உலக வரலாற்றில் யுத்தந்தான் வந்துகொண்டிருக்கும்.

ஒப்பந்தம் மீறப்படுமானால் அடுத்த கட்டம் யுத்தந்தான். ஆனால் இந்திய அரசாங்கம் மௌனம் காத்து இருந்து வருவது மிகவும் தவறானது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தை அது நிறைவேற்றவில்லை என்றால் இறந்துபோன ராசீவ்காந்தியும், ஜெயவர்த்தனேவும்  மீண்டும் கொண்டு வந்து  திருத்தலாமே ஒழிய இப்ப இவர்களே திருத்துவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அது போடப்பட்ட ஒப்பந்தம். அதுவும் இந்திய அரசாங்கத்தோடு எதுவுமே பேசாமல் இவர்களே திருத்தலாம் என்றால்  அது எப்படி. எனவே இதை மிகவும் வன்மையாகக் கண்டிப்பது மட்டுமல்ல மிக மோசமான ஒரு அராஜகம்.

ஹிட்லர் காலத்தில், ஹிட்லர் உலக ஒப்பந்தம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் போனானோ, அதே மாதிரி இன்றைக்கு போட்டிருக்கிற ஒப்பந்தங்களை தூக்கி எறிந்துவிட்டு இலங்கையின் ராஜபக்சே தமிழ் மக்களை அழிக்கிற அந்த ஒரு நடவடிக்கையில் மட்டும் தான் இருக்கிறார். அதனால் இது மிகவும் கண்டிக்கக்கூடியது. இந்திய அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி: ஈழப்போர் முடிந்து மக்கள் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இப்பொழுது ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மற்றும் விடுதலைப் பெற என்ன வழி,இலங்கையிலே அவர்கள் வாழ்வு நடத்த என்ன வழி?

பதில்: வடக்கு கிழக்கு மாகாணம் இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 70 ஆவது பிரிவின்படி காசுமீரில் சென்று யாரும் நிலம் வாங்க முடியாது. உலகத்தின் பல நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்கள், அந்த இனங்களை அழிவிலிருந்து காக்கவேண்டும் என்றால் அவர்களுடைய நிலத்தில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றுதான் சட்டம் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சட்டத்திலேயும் இருக்கிறது. அதனால் உலகமும் இந்தியாவும் முன்னின்று பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலங்களைச் சிங்களர்களும் அரசாங்கமும் ஆக்கிரமிக்கிறது, அந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும்.

மூன்றாவது ஆறு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரன் நிறுத்தப்பட்டிருக்கிறான். கிட்டத்தட்ட அங்கு இராணுவ ஆட்சிதான் நடக்கிறதே ஒழிய ஜனநாயக ஆட்சி கிடையாது. தமிழர்களுக்கு மட்டும் இராணுவ ஆட்சி. உடனடியாக இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இவையெல்லாம் சுதந்திரமாக செயல்படுவதற்குரிய உரிமை தரப்படவேண்டும். இதெல்லாம் இன்று உடனடித் தேவையாக இருக்கிறது. இதற்குப் பிறகு அண்மைக் காலத்தில் கிழக்கு தைமூ, அதே போல் கொசோவா, தெற்கு சூடான் இங்கெல்லாம் நடந்தது மாதிரி ஒரு வெகுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி, மக்கள் எதை விரும்புகிறார்களோ அந்த ஆட்சி கொள்வதற்கு உரிமை கொடுக்க வேண்டும். இதெல்லாம் இப்பொழுது இருக்கக்கூடிய நடைமுறைகள். இதைச் செய்தோம் என்றால் ஓரளவிற்கு ஈழமக்களுக்கு விடிவை நோக்கி நகருவதற்குரிய சிறிய பாதையை நம்மால் திறந்து வைக்கமுடியும்.

கேள்வி: தமிழ்மொழிக்காக பெரும் அரும்பாடுபட்ட தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு இந்த வருடம் வருகிறது. அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: தமிழில் இரண்டு பாரம்பரியம் இருக்கிறது. ஒரு பாரம்பரியம் தமிழைப் போற்றுவது, புகழ்வது, கொண்டாடுவது என்பது ஒன்று. இன்னொரு பாரம்பரியம் தமிழை விமர்சனப் பூர்வமாக அணுகவேண்டும் என்பது. இந்த விமர்சனப் பூர்வமாக அணுகவேண்டும் என்ற ஒரு பாங்கு ஆங்கிலேயருடைய வருகைக்குப் பிறகு கூடுதலாயிற்று. குறிப்பாகத் தமிழின் பெருமையை உலகத்திற்கு தெரிவித்தவர் யார் என்று சொன்னால் ஆங்கில மொழி கற்ற இங்கே வந்த பல மதத்தலைவர்கள் தான். குறிப்பாக பெஸ்கி, வீரமாமுனிவர், கால்டுவெல் இவர் திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம் என்கிற நூலை எழுதி இந்த மொழி எப்படித் தொன்மையான மொழி என்பதை உலகத்திற்கு தெரிவித்தார்.

அதே போன்று ஜி.யு.போப். இந்த அடிப்படையில் இந்தப் பாரம்பரியம் வந்தது. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் தனிநாயகம் அடிகள் தோன்றினார். தனிநாயகம் அடிகள் தமிழை உலக அளவில் செய்வதற்கும், தமிழை உலக ஆராய்ச்சிகளுக்கு இணையான தமிழ் ஆராய்ச்சியை உருவாக்கவேண்டும் என்பதற்கும் அக்கறை கொண்டிருந்தார். அதனுடைய வெளிப்பாடுதான் தமிழ் ஆராய்ச்சி மாநாடு. உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு தோற்றத்திற்குக் காரணமாக இருந்தார். இருந்தாலும் அவருடைய பாரம்பரியம் பெரிய அளவில் விளக்கம் பெறவில்லை. பெட்னா -வில் நடைபெற்ற விழாவிலும் இந்த நூற்றாண்டு கொண்டாடப்பட்டது.

இங்கேயும் எல்லா இடங்களிலும் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டிலேயும் அதைக் கொண்டாடுவதற்கான பெரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய தமிழ்நாடு விழித்து முன்னேறுவதற்கு தமிழ் சமூகம் தன்னுடைய முகம் எப்படி இருக்கிறது என்பதை கண்ணாடியில் அவர்களே பார்த்துக்கொள்வதற்கு தனிநாயகம் அடிகள் போன்றோரின் ஆய்வு இன்றைய காலத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் மிகவும் தேவைப்படுகிறது. இந்த அடிப்படையில் அதை நாம் புரிந்துகொள்வதும், தனிநாயகம் அடிகளின் உயர் கருத்துக்களை பின்பற்றுவதும், சமுதாயத்திற்கு அதைப்போதிப்பது என்பதும் அவசியமானதாகும்.

கேள்வி: சமீபத்தில் பெட்னா விழாவிற்கு வந்திருந்தீர்கள். அந்த அனுபவம் பற்றியும்,புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தாங்கள் கூற விரும்பும் அறிவுரை பற்றியும் கூறுங்கள்?

பதில்: வட அமெரிக்க சங்கங்களின் பேரவை அதுவே மிகவும் சுவையாக இருக்கிறது. நான் இங்கு வருவதற்கு முன்பு இணைய தளத்தில் சென்று தேடிப்பார்த்தேன். 47 சங்கங்கள் அதில் அங்கம் வகிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே போல பல மக்களை ஒருங்கிணைத்து ஒரு மிகச்சிறந்த மாநாட்டை நடத்த முடியும் என்பதை வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கம (பெட்னா) சாதித்துக் காட்டியிருக்கிறது. உள்ளபடியே அந்த பெட்னா மாநாடு என்னை கிறங்க வைத்தது. அதில் அவ்வளவு பெரிய அரங்கம், அந்த அரங்கத்தில், வட அமெரிக்காவினுடைய பல பகுதியிலிருந்தும் மக்கள், நம் தமிழ்ப் பாரம்பரிய ஆடைகளோடு குவிந்திருந்தனர். அங்கே அளிக்கப்பட்ட உணவு இதெல்லாம் மிகப்பெரிய சிறப்பைத் தந்தது.

அந்த மாநாட்டில் வைக்கப்பட்ட துணைக் கூட்டங்கள், உலக தமிழர் அமைப்பு சார்பில் ஒரு கூட்டம், அதே போல் அமெரிக்க அரசாங்கத்தை அணுகி ஈழ மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரக்கூடிய அமைப்பு, இளைஞர் அமைப்பு, தனிநாயக அடிகளின், விழாவின் கொண்டாட்டம் இவையெல்லாம் கருத்து ரீதியாக ஊக்கத்தைக் கொடுத்தது. சிறந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நான் நாஞ்சில் பீட்டர் நடத்திய இலக்கிய வினா விழா நிகழ்ச்சிக்குச் சென்றேன். அவ்வளவு சிறப்பாக செய்யமுடியுமா? என்று அதிர்ச்சியையும், மயக்கத்தையும் கொடுத்தது. அவ்வளவு அழகாக, ஆழமாக அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதெல்லாம் நம் பண்பாட்டிற்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய பெருமை. இன்றைய உலகமயப் பின்னணியில் ஒரு மொழிக்குடும்பம் வளரவேண்டும் என்றால் அவர்கள் விழிப்புணர்வைப் பெறுவதும், தங்களைத் தகுதிபடுத்திக்கொள்வதும், ஒருங்கிணைந்து நின்று தன்னுடைய மொழிக்கான உரிமையைப் பாதுகாப்பதும் அவசியமானதாகும். அப்படிப்பட்ட போராட்டத்தில் இந்த வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதுதான் என்னுடைய கருத்து. இதற்காகவே பலர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் எல்லாருக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கேள்வி: உங்களின் வீழ்வேன் என்று நினைத்தாயா புத்தகம் படித்தேன் அதன் அனுபவம் பற்றி கூறுங்கள்?

பதில்: வீழ்வேன் என்று நினைத்தாயா நூல் மார்ச் மாதம் 18 -ந்தேதி முள்ளிவாய்க்காலின் முடிவு வந்தப்பிறகு 3, 4 நாட்கள் என்னால் வெளியில் போகமுடியவில்லை. ஐந்தாவது நாள் அதை எழுதினேன். மனம் குற்றவாளிக் கூண்டுக்குள்ளே அடைபட்டுக்கிடக்கிறது எப்படியாவது இதிலிருந்து விடுபடவேண்டும் என்று முதலடியை எடுத்து வைக்கின்றேன். திரும்பிப் பார்த்தால் நிலமெல்லாம் நெருஞ்சி முள், என்னால் காலை எடுத்து வைக்க முடியவில்லை. மீண்டும் மனக்கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறேன்.

எத்தனை காலத்திற்குத்தான் இந்த வாழ்க்கை என்பதாக ஒரு குறிப்பை நான் எழுதியிருந்தேன். அந்தக் குறிப்பும் அதிலிருந்து விடுபடுவதற்கு நான் எடுத்த விசயங்கள் தான் வீழ்வேன்  என்று நினைத்தாயா என்ற புத்தகம். ஆனந்த விகடனில் அது தொடரும் என்று வந்தது. தமிழ்நாட்டில் 16000 பிரதிகள் இதுவரை விற்றது இப்போதும் விற்றுக்கொண்டிருக்கிறது. அந்த நூல் முள்ளிவாய்க்காலில் சம்மந்தப்பட்ட பலருடைய ஐக்கியநாடுகள் சபைக்கு அளித்த வாக்குமூலங்கள் அதுதான் அதனுடைய சாரம்.

அந்த வாக்கு மூலங்களையெல்லாம் தொகுத்து எழுதுகின்ற முறைப்படி எழுதுகிற பொழுது என்னால எழுத முடியவில்லை. நான் வழக்கமாக அதிகாலை 3.30 மணியிலிருந்து 6 மணிவரை எழுதுவேன் ஆனால் அரசியல் வேலை காரணமாக  எழுதமுடியவில்லை. அதனால் முதல் நாள் இரவே குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, காலையில் எழுதத்துவங்குவேன். அதிகாலை 3.30 மணிக்கு எழுதத்துவங்கி ஒரு, ஒரு பக்கம், இரண்டு பக்கம் செல்வதற்குள் என்னை அறியாமலே தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

அதன் பிறகு 5 நிமிடமோ, 10 நிமிடமோ அமர்ந்து, தேம்பித்தேம்பி அழுவேன் அந்த அதிகாலையில். அதன்பின் தொடர்ந்து எழுதுவேன். இப்படித்தான் அது எழுதி முடிக்கப்பட்டது. அதை எழுதி முடிக்கும் பொழுது என்னுடைய மன உணர்வுகளில் என்ன வந்தது என்றால், வெற்றி பெற்றுவிட்டோம் என்று இலங்கை அரசு கொக்கரிக்கிறது. அது பெரிய வெற்றி விழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. வெற்றி பாடல்கள் இசைக்கப்படுகிறது. அந்தப் பாடல்கள் மயக்கத்தோடு, மயக்கவெறியில், நடன அரங்குகளில் வெறிகொண்டு பாடுகிறது.

வெற்றி பெற்றவர்களுக்கும் பாடல் உண்டென்று சொன்னால், தோல்வி அடைந்தவர்களுக்கும் பாடல் உண்டு. தோல்வி அடைந்தவர்களுடைய பாடல் வைராக்கியம் கொண்டது. மரண அறையை கருவறையாக மாற்றி எந்தக் குழந்தையையும் பெற்றெடுக்கும் வைராக்கியத்தை பெற்றெடுத்தது. அந்த வைராக்கியத்தோடு தமிழ் மக்கள் இருக்கிறார்கள். விதைப்பதை விதைத்துவிட்டு அறுவடைக்காக காத்திருக்கிறது முள்ளிவாய்க்கால் என்பதாக அந்த நூலில் நான் எழுதினேன்.

அந்த நூலை நான் எழுதி முடிக்கவில்லை என்றால் எனக்குள் இருக்கக்கூடிய மனச் சிக்கல்களிலிருந்து நான் விடுபட்டிருக்க முடியாது. அந்த நூல் என்பது ஒரு மனசிகிச்சை(சைக்கோதெரபி) என்று சொல்வார்களே அதேபோல் என்னுடைய மனதை ஒழுங்கு படுத்திக்கொண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதற்காக ஒரு ஊக்கத்தை அந்த எழுத்தும், அதைப்பற்றிய என்னுடைய போராட்டங்களும்தான் எனக்கு வழிவகுத்துக் கொடுத்தது.

அந்த நூலில் சொன்னதைப் போல ஈழமக்களின் போராட்டம் என்பது தோல்வி அடைந்துவிடாது. இழப்புக்களால் யாரும் தோல்வி அடைந்ததில்லை. நியாயங்கள் இழப்புக்களைக் கொடுத்துதான் வெற்றி பெறுகிறது. அமெரிக்க விடுதலைப் போராட்டம் அதே போல் பிரான்சில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி, உலகத்தில் நடைபெற்ற எல்லா புரட்சிகளும் அதன் எல்லைக்குட்பட்ட இழப்புக்களைத் தந்து, அந்த இழப்புக்களால் அது அழிந்துவிடவில்லை. புதிய கருத்துக்களைப் பெற்றெடுத்து, உலகத்தை ஏற்றுக்கொள்ளவைத்து, அந்த ஏற்றுக்கொள்ளவைத்த மாற்றங்களின் மூலம் தங்களுடைய உரிமைகளைப் பெற்றிருக்கிறது. 2008க்கு முன்பு ஈழத்தைப்பற்றி உலகம் வைத்திருந்த மதிப்பீடு வேறு, 2009க்குப்பிறகு முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு உலக மக்கள் ஈழமக்களைப் பற்றியும் ஈழத்தைப் பற்றி வைத்திருக்கிற மதிப்பீடு வேறு.

இந்த இரண்டு மதிப்பீட்டையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற மதிப்பீடுதான் புதிய அரசியலைப் பெற்றுத் தருவதற்கான ஒரு அடித்தளம். அந்த அடித்தளத்தை முள்ளிவாய்க்கால் சாதித்திருக்கிறது. அது தியாகம் செய்தவர்கள், தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், அதில் மாவீரர்களாக நின்று தன்னுடைய மூச்சை அடக்கி நிறுத்திக்கொண்டவர்கள் அத்தனை பேரும் எதை செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் உலகத்திற்கும் தமிழர்களுக்கும் ஒரு புதிய வேலைதிட்டத்தை உருவாக்கி அந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுதந்திர பூமியை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதற்கான பாதையைத்தான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் அந்த நூலிலே நான் பதிவு செய்திருக்கிறேன்.

இவ்வளவு நேரம் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும் விளக்கமாகவும் பதில் கூறியமைக்கு சிறகு இணைய இதழ் சார்பாக நன்றி.

This works great for learning a language, and you can tape www.domyhomework.guru/ lectures too

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் திரு.சி.மகேந்திரன் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது