மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழருவி மணியன் நேர்காணல்- பகுதி-1

ஆச்சாரி

Jan 11, 2014

 

கேள்வி: தங்களுடைய காந்திய மக்கள் இயக்கத்தின் நோக்கமென்ன? அதன் வளர்ச்சி எப்படி உள்ளது? மக்களிடம் போதிய வரவேற்பு உள்ளதா?

பதில்: காந்திய மக்கள் இயக்கத்தினுடைய மிக முக்கியமான நோக்கம் தனிவாழ்வில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, வார்த்தைகளில் வாய்மை, சமூக நலன் சார்ந்த சிந்தனை, தன்னலமற்ற தியாகம், இவற்றையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்கான முனைப்போடும் நினைப்போடும்தான் தமிழகத்தில் என்னால் காந்திய மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்ததை நான் உருவாக்கிய நேரத்தில் காந்தியின் பெயரை தமிழ்நாட்டிலே சொல்லி பத்து நபரைக்கூட உங்களால் சேர்க்கமுடியாது என்று பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தன்னலமற்ற இளைஞர்கள் இதில் சேர்ந்திருக்கிறார்கள்.

நான் தெளிவாக அவர்களிடம் முதலில் சூத்திரம் போல் ஒரு வாசகத்தை வழங்குவேன், “உன்னிடம் இருப்பதை ஊருக்குத் தருவதென்றால் என்னோடு வா, ஊரில் இருப்பதெல்லாம் உனக்கென்று நினைத்தால் எங்காவது போ, அறிவு இருக்கிறதா அறியாமையை அகற்ற என்னோடு வா ,பணம் இருக்கிறதா ஏழ்மையை அழித்தொழிக்க என்னோடு வா, உடல் வலிமை இருக்கிறதா ஊருக்கு நல்லது செய்ய என்னோடு வா” என்றுதான் அவர்களை அழைக்கிறேன். பணம், பதவி, அதிகாரம், புகழ் ஆகிய எந்த போதைக்கும் ஆட்படாத பரிசுத்தமான இளைஞர்களை நான் தேடுகிறேன். இன்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சொல்லப்போனால், ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தினுடைய ஆன்ம சக்தியாக, மனச்சான்றின் குரலாக காந்திய மக்கள் இயக்கம் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கேள்வி:இக்காலத்துத் தலைவர்களின் சுயநல வாழ்க்கை, தமிழ் மொழி மீதான பற்றின்மை, பண்பாட்டை மதியா வாழ்வு இது போன்றவற்றைக் காணும்போது காந்தி, பெரியார், காமராசு போன்ற தன்னலமற்றத் தலைவர்களின் உழைப்பு வீணாகிவிட்டது என்று உங்களுக்கு நினைக்கத் தோன்றுகிறதா?

பதில்: மகாத்மா காந்தி, பகுத்தறிவு பகலவன் பெரியார், பெருந்தலைவர் காமராசர், போன்ற தன்னலமற்றத் தலைவர்கள் உழைத்த உழைப்பும், செய்த தியாகமும், ஆற்றிய அரும்பணியும் எந்த விதமான பயனையும் தராமல் போய்விடவில்லை. இன்றும் இந்த மூன்று பெருமக்களால் மட்டுமல்ல இன்னொருவரையும் மறவாமல் இந்தப் பட்டியலில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தேய்ந்த செருப்போடு, நலிந்த மக்களுக்காக வாழ்க்கை முழுவதும் ஒரு வேள்வியையே நடத்திய தோழர் சீவானந்தம் அவர்களையும் நான் இந்தப் பட்டியலில் இணைத்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கல்லூரிகள் அனைத்திலும் நான் சென்று பேசுகிறபொழுது இந்த நான்கு பெருமக்களை அவர்கள் இதயத்தில் கொண்டுசேர்க்க முயல்கிறேன். இந்த நான்கு பெருமக்கள் நடத்திய தியாக வாழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய நல்ல சிந்தனைகளை தோல்மாற்றியிருக்கிறார்கள். எனவே முழுவதுமாக இந்த மண் கெட்டுவிடாமல் இருப்பதற்கும் இன்றும் இந்த மண்ணில் தன்னலமற்று சமூக நலனுக்காக செயல்படக்கூடியவர்களின் எண்ணிக்கை ஓரளவாவது இருப்பதற்காகவும் இந்த பெரியவர்கள்தான் காரணம் எனவே, அவர்கள் உழைத்த உழைப்பு வீண்போனதில்லை, வீண்போகப்போவதுமில்லை.

கேள்வி: உலக அரசியலிலும், ஏன் தில்லியிலும் பல கட்சித் தலைவர்கள், நட்பு ரீதியில் பழகி வருகிறார்கள். ஆனால் தமிழகத்திலோ எதிரி போன்று காணுகிற போக்கிருக்கிறது. அரசியல் தலைவர்களின் நட்பு, பண்பு, தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லாது போனதற்கு என்ன காரணம்?, அதை ஏற்படுத்த முயற்சி ஏதாவது நடக்கிறதா?

பதில்: கொள்கைகள் அடிப்படையில், சித்தாந்தங்களின் அடிப்படையில், நேர்ந்துகொண்ட சில லட்சியங்களின் அடிப்படையில் செயலாற்றக்கூடிய மனிதர்கள் அன்பு செலுத்துவதில் எந்த தடையும் இருக்கமுடியாது. உன்னுடைய மதம் உன்னுடையது, என்னுடைய மதம் என்னுடையது என்று நபிகளார் ஒருமுறை சொன்னார். உனக்கு ஒரு சமூகம், உனக்கு ஒரு சமயம், உனக்கு ஒரு ஏற்பாடு என்றால் அதுகுறித்து நான் ஒன்றும் அஞ்சவேண்டிய அவசியமில்லை.

எனக்கான சமூகம், எனக்கான வாழ்வு, எனக்கான ஏற்பாடு என்று இருப்பதை நான் எப்படி ஏற்று மகிழ்கிறேனோ அதுபோன்றுதான் மற்றவர்களுடைய அமைப்புகளையும் ஏற்று மகிழக்கூடிய மனப்போக்கு வந்துசேர வேண்டும். நபிகளார் ஒருமுறை சொன்னார் “கூடாரங்கள் தனித்தனியாக பிரிந்து கிடக்கட்டும் ஆனால் இதயங்கள் மட்டும் எப்பொழுதும் இணைந்தே இருக்கட்டும்” என்றார். நீ இந்துவா உனக்கு ஒரு கூடாரம், நீ இசுலாமியனா உனக்கு ஒரு கூடாரம், நீ கிறித்துவனா உனக்கு ஒரு கூடாரம். வெவ்வேறு சமயங்கள் சார்ந்து நீங்கள் இருப்பதில் எந்தத் தடையும் இல்லை. கூடாரங்கள் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கட்டும் ஆனால் இதயங்கள் மட்டும் எப்பொழுதும் இணைந்தே இருக்கட்டும் என்று சொன்னார். இது அரசியலுக்கு மிகவும் பொருத்தமான வாசகம். இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பொழுதும், விடிகிற பொழுதும் ஒருகட்சி பூபாள ராகத்தோடு புறப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்தக் கட்சிகள் இப்பொழுது சித்தானந்தத்தின் அடிப்படையிலும், லட்சியத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்படுவதில்லை என்பதுதான் நீங்கள் கேட்டக் கேள்விக்கான  அடிப்படைக் காரணம்.

இன்றைக்கு ஒரு கட்சி உருவாகிறது என்றால் ஏற்கனவே இருந்தக் கட்சியில் அவர்கள் யாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தார்களோ அந்தத் தலைவர் மீது அவர்களுக்கு திடீரென்று ஏற்பட்ட விரக்தி, வெருப்பு, பகைமை காரணமாக அங்கிருந்து புறப்பட்டு வெளியில் வந்து இன்னொரு கட்சியை அவர்கள் தொடங்குகிறார்கள். எனவே இன்றைக்குக் கொள்கை அடிப்படையில், சித்தாந்த அடிப்படையில், லட்சிய அடிப்படையில் இயக்கங்கள் தோன்றுவதும் இல்லை, பிளவுபடுவதும் இல்லை.

தனிமனித விருப்பு வெருப்புகளின் அடிப்படையில் இதுபோன்ற கட்சிகள் உருவெடுக்கக்கூடிய காரணத்தினால் அந்தக் கட்சிகளின் தலைமையில் விருப்பும் வெறுப்பும் மட்டுமே மேலோங்கி நிற்கிற நிலையில் அவர்கள் மனம் விட்டுப் பேசவோ, ஒருவருக்கு ஒருவர் முகமன் கூறவோ, ஒருவர் சந்திப்பில் இன்னொருவர் மலர்ச்சி அடையவோ, இன்றைக்கு வாய்ப்பு இல்லை.

ஒரு கசப்பான அனுபவத்தை சமீபத்தில் நேர்ந்ததை, இந்த நேரத்தில் வெளியிட விரும்புகிறேன். நான் என் தந்தையை விடவும் மிகவும் மதித்துப் போற்றக்கூடிய பெரும் தகைமையாளர், தமிழகம் கண்ட பொதுவாழ்க்கை ஏற்ற தலைவர்களில் மிகமுக்கியமானவர் ஐயா நல்லகண்ணு அவர்கள். அவர் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டு நலிவுற்றார். அரசு பொதுமருத்துவமனையிலேதான் அவர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். அவரை நான் வீட்டில் சென்று சந்தித்தேன். அவர் நலிந்த நிலையிலே தான் இருந்தார். அவருடைய தளர்ச்சியைப் பார்த்து மனம் வெதும்பி நான் சொன்னேன் “நீங்கள் உங்களுடைய கொள்கையின்படி உங்கள் கட்சியினுடைய பெருமிதத்தைக் காப்பாற்றுவதற்காக பொதுமருத்துவமனையில் படுத்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நானும், என்னுடைய தாயும், என்னுடைய மனைவியும் நோய்வாய்ப்பட்டாலும் நாங்கள் பொதுமருத்துவமனைக்குத்தான் சென்று சிகிச்சைப் பெறுவோம். ஆனால் ஒன்று நீங்கள் நூறாண்டு கடந்து வாழவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார். இதயநோய், மற்றபடி உடற்கூறு சம்மந்தப்பட்ட எல்லாற்றிலும் தேர்ந்த நுணுக்கமான அனுபவம் கொண்ட மருத்துவர் இருக்கிறார். அவருடைய பெயர் சிவகடாட்சம் அவர் ஒருவருக்குப் பார்ப்பதற்காக வாய்ப்பைத் தருவதற்கே மூன்று, நான்கு மாதங்களாகும். ஆனாலும் உங்களுக்கென்று சொல்லி நாளைக்கே அழைத்துக்கொண்டுபோகிறேன் என்னோடு அவசியம் நீங்கள் வரவேண்டும் அவரிடம் வந்து, அவர் பூரணமாக உங்களை பரிசோதித்து, பொது மருத்துவமனையில் நீங்கள் ஏற்றுக்கொண்ட சிகிச்சை சரியானதுதானா என்று பார்த்து, அதற்குப் பிறகு அவர் தரக்கூடிய மருந்தை நீங்கள் பயன்படுத்தத் தொடங்கினால் மிகவிரைவில் நலம் பெற்று விடுவீர்கள்” என்று சொன்னேன். சரி மணியன் வருகிறேன் என்றார்.

நான் அந்த மருத்துவரிடம் இந்தச் செய்தியை வெளிப்படுத்திய பொழுது துறவியைப்போல் வாழக்கூடிய ஒரு மனிதருக்குச் சிகிச்சை அளிக்கக்கூடியப் பெருமையை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள், அவசியம் அவரை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று நேரம் ஒதுக்கினார். அவர் ஒதுக்கிய நேரம், என்நெஞ்சில் வந்து சேர்ந்து அதன் படி நல்லகண்ணு ஐயாவிடம் நான் தொடர்புகொண்டபொழுது உடனே இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

காரணம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் செயலலிதாவோடு சேர்ந்து இடதுசாரிகள் ஒரு அணியை அமைத்திருக்கிற நிலையில் அவர்களுக்கு முற்றிலும் மாற்றாக இன்னொரு அணியை அமைக்கக்கூடிய பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதனால் இந்த நேரத்தில் அவரோடு நானோ, என்னோடு அவரோ சேர்ந்து செல்வது சரிப்படாது என்று அந்த சித்தாந்த வாதிகளில், சிவப்பு சிந்தனையாளர்களில் யாராவது ஒருவர் சொல்லியிருக்கக்கூடும் அல்லது இவராகவே கூட நினைத்திருக்கக்கூடும் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஐயா, ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு வருகிறேன் நீங்கள் தயாராக இருங்கள் போகலாம் என்றேன். அவர் தயக்கத்தோடு சொன்னார் மன்னியுங்கள் மணியன் நான் இப்போது வருவதாக இல்லை. ஒரு மரணச்செய்தி வந்தது அங்கே நான் செல்லவேண்டும், பிறகு மத்திய குழு கூடுகிறது அதில் நான் பங்கேற்க வேண்டும் என்றார். அதில் ஒன்றும் தவறில்லை ஐயா, நான் மருத்துவரிடம் மீண்டும் தொடர்புகொள்கிறேன் நாளை வேண்டுமானாலும் செல்லலாம், நாளை மறுநாள் வேண்டுமானாலும் செல்லலாம் சொல்லுங்கள் என்றேன். இல்லை இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன் பார்ப்போம் என்று சொல்லி முடித்துவிட்டார். புரிந்துகொள்ளுங்கள் இவ்வளவுதான். தமிழ்நாடு என்றாலும் சரி, அகில இந்திய அளவில் என்றாலும் சரி, பண்பட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி, பாழ்பட்ட அரசியல் இப்படித்தான் மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறது.

கேள்வி: தமிழீழ மக்களின் அவலத்தைத் தமிழக மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்ல உங்கள் இயக்கம் என்ன செய்கிறது?

பதில்: தமிழ் ஈழத்தை நாம் பெற்றாக வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. 25 ஆண்டுகளுக்குள் தமிழ்ஈழத்தை நிச்சயம் என்னுடைய கண்ணால் நான் தரிசனம் செய்துவிட்டுத்தான் சாவைத் தழுவுவேன் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நான் சொல்லியிருக்கிறேன். இப்பொழுதும் சொல்கிறேன் இன்னும் 23 ஆண்டுகளுக்குள் நான் தமிழ்ஈழத்தைக் காண்பேன். தமிழ்ஈழத்தின் தலைநகராக விளங்கப்போகிற யாழ்ப்பாணத்தில் நான் போய் நின்று அந்த யாழ் மக்களிடம் நான் பேசுவேன். அதற்கான வாய்ப்பு நிச்சயம் எனக்கு சாத்தியப்படும் என்கிற உள்ளுணர்வு எப்பொழுதுமே எனக்குள் உளவிக்கொண்டிருக்கிறது. இந்த ஈழம் கிடைக்கும் ஆனால் நான் எப்பொழுதும் புலம்பெயர்ந்து வாழக்கூடிய ஈழத் தமிழர்களிடம் தொடர்ந்து ஒரு கருத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய அரசியல் தலைவர்களை நம்பி உங்கள் தமிழ்ஈழக் கனவை சுமக்காதீர்கள், இந்தியா உதவிக்கு வந்து அதன் மூலம் ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடும் நடக்காதீர்கள், நீங்கள் எந்தெந்த இடத்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறீர்களோ அந்தந்த இடத்தில் இருக்கக்கூடிய அரசுகளை நம்புங்கள்.

நீங்கள் இருக்கக்கூடிய இடத்தில் உள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எந்த மண் உங்களுக்குச் சோறு போடுகிறதோ, எந்த மண் உங்கள் வாழ்விற்கு உத்தரவாதத்தை உருவாக்கித் தந்திருக்கிறதோ அந்த மண்ணில் உள்ள மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராதபடி அமைதி சார்ந்து அறவழியில் நீங்கள் ஈழத்தில் அரங்கேறிய அத்தனை இன்னல்களையும் ஆவணப்படுத்தி அரசிடம் கொண்டுசெல்லுங்கள்.

திரும்பத் திரும்ப அந்த அரசின் மனசாட்சியை உலுக்கிப் பாருங்கள். ஒவ்வொரு நாட்டினுடைய அரசும், இந்த தமிழ் ஈழத்தில் நடந்தேறிய அத்தனை அவலங்களையும் உணருகிற பொழுது நிச்சயம் அவை ஒன்றுகூடும். சர்வதேச நாடுகளைப் பொறுத்தவரையில் மிக மோசமான, மன்னிக்கமுடியாத குற்றமாக அவை கருதுவது செனசைடு என்று பேசப்படுகிற இனஅழிவுதான்.

ஒரு இனத்தைத் திட்டமிட்டு அரசு அழித்துவிடுமானால் அந்த அரசை சகித்துக்கொள்வதற்கு சர்வதேச நாடுகள் என்றுமே தயாராக இருக்க முடியாது. ஹிட்லர் உருவாக்கிய யூதர் இன பேரழிவிற்குப் பிறகு ஏற்பட்டதுதான் இந்த ஐக்கியநாடுகள் சபை. எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையினுடைய மிக முக்கியமான நோக்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, போர்க்குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் யாரும் அழிக்காமல் தடுத்து நிறுத்துவதற்கு எல்லா வகையிலும் முயன்று பார்ப்பது. எனவே இவர்களுடைய அதிகாரக் கோரிக்கையாகவும், கொள்கையாகவும் இருக்கின்ற அந்த ஒன்றை நீங்கள் மிகச்சரியாகத் தொட்டுக் காட்டுங்கள். நேரம் கனியும், இந்த ஈழம் உண்மையில் உங்கள் கண்முன்னால் உருவாகும் என்று நான் 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் அவலம் அரங்கேறிய நாள்தொட்டு இன்றுவரை தொடர்ந்து உலகத்தமிழர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அதற்கான சூழல் இப்போது கனிந்திருப்பதை நாம் கண்முன்னாலே பார்க்கிறோம்.

நடந்து முடிந்த காமன்வெல்த் மாநாட்டில் எப்படியாவது தலைமைப் பதவியைப் பெறுவதன் மூலம் இரண்டு ஆண்டுகள் ஈழப்பிரச்சனைக் குறித்து உலக நாடுகள் உதடுகளைப் பிரித்து ஒன்றையும் சொல்லிவிடமுடியாத ஒரு சூழலை உருவாக்கிவிட முடியும் என்று ராசபக்சே நினைத்தார். ஆனால் அவர் தன்னுடைய தலையில் தானே தீவைத்த கதையாக மிகவும் சிரமப்பட்டு கொழும்புவில் கூட்டிய அந்தக் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டிசு பிரதமர் டேவிட் காமரூன் கலந்துகொண்ட பொழுது யாரும் எதிர்பாராத வகையில் யாழ்ப்பாணம் சென்றார், மக்களை சந்தித்தார், அடைந்த இன்னல்கள் அவற்றின் மூலம் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் அறிந்து கண்ணீர் விட்டார். நேரடியாக ராசபக்சேவைப் பார்த்து விமர்சனக் கனைகளை வீசினார். வருகிற மார்ச் மாதத்திற்குள் நீங்கள் இந்த இன அழிவு, இங்கே நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து நீங்கள் ஒரு பரிகாரத்தை தேடாமல் போனால் உங்களை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்த வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

இப்பொழுது ரோமிலிருந்து புறப்பட்டு இருக்கிறார்கள், 11 நீதித்துறை சார்ந்த நிபுணர்கள் கொண்ட குழு அது. உண்மையில் இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதா, எந்த அளவிற்கு மனித உரிமை பரிக்கப்பட்டது என்பதையெல்லாம் ஆய்வு ரீதியாக அவர்கள் அறிந்து வருவதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். இப்பொழுது டப்ளின் மறுபடியும் தெளிவாக இந்த மனித உரிமை மீறலை இலங்கை அரசு செய்திருக்கிறது என்று குற்றச்சாட்டை அழுத்தமாக கூறியிருக்கிறது. நாடுகள் ஒவ்வொன்றாக இலங்கை அரசிற்கு எதிராக புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. உலகத்தின் பார்வையில் ஈழத் தமிழர்கள் அடைந்த இன்னல்கள் சென்று சேர்ந்திருக்கின்றன. இந்தச் சூழல் முற்றி முதிர்கிற பொழுது ஈழம் கிடைக்கப்போவது நிச்சயம்.

எனவே அந்த ஈழம் கிடைப்பதற்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவரிடம் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருப்பதை விட மதுரை ஒத்தக்கடை வீதியிலும், திருச்சி சின்னக்கடை வீதியிலும் குரல் கொடுத்துக்கொண்டிருப்பதைவிட உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் அந்தந்த இடத்தில் கொடிபிடிப்பதன் மூலம், பேரணிகள் நடத்துவன் மூலம் தொடர்ந்து அந்தப் பிரச்சனைகளை மறவாத நிலையில் அவர்கள் மனதில் கொண்டு வந்து சேர்ப்பதன் மூலம் தான் ஈழம் கிடைக்கும். அது நடக்கவேண்டும் என்கிற வகையில் காந்திய மக்கள் இயக்கம் தன்னுடைய பங்களிப்பைத் தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும்.

கேள்வி: வடக்கு மாகாண முதல்வர் திரு.விக்னேசுவரன் அவர்கள் முரண்பட்டு பேசிவருகிறார் அவருக்கு உங்களது அறிவுரை என்ன?

பதில்: விக்னேசுவரன் அவர்கள் முரண்பட்டு பேசுகிறார் என்பதை நாம் வெளியே இருந்து பார்க்கிற பொழுது, அப்படி ஒரு விமர்சனத்தை எளிதாக வீசலாம். ஆனால் ஒன்றை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிக்கப்பட்ட இடத்திலே இருந்து சுற்றிலும் சூழந்திருக்கக்கூடிய இராணுவத்தின் மையத்தில் நின்றபடி தங்களுடையக் கருத்துக்களை வழங்குவது என்பது ஒன்று, எந்த வகையிலும் பாதிப்பு எந்த விமர்சனத்தை வைத்தாலும் வராது என்கிற பாதுகாப்பு உணர்வோடு வெளியே நின்றுகொண்டு வாய் திறந்து பேசுகிற நம்முடைய நிலை என்பது வேறு.

இப்பொழுது விக்னேசுவரன் அவர்கள் பொறுப்பேற்று இருக்கிறார். அவர் கொழும்புவில் இருந்தவர், நீதித்துறை சார்ந்தவர், அவர் அரசியல் களத்தில் ஆழமான அனுபவங்களைப் பெற்றவர் இல்லை, ஆனால் அரசியல் களத்தில் தொடர்ந்து ஈழம் சார்ந்து ஏராளமான அனுபவங்களைச் சுமந்து கொண்டிருக்கிற சம்மந்தம் அவருடைய முதுகிற்கு பின்னாலே இருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பாக இன்றைக்கு அங்கே வடக்கில் ஒரு மாகாண அரசு உருவாகி இருக்கிறது. அந்த மாகாண அரசு என்பது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இயங்க முடியும்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டிருக்கிறது. ராசீவ்காந்தியும் செயவர்த்தனேவும் சேர்ந்து உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட திருத்தம்தான் 13வது திருத்தம். அந்த 13வது திருத்தத்திலேயே உருப்படியாக இருக்கக்கூடியவை இரண்டு அம்சங்கள் மட்டும்தான். ஒன்று வடக்கும் கிழக்கும் இணைந்து ஒரே மாநிலமாக தமிழரின் தொன்மை நிலப்பரப்பாக இருப்பதற்கு அந்த அரசியல் சட்டத்திருத்தம் உதவியாக இருந்தது. இரண்டாவது சிங்களத்திற்கு சமமாக தமிழும் ஆட்சி மொழியாக இருப்பதற்கு வழியமைக்கப்பட்டது. ஆனால் 1987ல் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்ட 13வது திருத்தத்தின் மிகமுக்கியமான அம்சங்கள் இரண்டுமே இன்று பறிக்கப்பட்டுவிட்டன. இலங்கை உச்சநீதிமன்றம் அந்த வடக்கும் கிழக்கும் இணைந்ததை, நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுத்து நிறைவேற்றவில்லை என்கிற காரணத்தைக் காட்டி அதை ரத்து செய்துவிட்டது. இன்றைக்கு அதற்குப் பிறகு ஏற்பட்ட சட்டதிருத்தங்களின் மூலமாக சிங்களத்தினுடைய ஆதிக்கம் உயர்ந்துவிட்டது.

தமிழ் சமஅந்தஸ்தைப் பெறுவதற்கான சூழல் மறைந்துவிட்டது. இன்று இருக்கிற நிலையில் காவல் அதிகாரம் கிடையாது,  நிதிமேலாண்மை கிடையாது, நிலத்தின் மீது அதிகாரம் கிடையாது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கக்கூடிய காவல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் திட்டங்களுக்கான நிதியை உருவாக்கி அதை வகுத்து அவற்றிற்குரிய செலவீனங்களைக் கண்டெடுத்து செலவு செய்வதற்கான உரிமையும் இல்லாமல் அரசு நிலத்தின் மீது எந்த விதமான உரிமையும் இல்லாமல் ஒரு அரசு இருக்கவே முடியாது. உலகத்தின் எந்த திசையிலும் இப்படி ஒரு காகித அரசை நீங்கள் கண்டெடுக்கவே இயலாது. எனவே இருப்பது ஒரு காகித அரசு ஆனால் இந்த அரசு எந்த வகையில் நமக்கு நன்மை தரும் என்பதைத்தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர வேண்டும்.

இப்பொழுது உலக நாடுகள் என்ன நினைக்கின்றன ஜனநாயக அடிப்படையில் நீங்கள் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முயலுங்கள். ஆயுதங்களைத் தூக்கினால் உங்கள் பின்னாலே நாங்கள் வந்துநிற்க மாட்டோம். எவ்வளவு நியாயமான கோரிக்கையாக இருந்தாலும், ஆயுத மொழியில் நீங்கள் பேசுகிறபொழுது நாங்கள் செவிகொடுத்து கேட்க மாட்டோம். ஜனநாயக அடிப்படையில் நீங்கள் கருத்தை உருவாக்குங்கள் நாங்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்பதுதான் இன்றைக்கு உலகத்தினுடைய சர்வதேசப்பார்வை. எனவே அந்த அடிப்படையில் அங்கே ஜனநாயக ரீதியாக ஒரு தேர்தல் நடந்திருக்கிறது.

மிகப்பெரும்பான்மை தமிழர்கள் இந்த ராணுவ அச்சுறுத்தலையும் புறந்தள்ளிவிட்டு தெளிவாகவே ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். பெரும்பான்மையோடு அங்கே ஒரு மாகாண அரசு அமைந்திருக்கிறது. அந்த மாகாண அரசு 13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தில் இருக்கக்கூடிய அந்த உரிமைகளையாவது பெற முடியுமா என்ற கோரிக்கையோடு நிற்கிறது. அந்த உரிமைகள் கூட ராசபக்சே ஆட்சியால் மறுக்கப்படுகிற பொழுது உலகம் பார்க்கும். உலகத்தின் முன்னால் விக்னேசுவரன் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைக்க முடியும். உலகநாடுகளிடம் நாங்கள் மன்றாடிக் கேட்கிறோம், “நீங்கள் சொன்னது போல் நாங்கள் சனநாயகத்தின் அடிப்படையில் வாக்கெடுப்பு மூலமாகத்தான் இந்த மாகாணத்தில் அதிகார பீடத்தில் வந்து அமர்ந்திருக்கிறோம் எங்களுக்கு உரிய அதிகாரத்தைப் பெறுவதற்கு நீங்கள் வழிவகை செய்துகொடுங்கள்” என்று கேட்கலாம் அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சயம் சிங்கள பௌத்த பேரிண வாதம், சிங்கள வெறிபிடித்த மற்ற கட்சிகள், சிங்கள வெறிபிடித்த ராசபக்சே சகோதரர்கள், சிங்கள வெறிபிடித்த பௌத்த பிட்சுகள் இருக்கிற வரையில் அங்கே தமிழனுக்கு சமஉரிமையும், சமவாய்ப்பும் சித்திப்பதற்கான சாத்தியமே கிடையாது.

எங்கே சமதர்மம் இல்லையோ, அங்கே சமத்துவம் இல்லை. எங்கே சமதர்மமும் சமத்துவமும் இல்லையோ அங்கே சுதந்திரமே இல்லை. எனவே இந்தச் சூழலை உலகநாடுகள் புரிந்துகொள்வதற்கு விக்னேசுவரன் இப்பொழுது ஒரு பொம்மை அரசாக இருப்பது நமக்கு உதவியாகத்தான் இருக்கும். எனவே இந்த வகையில் விக்னேசுவரனை நாம் அதிகமாக விமர்சனம் செய்யாமல் அவர் மூலமாக ஜனநாயகம் முறையில் எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை, நாம் ஆதரித்து அந்த நடவடிக்கைகளுக்கு உரிய மரியாதையைக்கூட ராசபக்சே அரசு தரவில்லை என்பதை நாம் வெளிப்படுத்தி ஈழம் நோக்கி நடப்பதுதான் முழு ராசதந்திரம், முழுமையான விவேகம்.

கேள்வி: ராசீவ்-செயவர்த்தனே உடன்பாட்டின் அடிப்படையில் 13ஆம் சட்டத்திருத்தம் வந்தது. அதன் முதன்மை அம்சம், வட கிழக்குப் பகுதியை இணைப்பது. ஆனால் இலங்கை நீதிமன்றம் அதை செல்லாது என்று தீர்ப்பளித்து அவை இரண்டு மாகாணங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த 13-ம் சட்டத்திருத் திருத்தத்தினால் தமிழர்களுக்கு எந்தவித பயனும், பலனும் இல்லை. இதற்கு உங்களது கருத்து என்ன?

பதில்: 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலமாக கிடைத்த உரிமைகள் கூட இன்றைக்கு முறையாக தமிழருக்கு வந்து சேரவில்லையே ஏன் என்று நீங்கள் கேட்கிறீர்கள். இந்திய அரசும் இலங்கை அரசும் உலக நாடுகளிடம் பதில் சொல்வதற்கான கடமை இருக்கிறது. காரணம் இந்த ஒப்பந்தம் என்பது செயவர்த்தனே என்கிற தனிமனிதரும், ராசீவ்காந்தி என்கிற தனிமனிதரும் அவர்களுடைய விருப்பு சார்ந்து ஒன்றாக உட்கார்ந்து உருவாக்கிய ஒப்பந்தம் இல்லை. செயவர்த்தனே இலங்கையின் அதிபராகவும், ராசீவ்காந்தி இந்தியாவின் பிரதமராகவும் உட்கார்ந்து செய்த இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடியது.

ஒவ்வொரு நாடும் இறையாண்மை கொண்டது என்று திரும்பத்திரும்ப சொல்கிறோம். இலங்கை இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடு அந்த இறையாண்மைக்கு எதிராக நாம் எதையும் பேசிவிட முடியாது என்று இந்த நாட்டில் இருக்கக்கூடிய காங்கிரசுகாரர்கள் அடிக்கடி திருவாய் மலர்ந்து உபதேசம் வழங்குவார்கள். இலங்கை இறையாண்மை மிக்க நாடுதானே இந்தியாவும் இறையாண்மை மிக்க நாடுதானே Sovereign State என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே.

உலகத்தில் இன்றைக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்பட்டிருக்கிற இந்த இறையாண்மை என்கிற அந்தஸ்துதான் மிகமுக்கியமானது. அந்த இறையாண்மை பாதிக்கப்படுவதற்கு எந்த உலகநாடும் எளிதில் இணக்கமாக வந்துநிற்க இதை அப்படியே வைத்துக்கொண்டு பார்ப்போம். இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு, இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு இரண்டு இறையாண்மை மிக்க நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கின்றன. அந்த ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் இணைந்து ஒரு மாகாணமாக ஏற்கப்பட்டிருக்கிறது. அதை இன்றைக்கு நிறைவேற்றவில்லை என்று சொன்னால் உச்சநீதிமன்றம் இலங்கை அரசு நீங்கள் எதை நினைக்கிறதோ அதை செயல்படுத்துவதற்காக இருக்கக் கூடியது. இந்தியாவில் இருப்பதைப் போல சுதந்திரமான, சுயேட்சையான ஒரு நீதித்துறை அமைப்பு இலங்கையில் கிடையாது. ஆட்சிபீடம் எந்த ராகம் வாசிக்கிறதோ, அந்த ராகத்திற்கு ஏற்ப பாடல் எழுதுகிற பணிதான் அங்கே இருக்கக்கூடிய நீதிமன்றத்தின் நிலை. எனவே முழுக்க முழுக்க அந்த ஆட்சியில் இருப்பவர்கள் செய்திருக்கிற துரோகம். ஒரு நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாக்கப்படுகிறது. இரண்டு இறையாண்மை மிக்க நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை என்றால் அதை நிறைவேற்றியாக வேண்டும் என்று வற்புறுத்த வேண்டியும் கடப்பாடு இந்தியாவிற்கு இருக்கிறது. நிறைவேற்றித் தீரவேண்டிய நிலைப்பாடு இலங்கைக்கு இருக்கிறது. இரண்டும் தங்களுடைய கடமைகளிலிருந்து தவறினால் அதை நிறைவேற்றி வைக்கவேண்டிய கடப்பாடு ஐக்கிய நாடுகள் சபைக்கும் இருக்கிறது. எனவே இதை நாம் எளிதாக விட்டுவிடமுடியாது. நாம் தனிஈழம் பெறுவதற்கு நாம் வகுத்துக்கொள்ளக்கூடிய வியூகங்களில் இந்த 13வது அரசியல் திருத்தம் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் சேர்த்துப் போராடுவதற்கு சாத்தியங்கள் நிறைய உண்டு.

கேள்வி: மோடி அவர்களை நீங்கள் பிரதமராக ஆதரிப்பது ஏன்? மோடி செய்த தவறு உலகிற்கே தெரியும், அவர் மன்னிப்புக் கேட்டுவிட்டால் மன்னிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது மனிதகுல அழிப்பில் ஈடுபட்ட ராசபக்சே போன்றோர் மன்னிப்புக் கேட்டுவிட்டால் அவர்களை மன்னித்துவிடலாமா?

பதில்: மோடிக்கு ஆதரவாக தமிழருவி மணியன் இருக்கிறார் என்று சொல்வதே ஒரு பொய். என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தொப்புள்கொடி உறவுகளை, ஈழநிலத்தில் அழிப்பதற்கு ராசபக்சேவிற்கு சகலதளங்களிலும் துணைநின்ற காங்கிரசு அரசு மத்தியில் வீழ்த்தப்படவேண்டும். இந்த காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற்கு என்ன வியூகம் அமைப்பது என்பது தான் இன்றைக்கு நம் கண் முன்னாலே உள்ள கேள்வி. நீங்கள் கருணாநிதியினுடைய கடுமையான ஊழல், வரம்புமீறிய அதிகார துட்பிரயோகம் என்று எல்லாவற்றிலும் பாதிக்கப்பட்ட தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்று நான் நினைத்தபொழுது செயலலிதாவைத்தான் என்னால் ஆதரிக்க முடிந்தது தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக யார் வரவேண்டும் என்று கேட்டால் நான் வை.கோ-வைத்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று சொல்லுவேன்.

ஆனால் கருணாநிதியை ஆட்சிபீடத்திலிருந்து அகற்றிவிட்டு அடுத்த கணமே வைகோவை முதலமைச்சராகக் கொண்டுவருவதற்கான சூழல் இந்தமண்ணில் இல்லை. காரணம் ம.தி.மு.க.விற்கு அதிகபட்சம் ஒரு 8விழுக்காடு வாக்குகள்தான் இருக்கும். 20லிருந்து 25 விழுக்காடு வாக்குகளை கையிலே வைத்துக்கொண்டிருக்கக்கூடிய ஒரு கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்றால் அதே அளவிற்கு வாக்குகளை வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சியோ அல்லது அதைவிட கூடுதலான வாக்குகளை வைத்திருக்கக்கூடிய ஒரு கட்சியையோ ஆதரிப்பதன் மூலமாகத்தான் அந்தக் காரியத்தை செய்துமுடிக்கமுடியும். ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் politics is the art of possible என்று எந்த நேரத்தில் எது சாத்தியமோ அதை செயற்படுத்துவதற்கு பெயர்தான் அரசியல். எனவே என்னுடைய விருப்பம் செயலலிதா திரும்பவும் வந்து உட்காருவது அல்ல.

நான் செயலலிதாவிற்கு ஆதரவாகவும் , கருணாநிதிக்கு எதிராகவும் களமிறங்கிய பொழுதே ஆனந்த விகடனில் நான்கு வாரங்கள் விகடன் மேடையில் கேள்விகளுக்கு பதிலளித்த பொழுது ஒரு வாசகர் என்னைக் கேட்டிருந்தார் இப்பொழுது செயலலிதாவை ஆதரிக்கிறீர்களே, செயலலிதாவின் பண்புகள் மாறிவிட்டன என்று நீங்கள் நம்புகிறீர்களா என்று, நான் தெளிவாகவே பதில் அப்பொழுது எழுதினேன் ஒரு சிறுத்தையின் உடம்பில் உள்ள புள்ளிகள் எப்படி சாகும் வரை மறையாதோ அப்படித்தான் செயலலிதாவினுடைய அடிப்படை பண்பு நலன்கள் இறுதிநாள் வரை மாறாது என்று. எனவே செயலலிதா புனிதம் பூத்த தேவதை என்பதற்காக நான் செயலலிதாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, கருணாநிதியின் அரக்க பிடியிலேயிருந்து தமிழகம் விடுபட வேண்டும். கருணாநிதி பதவி நாற்காலியை பாதுகாத்துக்கொள்வதற்காக இனத்தைக் காட்டிக்கொடுத்த அந்த கயமைக்கு உரிய தண்டனையை அவர் பெற்றாக வேண்டும் என்பதற்காக அந்த நேரத்தில் செயலலிதாவை நான் ஆதரித்தது எவ்விதம் சரியோ அவ்விதம் மோடியை இன்று ஆதரிப்பதும் என்னளவில் சரிதான். காரணம் இந்தியா முழுவதும் படர்ந்து பரவிக்கிடக்கக்கூடிய ஒரு காங்கிரசு கட்சியை வேரறுக்க வேண்டும் என்றால் இங்கே இருப்பவர்கள் கூச்சலிடுவதைப்போல ஒரு மூன்றாவது அணியின் மூலம் சாத்தியமே இல்லை. இடதுசாரிகள் முன்வைக்கக்கூடிய மூன்றாவது அணி என்பது இல்லாத ஊருக்கு செல்லாத சாலையில் பயணம் செய்கிற வேலைதான் .

எங்கே இருக்கிறது மூன்றாவது அணி ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய சக்திமிக்க மாநிலக்கட்சிகளை ஒன்றாக இணைத்து ஒரு மூன்றாவது அணி அமைத்தால் ஆட்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதை நான் மறுக்கவே இல்லை. இன்றைக்கும் இந்தியா முழுவதும் சக்தி மிக்க மாநிலத் தலைவர்கள் ஓரணியில் சேர்ந்து நின்றால் 260 இடங்களுக்கு மேல் நாடாளுமன்றத்தில் பெறமுடியும். ஆனால் நான் கேட்பது தமிழ்நாட்டில் சக்திமிக்க இரண்டு மாநிலக் கட்சிகள் செயலலிதாவின் அ.தி.மு.க.வும், கருணாநிதியின் தி.மு.க.வும். கருணாநிதியையும் செயலலிதாவையும் நீங்கள் ஒன்றாக இணைத்து விடமுடியுமா.

ஆந்திராவிலே இருக்கக்கூடிய ராசசேகர ரெட்டியினுடைய மகன் செகன்மோகன் ரெட்டி இன்றைக்கு சக்திமிக்க ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தலைவர். தெலுங்குதேசத்தினுடைய தலைவர் சந்திரபாபு நாயுடு இரண்டுபேரும் மாநிலக்கட்சிகளைத்தான் நடத்துகிறார்கள், சக்திமிக்கவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் சந்திரபாபு நாயுடுவையும், ஒய்.எஸ்.ஆர் உடைய மகனையும் ஒன்றாக சேர்த்துவிடமுடியுமா?. பீகாரில் லல்லுபிரசாத் யாதவையும் நிதிஷ் குமாரையும் ஓரணியில் கொண்டுவந்து நிறுத்திவிடமுடியுமா?, உத்திரப்பிரதேசத்தில் மாயாவதியையும், முலாயம் சிங் யாதவையும் நீங்கள் இணைத்துவிட முடியுமா? ஏன் இவ்வளவு தூரம் மம்தா பேனர்சி காங்கிரசை எதிர்ப்பவர்தானே சி.பி.எம்-மும், காங்கிரசை எதிர்த்துத்தானே களம் இறங்கியிருக்கிறது.

மேற்குவங்கத்தில் இந்த இரண்டுபேரும் ஒன்றாக சேர்ந்து நாடாளுமன்றத்தில் தொகுதிகளை பங்கிட்டு நிற்கத் தயாரா? எனவே எந்த மாநிலத்திலும் வலிமையாக இருக்கக்கூடிய இந்த மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் இரண்டு துருவங்களாக வெவ்வேறு திசைநோக்கி இருக்கிறபொழுது, இவர்களை எப்படி ஒன்றுசேர்ப்பது. இவர்களை வைத்துக்கொண்டு எப்படி ஒரு மூன்றாவது அணியை அமைப்பது, இந்த மூன்றாவது அணியின் மூலம் எப்படி காங்கிரசை வீட்டிற்கு அனுப்புவது, விவேகத்தோடு எதையும் சிந்திக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய தண்டனை உடனடியாக கிடைத்தாக வேண்டும். சென்ற நாடாளுமன்றத்தேர்தலிலே அது நடந்திருக்க வேண்டும் நடக்கவில்லை. ஆனால் இந்த ஐந்தாண்டு காலத்தில் காங்கிரசு கடும் எதிர்ப்பை ஒட்டுமொத்த இந்தியாவிலும் சந்தித்திருக்கிறது. அந்த காங்கிரஸ் எதிர்ப்பு அலையை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் காங்கிரசுக்கு சமமாக வாக்கு வங்கியை வைத்திருக்கக்கூடிய கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அந்த பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் நாம் ஆதரவைக் கொடுப்பதன் மூலமாகத்தான் நாம் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். என்னுடைய பார்வை, என்னுடைய நோக்கம், என்னுடைய இலக்கு காங்கிரஸ் அரசை மத்தியிலே இருந்து அகற்றுவதுதான். அடுத்து அங்கே வந்து அமரக்கூடிய மனிதனைப்பற்றியே நான் கவலைப்படவில்லை.

ஆனால் ஒன்று சொல்கிறேன் மோடி, அவர் செய்த தவறைப்பற்றி பேசுகிற இந்த உலகம் சீக்கியர்களை 1984ல் இந்திராகாந்தி படுகொலைசெய்யப்பட்ட அந்த கணத்திலேயே டெல்லியில் வேட்டையாடி 3000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டார்களே அதை எந்தக் கணக்கில் எழுதிவைப்பது. அது ஒரு இனக்கொலை இல்லையா?, அது ஒரு இன அழிவு இல்லையா?. இன்றைக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குஜராத் இன அழிவைப் பற்றி பேசுகிற எந்த ஒரு மனிதனுக்கும் உதறுகிறது. சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அழிவை பேச ஏன் தயங்குகிறார்கள். ஒருவருக்கு ஒரு நீதியா?. சரி நீங்கள் மோடியை மன்னித்துவிட்டால் அவருக்கு வாக்களிக்கலாம் என்கிறீர்களே, அப்படியென்றால் ராசபக்சேவையும் மன்னிப்பீர்களா? என்றால், நான் மன்னிப்பேன் ராசபக்சேவும் செய்த தவறுகளுக்காக மனம் திருந்தி இந்த ஈழத் தமிழர்களுக்கு நாங்கள் இதுவரை செய்த அத்தனை தவறுகளுக்கும் பிராயச்சித்தமாக, பரிகாரம் தேடுவதற்கு முனைகிறோம் இருப்பதே சின்னஞ்சிறு இலங்கைத் தீவு, இந்த இலங்கைத் தீவை இரண்டு துண்டுகளாக்க வேண்டாம் நீயும் நானும் சகோதரர்கள், சமஉரிமையோடு சமவாய்ப்போடு சமதர்மம் தழைக்க, சமத்துவம் சார்ந்து நாம் வாழலாம் அதற்கு ஏற்றாறபோல் அரசியலமைப்புச்சட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்கலாம் என்று ராசபக்சே நாளை சொல்லட்டும் நான் ஈழம் வேண்டாம் என்று சொல்வதற்கு தயாராக இருக்கிறேன்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு இஸ்லாமியனுக்கும், ஒரு இந்துவிற்கும் எந்த பேதமும் கிடையாது. இஸ்லாமியனுக்கென்று உரிமை குறைவு, இந்துக்களுக்கு உரிமை அதிகம் என்று கிடையாது. சொல்லப்போனால் இஸ்லாமியர்களுக்கு சில உரிமைகள் கூடுதலாகவே இந்த மண்ணில் வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லப்போனால் என்னை ஒரு இந்துத்துவ வாதியாகத்தான் உங்களால் புரிந்துகொள்ளமுடியும்.

எனக்கு மதம் கிடையாது, எனக்கு சாதி கிடையாது. நான் அடிக்கடி சொல்லுவேன் என்னுடைய மகன் சாதி விட்டு சாதி திருமணம் செய்தவன் அதை வரவேற்றவன் நான். எனது மகள் மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்ததை ஏற்றுக்கொண்டவன் நான். மனிதம் ஒன்றுதான் எனக்கு மதம். இங்கே இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே தொடர்ந்து இரத்த ஆறு ஓடவேண்டும், இரண்டு வாக்கு வங்கிகளை தனித்தனியாகவே வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயத்தை அடைய வேண்டும் என்று நினைக்கக்கூடிய மோசமான கழுகு மனப்பான்மை கொண்டிருக்கக்கூடிய அரசியல் கட்சிகளில் நான் சேர்ந்து நின்று குரல்கொடுக்க தயாராக இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் இந்த இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்தும் பிணைந்தும் வாழவேண்டும். காலம் முழுவதும் இவர்கள் போராடிக்கொண்டே இருப்பதா?. காலகாலத்திற்கும் பாபர் மசூதி பிரச்சனையும், அயோத்தி பிரச்சனையையும் முன்வைத்தே இவர்கள் முரண்பட்டு கிடப்பதா?. காலகாலத்திற்கு 2002 ல் நடந்துவிட்ட அந்த குஜராத் கலவரத்தை சொல்லிக்கொண்டே நாம் காலத்தை ஓட்டிவிடுவதா?.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தமிழகத்திலே ஒரு அணி அமையவேண்டும் என்று நான் புறப்பட்ட பொழுது பாரதிய ஜனதா கட்சியின் தலைவரிடம் தெளிவாக சொல்லியிருக்கிறேன். அகில இந்தியத் தலைவர் ராசுநாத் சிங் அவர்களை சந்தித்தபொழுதும் தெளிவாக சொல்லியிருக்கிறேன் ஈழம் சார்ந்து இதுவரையில் காங்கிரஸ் செய்த தவறுகளை நீங்கள் மத்திய அரசில் வந்து உட்கார்ந்தால் செய்யக்கூடாது.

தமிழர் சார்ந்து உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் சார்ந்து உங்களுடைய வெளிவிவகாரக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். வாழ்வுரிமையை அவர்கள் பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும். நீங்கள் தமிழ் ஈழம் என்று கேட்கமுடியாது எனக்குத் தெரியும் ஆனால் உலக நாடுகள் தமிழீழத்தை வாங்கித் தருவதற்கு புறப்படுகிற பொழுது மன்மோகன்சிங் முட்டுக்கட்டை போடுவது போல நீங்கள் முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் போதும்.

சுப்பிரமணிய சுவாமியை வாயை மூடிக்கொண்டு இருக்கச்சொல்லுங்கள். தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் சுப்பிரமணிய சுவாமி நாடாளுமன்றத் தேர்தலில் இருக்கக்கூடாது. அப்படி நின்றால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று பல்வேறு நிபந்தனைகளை அவர்களிடம் நான் போட்டுவிட்டுத்தான் இந்த அணியை அமைப்பதில் நான் முயற்சியை எடுத்துக்கொண்டேன். எனவே இன்றைக்கு இந்த அணி அமைகிறது. நீங்கள் கேட்கக்கூடிய எல்லா கேள்விகளுக்கும் இப்போது பதில் சொல்லிவிடுகிறேன். தமிழ்நாட்டில் இந்த அணி ஒரு பெரிய வெற்றியைப்பெறுமா என்று கேட்கிறீர்கள். தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகத்தானே தமிழர் வாக்காளர்கள் பிரிந்துஇருக்கிறார்கள் உண்மைதான். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இன்றைக்கு தமிழகத்தைப்பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக்கழகம் மிகப்பெரிய சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அது கல்லறையை நோக்கி கடைசி அத்தியாத்தை எழுதுவாகத்தான் என்னுடைய கணக்கு. என்னுடைய கணிப்பு அதுதான்.

கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வீறுகொண்ட இயக்கமாக இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. காரணம் கருணாநிதி அவர்கள் ஆயிரம் தவறுகளுக்கு உரியவராக இருந்தாலும் ஓராயிரம் திறமைகள் உடையவர் அவர் அதை யாரும் மறுக்க முடியாது. அந்தக் கட்சியை அவர்போல் அவருக்குப் பின்னால் கட்டிக்காப்பதற்கு அங்கே இன்னொரு மனிதன் இல்லாத நிலையில் அது சரிவை நோக்கித்தான் செல்லும். அதனுடைய கடைசி அத்தியாயம் எழுதப்படுகிறது.

அண்ணா தொடங்கினார், கருணாநிதி முடித்தார் என்பது தான் கழகத்தின் வரலாறாக இருக்கும். இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 16 விழுக்காடு வாக்குகள்தான் இருக்கிறது என்று ஒரு ஆய்வு கணக்கு சொல்கிறது. காங்கிரஸ் அதனுடைய கல்லறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. கடைசி மூச்சை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் விட்டுவிடும் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.

எனவே நான் அப்பொழுதே முடிவுசெய்தேன். காங்கிரசும் தி.மு.க.வும் சேர்ந்து இவர்கள் நின்றாலும் கூட 25 விழுக்காடு வாக்குகளை தாண்டுவதற்கு வழி இல்லை. விஜயகாந்த்தை இவர்கள் பக்கம் போகவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவிடம் 30 விழுக்காடு வாக்குகள் இருக்கிறது. அப்படியென்றால் ஒரு கணிசமான அளவிற்கு தமிழ்நாட்டில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் ஆட்சியை மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நிலையில் நாம் செய்யக்கூடியது என்ன என்று சிந்தித்துத்தான் இந்த வியூகம் அமைத்திருக்கிறேன். இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதற்கு இருக்கிற வாக்குவங்கி வெறும் 2.5 விழுக்காடு மட்டும்தான். அது ஒன்றும் வலிமையான இயக்கம் இல்லை தமிழ்நாட்டில். ஆனால் இன்று மோடிக்கு வாக்களிப்பதற்காக புறப்பட்டிருக்கிற இளைஞர்களின் எண்ணிக்கை மிகக்கூடுகிறது.

நீங்கள் மோடியை விரும்புகிறீர்களா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை. நான் மோடியை ஆதரிக்கிறேனா? இல்லையா? என்பதல்ல பிரச்சனை. இன்றைக்கு தமிழகத்தில் 48 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அத்தனை பேரும் இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள், படித்தவர்கள். அவர்களுடைய ஒரே கோரிக்கை என்ன தெரியுமா? Good governance and a government with out any corruption இதுதான் இப்போது தேவை அவர்களுக்கு. ஊழலற்ற ஒரு அரசு வேண்டும், நிர்வாகத்திறமை உள்ள ஒரு அரசு வேண்டும் இந்த இரண்டும் காங்கிரஸ் மூலம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கிறது. அதை மோடி கொடுப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அதனால் இன்றைக்கு 48 லட்சம் வாக்காளர்கள் என்றால் தமிழகத்திலே இருக்கக்கூடிய வாக்காளர்களில் 10 விழுக்காடு அவர்கள். அந்த 10 விழுக்காடு வாக்கு ஜெயலலிதாவிற்கோ கருணாநிதிக்கோ போவதற்கான வாய்ப்பு கிடையாது. எனவே அந்த 10 விழுக்காடு வாக்கை நான் பதிவுசெய்துகொள்கிறேன். பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்கனவே இருக்கக்கூடிய 2 ½ விழுக்காடு வாக்கு ஆக ஒரு 15 விழுக்காடு வாக்கு வரை மோடிக்காக மட்டுமே கிடைக்கும் என்பது என்னுடைய கணக்கு. இதில் ம.தி.மு.க.வைக் கொண்டுவந்து இணைக்கிறபொழுது ம.தி.மு.க.வின் 8 விழுக்காடு வாக்கும் சேரும். பா.ம.க.வை கொண்டு வந்து சேர்க்கிற பொழுது பா.ம.க.வின் 8 விழுக்காடு வாக்கும் சேரும், தே.மு.தி.க.வை கொண்டுவந்து சேர்க்கிற பொழுது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட 10 விழுக்காடு வாக்கும் சேரும்.

அப்படி நீங்கள் சேருகிற பொழுது ஏறக்குறைய 35 விழுக்காடு வாக்குகளை இந்த அணி பெரும். 30 விழுக்காடு வாக்குதான் செயலலிதாவிடம் இருக்கிறது 3 விழுக்காடு கம்யூனிஸ்ட்டிடம் இருக்கிறது கூட்டினாலும் கூட அவர்கள் 33 விழுக்காடு. ஆனால் 35 விழுக்காடு வாக்குகளை நான் உருவாக்க நினைக்கிற அணி பெறுவதற்கான சகல வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவர்கள் சேர்ந்து ஒன்றாக நின்று இவர்கள் சமரசமாக முயன்று இடஒதுக்கீடு நடத்தி தேர்தல் களத்திற்கு வருவார்களா என்பதுதான். அதற்கான முயற்சிகளைத்தான் நான் மேற்கொண்டிருக்கிறேன். அது மட்டும் நிறைவேறி விடுமானால் நிச்சயம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பேன் நான்.

ஒன்று இந்த தி.மு.க, அ.தி.மு.க. என்கிற இரண்டு அணிக்கும் மாற்றாக ஒரு அணியை உருவாக்கி அந்த அணியும் வெற்றிபெற வைக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைப்பது, இரண்டாவது தி.மு.க., அ.தி.மு.க-விற்கு எதிரான மக்கள் சக்தியை ஒன்றுபடுத்தி 2014 சட்டமன்றத்தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத ஒரு மாற்று அரசியல் ஆட்சியைக் கொண்டுவருவதற்கான களத்தை அமைப்பது இரண்டிலும் மிகுந்த அனுபவங்களின் அடிப்படையில் அறிவு சார்ந்து நான் இந்த வியூகத்தை அமைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

வெற்றி கிடைக்கும் என்றால் தமிழகத்திற்கு நல்லது, தோல்வி வந்து சேருமென்றால் இழப்பு எனக்கு எதுவுமில்லை காரணம் எப்பொழுதும் நான் சொல்கிறேன், திரும்பத்திரும்ப சொல்கிறேன் நான் பொதுவாழ்வில் அடியெடுத்துவைத்த நாள் முதல் இன்று வரை எனக்காக நான் வாழவில்லை, என் குடும்பத்திற்காக நான் வாழவில்லை, என்னுடைய தந்தையினுடைய சடலத்தை நெருப்பில் போட்டு நான் வழியனுப்புகிற பொழுதே சத்தியம் செய்தேன் என் வாழ்வின் இறுதிநாள் வரையில் தேர்தல் களத்தில் நான் நிற்க மாட்டேன். நான் எந்தக் காலத்திலும் தேர்தலில் நிற்க மாட்டேன். அரசு சார்ந்த ஒரு கடைநிலை ஊழியர் பதவியில் கூட நான் வந்து அமரமாட்டேன்.

இந்த இரண்டு சத்தியங்களோடு புறப்பட்டு இருக்கிற ஒரே அரசியல்வாதி நான்தான், தமிழ்நாட்டில் தெளிவாகச் சொல்கிறேன். எனவே என் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நடுநிலையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் தமிழருவி மணியனுடைய எழுத்திலும் பேச்சிலும் மிகுந்த நம்பிக்கையை வைத்திருப்பதனாலேதான் சென்றமுறை கருணாநிதியை வீட்டிற்கு அனுப்புவதில் என்னுடைய பணி மிகக் கணிசமாக இருந்தது என்பதை பெருமிதத்தோடு சொல்லுவேன்.

எனவே மோடி நல்லவரா அல்லது கெட்டவரா என்று நாயகன் பாணியில் கேள்விகேட்டுக்கொண்டிருக்க நான் தயாராக இல்லை. என்னுடைய பிரச்சினை என் இனத்தைஅழித்த இந்த இந்திரா காங்கிரசை வீட்டிற்கு அனுப்புவதற்கு எது சரியான வியூகம் அதை அமைப்பதுதான் எனவே அந்தவகையில் நான் தெளிவாகவே என் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

கேள்வி: காந்திய வழியில் ஈராண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் இடிந்தகரை மக்களின் போராட்டம் குறித்து உங்கள் கருத்து?

பதில்: உண்மையிலேயே உலக வரலாற்றில் காந்தீயம் என்ற ஒன்று எந்த இடத்தில் பதிவுசெய்யப்பட்டாலும் அந்த இடத்தில் அணுமின் உலைக்கு எதிராக இடிந்தகரை மக்கள் நடத்தக்கூடிய சாத்வீகம் சார்ந்த அறவழிப்போராட்டம் நிச்சயமாக தவிர்க்கமுடியாமல் பதிவுசெய்யப்படும். நான் உதயகுமாருடைய மிகப்பெரிய சாதனையாக கருதுவது இந்த ஒன்றைத்தான். படித்த,பண்பட்ட மக்களை வைத்துக்கொண்டு ஒரு வன்முறையற்ற போராட்டத்தை நடத்துவது கூட எளிதானது. ஆனால் இடிந்தகரையும், இடிந்தகரையை சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களும் முழுக்க முழுக்க மீனவர்களைப் பெற்றிருக்கக்கூடிய கிராமங்கள்.

அவர்கள் கடலிலே சென்று மீன்பிடிப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள், உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், எதற்கும் விரைவில் கத்திஎடுத்து பழக்கப்பட்டவர்கள், உணர்ச்சிவசப்படக்கூடிய அந்த மக்களை தன் பின்புலமாக வைத்துக்கொண்டு இன்றுவரையில் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குமேல் நடந்துகொண்டிருக்கிறது இதுவரையில் ஒரு வன்முறை சம்பவம் கூட உருவாவதற்கு அனுமதி இல்லாமல் உதயகுமார் நடத்தக்கூடிய போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பெருவாரியான மக்கள் தலைவணக்கம் செய்கிறார்கள். மின்வெட்டு என்பதை ஒரு பிரச்சனையாகக் காட்டி இவ்வளவு மோசமாக மின்வெட்டு இருக்கிறதே தமிழகத்தின் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தேங்கிக் கிடக்கிறது இந்த நிலையில் உதயகுமார் தேசத்துரோகம் செய்கிறார் என்பது போல சிலர் குற்றச்சாட்டுகளை வைத்தாலும்கூட அதுசெல்லுபடியாகவில்லை.

எப்போதும் ஒன்று சொல்லுவேன் அறவழியில் நடத்தக்கூடிய போராட்டம் விரைவிலேயே தீர்வைத் தந்துவிடாது. காலம் கொஞ்சம் ஆகும் நிச்சயமாக அந்தப் போராட்டம் நீங்கள் அணுஉலையை மூடுகிற ஒரு இடத்தில் வந்து நிற்கும் அதற்கான ஆதரவை நாங்கள் அனைவரும் எல்லாவழியிலும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கேள்வி: தஞ்சைத் தரணியில் எண்ணெய், மற்றும் எரிவாயு எடுக்கும் முயற்சியினால் விவசாய நிலங்கள் அழிந்து கொண்டு வருகின்றன என்று செய்திகள் வருகின்றன. மக்களை மதிக்காமல் அரசுகள் பெரும் நிறுவனங்களுக்கே ஆதரவு கொடுத்து வருகின்றன. இதை மக்கள் சக்தியால் எப்படித் தடுத்து நிறுத்த முடியும்?

பதில்: தஞ்சை நிலப்பகுதியில் விவசாயமே பாதிக்கப்படுகிறார்போல், கெயில் நிறுவனம் இதுபோன்ற எரிவாயுக்குழாய்க்களை பதிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டபொழுது தமிழக அரசு அதற்கு எதிராக தடைவிதித்தது. ஆனால் அந்த தடையாணையை தூக்கி எறிவதற்காக அவர்கள் நீதிமன்றம் சென்றார்கள். கேடாக தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய உயர்நீதிமன்றமே அந்த கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே இதை என்ன செய்வது. எல்லாவற்றுக்கும் இறுதியாக நாம் போய் நிவாரணம் தேடி நிற்கக்கூடிய இடம் நீதிமன்றம்தான். அந்த நீதிமன்றமே மக்கள் மன்றத்தினுடைய மனோபாவத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்குகிற பொழுது நாம் என்ன செய்வது. எனவே அடுத்து இதை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டுபோய்தான் நாங்கள் பரிகார தேடவேண்டிய நிலை இருக்கிறது.

ஒரு ஜனநாயக அமைப்பில் எல்லாவற்றிற்கும் மக்கள் உடனே வீதியிலே வந்து நின்றுவிடமாட்டார்கள். ஒவ்வொருநாளும் புரட்சி வெடிக்க வாய்ப்பே கிடையாது. ஐந்தாண்டுகள் அமைதியாக இருப்பார்கள். தேர்தல் வருகிறபொழுது தங்களுடைய கோபத்தை வெளிப்படையாக வாக்குச்சீட்டின் மூலமாக வழங்குவார்கள். எனவே நாடாளுமன்றத்தேர்தல் வர இருக்கிறது கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே ஏவல் கூவலாக இயங்கக்கூடிய இந்த மத்திய அரசிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கே அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் கையில் வலிமைமிக்க ஆயுதம் இருக்கிறது அதுதான் வாக்குச்சீட்டு. வருகிற ஆண்டு மே மாதம் அந்த வாக்குச் சீட்டை அவர்கள் பயன்படுத்துவார்கள் இந்த கார்ப்பரேட் கூலிகளாக இருக்கக்கூடியவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு முயல்வார்கள்.

கேள்வி: இளைஞர்களுக்கு மனிதநேய உணர்வு, தாய்மொழிப்பற்று, பண்பாட்டுப் பற்று, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்றவற்றை ஊட்ட என்னென்ன செய்து வருகிறீர்கள்?

பதில்: முதலில் தமிழ் மொழி மீது பற்று வேண்டும், தமிழ்நாட்டுத் தெருக்களிலே தமிழ்தான் இல்லை என்று பாவேந்தர் பாரதிதாசன் 1960ல் தொடக்கத்திலேயே புலம்பினார். அதற்குப் பிறகு 60 ஆண்டுகள் ஏறக்குறைய ஓடிவிட்டன. ஆனால் இப்பொழுது தமிழ் முறையாகப் பேசக்கூடிய இளைஞர்கள் எத்தனைபேர் என்று கணக்கெடுத்தால் 10 விரலைக்கூடிய நீட்டமுடியாத நிலை இருக்கிறது. முதலில் தமிழைப் பாதுகாக்க வேண்டும். ஒரு மொழியை நாம் தொடர்ந்து பராமரிக்காமல் போனால் கண்முன்னாலேயே அது கல்லறைக்குப் போய்விடும்.

எனவே மொழியைப் பாதுகாப்பது முக்கியம். அதனால்தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கல்லூரிகளிலும் நான் சென்று தாய்மொழிக் கல்வியினுடைய அவசியத்தையும் தாய்மொழியின் மீது மனிதன் கொள்ளவேண்டிய பற்றையும் நீங்கள் வயிற்றுக் கல்வி என்பது வாழக்கைக் கல்வி என்பது வேறு என்கிற வேறுபாட்டையும் விளக்கமாக எடுத்துவைக்கிறேன். நீங்கள் சோற்றுக்கு வழிதேடிக்கொள்வதற்காக எந்த மொழியையும் படியுங்கள் ஆங்கிலம் படியுங்கள், பிரெஞ்சு படியுங்கள், ஜெர்மன் படியுங்கள், ஹிந்தி படியுங்கள் எதையும் படியுங்கள் அது சோறு போடும் ஆனால் சோறுமட்டும்தானா வாழ்க்கை? சோறுதான் வாழ்க்கை என்றால் விலங்குக்கும் அதுதானே வாழ்க்கை, பிறகு விலங்குக்கும் உனக்கும் என்ன வேறுபாடு. எனவே பண்பாடு என்பது மிகமுக்கியமானது.

காலம் காலமாக நம்முடைய மூதாதையர்கள் செதுக்கி செதுக்கி சிற்பமாய் வடித்துக் கொடுத்திருக்கக்கூடிய பண்பாட்டு பாரம்பரிய விழுமியங்களை இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்ளவேண்டும் என்றால் நீங்கள் உங்கள் தாய்மொழியைத்தான் படித்தாக வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை வளம்பெறும். எனவே வாழ்க்கைக் கல்வியைப் பெறுவதற்காக தாய்மொழியை நீங்கள் மறக்காமல் படிக்க வேண்டும் அதை புறக்கணிக்கக்கூடாது. தாயைப்புறக்கணிப்பதை விட பாபகரமானது தாய்மொழியைப் புறக்கணிப்பது என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டு வருகிறேன். ஏராளமான இளைஞர்களின் இதயங்களில் அந்த மனமாற்றத்தை என்னாலே சந்திக்க முடிகிறது.

சுற்றுப்புறச்சூழலுக்காக எங்கள் இயக்கம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதிலே இருந்து ஒவ்வொன்றாக நாங்கள் தனித்தனியாக கவனம் செலுத்தி, ஒரு குப்பைக்கூடையை வைப்பதிலேயிருந்து காகிதங்களை அப்புறப்படுத்துவதிலேயிருந்து, கழிவுநீரை எப்படி அப்புறப்படுத்துவது என்பதிலேயிருந்து ஒவ்வொன்றாக நாங்கள் செய்துகொண்டு இருக்கிற அனைத்தையும் உங்களிடம் ஒரு நேரம், ஒரு பேட்டியில் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லிவிடமுடியாது செயற்படுகிறோம். ஆயிரம் சொற்கள் தருகிற சாதனையை விட ஒரு செயல் மிகப்பெரிய மேன்மையான சாதனத்தை தந்து முடிக்கும். எனவே எங்களைப் பொறுத்தவரையில் வெறும்பேச்சு பேசிக்கொண்டிருக்கவில்லை, காந்தீய மக்கள் இயக்கம் இந்த மண்ணுக்கு எது நல்லதோ, இந்த மக்களுக்கு எது நன்மை பயக்கக்கூடியதோ அவை அனைத்திலும் நாங்கள் பார்வையைச் செலுத்தி எல்லாவற்றிலும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். வாக்கு வங்கிக்காக நாங்கள் எதையும் செய்வதில்லை. அதனால் ஓசைப்படாமல் ஆரவாரமில்லாமல் ஆடம்பரத்தோடு காட்சி தராமல் எளியமுறையில் தூய்மையாக எங்களுடைய இயக்கப் பணிகள் மக்கள்நலன் சார்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

கேள்வி: தமிழக தமிழர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் இறுதியாக தாங்கள் கூறும் அறிவுரை?

பதில்: தமிழக தமிழர், மலையகத் தமிழர், ஈழத் தமிழர், புதுவைத் தமிழர், பாரிசு தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் என்று தனித்தனியாக மனதில் கோடுபோட்டு வைத்திருப்பதை முதலில் அழித்துவிடவேண்டும். தமிழர் அவ்வளவுதான். கங்கை என்று ஒரு நதி இருக்கும், யமுனை என்று ஒரு நதி இருக்கும், காவிரி இருக்கும், வைகை இருக்கும், பாலாறு இருக்கும், தாமிரபரணி இருக்கும் என்று வெவ்வேறு பெயர்களில் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். அத்தனை நதிகளும் ஒரு மகா சமுத்திரத்தில் சங்கமித்துவிடுகிற பொழுது அங்கே இருக்கக்கூடிய கடல்நீரில் எந்தெந்த துளி எந்த நதியினுடையது என்று யார் பார்க்கமுடியும். எல்லா நதிகளும் தங்களுடைய தனித்துவத்தை, அடையாளத்தை, பெயரை முற்றாக இழந்துவிட்டு மகாசமுத்திரம் பெருங்கடல் என்ற ஒன்றாக மாறிவிடுவதை போலத்தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஏறக்குறைய 12 கோடி தமிழர்கள் இந்த 12 கோடி தமிழர்களும் தமிழர் என்கிற மொழி அடிப்படையில் இன அடிப்படையில் ஒருமைப்பாட்டு உணர்வோடு சிந்திக்கக்கூடிய நேரம் வரவேண்டும் அந்த நேரம் வருவதற்கான சூழலை ஒவ்வொரு தமிழனும் உருவாக்க வேண்டும்.

இவ்வளவு நேரம் அறிவுப்பூர்வமாக இன்றைய சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை கேள்விக்கணைகளாக என்மீது வீசி அவற்றிற்கு உரிய பதில்களைத் தேட முயன்ற இந்த வேள்வி இனிதாக நடைபெற்றதற்கும், இதை கண்டுறும் தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

 

The following suggestions are examples of the ways in which this can be achieved in large lecture classes, can you do my homework for me as illustrated in the case studies

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தமிழருவி மணியன் நேர்காணல்- பகுதி-1”
  1. senthil kumar says:

    Ever green words, No age to comment your words

அதிகம் படித்தது