கேளடி கண்மணி (கவிதை)
ஆச்சாரிFeb 7, 2014
கல்வி கற்று அறிவு பெறுதல் கற்புடைமையாம்
சொல் தவறா ஒழுக்க நெறியும் கற்புடைமையாம்
கற்புடைமை மகளிருக்கு மட்டுமென இங்கு
வற்புறுத்துவது மனிதரின் மடமையடி கண்மணி
ஒருவனுக்கு ஒருத்தி என்பது கற்புநெறியானால்
ஒருத்திக்கு ஒருவன் என்பதும் கற்பு நெறிதானே
ஒருவனுடன் மட்டுமே உன்வாழ்க்கை என்போர்
ஒருத்தி மட்டுமே ஆணுக்கென்பதை மறப்பதேனோ
வாழ்க்கைத் துணைநலப் பண்புரைத்த வள்ளுவனும்
வாழ்த்துவதேனோ பெண்ணடிமைப் பேதைமையை
பெண்வழிச்சேரல் வாழ்க்கை நெறியுரைத்தவனோர்
பெண்ணில்லை என்பதால் இத்தீங்கடி கண்மணி
வேத நூலாக்கியோர் நெஞ்சில் கொண்டதந்த
பேத மனநிலையே சீரழித்தது பெண்ணுரிமையை
நன்னெறி நூலாக்கியவர் மங்கையரெனில் அதில்
நன்னடத்தை பொதுவாகியன்றோ இருந்திருக்கும்
வீரம் கல்வி செல்வம் என்பதோ ஆணுரிமை
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு பெண்ணுடமை
மிச்சமின்றி பிடுங்கப்பட்ட பிறப்புரிமைகளால்
நச்சுப்பல் பிடுங்கப்பட்ட நாகமானாளடி கண்மணி
ஆண்களுக்கும் நல்ல கற்புநெறி தேவையென்பதை
அடியோடு மறந்திட்டார் மூடமக்கள் நம்நாட்டில்
உடல் வலிமையினால் கல்வி செல்வம் மறுத்தே
அடிமையாக்கினர் பெண்ணினத்தை நம்மண்ணில்
திட்டங்கள் பலவும் சட்டங்கள் பலவும் செய்து
திரையிட்டு மறைத்தார் பெண்களை இங்கே
உரிமையைப் பறித்தே உறுதியைக் குலைத்தார்
உண்மை நிலையுணர்ந்து விழித்திடடி கண்மணி
ஆண் உயர்வென்ற ஆணாதிக்கம் போற்றி
பெண்ணடிமை என்ற தாழ்வெண்ணம் ஏற்றி
அடக்கினார் பெண்களை திட்டமிட்டு அன்றே
அடங்கினர் பெண்களும் மறுப்பின்றி என்றும்
பிறப்பிற்கொரு நீதியென்ற நெறிமுறை மறுத்து
சிறப்பான கற்பென்பது பொதுவென்று உரைத்து
பிறப்புரிமை என்பதில் அடங்காது அடிமைத்தனமென
சிறப்புடன் கூறி சீரிய வாழ்வு காண்பாயடி கண்மணி
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கேளடி கண்மணி (கவிதை)”