மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழினம்மேன்மையுற…. பாகம்-3

ஆச்சாரி

Mar 1, 2014

தமிழினம்மேன்மையுற….

’மெல்லத் தமிழினி சாகும்’ என்கிற புலம்பலையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. தமிழ் நிச்சயம் வாழும் ஆனால் யாரிடம்? தமிழாசிரியரிடமும் அறிஞர் பெருமக்களிடமா? அல்லது பெரும்பாலான தமிழரிடமா? பதில் நம் அனைவரின் செயல்களில்தான் உள்ளது.

’எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை

தகத்தாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!’

புரட்சிக்கவியின் அந்நாள் வேதனை இந்நாளிலும் நம் பலருக்குள்ளது. தமிழின் சிறப்பு தொன்மையிலில்லை, அதன் தொடர்ச்சியிலும், இலக்கிய வளத்திலுமுள்ளது என்பார் பெருமக்கள். அத்தனை வளமுள்ள தமிழ் மொழியின் இன்றைய நிலையைக் கண்டால் மனம்வதங்கி சோர்வுதான் தருகிறது. ஆனால்  சிறு சிறு நம்பிக்கையில்லாமலில்லை. பலர் தம்மால் முடிந்தவரை தமிழ்ப்பணி உலகெங்கும் செய்துதான் வருகின்றனர். ஆனால் அது போதுமா? நிச்சயம் போதாதென்பது பெருமக்கள் கருத்து. தமிழை வளர்க்க நம் அனைவரின் பங்கும், உழைப்பும் வெகுவளவில் தேவை. குறைந்தபட்சம் தம் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் வைத்து அவர்களுக்கு நல்ல தமிழ் கற்றுக்கொடுக்க நம் அனைவராலும் முடியும். எத்தனையவர் செய்கின்றனர்? சாதி மத பேதமில்லா பழந்தமிழர் வரலாற்றை நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறோமா? குழந்தைகளுக்கு, ஏன் நம்மில் எத்தனையவருக்கு தெரியும் தமிழரிடம் சாதியிருந்ததில்லையென்று?

சாதியில்லாத பழந்தமிழர் சமுதாயம்

அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் (www.sarii.org) அவர்களின் பழந்தமிழகத்தில் சாதிகள் குறித்த கட்டுரையைப் (http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf).

படித்தவர் எத்தனை? கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்களில் ”வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான  தனபாலன்”, ”வடபரிசாரநாட்டிலிருக்கும்  வெள்ளாளன் புல்லிகளில் பறையன்  பறையனான நாட்டுக்காமுண்டன்”, ”வெள்ளாளன் செய்யரில் பறையன் தென்னகோன், ” ”வடபரிசாரநாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாளன் பையரில் சடையன் நேரியான் பறையன்” போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவ்வாறு வெள்ளாளர் பெயர்களில் ஒரு பகுதியாகப் பறையன் என்ற பெயர் வருவது எதைக்காட்டுகிறது?சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடந்த தமிழகத் தொல்லியல் கழகத்தின் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட பழனியப்பனின் கட்டுரை இதற்கு ஒரு விளக்கம் அளிக்கிறது.

 கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்என்ற நூல், “இடைக்காலக் கொங்கில் வேளாண்மையை வளர்த்தெடுப்பதில் சோழப்பேரரசு ஆர்வம் காட்டியது. அதனால் காடு கொன்று நாடாக்கும் பணி விரைவு படுத்தப் பெற்றது. பல புத்தூர்கள் உருவாக்கப் பெற்றன. இங்கு வாழ்ந்த பழங்குடிகள் வேளாண்மையில் ஈடுபட்டு ஓரிடத்தில் தங்கி வேளாண்மை செய்யும் (sedentary Agriculture) முறைக்கு மாறினர். இது கொங்கு நாட்டுச் சமூக வாழ்வில் ஏற்பட்ட பெருமாற்றமாகும்.” என்று கூறுகிறது. இவ் வேளாண்மை விரிவாக்கம் 9-ஆம் நூற்றாண்டின் இறுதி/10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்திருக்கவேண்டும். இவ்வேளாண்மை விரிவாக்கத்திற்கு முன்னர் கவுண்டர் எனும் கொங்கு நாட்டு மக்கள்  பழங்குடிப் பண்பாட்டுவழி வாழ்ந்தவர்கள் என்பதை ஏறகுறைய 9-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நிகண்டான திவாகரம்

கவுண்டர் சண்டாளராகக் கருதப்பட்டனர் என்பதைக் காட்டுகின்றது. சமணத்தின் கொள்கைகளின்படி வேட்டுவ வாழ்க்கையில் ஈடுபட்டோர் உயிர்க்கொலை புரிவோர். அதனால் அவர்களைச் சமணம் சண்டாளராகக் கருதியது. கவுண்டர் என்ற சொல்லுக்கு ஊர்த்தலைவன் என்பது பொருள். அதனால் திவாகரம் இயற்றப்பட்ட காலத்தில் கொங்கு நாட்டில் ஊர்த்தலைவர்களாக வேட்டுவர் போன்ற பழங்குடிகளே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் வேளாண்மையில் ஈடுபட்ட வெள்ளாளர்கள் ஊர்த்தலைவர்களாக இருந்திருப்பின் திவாகரம் இவ்வாறு கூறியிருந்திராது.

வேளாண்மை விரிவாக்கம் துவங்கிய காலத்திலேயே பறையர்கள் கொங்கில் இருந்திருந்தால்தான் அவர்கள் வேளாண்மை விரிவாக்கம் நிகழும்போதே தங்கள் அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள முடிந்திருக்கும்.

ஏனெனில், பாண்டிநாட்டிலும் சோழநாட்டிலும் வேளாண்மை முறை விரிவடைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே கொங்கு நாட்டில் வேளாண்மை முறை விரிவடைந்துள்ளது. அதனால் கொங்கு நாட்டில் வேளாண்மை விரிவடையும் முன்பு அங்கு வேளாளர்/வெள்ளாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கவேண்டும். அவ்வேளாண்மை கொங்கு நாட்டில் விரிவடையும்போது தொண்டை நாட்டிலிருந்து வந்து குடியேறிய பறையர்களும் அம் முயற்சியில் பெரும் பங்கு வகித்திருக்கவேண்டும். அதனால் தொண்டை மண்டலத்திலிருந்து கொங்கில் வந்து குடியேறிய பறையர்களுக்கு ஏற்கெனவே அங்கு இருந்திருக்கக் கூடிய வெள்ளாளர்களிடமிருந்து வலுவான எதிர்ப்பு இருந்திருக்காது.  படிநிலைச் சமுதாயம் வேரூன்றியிராத காலத்தில் கொங்கு நாட்டில் குடியேறிய பறையர்களும், அங்கிருந்த ஆயர் போன்றோர் வழி வந்தோரும் வேளாண்மை வாழ்வில் முன்னேறிய நிலையில் வெள்ளாளர்கள் என்ற அடையாளத்தை அடைந்திருக்கவேண்டும். இந்த மேல் நிலையாக்கம் “கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே” என்ற கூற்றை நினைவுபடுத்துகிறது. இதைக் கொங்கு நாட்டில் பறையர்களின் முதல் குடியேற்ற அலை எனக் கருதலாம். அதே நேரம் பறையன் என்ற பெயரும் எந்த வகையிலும் குறைவாகக் கருதப்படவில்லை என்பதால்தான்  வெள்ளாளர்களின் பெயர்களின் ஒரு பகுதியாகப் பறையன்  என்ற பெயரையும் கொங்கு மக்கள் வைத்திருக்கவேண்டும். ஆனால் வேளாண்மை விரிவாகிப் பல ஆண்டுகளுக்குப் பின் கொங்கில் குடியேறிய பறையர்கள் படிநிலைக் குமுகத்தில் மேல் நிலையை அடையமுடியவில்லை.  அவர்கள் வெள்ளாளராகக் கருதப்படவில்லை.

2000 ஆண்டுகளுக்கு முன்பு மாங்குடி கிழார் எனும் புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடலில் வரும் வரிகளிகளிருந்து பறையன் என்பது சாதியில்லை, குடியென்று விளங்கும்.

”துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான் கல்லது குடியும் இல்லை”   — புறம். 337

தமிழர்கள் பலர் பறையனென்ற குடியிலிருந்து வந்திருக்க பெரும்வாய்ப்புள்ளது. இது தெரிந்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்களை நாம் அடக்கியாளுவோமா? எனவே உண்மை வரலாறு கற்பிக்கப்பட்டால் சாதி உயர்வில்லாத தமிழ்ச் சமுதாயத்தை நம்மால் கட்டுவிக்க முடியும். மேலும் பழனியப்பன் அதே கட்டுரையின் 4வது பக்கத்தில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘சாக்கைப் பறையனார்’ குறித்து எழுதுகையில் சாக்கைப் பறையனார் போர்த் தளபதியாக இருந்துள்ளார், பல போர்வீரர்களுக்குத் தலைமைத் தாங்கியுள்ளார் என்பதும், ’ஆர்’ என்கிற விகுதியினால் அவரை விளித்திருப்பதிலிருந்து இவர் அக்காலத்தில் பெருமைக்குரியவராக வாழ்ந்திருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.  இவர் வடமொழியிலும் புலமைவாய்ந்தவராக இருந்திருப்பதும் அக்காலத்தில் தீண்டாமை இல்லையென்பதைக் காட்டுகிறது.  தமிழர் உண்மை வரலாறு அறிய பழனியப்பன் எழுதிய கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும்.  எனவே நூல்கள் பல படித்து உண்மை வரலாறு அறிந்து தமிழ்ச்சமுதாயத்தை முன்னேற்ற வழிகாண்போம்.

தமிழர் செயல்திறன்

’வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்’

 இந்த குறள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு செயலைச் செய்யும்முன் அந்த செயலின் கடினம், தன்னிடம் அச்செயலைச் செய்ய வலிமையுள்ளதா, அதனை எதிர்ப்பவன் வலிமை, அவனுக்கும் தனக்கும் உள்ள துணையின் வலிமை போன்றவற்றை ஆய்ந்தபின் அச்செயலைத் துவங்க வேண்டுமென்பதே இக்குறளின் பொருள். பழம்பெருமை வாய்ந்த தமிழர், தென்னாசியாவெங்கும் வெற்றிக்கொடிநாட்டிய தமிழர், இந்தியாவிற்கே பக்தியை கற்றுக்கொடுத்தத் தமிழர், இந்தியத் துணைக்கண்டத்தின் பழமைவாய்ந்த மொழியையும், வளமையான இலக்கியத்தையும் உலகிற்கு கொடையாகக் கொடுத்த தமிழரின் இன்றைய நிலை கவலைக்குரியதாகதான் இருக்கிறது. தமிழன் இன்று பலமிழந்த நிலையில்தான் உள்ளான், இதை மறுப்பவர் எதோ ஒரு மாயையில் வாழ்கிறார்கள் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. முள்ளிவாய்க்கால் அதை நமக்கு மிகத்தெளிவாககக் காட்டியது.

உலகின் சதித்திட்டத்தினால் தமிழன் வீழ்ந்தான் என்பது உண்மையாயிருந்தாலும், இன்றும் பெரும்பாண்மைத்தமிழர் வாழும் இந்திய நாட்டில்கூட தமிழரால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழருக்கு ஆதரவாக மாற்ற முடியவில்லை. அதற்கு அரசியல்கட்சிகளை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. 2009-க்கு முன் இந்திய அரசை மாற்ற தமிழர்கள் என்னென்ன முயற்சிகளைச் செய்தனர் என்பதை சிறிது நினைவிற்கு கொண்டுவர வேண்டும். நம்மில் எத்தனையவர் வட இந்திய ஊடகங்களை, வட இந்தியக் கட்சிகளை, தலைவர்களை  அனுகியிருக்கிறோம்? வெகுசில முயற்சிகள் மட்டுமே, அதுவும் ஒரு சில அரசியல்வாதிகளே. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் நாம் எத்தனை மேடைகள் அமைத்து வீராவேசத்துடன் முழங்கியுள்ளோம்? தமிழ்நாட்டுக்குள் முழங்கி, எழுதி வந்துள்ளோம். ஆனாலும் 8 கோடி தமிழர்களால் முள்ளிவாய்க்காலை தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டிலே நமக்கென்று ஒரு தமிழ் மற்றும் ஆங்கில ஊடகமில்லை. கூட்டங்களுக்கு நாம் செலவு செய்ததெல்லாம் இதற்கு செலவழித்திருந்தால் நமக்கு இந்த குறை இன்றிருந்திருக்காது, மற்றவர்களுடன் கையேந்தும் நிலையும் இருந்திருக்காது.

தன்வலியையும், மாற்றான் வலியையும் அறியாமல் 30 ஆண்டுகாலம் வீணடித்துவிட்டோம். செய்வதில் சில சில வெற்றிகள் அடைந்திருந்தால் இந்நிலை இருந்திருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. 30 ஆண்டுகாலம் போராடி, போராடி என்ன சாதித்திருக்கிறோம்? தேசியத்தலைவர் கூறியபடி போராட்டமே வாழ்க்கையாகி விட்டதே! போராடி போராடி இன்று சோர்வடைந்திருப்பதுதான் நமக்கு கிடைத்த பலன். தமிழரிடம் போராடும் திறனும் உள்ளது, வெல்லும் திறனும் உள்ளது. அதை சரியாக வழிநடத்த நல்லதொரு தலைவன் இல்லாததுதான் குறை. பெரியாருக்குப் பின் தன்னலமற்றத் தலைவன் இல்லாதது பெரியாரின் குறையுமே. நல்ல தலைவன் இல்லாததால் அரசியல் கட்சிகள் இளைஞர்களை தத்தம் வழிக்குப் பயன்படுத்திக்கொண்டு சக்கையைவீசிவது போல் வீசுயெறிந்து வருகிறார்கள். இதில் சோர்வடைந்ததுதான் பலன் அந்த இளைஞர் பட்டாளத்திற்கு.

இன்று நமக்கொரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது,  நம் எதிரியை கூண்டிலேற்ற. ஆம் வரும் மார்ச்சு மாதத்தில் ஐநா மனித உரிமை அவையில் இலங்கையை வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சில நாட்களுக்கு ஏற்கனவே எதிர்பார்த்தைதைப்போல் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதப் பிள்ளை அம்மையார் தனது அறிக்கையை அவையின்முன் வைத்துளார். அதில் இலங்கை செய்த குற்றத்தை சுட்டிக்காட்டித் தமிழர் இலங்கையின் நடைவடிக்கையினால் பலனேதும் அடையப்போவதில்லை, போரில் நடந்த உண்மையை அறிய தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு ஒன்றே இறுதிவழி என்று கூறியுள்ளார். அங்கு நடந்த போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளை ஆய இந்த புலனாய்வுக்குழு வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை தமிழகத்தில் சில தமிழ் அமைப்புகள் குறை கூற துவங்கியுள்ளன. போர்க்குற்றம் விசாரனை கூடாது, இனவழிப்பு விசாரனையே வேண்டும், பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று குறைகூறுவது எதிரிக்கு நன்மையே ஏற்படும் என்று நன்கு தெரிந்தும் அப்படி கூறுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இனவழிப்பும், பொது வாக்கெடுப்பும் எந்த நாடாவது கொண்டுவந்தால் ஆதரிப்பதில் நமக்கு எந்த சிக்கலுமில்லை. இந்தியாவை நெருக்கி அப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவர இயலுமா? இந்தியா உதவி செய்யாவிட்டாலும், தமிழருக்கு எதிராகச் செயல்படாமல் இருக்க வைக்க நம்மால் முடியும். கடந்த ஆண்டு மாணவர்களால் இது சாத்தியமானது. இந்த ஆண்டும் அது சாத்தியம் நாம் ஒற்றுமையுடன் போராடினால். ஒவ்வொரு அமைப்பும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் போர்க்குற்றத்தை விசாரிக்கும் தீர்மானத்தை அயோக்கியர்கள் என்பது அவர்களால் தடித்த வார்த்தைகளால் திட்டுவதும் என்ன பயன் தரப்போகிறது?

இந்த மார்ச்சு கூட்டத்தில் அமெரிக்கா போர்க்குற்றத்தை விசாரிக்கக்கோரும் தீர்மானத்தை முன்மொழியவுள்ளதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்கா இது போன்றத் தீர்மானத்தைக் கொண்டுவர நாம் அனைவரும் அமெரிக்காவிற்கும் அதை ஆதரிக்க இந்தியா உட்பட உறுப்பினர் நாடுகளை நெருக்கடி கொடுக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளும் சில தென் அமெரிக்க, நில ஆப்ரிக்க நாடுகளும் அத்தீர்மானத்தை ஆதரிக்க வாய்ப்புள்ளது. இத்தீர்மானத்தை எதிர்த்து அதை தோல்வியுறச்செய்வதினால் ஈழத்தமிழர்கள் அடையும் நன்மை என்ன? இழப்பு என்ன? இலங்கை ஒருபோதும் நம்பிக்கைக்குரிய விசாரனைக்கு உடன்படபோவதில்லை, தமிழருக்கு நீதியையும் அக்கொடூர அரசு அளிக்கப்போவதில்லை. இந்தியாவும் நமக்கு ஆதரவாக இல்லை. இந்த நிலையில் நாம் என்ன செய்வது? சிந்திக்க வேண்டும் தோழர்களே! போர்க்குற்ற விசாரையினால் பல உண்மைகள் வெளிவரும், அங்கு நடந்தது இனப்படுகொலையே என்கிற உண்மையும் வெளிவரும், அதன்பின் பொதுவாக்கெடுப்பு கோரினால் உலகம் நம்மை ஆதரிக்க வாய்ப்புள்ளது. இப்பொழுதுதான் உலகநாடுகள் இலங்கை அரசின் கோரமுகத்தை அறிந்துள்ளது, இந்த தீர்மானத்தின் வெற்றியில் நமது எதிர்காலம் அடங்கியுள்ளது.  உலக அரசியலை அறிந்து செயல்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள். எந்த நாடும் தனி ஈழநாட்டை வாங்கித் தந்துவிடப்போவதில்லை. நிச்சயம் ஒருநாள் ஈழம் அடைவது உறுதி, ஆனால் வெற்றி படிப்படியாகதான் வரும்.

தமிழக உடன்பிறப்புகளுக்கு நான் விடுக்கும் கோரிக்கை இதுதான். இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் உங்களது போராட்டம் அமையட்டும். குறைந்தபட்சம் இந்தியா இந்த முறை நமக்கு எதிராகச் செயல்பட்டு கிடைக்கும் தீர்மானத்தையும் நீர்க்க வைக்காமல் தடுப்பது நம் எல்லோருடைய கடமை. Commission of Inquiry மூலம் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு ஒன்றே இன்றையத் தேவை. ஒருவேளை அமெரிக்கத் தீர்மானத்தில் பன்னாட்டு புலனாய்வு இடம்பெறவில்லையென்றால் அதை கடுமையாக எதிர்த்து நமது கோரிக்கை அதில் இடம்பெற வைப்பது நமது கடமை.

- எண்ணங்கள் தொடரும்

A free cell phone tracker online of http://besttrackingapps.com parent’s first concern might be about gossip getting out of hand

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழினம்மேன்மையுற…. பாகம்-3”

அதிகம் படித்தது