மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தவறான திசையில் தமிழிசை ஆர்வம் – பகுதி 2

ஆச்சாரி

Mar 1, 2014

ஒரு பாடலின் சொற்களில் உள்ள எழுத்துக்களின் ஒலிக்கும், சுர இசைக்கும் உள்ள தொடர்பு பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் நிறைய சான்றுகள் உள்ளன. அவற்றில் சில வருமாறு:

“”யாழெழுத்திற் பாவாற் புணர்க்க ” -பஞ்ச மரபு 89

” யாழ் ஒக்கும் சொல்” -கம்பராமாயணம் -பால காண்டம்- பூக்கொய் படலம் 24

“”எழுத்தும் புணருத்தான் மணிய

வண்ணக்கன் தேவன் சாத்தன் ” அரச்சாலூர் கல்வெட்டு (கி.பி.2ஆம் நூற்றாண்டு

” “அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும்

உள ‘ என மொழிப:- ‘ இசையொடு சிவணிய நரம்பின் மறைய’ என்மனார் புலவர்.” – தொல்காப்பியம்- எழுத்து 1:33

அது மட்டுமல்ல, பாடலில் வரும் சொற்கள் உணர்த்தும் பொருளை உணர்ந்து, அதனுடன் இசை பொருந்துவதை உணர்ந்தால் தான் பாடலின் இனிமையை மனதில் உணர முடியும் என்பதைக் கீழ்வரும் சான்று உணர்த்துகிறது.

” பண் இனிது பாடல் உணர்வார் அகத்து” – நான்மணிக்கடிகை 39

தமிழ் இசை முயற்சிக்கு எதிராக “இசைக்கு மொழியே வேண்டியதில்லை’ என்ற வாதம் நடைமுறையில் தமிழ் இசைக்கு மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிப் பாடல்களுக்கும் பாதகமாக அமைந்தது என்பதை மேலேக் குறிப்பிட்ட சான்றின் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம்.. தெலுங்கு சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை முறையாகப் படிக்காமல், ஒவ்வோரு சொல்லுக்குமான அர்த்தம் புரியாமல், அம்மோழிகளில் உள்ள பாடல்களைச் சரியான உச்சரிப்பு இன்றி, தவறுதலாக கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாட அது வழி வகுத்தது. தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தெரியாதவர்கள் பெரும்பான்மையாக அரங்கில் உள்ள கச்சேரிகளில் அத்தவறை பெரும்பான்மையோர் கண்டுகொள்வதில்லை. இயல்பான இசை ரசனைக்கு மாறான மன ரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட (Mental Conditioning)  இசை ரசனைக்கு இது வழி வகுத்தது. ஆங்கிலத்தில் எதைப் பேசினாலும் (உளறினாலும்) புத்திசாலித்தனம், உயர்வானது என்பதைப் போன்றதே இது. மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டைப் பற்றி பேசுவதே உயர்வானது என்பதையும் போன்றதே இது.

இந்த மன ரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட (Mental Conditioning)  இசை ரசனை காரணமாக தமிழ்ப் பாடல்களையும் தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிப் பாடல்களைப் போல் பாடும் தவறும் கச்சேரிகளில் அரங்கேறுகிறது. அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற பாடல் கூறுகளின் இசையியல் பரிமாணங்கள் பற்றிய எந்தப் புரிதலும் இன்றி இசைக் கச்சேரிகளில் பாடப்படும் தமிழ்ப் பாடல்களும் தமிழிசைக்கு இழைக்கப்படும் அநீதிகளே. எனினும் இளைஞர்களிடம் இசைக்கச்சேரிகளில் உள்ள தவறுகளை (இசைக் கல்வியில் உள்ள சுருதிக் குழப்பங்களை) அடையாளம் கண்டு, பகிரங்கமாக விவாதிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தவறுதலான உச்சரிப்புகளுடனும், சுருதிக் குழப்பங்களுடனும் பாடும் இசைக்கச்சேரிகளை  “நம்மாளு’ என்பதற்காக கண்டு கொள்ளமல் இருப்பதற்கு மேலே சொன்ன போக்கு சவாலாக வளர்ந்து வருகிறது.

தமிழ் மாணவர்களும், இசை மாணவர்களும் அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற பாடல் கூறுகளின் இசையியல் பரிமாணங்கள் பற்றி பயில்வார்களானால்,  தமிழ்ப் பாடல்களால்  தமிழிசைக்கு இழைக்கப்படும் அநீதிகள் முடிவுக்கு வரும்.

.இசைத்தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் (Music Information Technology) மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் கர்நாடக இசையில் ஸ்வரம், ஸ்வரஸ்தானம், சுருதிகள் அடிப்படையிலான இசையியல் கொள்கைகளைக் கேள்விக்குறிகளுக்கு உட்படுத்தியுள்ளன. கூடுதல் தகவலுக்கு www.musicresearch.in

இளைஞர்களிடம் உள்ள, எதையும் துணிச்சலுடன் திறந்த விவாதத்திற்கு உட்படுத்தும் போக்கு இசையில் உள்ள குழப்பங்களையும், குறைகளையும் நீக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய கர்நாடக  இசை என்பது பல மூலங்கள் (Sources) அடிப்படையில் பல உருமாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. வேத இசை, மராத்திய இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை (கர்நாடக இசை முமூர்த்திகள் மேற்கத்திய இசையைப் பின்பற்றியும் பாடல்கள் உருவாக்கியுள்ளனர்.) உள்ளிட்ட பல மூலங்களைக் கொண்டது. பழந்தமிழ் இசை என்பதும் அந்த மூலங்களில் ஒன்றாகும். கல்லணையில் ஒடும் நீர் காவிரியில் குடகு மலையில் பெய்த மழை நீர் என்பது போன்ற வாதமே “களவாடிய இசையே கர்நாடக இசை’ என்ற வாதமும் ஆகும்.

நதி மூலம், ரிஷி மூலம் போன்றதே இசை மூலமும் ஆகும். இசை மூலம் பற்றிய சார்பற்ற ஆய்வுகள் இசை அறிவை வளர்க்கவே துணை புரியும். மாறாக, தமது இசையே உலகில் தொன்மையானது என்றும், தமது இசை வேறு எந்த இசையிலிருந்தும் எதையும் பெறவில்லை என்றும், பிற இசைகளுக்கு தமது இசையே உதவியது என்றும், உணர்வுபூர்வமான நிலைப்பாடுகள் எடுத்து, அவற்றின் அடிப்படையில் நடைபெறும் ஆய்வு முயற்சிகள் இசை உலகில் வேண்டாத சிக்கல்களை ஏற்படுத்தவே துணை புரியும். அதன் விளைவு இசை அறிவு வளர்ச்சிக்குப் பாதகமாகவே அமையும்.

படித்த தமிழர்களிடம் கூட தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இசையைப் பயிற்றுவிக்கும் பண்பாடு இன்றும் இல்லை. சென்னையில் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்கள் பாடப்படும் போது அரங்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே. தமிழ் இசையில் ஆர்வலர்களாக பேச்சிலும் எழுத்திலும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் பலரால் இத்தகைய அரங்கில் அமர்ந்து தமிழ் இசையை ரசிக்க முடிவதில்லை. குறைந்த பட்ச இசைப் பயிற்சி இல்லாததே இதற்குக் காரணமாகும். கச்சேரிகளில் இன்று தமிழுக்கு போதிய முக்கியத்துவம் இல்லாததற்கு தமிழர்களிடையே குழந்தைகளுக்கு இசைப் பயிற்றுவிக்கும் பண்பாடு இல்லாததே காரணமாகும்.

இசையில் உயர்வு தாழ்வு என்பதெல்லாம் அவரவர்கள் மனதைப் பொறுத்த சார்பு (Subjective) அணுகுமுறையாகும். கிறித்துவ ஆன்மீக இசை உள்ளிட்ட மேற்கத்திய இசையும், அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்கர்களின்  மேற்கு ஆப்பிரிக்க இசையும் கலந்து உருவானதே ஜாஸ் (Jazz) இசையாகும். ஐரோப்பாவில் நாட்டுப்புற இசைகளை வேர்களாகக் கொண்டு வளர்ந்ததே சிம்பொனி இசையாகும். ஒவ்வொரு வகை இசையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சமூக வரலாற்றுப்  பின்னணி உண்டு. இன்றைய சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைச் சரியாக அடையாளம் கண்டு தீர்ப்பதற்கு, சமூக வரலாற்றுப்  பின்னணியுடன் கூடிய சார்பற்ற இசை ஆய்வுகள் வழி வகுக்கும்.

உண்மையில் இந்திய இசைகள் அனைத்தும் வெவ்வேறு அளவுகளில்  காலனியமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டன. இன்று உலகமயமாக்கலின் விளைவாக, குறைபாடுகள் மிகுந்த- ஈகுவல் டெம்பரமண்ட் (Equal Temperament) ஆதிக்கத்தில் அவை மோசமாக சிக்கி வேகமாக சீரழிந்து வருகின்றன. சுமார் 60 வருடங்களுக்கு முந்தைய கர்நாடக இசைப்பதிவுகளையும், நாதசுர  இசைப்பதிவுகளையும், இன்றுள்ள இசைப்பதிவுகளுடன் ஒப்பிட்டால் இந்த சீரழிவின் வேகம் தெளிவாகும்.

ஒரு ஊரின் “கோத்திரத்தை’ அந்த ஊரின் இசையை வைத்து கண்டறியலாம் என்பதை நாலடியார்(242) விளக்கியுள்ளது. சமுகத்தில் உள்ள சீரழிவுகளைக் கண்டறியவும், அவற்றை நீக்கி வளர்க்கவும் மேற்கோள்ளப்படும் முயற்சிகளில் இசை சம்பந்தப்பட்ட முயற்சிக்கும் முக்கிய இடம் உண்டு.

இந்திய சிந்தனையைக் காலனியமயத்திற்கு உள்ளாக்கி, இந்திய மக்களிடையே இருந்த வேறுபாடுகளை பகை முரண்பாடுகளாக முதலைக்கண்ணீர் வடித்து வளர்த்து, தமது காலனிய நலன்களைப் பேணிப் பாதுகாத்தது காலனிய ஆட்சி. இன்று உலகமயமாக்கலில் பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக அது இன்னும் மோசமாக மாறுகிறது. வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்பட்டுள்ள தமிழிசை ஆர்வலர்களும், கர்நாடக இசை ஆர்வலர்களும்  தமக்குள் உயர்வு-தாழ்வு மோதலில் ஈடுபட்டு வருவதை உடனே நிறுத்தி, என்னென்ன பாதிப்புகள் எப்படியெப்படி ஏற்பட்டன என்பது பற்றி புரிந்து அக்கறை செலுத்தினால் தான் தமிழிசையை மீட்க முடியும், கர்நாடக இசையை வளர்க்க முடியும் என்பது எனது பணிவான கருத்து ஆகும்.

நமது பாரம்பரிய வேர்களை முற்றிலும் அழித்து தான் சமூகத்தை முன்னேற்ற முடியும் என்பது நமது சிந்தனை காலனியமயமானதன் (Colonisation of Indian Mind) விளைவாகும். நமது பாரம்பரியத்தை சமஸ்கிருத பாரம்பரியமாக, அதிலும் வேதமற்ற (Non-Vedic) சமஸ்கிருத பாரம்பரியத்தைத் தவிர்த்து, சுருக்கி   முன் வைத்த முயற்சிகளும் காலனியமயமாக்கல் சூழ்ச்சிக்கு துணையாகவே அமைந்தது. நமது பாரம்பரிய வேர்களை விருப்பு வெறுப்பின்றி முழுவதுமாக அடையாளம் கண்டு, அந்தப் பின்னணியில் இன்றுள்ள சிக்கல்களைப் புரிந்து, மேற்கோள்ளப்படும் முயற்சிகளே சமூக வளர்ச்சிக்குத் துணை புரியும் என்பதை சமூக அக்கறையுடன் மேற்கொள்ளபபட்ட எனது இசை ஆய்வுகள் உணர்த்துகின்றன.

It doesn’t have to be about what you see from smartphone monitoring you could bring it up in the context of a story from the media about teens or celebrities http://spyappsinsider.com

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தவறான திசையில் தமிழிசை ஆர்வம் – பகுதி 2”
  1. karthik says:

    சிறப்பான கட்டுரை. கர்நாடக சங்கீதம் தமிழிசையில் இருந்து வந்தது என்பது தமிழிசைக்கு செய்யும் சிறுமை என்பதை சுட்டாமல் சுட்டி உள்ளீர்கள்.

  2. kasi visvanathan. says:

    ஒரு நிறைவான கட்டுரை. பாராட்டுக்குரிய படைப்பு. இந்த சிந்தனை சற்றெ திராவிட காலத்தில் இருந்திருந்தால் தமிழிசை கூச்சல் போட்ட காட்டுமிராண்டிகளை, நம் தந்தை பெரியார் எளிதில் ஒடுக்கியிருப்பார். காலத்தின் கோலம் உஞ்சவிருத்தியில் திருவையாறில் கருநாடகம் வளர்த்த/ வளர்க்கின்ற பெருந்தகைகளின் மனம் அமைதியுறும் வண்ணம் பதிவான நிறைவான கட்டுரை. அதிலும் ஒரு கல்லில் பல மாங்காய்களை உதிர்ப்பது உச்சம்.
    1. கரகரப்பிரியாவில் தொடங்கியது போல் இருந்த இசைவெள்ளம் திடுமென செஞ்சுருட்டியாகி அப்படியே, கல்லணையில் வரும் தண்ணீர் குடகுமலையில் உண்டாகும் மழை நீர்தான் என்பதனை உணராமல் பேசும் காட்டு மிராண்டிகளை குத்துவதற்கு எழும் வேளையில், அப்படியே சந்திலே சிந்து பாடியது, நெற்றியடி. சுரணையுள்ள தமிழன் வாய் திறக்க மாட்டான். சுரணையுள்ள தமிழன் எல்லாம் டாஸ்மாக்கில் – காம்போதியில் சுதி லயம் தேடிக்கொண்டிருப்பான்.
    2.சொம்பு திருடிய பக்கத்து வீட்டுக் காரன் கூட, பக்குவமாய் திருடிய விலாசத்திற்கு முன் தன் விளசாத்தையும் சேர்த்து தான் பட்டா எழுதுகின்றான். மாற்றான் பண்பாட்டை களவாடியவர்கள் எதற்கும் துணிவார்கள்.
    3. கல்லணையில் உள்ள தண்ணீரும் கூட இந்தக் காட்டுமிராண்டிக்கு சொந்தமில்லை என்பதை தாள லயம் தப்பாமல் சுருதி சேர்த்து வக்கரிக்ககூடிய சீர்திருத்த எதார்த்தம் நமக்கு மட்டும் தான் உண்டு. தொடர் இசையாக அசை போட்டு, அடுத்து வரும் யுகாதிக்குப் பின் முக மூடி அணிவித்த தமிழனுக்கு நாம் ஷண்முகப்பிரியா ராகத்தில் – ” திராவிடத் திரு நாள் ” வாழ்த்துக் கூறி, எச்ச மிச்சமாய் சுரணையுள்ள தமிழனுக்கு திராவிடப் பொங்கலையும் சேர்த்து சொல்லுவோம்.
    சதாஸ்து ……..!!!!!!!!

  3. kasi visvanathan. says:

    ஒரு நிறைவான கட்டுரை. பாராட்டுக்குரிய படைப்பு. சிந்தனை சற்றெ திராவிட காலத்தில் இருந்திருந்தால் தமிழிசை கூச்சல் போட்ட காட்டுமிராண்டிகளை நம் தந்தை பெரியார் எளிதில் ஒடுக்கியிருப்பார். காலத்தின் கோலம் உஞ்சவிருத்தியில் திருவையாறில் கருநாடகம் வளர்த்த/ வளர்க்கின்ற பெருந்தகைகளின் மனம் அமைதியுறும் வண்ணம் பதிவான நிறைவான கட்டுரை. அதிலும் ஒரு கல்லில் பல மாங்காய்களை உதிர்ப்பது உச்சம்.
    1. கரகரப்பிரியாவில் தொடங்கியது போல் இருந்த இசைவெள்ளம் திடுமென செஞ்சுருட்டியாகி அப்படியே, கல்லணையில் வரும் தண்ணீர் குடகுமலையில் மழை நீர் என்பதனை உணராமல் பேசும் காட்டு மிராண்டிகளை குத்துவதற்கு எழும் வேளையில் அப்படியே சந்திலே சிந்து பாடியது, நெற்றியடி. சுரணையுள்ள தமிழன் திறக்க மாட்டான். சுரணையுள்ள தமிழன் எல்லாம் டாஸ்மாக்கில் – காம்போதியில் சுதி லயம் தேடிக்கொண்டிருப்பான்.
    2.சொம்பு திருடிய பக்கத்து வீட்டுக் காரன் கூட பக்குவமாய் திருடிய விலாசத்திற்கு முன் தன சேர்த்து தான் பட்டா எழுதுகின்றான். மாற்றான் பண்பாட்டை களவாடியவர்கள் துணிவார்கள்.
    3. கல்லணையில் உள்ள தண்ணீரும் கூட இந்தக் காட்டுமிராண்டிக்கு சொந்தமில்லை என்பதை தாள லயம் தப்பாமல் சுருதி சேர்த்து வக்கரிக்ககூடிய சீர்திருத்த எதார்த்தம் நமக்கு மட்டும் தான் உண்டு. தொடர் இசையாக அசை போட்டு, அடுத்து வரும் யுகாதிக்குப் பின் முக மூடி அணிவித்த தமிழனுக்கு நாம் ஷண்முகப்பிரியா ராகத்தில் – ” திராவிடத் திரு நாள் ” வாழ்த்துக் கூறி, எச்ச மிச்சமாய் சுரணையுள்ள தமிழனுக்கு திராவிடப் பொங்கலையும் சேர்த்து சொல்லுவோம்.
    சதாஸ்து ……..!!!!!!!!

அதிகம் படித்தது