மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம் பகுதி-3

ஆச்சாரி

Mar 22, 2014

ஆங்கில மருந்துகள்தான் உடனடியாக நிவாரணம் தரும், சித்தமருந்துகள் சாப்பிட்டால் குணமாக நாளாகும், பத்தியம் எல்லாம் வேற இருக்கணும் என்கிற எண்ணம்தான் மக்களிடையே பரவலாக இருக்கிறது. ஆனால் அடிப்படையான ஆரோக்கியம் சித்தா முறையில் பாதுகாக்கப்படுமானால் மற்ற மருந்துகளின் உபயோகம் வெகுவாக குறைந்துவிடும் என்பதுதான் உண்மை. CTMR இந்த நிலையை பொதுமக்கள் உணரவேண்டும் என்பதற்காக பெருமளவில் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளது.

அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாத, படிப்பறிவும் இல்லாத மீனவ சமூகத்தினரை CTMR அணுகிய விதம் தான் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு செய்தியாகும். CTMR ன் மருத்துவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் உள்ள பொருட்களின் மருத்துவகுணங்களை எடுத்துச் சொல்லி புரியவைத்து அவற்றை உபயோகிக்கும் முறையையும் கற்றுத் தந்து இருக்கிறார்கள். அங்குள்ள 10வது படிக்கும் மாணவர்களை சளி, காய்ச்சல், வாந்தியெடுத்தல், பாம்பு கடித்தல் போன்றவைகளுக்கு அவர்களிடமே மருந்துகளைக் கொடுத்து சரிசெய்யும் வண்ணம் தயார் செய்து வைத்து இருக்கிறார்கள்.

தொற்று நோய்களான பறவைக் காய்ச்சல், டெங்கு, மலேரியா, காலரா போன்றவற்றிற்கு சித்தாவில் தான் மிகச்சிறந்த மருந்துகள் இருக்கிறது. ஆங்கில மருத்துவர்கள் கூட டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீரை தானே மருந்தாக கொடுத்தார்கள். ஆங்கில மருத்துவமும், சித்தமருத்துவமும் ஒன்றுக்கொன்று போட்டியானது என்று நினைப்பதை தவிர்க்கவேண்டும். எந்த நோய்க்கு என்ன மருந்து கொடுத்தால் குணமாகும் என்றுதான் யோசிக்க வேண்டும்.

நேரம் தவறிய, முறையற்ற பழக்கத்தினால் ஏற்படும் உடற்பருமனுக்கு சித்தவைத்தியம் மிகச்சிறந்தது. இம்மருந்துகள் சாப்பிடும் பொழுது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்று மருத்துவர் சொற்படி கேட்டு நடந்தால் பூரண குணம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.

ஒரு மருத்துவர் ஒரு நாளில் செவிலியின் உதவியுடன் 30 நோயாளிகளைப் பார்ப்பது என்பது நோயுற்றவர்களின் நிலைமையை நன்கு கணித்து மருத்துவ உதவி செய்ய வசதியாக இருக்கும் என்று CTMRநிறுவனம் நினைப்பது சரிதான். வேண்டுமெனில் மருத்துவர்களை அதிகப்படுத்திக் கொள்ளலாமே தவிர, மருத்துவர் நோயாளிகளை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. (நான் முதல்வாரத்தில் கூறியபடி நிறைய கூட்டம் வந்தால் மருத்துவர் மிகக் கெட்டிக்காரர் என்ற எண்ணம் தவறானது)

CTMRன் கவனிப்பால் இப்பொழுது மீனவ சமுதாயத்தினர், மிக எளிதான வழிமுறைகளைப் பின்பற்றி எளிதில் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் போன்ற நோய்களில் இருந்து தங்களை குணப்படுத்திக் கொள்ளுகின்றனர். ஆவிபிடித்தல், வீட்டில் உள்ள மஞ்சள் போன்ற சமையல் பொருள்களை வைத்து பற்றுஇடுதல், வயிற்று உபாதைகளுக்கு பெருங்காயம், ஆடாதொடா இலையின் கொதிநீர் (கஷாயம்) ஆகியவைகளை உபயோகிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

மில்லட்ஸ் என்று சொல்லப்படும் சிறுதானியங்களின் பயன்பாடு இவர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. முறையாக இவற்றை உபயோகிக்கும் பொழுது தேவையற்ற உடல்பருமன், கருப்பை நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள் பெருமளவில் சரியாகின்றன. இவற்றின் பயன்பாட்டை வரும் தொடர்களில் தெரிந்துகொள்வோம்.

-தொடரும்


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம் பகுதி-3”

அதிகம் படித்தது