மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தாலப்பருவம்

ஆச்சாரி

Mar 22, 2014

 

குழந்தையைத் தாலாட்டித் தூங்கவைக்கும் பாடல்கள் தமிழகத்திற்குப் புதிதல்ல. தொல்காப்பியத்திலும் கடவுளைக் குழந்தையாகக் கருதிப் பாடிய பாடல்களை தொல்காப்பியம் புறத்திணையஅயல் பகுதி குறிப்பிடுகிறது.

தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியப் பிரிவில் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ். அதில் புலவர்கள் தங்கள் புரவலர்களை, அரசர்களை, கடவுளை பிள்ளையாகக் கற்பனை செய்து பாடுவார்கள். குழந்தையின் வளர்ச்சியில் மூன்றாம் மாதம் முதல் இருபத்தியொன்றாம் மாதம் வரையில் உள்ள வளர்ச்சியின்  காலக்கட்டத்தைப் பத்துப் பருவங்களாகப்  பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பருவத்திற்கும்  பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் மரபு.  அப்பாடல்களில் பாட்டுடைத்தலைவனின் சிறப்புகளைப் பாடல் வழியே உரைப்பதும் பிள்ளைத்தமிழின் இன்றியமையாத இலக்கணம் ஆகும். ஆண், பெண் என இரு பாலருக்கும் பத்துப் பருவங்களுக்கும் பாடல்கள் புனையப்படும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர்  பருவங்களுக்குப் பதிலாக பெரும்பாலும் நீராடல் அல்லது கழங்கு, அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் பாடப்பெறும்.

மூன்றாம் பருவமாக வரும் தாலப்பருவம் என்னும் தாலாட்டுப் பருவம் குழந்தையின் ஏழாம் மாதம் பாடப்படும். பிள்ளைத்தமிழ் இலக்கியம் போன்று குழந்தையைத் தாலாட்டுப்பாடி  தூங்கவைக்கும் தாலாட்டுப்பாடல்கள் தனி சிற்றிலக்கியமாகவும், நாட்டுப்புறப் பாடல்களாகவும், ஏன் இன்றுவரை திரையிசைப் பாடல்கள் வரை தொடர்ந்து எங்கும் பரவியிருக்கிறது.

குழந்தையை தூங்க வைக்கும் பொருட்டு பாடப்படும் தாலாட்டுப் பாடல்கள்களின் மூலமாகப் பல கதைகளும் செய்திகளும், குழந்தைக்குக் கூறுவது போலப் பகிர்ந்து கொள்ளப்படும்.  குழந்தைக்குப் பாடலின் பொருள் ஒன்றும் புரியாவிட்டாலும், தாயின் அன்பு நிறைந்த குரலில் வரும் பாடலின் இசையில் மூழ்கி அமைதியாகத் தூங்கிவிடும்.  குழந்தைக்குத் தேவையில்லாத செய்திகளை பாடல் வழியாகச் சொல்வதில் என்ன பயன்?  பெரும்பாலும் ஒரு தாய் தனது குழந்தைக்குக் கூற விரும்பும் செய்திகளை தாலாட்டுப் பாடல் வழி சொல்கிறாள்.  அதில் தனது சொந்தக் கதை, தான் பிறந்து வளர்ந்த கதை, தனது சகோதரன் அல்லது அக்குழந்தையின் தாய்மாமனின் அன்பு, தனது கணவன் அல்லது அக்குழந்தையின் தகப்பனின் பெருமை, உற்றார் உறவினரின் பரிவு எனப் பல செய்திகளை மட்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் தாலாட்டுப் பாடல்கள் வழி நாம் அறிந்து கொள்வதில்லை. இவற்றிற்கும் மேலாகவும், பற்பல செய்திகளைத் தன்னகத்தேக் கொண்டு  இலக்கியக் காலக் கண்ணாடியாக நாட்டார் இலக்கிய தாலாட்டுப் பாடல்கள்  வழங்கும் பிற தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நாளில் நமக்கு மீண்டும் நாட்டுப்புறப் பாடல்களில் வரும் இனிமை மிகு தாலாட்டுப் பாடலை எதிர்பாரவிதமாக சந்திக்க வைத்தது விளம்பரதாரார் வழங்கிய விளம்பரம் ஒன்று. புதுக்கோட்டை துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளாராகப் பணிபுரியும் கவிஞர் ஜீவி (https://www.facebook.com/geevee.kavi) என்கிற ஜி.வெங்கட்ராமன் “டைம்ஸ் ஆப் இந்தியா” தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் தாலாட்டுப் பாடலை எழுதியவர். அப்பாடல் கேட்கும் அனைவருக்கும் இனிய நினைவலைகளைக் கிளப்பிவிடும் பாடல்….

ஏ….ஆராரோ ஆரிரரோ……

        எங்கண்ணே ஆராரோ ஆரிரரோ……

குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே…..

        சரிஞ்சி படுத்திருக்கும் சென்பகமே கண் உறங்கு. (ஆஆ….)

நிலவே தூங்கும் வேள…நீயேன் தூங்கவில்லை

        நிலவே தூங்கும் வேள…நீயேன் தூங்கவில்லை

ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு….. (ஆஆ…..)

        ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு

(காணொளி: http://www.youtube.com/watch?v=AmjQoYvGzBQ

உறவுகளின் பெருமை:

இதே சாயலில் நாம் பல நாட்டுப்புறப்பாடல்களை அறிவோம்.  தமிழக மக்கள் அனைவரும் அறிந்திருக்கும் பாடலில் ஒன்று “யார் அடித்தார் கண்ணே உன்னை” என்றப் பொருளில் வரும்.

ஆராரோ ஆராரோ – கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ

ஆரடித்தார் நீஅழுக கண்ணே உன்னை
அடித்தவரைச் சொல்லிஅழு

மாமன் உன்னை அடித்தாரோ – கண்ணே உன்னை
மல்லிகைப்பூச் செண்டாலே?

என்றப் பாடலை அறியாதவர் இருக்க முடியாது.  அப்பாடலில் குழந்தையின் அன்பு நிறை உறவுகள் யாவரையும் ஒவ்வொருவராகச் சொல்லி அவர்களா உன்னை அடித்தார்கள், ஏன் அழுகிறாய் கண்ணே காரணம் சொல்லி அழு என்று, பாடல் வரிகளில் ஒவ்வொரு உறவாக அறிமுகப்படுத்தப்படும்.  அவர்கள் குழந்தை மேல் கொண்டிருக்கும் அன்பும் அதன் ஊடே ஊடாடிச் செல்லம் வகையில் உரைக்கப்படும். பாட்டி உன்னை அடித்தாளோ தனது பால் ஊற்றும் கையாலே?  தனது நெய்ஊற்றும் கையாலே? என்பதில் பாட்டியின்  பாசம் காண்பிக்கப்படுகிறது. அது போலவே அக்காள் அடித்தாளோ,  மச்சான் அடித்தானோ, அண்ணன் உன்னை அடித்தானோ , ஆத்தாள் உன்னை அடித்தாளோ என்று அனைத்து உறவுகள் பற்றியும் தொடர்ந்து வரும்.

தாயன்பு:

தாய் தனது குழந்தையின் மீது கொண்ட அன்பும், தனது குழந்தையே அழகில் சிறந்த குழந்தை என்று என்னும் அவளது எண்ணம் வெளிப்படும் தாலாட்டுப் பாடலும் உண்டு.

தகப்பன் மீன் பிடிக்கச் செல்ல, அயிரைமீன், ஆரல்மீன், வாளைமீன், வழலைமீன்,  கெண்டைமீன், கெளுத்திமீன், குரவைமீன், பரவைமீன் எனப்பலப் பலவகை மீன்களும் கிடைக்கிறதாம் தந்தைக்கு. தாய் அவற்றை அயலூர் சந்தையில் விற்று, அரைச் சவரனுக்கு தங்க நகை செய்து போட்டாளாம் மகளுக்கு. அரைச் சவரனுக்கு தங்க நகை செய்து போட்டேன் கண்ணே உனக்கு, உன் அழகைக்காண அனைவரும் வியந்து கூடினர் என்று தாலாட்டுப் பாடுகிறாள்.

அத்தைமாரும் அண்ணிமாரும் – கண்ணே உன்

        அழகைப்பார்த்து அரண்டார்களே

அரண்மனையார் ஓடிவந்து – கண்ணே உன்னை

        அதிசயமாப் பார்த்தார்களே

ஆராய்ச்சி மணியடித்து – கண்ணே உன்னை

        அயலூராரே பார்த்தார்களே.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சலாவா? இப்பாடல் காட்டும் தாயன்பு அருமையானது.

தந்தையின் பெருமை:

தாலாட்டின் வழியாக குழந்தையின் தந்தையின் பெருமையை குழந்தைக்கு எடுத்துரைக்கும் பாடலும் உண்டு நாட்டார் இலக்கியத்தில்.

தந்தை ஒருவன் சரிகை சட்டை, தலைப்பாகை அணிந்து பொட்டிட்டு தன்னை சிங்காரித்துக்கொண்டு, சாரட்டு வண்டிகட்டி சலங்கைபோட்ட மாடுகட்டி ஊர்ப்பயணம் போகிறான். பதுங்கித் தாக்க வந்த பகையாளியை பட்டாக்கத்தி வீசி துரத்தியடித்த பெருமை சொல்லப்படுகிறது ஒரு தாலாட்டுப் பாடல் வழியாக.

கோயம்புத்தூர் போறாரு – உங்கப்பன்

        கோழிகூப்பிடும் நேரத்திலே

பகையாளி பதுங்கிநிற்க – உங்கப்பன்

        பார்க்காமல் போகையிலே

பறந்துபாய்ந்தான் பகையாளி – உங்கப்பன்

        பம்மினாரு பயமில்லாமே

பட்டாக்கத்தி வீசையிலே கண்ணே அவன்

        பஸ்பமானான் பகையாளி.

இந்த அன்னை தனது குழந்தைக்குத் தகப்பனின் பெருமையை உரைக்கிறாளா அல்லது தனது கணவனின் வீரத்தை எண்ணி அகமகிழ இப்பாடலைப் பாடினாளா என்பது பிரித்துக் காணமுடியாத கருத்தாக்கம்.

நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் இலக்கியச் சுவை தொடரும் …

 

When applied to monitoring, this http://trymobilespy.com/ means that passive monitoring means parents are monitoring smartphones and social media on a superficial level

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தாலப்பருவம்”
  1. muthumari says:

    மிக் அருமை ஆர்புதம்

அதிகம் படித்தது