மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)

ஆச்சாரி

Apr 3, 2014

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம்
(உத்தமம்)

பதின்மூன்றாவது உலகத் தமிழ்க் கணினி மாநாடு¸ பாண்டிச்சேரி, இந்தியா

பத்திரிக்கைச் செய்தி

       உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகக் கணினித் தமிழ் மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.  உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ளத் தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும். தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துத் தமிழ்க் கவிஞர் கனியன் பூங்குன்றனார் தன்னுடைய அழகான புறநானூறு பாடலில் இயம்பியிருப்பது போல “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்னும் வாக்கைச் சிறப்புற நடைமுறைப்படுத்தி வருவதில் உத்தமம் நிறுவனம் பெருமை கொள்கிறது.  இம்மாநாடுகள் “நீர் வழிப் படூம் புணைபோல முறைவழிப் படூம் ஆருயிர்” என்னும் நம் கவிஞர் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க கணினி வழி தமிழர்களின் ஆருயிரை முறைவழிப்படுத்தி வருவது பெருமைக்குரிய ஒன்றே!  இவ்வகையில் உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்!  நம் மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் கணினி குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைவது எண்ணித் தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.  இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. கட்டுரைச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய நாட்கள் ஆகியன குறித்தான செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடுவோம்.  மேலதிக செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.

வாசு அரங்கநாதன், தலைவர், உத்தமம் நிறுவனம், தமிழ்ப் பேராசிரியர்¸ பென்சில்வேனியாப் பல்கலைக்கழகம், அமெரிக்கா

கு. கல்யாணசுந்தரம்¸ செயற்குழு உறுப்பினர்¸ தேசிய தொழிற் நுட்பக் கல்வி நிறுவனம், லுசான், சுவிட்சர்லாந்து

தி. மணியம், பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் நிறுவனம், சிங்கப்பூர்
முனைவர் மு. இளங்கோவன், பேராசிரியர், தமிழ்த்துறை, பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)”

அதிகம் படித்தது