மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐக்கியநாடுகள் மனிதஉரிமைமன்றத் தீர்மானம்

ஆச்சாரி

Mar 29, 2014

சில நாட்களுக்குமுன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, மாசடோனியா, மொரிசீயசு, மாண்டநீக்ரோ ஆகிய நாடுகள் இலங்கையில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறலுக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. 23 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும், 12 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலையும் வகித்தது.

ஆதரவாக வாக்களித்த நாடுகள்:

அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, பெனின், போஸ்த்வானா, பிரேசில், சிலி, கோஸ்டாரிகா, கோத் டி’வோர், செக் குடியரசு,  எஸ்தோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ, மாண்டிநீக்ரோ, பெரு, கொரிய குடியரசு, ரொமானியா, சியெரா லியோன், மாசிடோனியா,  இங்கிலாந்து, அமெரிக்கா

எதிர்த்த நாடுகள் :

அல்ஜீரியா, சீனா, காங்கோ, கியூபா, கென்யா, மாலத்தீவு, பாகிஸ்தான், ரஷ்யா, செளதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், வெனிசுலா,  வியட்னாம்,

புறக்கணித்த நாடுகள்:

இந்தியா, எத்தியோபியா, கேபான், பர்கினா ஃபாசோ, இந்தோனேசியா, ஜப்பான், கஜக்கஸ்தான், குவைத், மொரோக்கா, நமீபியா, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா

இந்த தீர்மானம் வெற்றியடையும் என்பது அனைவருக்கும் முன்னரே தெரியும். வெற்றியடைவதற்காக அமெரிக்கா பல மாற்றங்களைக் கொண்டுவந்தது. தமிழர்கள் தரப்பில் அவை ஏமாற்றத்தைத் தந்தது என்பது உண்மை. போர் முடிந்து 5 ஆண்டுகளாகிய பின்பும் இலங்கையே தான் செய்த இனவழிப்பை ஆராயச் சொல்லியதும், 13-வது சட்டத்திருத்தத்தை தீர்மானத்தில் கொண்டுவந்ததும், இலங்கை அரசின் LLRC கூறிய காலத்தையே புலனாய்வுக்கான காலமாக பரிந்துரைத்ததும், தமிழினச் சிக்கலை ஏதோ மதச் சிக்கலாக காண்பித்தது போன்ற பல வாசகங்கள் தமிழர் தரப்பை சோர்வடைய வைத்தது என்பது உண்மை. இருந்தாலும் 10-ம் பத்தியில் மனித உரிமை ஆணையர் இலங்கையில் நடந்த மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு ஒன்றை செய்யவேண்டும் என்று கூறியிருந்தது ஓரளவிற்கு ஆறுதலைத் தந்தது. உலகில் தமிழர் வாழும் நாடுகளில் செயல்பட்டுவரும் பல தமிழ் அமைப்புகளின் உழைப்பினாலும், தாய்த்தமிழகத்தில் நடந்த போராட்டத்தினாலும், ஈழமண்ணிலின் குரலினாலும் இது சாத்தியமானது.

இத்தீர்மானத்தினால் தமிழர்களுக்கு பெருமளவு பயன் வந்துவிடப்போவதில்லை. இருந்தாலும் இது ஒரு நல்ல துவக்கம்தான். இந்த புலனாய்வினால் வன்னியில் என்ன நடந்தது 150,000 மக்களின் நிலை என்ன என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவரும். மனித உரிமை ஆணையரின் அறிக்கையை ஐநா உதாசீனப்படுத்த முடியாது. இலங்கை அரசு எப்பொழுதும் போலவே மன்றத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, புலனாய்விற்கும் எவ்வித ஒத்துழைப்பையும் தரப்ப்வோவதில்லை. LLRC பரிந்துரைத்த எதையும் செயல்படுத்தப்போவதில்லை. இத்தீர்மானத்தினால் தமிழர்க்கு பெரும்பயன் கிட்டாவிட்டாலும், இலங்கைக்கு இத்தீர்மானம் பெரும் தலைவலியைக் கொடுக்கவல்லது என்பது நிச்சயம். இலங்கைக்குக் கிடைத்த பெரும் தோல்வி என்பதும் வல்லுநர்களின் கணிப்பு. சோர்வடைந்திருக்கும் தமிழர்களுக்கு இது ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது என்பதும் உண்மை.

தொடரும் இந்தியாவின்துரோகம்

இந்திய அரசு தமிழர் நலனுக்கு எதிரானது என்பது குழந்தைக்குக்கூட தெரியும். இருந்தாலும் கடந்த இருமுறை தீர்மானத்தை நீர்க்கச் செய்து பின்பு ஆதரித்ததால், இம்முறையும் இறுதியில் ஆதரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஆனால் கடந்த முறை போல் தீர்மானத்தை நீர்க்கவைக்கும் வகையில் 10-ம் பத்தியை நீக்கும் முயற்சியில் இறங்கியது. அமெரிக்கா அதை நிராகரித்தது நிச்சயமாக இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். முதன் முறையாக அமெரிக்கா இந்தியாவின் செயலை உதாசீனப்படுத்தியது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றம். இந்த அதிர்ச்சியால் பரமவைரியான பாக்கித்தானுடன் இணைந்து இலங்கையை பாதுகாக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முயன்று மண்ணைக் கவ்வியது. பாக்கித்தானுடன் தினமும் போரிட்டுக்கொண்டிருந்தாலும், தமிழர்களை ஒழிக்க எதிரியுடனும் இணைந்து செயல்பட்டது நடுநிலை தமிழர்களுக்கும் பேரதிர்ச்சியை நிச்சயம் கொடுத்திருக்கும். இதன் மூலம் இந்திய அரசு (காங்கிரசு, அதிகாரிகள்) தமிழர்களுக்கு என்றுமே எதிரானது என்று தெள்ளத்தெளிவாக நிறுபித்துள்ளது.

ஒடுக்கப்பட்டோருக்கு உழைத்த இடது சாரிகள் ஆளும் சீனம், வெனிசுவேலா, கியூபா போன்ற நாடுகள் ஒடுக்கப்பட்டுவரும் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்ததால் அந்த நாடுகளின் சோசலிச யோக்கியதை உலகிற்கு மீண்டும் தெரியவந்துள்ளது. சோசலிசம் என்கிற போர்வையைப் போர்த்திக் கொண்டு உலகை ஏமாற்றிவரும் நாடுகள் இவை என்பது தெளிவு. இந்த கயவர்களுடன் இந்தியாவும் இணைந்ததால் இந்திய அரசும் அயோக்கிய அரசே என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த சில நாட்களில் நடந்ததைக் காணும்போது முதன் முறையாக மேற்குலகம் இந்தியாவின் உதவியில்லாமல் இலங்கைச்சிக்கலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அமெரிக்காவை உற்றுக்கவனிக்கையில், அமெரிக்க அரசும், நாடாளுமன்றமும் இலங்கைக்கு எதிராகவே அறிக்கையை கொடுத்துவருகிறது. வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் கெய்ட்லின் ஏய்டன், ஐநா தூதுவர் செமந்தா பவர், இலங்கைக்கானத் தூதர் மிசல் சிசன், அமெரிக்க செனட்டின் வெளியுறவுத் துறைத் தலைவர் மெனண்டசு போன்றோர் இத்தீர்மானம் நிறைவேறியவுடனே இதை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கின்றனர் (http://www.tamilguardian.com/article.asp?articleid=10458). இதிலிருந்து இலங்கைச் சிக்கலில் அமெரிக்காவின் ஈடுபாடு நன்கு தெரிகிறது.

இச்செயல்களினால் சிறு நம்பிக்கை தமிழர்களுக்குத் தோன்றினாலும், ஒன்று மட்டும் உண்மை. அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடும் நமக்கு விடுதலையை வாங்கித்தரப்போவதில்லை. வரும் ஆண்டுகளில் நம் போராட்டத்தின் வலிமையைப் பொறுத்தே அது சாத்தியமாகும். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், களத்தில் வாழும் தமிழ் உறவுகளும் இணைந்து இப்போராட்டத்தை தொடரவேண்டியுள்ளது. நம்மில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் முடிந்த அளவு இணைந்து போராடினால் வெல்லலாம்.

அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை இத்தீர்மானம் குறித்த அறிக்கை: http://www.prnewswire.com/news-releases/ustpac-welcomes-un-human-rights-council-led-investigation-a-long-awaited-international-inquiry-into-grave-crimes-in-sri-lanka-252944391.html

கனடியத் தமிழர் பேரவையின் அறிக்கை: http://www.seithy.com/breifNews.php?newsID=106611&category=TamilNews&language=tamil

 

At teensafe, we want to keep parents informed and up-to-date on new apps hitting the market and this app deserves special attention due to the personal nature free phone spy app and rating system

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐக்கியநாடுகள் மனிதஉரிமைமன்றத் தீர்மானம்”

அதிகம் படித்தது