மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்றைய தமிழ் பெண்களின் விடுதலையும், அறியாமையும்

ஆச்சாரி

Apr 5, 2014

சங்க கால இலக்கியங்களில்  நம் பழந்தமிழ் பெண்கள் வீரத்திலும், அறிவியலிலும் மிகவும் சிறந்து விளங்கினார்கள் என்று படித்திருக்கிறோம். அது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது…! அப்படிப்பட்ட நம் பெண் சமூகம் இடைப்பட்டக் காலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்டு மிகுந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டது. அதிலிருந்து மிகவும் போராடி சிறிது சிறிதாக முன்னேற்றமடைந்து வளர்ந்து வருகிறோம் என்பது மிகவும் மகிழ்வான செய்தி. நீண்டக்  காலத்திற்குப் பிறகு கிடைத்த இந்த விடுதலையை, உரிமையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டோமானால் நாம் மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து உருவாகி விடுமல்லவா…!

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

   பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்..,”

இது மகாகவி பாரதியின் வரிகள் மட்டுமல்ல… அக்கவிஞனின் கனவு….!

பட்டங்கள்  பெருமளவு  நம் கைகளில் வசப்பட்டிருப்பது மகிழ்ச்சியே…! ஆனால் சட்டங்கள்  இயற்றும் இடத்தில்  நாம்  இருக்கிறோமா  என்பது கேள்விக் குறியே..?. நம் கைகளில் வசப்பட்ட பட்டங்களும், நம்மில் எத்தனை பேருக்கு சுய சிந்தனையையும், ஆளுமையும், தனித்துவத்தையும் கொடுத்திருக்கிறது என்றால் வெகு சிலரே என்பது வருத்தத்திற்குரியதே…!  இக்காலக் கட்டத்தில் நம் முன்னே வைக்கப்பட்டிருக்கும் சவால்கள் ஏராளம்… ஏராளம்…! முதலில் நமக்கான  பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நம்மை நாம் பாதுக்காக்கும் ஆற்றலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  அடுத்த படியாக யாரையும் சார்ந்து வாழாமல் பொருளாதார ரீதியாக நம்மை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் திருமண பந்தத்தில் நுழைய வேண்டுமென்ற தீர்மானம் மிக முக்கியம். அதற்கு அடுத்து,  சமுதாயப் பார்வை வேண்டும். பெரும்பாலானப்   பெண்கள் திருமணத்திற்குப் பிறகு தன் குடும்பத்திற்குள்ளே முடங்கி  விடுகிறார்கள்.  அப்படியில்லாமல் உலகளாவிய வகையில் ஒரு தொலை நோக்குப் பார்வை தேவைப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. நம் தமிழப் பெண்களும் கொண்டாடினார்கள்…! ஆனால் இங்கே பெரும்பாலும் ஆண்டிற்கு ஒருமுறை வரும் அன்னையர் தினம், காதலர்  தினம் போன்ற ஒரு பொழுதுபோக்கு, மகிழ்ச்சியை பகிர்தல் என்ற நோக்கில்தான் கொண்டாடப்படுகிறது. ஒரு கல்லூரி மாணவியிடம், ‘உங்கள் கல்லூரியில் மகளிர் தினம் எப்படி கொண்டாடினீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘ஒவ்வொருவரும் இனிப்பு பரிமாறிக் கொண்டோம். பிறகு  நடனப்போட்டி,  பாட்டுப்போட்டி வைத்தார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்தார்கள்’  என்று கூறினார். அதற்கு மேல் அவருக்கு தெரியவில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை…!  மேலை நாடுகளில் உள்ள   பெண்கள்  தங்கள்  ஊதிய  உயர்வுக்காகவும்,  வேலை நேரத்தைக் குறைப்பதற்காகவும், இன்னும் சில நாடுகளில் வாக்குரிமைக்காகவும்  போராடி, அதில்  வெற்றியும்   பெற்று, எல்லாப்  பெண்களும் சம அளவில் பெற்ற அந்த உரிமைக்கு அடையாளமாய் கொண்டாடி வருகிறார்கள்…!

ஆனால்  நம் சமூகத்தில் அப்படி இல்லையே..!   நகரத்தில் அனைத்து உரிமைகளையும்  பெற்ற ஒரு  பெண்  மகளிர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கையில்,  எங்கோ ஒரு மூலையில் கூலி வேலை செய்து கொண்டிருக்கும்  கிராமப்பெண்ணிற்கு மகளிர் தினம் என்றால் என்ன என்றே தெரியாதே.?   நம்மில் பெரும்பாலோர் இன்னமும் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில்தானே உள்ளனர்…!   ஒரு ஆரோக்கியமான குடும்பம் என்று சொல்ல வேண்டுமென்றால் அனைத்துக்   குடும்பஉறுப்பினரும் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். அதை விடுத்து, சிலர் மட்டும் உடல் வலிமையுடன் இருந்து, பெரும்பாலோர் உடல் நலிவுற்றவர்களாக இருந்தால் அது எப்படி ஒரு ஆரோக்கியமான குடும்பம் என்று சொல்ல முடியும்?   அது போல் தானே இதுவும்…!    நமக்கான அனைத்து உரிமைகளையும்  பெறுவது குறித்த  விழிப்புணர்வை  ஏற்படுத்துவது படித்த பெண்களின் கடமையல்லவா?   இதை தனியாகவோ ,  ஒரு அமைப்பின் மூலமோ,  ஊடகங்களின் மூலமாகவோ,  சமூக  வலைத் தளங்களின் மூலமாகவோ ஒரு மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது  இன்றையக் காலத்தின் கட்டயமாகிறது…!

சமீபத்தில்,    ‘ஐ.நா பெண்கள் அமைப்பு’  ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில்  நம் இந்தியாவில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது  வெறும் பத்து விழுக்காடு  மட்டுமே.  தேசிய அளவிலேயே இப்படி என்றால்  நம் தமிழ் சமூகப் பெண்கள் எவ்வளவு இருப்பார்கள்? இந்த நிலையை மாற்ற வேண்டாமா?  அரசியலிலும், சட்டம் இயற்றும் இடத்திலும்  பெண்களின்  பங்கு  அதிகமிருக்க வேண்டுமென்றால் அதற்கான  பணியை  இப்போதே நாம் தொடங்க வேண்டும்.  இது ஒரு நீண்ட பயணம், நல்லதொரு திட்டமிடல்  இருந்தால் இது சாத்தியமே.  இது  இன்று நினைத்து, நாளை நடத்தும் எளிதானக் காரியமல்ல. இன்று நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோமானால் பெண்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். அடுத்து வரும் தலைமுறையினர் வலியுறுத்துவார்கள். அதற்கு அடுத்து வரும் தலைமுறைப் பெண்கள் செயல்படத் தொடங்குவார்கள் என்பது உறுதி. நம்  தமிழ்  சமூகப்பெண்களும் மேலை நாடுகளில் உள்ளது போல்,  எல்லோரும் எல்லா உரிமைகளுடனும், சுய மரியாதையுடனும் வாழ்வார்கள் என்பதில் சிறிதளவேனும் சந்தேகமில்லை.  இதை நடைமுறைப் படுத்தினோமானால்,  எதிர்காலத்தில் நம் தமிழ் சமூகப்பெண்கள் எல்லா வகையிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதியான ஒன்று.

The context in which one learns is also important for from inquiry to academic writing promoting transfer

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “இன்றைய தமிழ் பெண்களின் விடுதலையும், அறியாமையும்”
  1. இனியன் says:

    கட்டுரை நன்றாக இருககிறது…..பெண்ணுரிமை என்ற உடன் உங்கள் நினைவுக்கு பாரதியின் வரிகள்தான் நினைவுக்குவர வேண்டிய‘ளவுக்கு பாரதிபக்தர்கள் மலிந்து கிடக்கிறார்கள் ……பெரியார் சொல்கிறார்…உங்களுடைய ஒருகை வளர்ந்தால்…நலமாகைருந்தால் போதுமா அது ஆரோக்கியமாகுமா? இரண்ட கையும் ஒரே சீராக வளரவேண்டுமல்லவா அதுதானே வளர்ச்சி?என்றுவினவி நார் ஒரு கட்டத்தில் பெண்களே உங்கள் கர்பப்பையை தூக்கி எரியுங்கள் என்றுஅறைகூவல் விடுத்தாரே ஏனெனில் குடும்பபந்தங்களால் பெண்களடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதால் ……பெண்ணுரிமை என்றால் என்னஎன்றுவினவியபோது ஆண்களுக்குள்ள அனைத்து உரிமைகளம்பெண்களுக்குமிருக்கவேண்டுமதுதான் பெண்ணுரிமை என்றார் . ஒரு அய்ந்துஆண்டுகள் ஆண்களுக்கான கல்வி நின்றால் கூடபரவாயில்லை ஆனால் பெண்களுக்குகல்விவேண்டுமென்றார் …இன்றைக்கும் சில நேரங்களில் தயக்கம் காட்டப்படுகிறதுசுமார் 75ஆண்டுகளுக்கு முன்பே ராணுவத்திலும் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும என்றார்…இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்போகலாம்
    அவரைப்பற்றியுமொருவரி எழுதியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும்….மற்றபடிநன்றாகவேஇருக்கிறது..

  2. பொற்கண்ணன் says:

    மிக மிக அருமையான பதிவு
    ஆழ்ந்த சிந்தனைப் பிழிவு
    தொலைநோக்குப்பார்வை
    விவரமான ஒப்பீட்டுக் கருத்து
    காத்திரமான கருத்துப்பேழை
    சிந்தனையைத்தூண்டும் அழுத்தம்
    சிறந்த பதிதை்தந்த சுசீலாதுரைக்கும்
    வெ ளியிட்ட சிறகு இணையதள பத்திரிகைக்கும் பாராட்டுக்கள்
    வாழ்த்துக்கள்

அதிகம் படித்தது