மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தலுக்கு முன்பே தோற்றவர்கள் – 2014

ஆச்சாரி

Apr 5, 2014

பொதுவாக வாக்கு எண்ணிக்கை தினத்தில் தான் அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படும். இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக பல அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன்னரே தோல்வியைத் தழுவி இருக்கின்றனர்.

காங்கிரசு கட்சியினர்:

2004 தேர்தலில் போட்டியிட்ட பத்து இடங்களிலும் வெற்றி பெற்று, 2009 தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்டு எட்டு இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் இம்முறை 39 தொகுதியில் போட்டியிட்டாலும் தேர்தலுக்கு முன்னரே அனைத்து இடங்களிலும் தோல்வியை ஒப்புகொண்டிருக்கின்றது. கட்சியை மிரட்டி தொகுதி பெற்றவர்களும், தேர்தல் அதிகாரிகளை மிரட்டி வெற்றிபெற்றதாக அறிவித்தவர்களும் இத்தேர்தலில் தானாகவே விலகிக்கொண்டிருக்கின்றனர்.

காங்கிரசின் இப்பரிதாபமான நிலைக்கு ஊழல் உட்பட பல காரணங்கள் இருந்தாலும் வெளிப்படையாக பேசப்படும் காரணம்
தமிழக மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையின் மீதான அதன் மோகமே.

இடதுசாரிகள்:

வழக்கமாக இரண்டு இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெரும் இடது சாரிகள் இன்று தோல்வியை எதிர்பார்த்து அதிக இடங்களில் போட்டியிடுகின்றனர். இயற்கையாக வெற்றியையும் தோல்வியையும் மக்களிடம் இருந்து பெறவேண்டும், ஆனால் இம்முறை இடது சாரிகள் தோல்வியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பரிசாக பெற்று இருக்கின்றனர். இந்திய பொதுவுடைமைக் கட்சித்தலைவர் தா.பாண்டியனின் அடிமைத்தனமான விசுவாசத்திற்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சிப் பரிசே இத்தோல்வி.

விடுதலை சிறுத்தை கட்சியினர்:

கடந்த 2009 தேர்தலில் திமுக கூட்டணியில், திமுக 22 இடங்களில் போட்டியிட்ட பொழுது விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களில் போட்டியிட்டனர். தற்போது அதே திமுக கூட்டணியில் திமுக 34 இடங்களில் போட்டியிடும் பொழுது விடுதலை சிறுத்தைகள் அதே இரண்டு இடங்களில் மட்டுமே போட்டி இடுகின்றனர். விகிதாச்சாரப்படி விடுதலை சிறுத்தைகளுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். இந்நிலையில் திமுக, விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நேர்ந்த அவமானமே. இடதுசாரிகளைப் போன்றே விடுதலை சிறுத்தைத் தலைவரும் திமுகவிற்கு தீவிர விசுவாசமாக இருந்ததே, இந்நிலைக்குத் தள்ளி சென்றுவிட்டது. கிடைத்த தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தாலும், பொதுவாக இத்தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பின்னடைவே.

பாட்டாளி மக்கள் கட்சி:

1999 தேர்தலில் திமுக கூட்டணியில் 7 இடங்களிலும், 2004 தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் ஐந்து இடங்களிலும், 2009 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 6 இடங்களிலும் என்று வலிமையாகப் போட்டியிட்ட பாமக இன்று பாரதிய ஜனதா கூட்டணியில் எட்டு இடங்களில் போட்டியிடும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. பாரதிய ஜனதா கட்சியைவிட பலமடங்கு நிலையான வாக்குவங்கியை வைத்திருந்தாலும் பாரதிய ஜனதா ஏழு இடங்களில் போட்டியிடும் பொழுது பாமக எட்டு இடங்களில் போட்டியிடுவது பாமகவிற்கு பெரிய சறுக்கலே. இதை நன்கு உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இக்கூட்டணி பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளாமலும், கூட்டணித் தலைவர்களை சந்திக்காமலும் இருந்து வருகிறார். போட்டியிடும் ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருந்தாலும் தலைவருக்கும் உண்மையான கட்சிகாரர்களுக்கும் தெரியும் இத்தேர்தலில் பாமக இழந்தது அதிகம் என்று.

அழகிரி:

தென்மாவட்டங்களில் திமுகவின் தூணாகவும் தனி ஆளாக பெரும் செல்வாக்குடன் இருந்த மு.க.அழகிரி இத்தேர்தலில் செல்லாக்காசாக ஆகியிருக்கிறார். தேர்தல் அரசியலை கரைகண்ட அழகிரி இன்று கரையில் நின்று தேர்தலை வேடிக்கைப் பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஓரங்கட்டப் பட்டுவிட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உடன் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வந்தாலும் அவர்களுக்கான உடனடி களத்தை ஏற்படுத்தாமல் தாமதிப்பதனால் சிலமாதங்களில் அனைவரையும் இழந்து மு.க.முத்து நிலைக்கு ஆளானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பை  பயன்படுத்தி தனது ஆதரவாளர்களை சில இடங்களில் நிறுத்தி கணிசமாக ஓட்டு வாங்க வைக்க வேண்டிய நிலையில் தேவையற்ற சந்திப்புகளில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார் அழகிரி. இத்தேர்தலில் அழகிரி இழந்தது தொகுதியை மட்டுமல்ல அவரது செல்வாக்கையும், மரியாதையையும் தான்.

தமிழருவி மணியன்:

தமிழகத்தில்  திமுக, அதிமுக இன்ற இரண்டு துருவங்களை மீறி எந்த அரசியல் கட்சியும் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ், பாமக போன்ற வலுவான கட்சிகளால் கூட இரண்டு திராவிட கட்சிகளையும் தவிர்த்து மூன்றாவது அணியை அமைக்க முடியாத நிலை தான் இருந்து வந்தது. ஒற்றை மனிதனாக ஓடி உழைத்து பாரதிய ஜனதா தலைமையில் வலுவான கூட்டனியை அமைத்த சாதனை தமிழருவி மணியனையேச் சேரும். இக்கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், வரும் காலங்களில் தமிழக அரசியல் வராலாற்றில் திமுக ,அதிமுக இல்லாத ஆட்சி அமையக்கூடிய சந்தர்பத்தை ஏற்படுத்தும். இக்கூட்டணியின் சில கட்சிகள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டாலும் 2016 மற்றும் 2021 சட்ட மன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தைப் பார்க்க முடியும். இருப்பினும் இவ்வலிமையான  கூட்டணியை ஏற்படுத்திய தமிழருவி மணியனின் நிலை என்ன இன்று? கடும் மன உளைச்சலில் இருக்கிறேன், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியே சுயநல கூட்டணி என்று ஒதுங்கி இருக்கின்றார். அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி தான் இறந்துவிட்டார் என்பது போன்று கூட்டணி முயற்சி வெற்றி அடைந்து விட்டது, அதை ஏற்படுத்தியவர் தான் தோல்வியடைந்து இருக்கின்றார்.

இவர்களை தவிர இன்னும் பல உதிரி கட்சிகளும் அரசியல்வாதிகளும் தேர்தலுக்கு முன்னரே இம்முறை தோல்வியைத் தழுவி இருக்கின்றனர். உதாரணமாக:

சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி):

அதிகமான விசுவாசத்தால் மரியாதை இழந்த இன்னொரு அரசியல்வாதி சரத்குமார். தனது மனைவி ராதிகா அவர்களுக்கு அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படும் என்று பல முன்னேற்பாடுகளை வெளிப்படையாக செய்துவந்தார். இடதுசாரிகட்சிகளையே கழட்டி விட்ட அதிமுக தொகுதிக்கு சில நூறு வாக்காளர்களை மட்டுமே கொண்ட சமத்துவ மக்கள் கட்சிக்காக தொகுதி ஒதுக்கும் என்ற அரசியல் அடிப்படை தெரியாமல் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கிறார் சரத்குமார். ஒரு இடத்தில் போட்டியிட்டு தோல்வியுரும் என்று பேசப்பட்ட சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாமலே தோல்வியைத் தழுவி இருக்கின்றது.

வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தராஜன் (பாரதிய ஜனதா கட்சி):

தமிழ்நாட்டில் மோடி அலை இருக்கின்றது என்று தமிழருவி மணியனுக்கு அடுத்த படியாக, அதிகமான முறை கூறிவந்தவர்கள் வானதி சீனிவாசனும், தமிழிசை சௌந்தராஜன் அவர்களும் தான். கடந்த சிலமாதமாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி உயிருடன் இருக்கின்றது என்பதையே மக்கள்  இவர்கள் இருவரின் குரல்களின் மூலம் தான் தெரிந்து வந்தனர். கடுமையாக உழைத்து ஊடங்களின் மூலம் கட்சியை வளர்த்தாலும், தேர்தலில் பங்கெடுக்க கட்சி வாய்ப்பு கொடுக்கவில்லை. தேர்தலில் நிற்காமலே தோல்வியைத் தழுவிய இருவருக்கும் பல ஊடகங்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் (நன்றியை?) தெரிவித்து வருகின்றன.

It is said that there are looking for someone to do my assignment large differences in the teaching methods between british universities and japanese ones

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தேர்தலுக்கு முன்பே தோற்றவர்கள் – 2014”
  1. baluappaji@gmail.com says:

    before and after elections,those who lost ,always are we,pitiable indians only

அதிகம் படித்தது