மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அணுக்கழிவாலை

ஆச்சாரி

Dec 1, 2011

தினம் அணு உலையின் பயன்களைப் பற்றி பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக படித்து எல்லாம் அறிந்த விஞ்ஞானியைப் போன்று நண்பருக்கு விளக்கி சொல்லும்போது எனக்கே மிகவும் பெருமையாக இருந்தது. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நண்பர் கடைசியில் அதிலிருந்து வரும் கழிவுகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று ஒரு விடை தெரியாத கேள்வியை எழுப்பினார். அப்பொழுது தான் எனக்கே உரைத்தது நான் படிக்கும் எந்த பத்திரிக்கையும் அணுக்கழிவைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று சத்தியம் செய்து இருப்பது போன்று அதைப் பற்றி மட்டும் எந்த செய்தியும் எழுதுவதில்லை என்பது.

அதனால் என்ன நாமே ஆராய்ச்சியில் இறங்கிடலாம் என்று ஆறாயத் தொடங்கினோம். பின்னர் தான் தெரிந்தது அணு உலையில் இருந்து வரும் மின்சாரம் எல்லாம் பக்க உற்பத்தி தான், அங்கு நடக்கு மொத்த உற்பத்தியே அணுக்கழிவு தான் என்பது. அதற்கு எதற்கு அணு உலை என்று பெயர் வைத்திருக்கிறார்களோ, அணுக்கழிவாலை என்றே பெயர் வைத்து இருக்கலாம்.

ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் ஆண்டிற்கு 20 முதல் 30 டன் அணுக்கழிவு வெளிப்படுகிறது. இந்த அணுக்கழிவுகளை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். முதலாவது அதிகதிரியக்க கழிவு (High Level Waste), இரண்டாவது டிரான்சுரானிக் கழிவு (Transuranic Waste), மூன்றாவது குறைகதிரியக்க கழிவு (Low Level Waste).

அணுக்கழிவுகளில் அதிகதிரியக்க கழிவு வெறும் ஒரு சதவிகிதமே, ஆனால் உலகில் வெளிவரும் கதிரியக்கத்தில் 95 சதவிகிதம் இந்த அதிகதிரியக்க கழிவுகளில் இருந்து தான் வெளிவருகிறது. அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவு தான் இந்த அதிகதிரியக்க கழிவு.

இரண்டாவதான டிரான்சுரானிக் கழிவு உரேனியத்தைவிட கனஉலோகங்கலான புளுட்டோனியம், நெப்டுனியம் போன்றவைகளை உள்ளடக்கியது.

குறைகதிரியக்க கழிவுகள் பெரும்பாலும் உடைகள், நீர் வடிகட்டிகள், குழாய்கள் மற்ற அணு உலை அன்றாடப் பொருள்களை உள்ளடக்கியன. இவற்றிலிருந்து வரும் கதிரியக்க அளவு மற்ற கழிவுகளை விட குறைந்த அளவு எனினும், நமக்கு உடனடி ஆபத்து விளைவிக்கும் அளவிலானதே.

செறிவூட்டிய உரேனியத்தை சிறு சிறு உருண்டைகளாக நீள தடிக்குள் நெருக்கமாக அடுக்கி அணு உலை எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருள் அணு உலைக்குள் ஒரு வருடம் எரிந்த பின்னர் எரிதிறன் குறைந்து விடுகிறது என்று கழிக்கப்பட்டு விடுகிறது. இப்படி கழிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மிகவும் அபாயகரமான அளவு கதிரியக்கம் உடையது. இந்த அதிகதிரியக்க கழிவுகள் அருகில் பாதுகாப்பு இன்றி சில வினாடிகள் இருந்தாலே உடனடி மரணம் தான்.

அணு உலை எரிபொருள் பயன்படுத்தப்படும் போது யுரேனியம்-235 அணுக்கள் பிளக்கப்பட்டு சீசியம், சிராண்டியம் போன்ற கன உலோகங்கள் தோன்றுகின்றன. இதனால் எரிபொருள் பயன்படுத்துவதற்கு முன்னர் இருந்த கதிரியக்க அளவை விட பயன்படுத்தப்பட்ட பின் கதிரியக்க அளவு பத்து இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருள் பல ஆண்டுகளுக்கு கொதிக்கும் வெப்ப நிலையில் இருக்கும். இவற்றை செயற்கையாக குளிரூட்டப்பட்ட தண்ணீர் குளத்திற்குள் சேகரித்து வைப்பார்கள். இது போன்ற குளங்கள் ஒவ்வொரு அணு மின் நிலையத்திலும் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பத்து முதல் இருபது ஆண்டுகள் குளிரூட்டிய பின் மறுசீராக்கலுக்கு (reprocessing) அனுப்புவார்கள்.

ஒரு வழியாக மறுசீராக்கலுக்குப் பின் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து அனைத்து கதிரியக்கமும் வெளியேறி சாதாரண கழிவாகி விடுமா என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. இந்த மறுசீராக்கலே ஒரு கண்கட்டி வித்தை போல தான் இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை துண்டு துண்டாக வெட்டி நைட்ரிக் அமிலத்தில் கரைக்கிறார்கள். பின்னர் இந்த கரைசலில் இருந்து புளுட்டோனியத்தையும் (ஆயுதம் செய்ய) உரேனியத்தையும் பிரித்து எடுக்கிறார்கள். எஞ்சி இருக்கும் கரைசல் மிகுந்த கதிரியக்கம் உடைய கழிவாக இருக்கிறது. சிறிதளவு இருந்த கழிவை கரைத்து அதிகளவாக்கிவிட்டு கதிரியக்க வீரியத்தை குறைத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்போழுது கழிவின் அளவு அதிகரித்து விட்டதே, ஆதலால் மொத்த கதிரியக்க அளவு அதே தானே இருக்கப்போகின்றது என்று வினவினால் பதில் தராமல் மழுப்புகிறார்கள்.

எப்போழுது தான் இந்த கதிரியக்கம் முழுக்க ஒழிந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சாதாரண குப்பையாக மாறும் என்று கேட்டால் சுமார் ஏழரை இலட்சம் ஆண்டுகள் பொறுங்கள் என்று பொறுமையாக பதில் தருகிறார்கள்.  நாம் அதிர்ச்சி அடைந்து நன்றாக சரி பார்த்து விவரமாக கூறுங்கள் என்று வினவினால் பாதி ஆயுள் (half life) என்று விவரிக்க தொடங்கி விட்டார்கள்.

கதிரியக்க மூலகங்கள் தொடர்ந்து கதிரியக்கத்தை பரப்பி வருவதால் நாளடைவில் வலுவிழந்து படிப்படியாக பாதியாக அளவில் குறைந்து விடுகின்றன அல்லது வேறு மூலகங்களாக மாறிவிடுகின்றன. இப்படி கதிரியக்க மூலகங்களின் வலு பாதியாக குறைவதற்கான காலத்தை அரை ஆயுள் காலம் என்று கணக்கிடுகிறார்கள். அரை ஆயுள் காலத்தை வைத்து கதிரியக்க கன உலோகங்கள் எவ்வளவு விரைவாக தேய்கின்றன என்று கணித்துவிடலாம்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருக்கும் புளுட்டோனியம்-239 கனஉலோகத்தின் அரை ஆயுள் 24,000 ஆண்டுகளாகும். இந்த 24,000 ஆண்டுகளுக்கு பின்னர் புளுட்டோனியம்-239, யுரேனியம்-235 ஆக மாறுகிறது. இந்த யுரேனியம்-235 கனஉலோகத்தின் அரை ஆயுள் 7,03,800 ஆண்டுகளாகும். பின்னர் இந்த யுரேனியம்-235 தோரியம்-231 ஆக மாறுகிறது. இப்படி படிப்படியாக பல கனஉலோகங்களாக மாறி இறுதியில் ஈயம்-207 என்கிற கதிரியக்கம் இல்லாத கொடிய நச்சுப்பொருளாக நிலைப்பெறுகிறது.

இவ்வாறு இலட்ச்கணக்கான ஆண்டுகள் கதிரியக்கத்தோடு இருந்தால் அதுவரை எப்படி இந்த கழிவுகளை நாம் பாதுகாப்பது? அரசாங்கம் எல்லாம் எங்களுக்கு தெரியும், நாற்பது ஆண்டுகளாக நாங்கள் பாதுகாக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் என்று நமக்கு தானே தெரியும்.

ஜூலை 1998 இல் நம் சென்னையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் மூன்று பொறியாளர்களை கைது செய்தார்கள். என்ன என்று விசாரித்தால் எட்டு கிலோ யுரேனியம் வைத்து இருந்தார்களாம். அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து திருடி வந்துவிட்டார்களாம்.

நவம்பர் 7, 2000 அன்று சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு இந்தியாவில் காவல்துறை 25 கிலோ யுரேனியம் கடத்த முயன்ற இரு கடத்தக்காரர்களை கைது செய்திருப்பதாக அறிவித்தது.

டிசம்பர் 2009 இல் மும்பை காவல்துறை ஐந்து கிலோ யுரேனியம் வைத்திருந்ததாக மூவரை கைது செய்தது.

இவை எல்லாம் நம் சிற்றறிவிற்கு எட்டியவைகள். நாம் அறியாமல் இது போன்று எவ்வளவு யுரேனியம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. உலகத்திலேயே ஒரு பலவீனமான பாதுகாப்பு அமைப்பை வைத்துக்கொண்டு, மேலும் கையூட்டு கொடுத்தால் எதையும் செய்து கொடுக்கின்ற அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு நம்மால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இந்த அணுக் கழிவுகளை பாதுகாக்க முடியும்? இதெல்லாம் நமக்கு தேவையற்ற சுமைகள் என்றே தோன்றுகிறது.

மின்சாரம் வேண்டுமா இல்லை புற்றுநோய் வேண்டுமா என்று கேட்டால் மின்சாரம் எங்களுக்கு, புற்றுநோய் உங்களுக்கு என்று தெளிவாகத்தான் பதில் சொல்கிறார்கள் நகரவாசிகள். அவர்களுக்கு தெரியவில்லை பாதிப்பு என்பது அணு உலை இருக்கின்ற ஊர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்து ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்காவது பாதிப்பிருக்கும் என்று. இரசியாவில் செர்நோபில் விபத்து நடந்த போது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுவிடன் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் மறந்து விட முடியாது.

இப்படித்தான் முதன் முதலில் கதிரியக்க பொருள்கள் கண்டறியப்பட்ட போது ஆர்வமாக முகப்பூச்சு, தண்ணீர், மருந்து என்று அனைத்திலும் பயன்படுத்தினர். இப்போழுது யாரையாவது சிறிது உரேனியத்தை முகத்தில் பூசிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். அது போன்று தற்போது ஐம்பது வருடமாக அணு ஆற்றல் என்று ஆர்வமாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனேகமாக நூறு வருடத்திற்கு பின்னால் உலகத்தில் எங்குமே அணு உலைகள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் அணு உலைகள் வெடிக்கும் பட்சத்தில் உலகமே இல்லாமல் போய்விடும்.

Do I need to recast any sentences or add transitions to improve the flow of sentences www.buyessayonline.ninja/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

20 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அணுக்கழிவாலை”
  1. PON.elumalai says:

    The contents was quite crisp and rich. My heartfelt congratulations for your service. “the history will Absolve us from the accusations”says the traitor , the prime(accused) minister of INDIA. WE TOO SAY THE SAME IN DIFFERNT TENOR.
    “ONE CAN’T FOOL ALL, ALL THE TIME”- a proverb , NOT KNOWN TO Dr.MANMOHANSINGH. LET THE PEOPLE
    REALISE THE GRAVITY OF THE SITUATION AND REVOLT AGAINST THE GOVERNMENT.

  2. balamurugan says:

    மிக நல்ல, சமூக அக்கறையுள்ள பதிவு…

  3. வே.தொல்காப்பியன் says:

    அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பது பற்றி இங்கு படிக்கலாம்.

    http://tholthamiz.blogspot.co.uk/2011/03/blog-post_26.html

  4. sankaranarayanan balasubramanian says:

    மிகவும் அவசியமான அர்தமுள்ள் கட்டுரை பல புரியாத விசயஙக புரியுது. சமூக அக்கறையுள்ள பதிவு.

  5. Ravi says:

    இதுதான் உண்மை. விஞ்ஞானிகள் இந்த பூமியை அழிக்கப் பிறந்தவர்கள்தான் என்பதை உண்ர்ந்து மக்கள் எப்பத்தான் திருந்துவார்களோ..?
    அதுவும் இந்தியாவுல அணுக்கழிவைப் பாதுகாப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

  6. அ.வேலுப்பிள்ளை says:

    உண்மையைச் சொன்னா ?,,,அந்நிய அமெரிக்கச் சதி என்று,,,அரைவேக்காட்டு அப்பாடக்கர் மத்திய அமைச்சர்கள் முதல்,,,வியாபாரிகள், தொழிலதிபர்கள் ,, போர்வையில் ,,பல பெருந்தனக்காரர்கள்,,,சுயலாபம் தேடிக் கொண்டிருக்கின்றனர் ? அவர்கள்,,,முதலில் இதனை படிக்க வேண்டும்

  7. Jebaraj says:

    மிகவும் அவசியமான அர்தமுள்ள் கட்டுரை

  8. சரவணகுமார் முத்துசாமி says:

    உண்மை கசக்க மட்டும் செய்யவில்லை….
    அதிர வைக்கிறது…….

    அணு உலையில் கிடைக்கும் மின்சாரம் எல்லாம் பக்க உற்பத்தி தான்…. அங்கு நடக்கும் மொத்த உற்பத்தியே அணுக்கழிவு தான்….!

    எரிபொருள் பயன்படுமுன் இருந்த கதிரியக்கத்தை விட, பயன்பட்ட பின் கதிரியக்க அளவு பத்துலட்சம் மடங்கு அதிகம்….!
    (அணுவுலைக் கழிவுகளான புளுட்டோனியம்௨39 கனஉலோகத்தின் அரை ஆயுள் 24,000 ஆண்டுகள். யுரேனியம்௨35 அரை ஆயுள் 7,03,800 ஆண்டுகள்)

    உலகின் எந்த கொம்பனால், இந்த கொடிய, ஆபத்தான அணுக்கழிவுகளை இவ்வளவு ஆண்டுகளுக்கு பாதுகாக்க முடியும்….?

    ((( சரி….அணுவுலைக் கழிவுகளின் அரை ஆயுளுக்கும், கதிரியக்கத்துக்கும் என்ன சம்பந்தம்….?
    HIV வைரசுக்கும் AIDS நோய்க்கும் என்ன சம்பந்தமோ அதுதான்…..)))

    உலகில் எந்த ஒரு காரியத்திலும் இதுவரை தேவைப் பட்டிராத அளவுக்கு, அணுவுலைக் கழிவுகளின் பாதுகாப்புக்கு 100% FOOL -PROOF SECURITY வேண்டும்…

    உலகின் எந்த ஒரு அரசும், அதிகபட்சமாக தன் அணுவுலைகளின் பயன்பாட்டுக் காலத்தை மட்டுமே பிரச்சினைகள் இன்றி பாதுகாக்க முடியும்…அவ்வளவே…..அணுவுலைக் கழிவுகளின் விசயத்தில் அது முடியாது……

    மிக நல்ல, சமூக அக்கறையுள்ள பதிவு….

  9. ravichandran says:

    மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி

  10. pirabukannan says:

    அருமையான பதிவு.

  11. ஆனந்த் says:

    அணுகழிவை பற்றி நான் இணையத்தில் தேடியவையில் சிறந்தது….பதிவிற்கு நன்றி!!!
    அணுவையும் அதன் கழிவுகளின் ஆபத்தையும் உணர்த்தியது..இது போல் மேலும் பதியவும்…

  12. Poongothai says:

    அணுவைப்பிளந்து ஏழ் கடலைப்புகுத்தி சிறுகத்தரித்த குறள்.
    குறள் சொல்வது என்ன ?
    அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர்.
    இவர்கள் ஆயிரம் படித்திருந்தாலும் எதிர்கால நம் வழித்தோன்றல்கள் வாழ்வுரிமை பறிப்பவர்கள் விஞ்ஞானிகளும் இல்லை, அறிஞர்களும் இல்லை.

  13. isainakar karikalan says:

    அற்புதமான கட்டுரை ,சுதந்திர இந்தியாவில் சிறகு போன்ற பத்திரிகைகள் எங்கும் சிறகு விரித்து பறக்க வேண்டும்.
    தமிழரின் நலன் கருதி ,உண்மைகளை ,ஆதாரபூர்வமாக சொல்கிண்டிர்கள்.மீண்டும் இது போன்ற நல்ல கட்டுரைகளை
    சிறகுகளிடம் எதிர்பார்க்கின்றோம் .ஆசிரியருக்கு மிக்க நன்றி .

  14. kasi visvanathan says:

    விஞ்ஞானம் ஒன்றுதான் சந்தேகம் நீக்கமற மெய்ப்பிக்கும் ஆற்றல் உடைய துறை. எதிர்காலத்தை நம் பேரக்குழந்தகளிடம் கடன் வாங்கி அனுபவிக்கும் நம் போன்றவர்களுக்கு, பொறுப்புணர்ச்சி அதிகம் உண்டு. விஞ்ஞானிகளுக்கு இருக்காது. உண்மையை விளக்கமுற அறியத்தந்த சிறகு ஊடகத்திற்கும் கட்டுரை ஆசிரியருக்கும் நன்றி.

  15. Kishore says:

    மிக தெளிவாக, பாமரர்களுக்கும் புரியும் வகையில் எழிதப்பட்டுள்ளது. பாமரர்களுக்கு புரிவது கூட நம் அரசியல்வாதிகளுக்கு புரியாததுதான் வேதனை.

  16. Guna says:

    நல்ல விரிவான கட்டுரை. மிக தெளிவான விளக்கம். நன்றி.

  17. sankaran says:

    மிக அருமையான கட்டுரை…..அனுக்கழிவாலை …புதிய பெயர்

  18. Seeni says:

    அணுகழிவுகள் மற்றும் அதன் பேராபத்து குறித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், அடிப்படை அறிவியல் விளக்கங்களுடன் இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.

  19. Michael Titus says:

    Very good article. I request author to know about MOX Fuel and add to this wonderful article.

  20. Muthukumar says:

    மிகவும் பயனுள்ள மற்றும் நான் முன்பு அறியாத தகவல்கள் மற்றும் விளக்கங்கள். கட்டுரையாளருக்கு மிக்க நன்றி.

அதிகம் படித்தது