மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 4

ஆச்சாரி

Apr 12, 2014

லண்டன் சென்றதும் போசு நேராகச் சென்றது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குத்தான். தேர்வுக்கு நேரம் குறைவாக இருந்ததால் முழு நேரத்தையும் படிப்பதில் செலவிட வேண்டியிருந்தது. அரசியல், பொருளாதாரம், ஆங்கிலம், வரலாறு, நவீன ஐரோப்பிய வரலாறு உள்ளிட்ட ஒன்பது பாடங்கள் இருந்தன.

இந்தியர்கள் அதிக அளவில் ஐ.சி.எஸ்-ல் தேர்ச்சி பெறுவதைத் தவிர்க்கும் பொருட்டு அவர்களது உச்சவரம்பு வயது 22-ல் இருந்து 19 ஆகக் குறைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் எளிதாக தேர்ச்சி பெற்றார்கள். இந்தியர்களுக்கு மட்டும் பல தடைகள், அத்தனையும் போசிற்கு தெரிந்திருந்தது. கண் இமைக்கக்கூட நேரம் இருக்காது என்று அவருக்குத் தெரியும்.

போசை அதிகமாகக் கவர்ந்தது வரலாற்று பாடம். அமெரிக்கா, ரசியா, சப்பான் என்று ஒவ்வொரு நாட்டின் வரலாற்றையும் வாசிக்க வாசிக்க இந்தியாவின் பரிதாபகரமான நிலைமையே அவர் கண் முன்னால் வந்தது. இத்தனை நாடுகள் சுதந்திரமாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது இந்தியா மட்டும் பிரிட்டன் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டிய பரிதாபம் அவரை உலுக்கியது.

லண்டன் சென்ற சில இந்தியர்கள், வெள்ளையர்களின் கலாச்சாரத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு ஆங்கிலேயராக மாறியிருந்தனர். ஆனால் போசை லண்டன் மாற்றவில்லை. லண்டனில் இருந்த ஒவ்வொரு நொடியும் அவர் இந்தியாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பிரிட்டனின் ஆடம்பரமும், பகட்டும் அவரை அசைக்கவில்லை.

இத்தனைச் சிறிய நாடு, அத்தனைப் பெரிய இந்தியாவை ஆட்டிப் படைக்கிறதே என்ற சிந்தனை தோன்றியது.

வளம் கொழிக்கும் புண்ணிய நாடாக அவர் பிரிட்டனைப் பார்க்கவில்லை. இந்தியாவைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கும் பெரும் மலைப்பாம்பாகவே பார்த்தார். பிரிட்டன் ஒரு காட்டுமிராண்டி நாடு, பிறரை அடிமைப்படுத்தும் மனப்பான்மையும், நாகரிகமும் ஒரே இடத்தில் இருந்துவிடமுடியாது என்பதில் தெளிவாகவே இருந்தார்.

ஆங்கிலேயர் அனுபவித்துவரும் சுதந்திரத்தைப் பார்த்த பிறகு இந்தியர்களின் உண்மையான நிலை அவருக்குப் புரிந்தது.

லண்டன் மாணவர்கள் தங்கள் தாய்மொழியான ஆங்கிலத்திலேயே அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள். இவர்களுடைய பாடப் புத்தகங்களைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அன்னிய மொழிப் பாடங்களைத் திணித்தால் இவர்கள் என்ன செய்வார்கள்?, இந்தியாவின் நிலைமையும் இப்பொழுது இதுதான். பிரிட்டிசாருக்கு கிடைக்கும் சலுகைகள் இந்தியர்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? ஒரு போராட்டக் களத்தில் தன்னந்தனியாகச் சுற்றிக் கொண்டிருப்பதைப் போல் அவர் உணர்ந்தார். தான் பார்க்கும் எந்தவொரு விசயத்தையும் அவர் இந்தியாவோடு பொருத்திப் பார்த்து ஆற்றாமையால் பொருமினார்.

சுதந்திரம்:

இந்த ஒற்றை வார்த்தைக்குள் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களை ஆழமாக வாசிக்கத் தொடங்கினார் போசு.

1920ம் ஆண்டு சூலையில் சிவில் சர்விஸ் தேர்வு நடைபெற்றது.

போசு தன் வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். “அன்புள்ள அம்மா,அப்பா நான் தேர்வு எழுதிவிட்டேன், தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை”.

செப்டம்பர் மத்தியில் தேர்வு முடிவு வெளிவந்தது. போசால் நம்பவே முடியவில்லை. தேர்வில் வெற்றியும், நான்காம் இடத்தையும் பெற்றார். உடன் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் அத்தனை பேரும் போசை வாய்பிளந்து பார்த்தனர். வருடகணக்கில் படித்தும் தேர்ச்சியின்றித் திரும்பியவர்களுக்கு மத்தியில் முதல் முயற்சியிலேயே அதுவும் எட்டே மாதங்களில் படித்து போசு பெற்ற வெற்றி அவர்களை ஆச்சரியப்படுத்தியது.

ஆங்கிலக் கட்டுரைப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற போசு அடுத்து என்ன செய்வது? இனி ஐ.சி.எஸ்(I.C.S)அதிகாரியாவது வெகுசுலபம், அப்படி ஆகிவிட்டால் தன் அப்பாவின் கனவைப் பூர்த்தி செய்ததாக ஆகிவிடும். ஆனால் அப்படிச் செய்துவிட்டால் தனது நிம்மதி போய்விடுமே என்பதுதான் போசின் கவலை.

செப்டம்பர் 1920 முதல் மார்ச் 1921 வரை இதே போராட்டம் தான். அடுத்து என்ன? இந்த ஒரு கேள்வியை வைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருந்தார் போசு.

என்னைப் போன்றவர்கள் ஐ.சி.எஸ்.( I.C.S) அதிகாரிகளாக மாறிவிட்டால் பிறகு இந்தியாவுக்கு எப்படி சுதந்திரம் கிடைக்கும்.

தன் சகோதரன் சரத் சந்திராவுக்கு நீண்ட கடிதங்களை அனுப்பினார் போசு.

சரத் சந்திரா சுருக்கமாகத் தனது முடிவைத் தெரிவித்தார், “அவசரப்படாதே உனக்குச் சரியென்று படுவதை சிந்தித்து உறுதியாகச் செய்”.

சரோஜினி தேவி லண்டனில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றப் போகிறார் என்பதை அறிந்ததும் போசு கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

அந்த சம்பவத்தை பின்னர் இப்படிக் குறிப்பிடுகிறார் போசு.

“சரோஜினி தேவி பேசியதைக் கேட்கும்போது என் உள்ளம் பெருமிதத்தால் பூரித்தது. ஓர் இந்தியப் பெண்மணிக்கு இத்தனைத் திறமையும் கல்வியறிவும், குணமும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இப்படிப்பட்டவரை ஈன்றெடுத்த இந்தியா இன்னமும் அடிமையாக இருப்பது எத்தனை தவறானது! இந்தியாவிற்கு அற்புதமான எதிர்காலம் இருக்கும் போது எதற்காக அடிமையில் உழல வேண்டும்?”

போசு லண்டனில் இருந்த அதே சமயம் இந்தியாவில் அடுத்தடுத்து பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. காந்தியின் தலைமையில் காங்கிரசு புதிய வீரியத்துடன் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது.

போசு என்ன நினைத்தாரோ, அதையேதான் காந்தியும் நினைத்தார். ஆங்கில அரசு கட்டாயம் அகற்றப்பட வேண்டும்.

காந்தியின் ஆளுமை போசை வசீகரித்தது. ஒரு தெளிவான திட்டம் அவர் மனதில் உருவானது.

மே 1921-ல் லண்டனிலுள்ள அமைச்சர் மாண்டேகுவின் அலுவலகத்தில் நுழைந்தார் போசு.

மாண்டேகு: நீங்கள் யார்?

போசு: என் பெயர் சுபாசு சந்திர போசு ஐ.சி.எஸ்.( I.C.S)தேர்ச்சி பெற்றவன்.

மாண்டேகு: மகிழ்ச்சி, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்.

போசு: என்னுடைய விண்ணப்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மாண்டேகு விண்ணப்பங்களுக்கு என்றுமே குறை இருந்ததில்லை. பதவி உயர்வு, சிபாரிசு, அவசர விடுமுறை விண்ணப்பங்களில் நிறைய வகையறாக்கள் உண்டு.

மாண்டேகு: சொல்லுங்கள், உங்களது விண்ணப்பம் என்ன?

போசு: நான் என்னுடைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய விரும்புகிறேன்.

போசை குழப்பத்துடன் பார்த்தார் மண்டேகு. அவருக்குத் தெரிந்து ஐ.சி.எஸ் () பதவியை அதுவரை யாரும் ராஜினாமா செய்ததில்லை.

மாண்டேகு: உங்களைப் பார்த்தால் மிகவும் இளைஞராக இருக்கிறீர்களே உங்களது வயது என்ன?

போசு: இருப்பத்து நான்கு (24)

மாண்டேகு: ஹா! இத்தனைச் சிறிய வயதில் எத்தனைப் பெரிய பதவி, கௌரவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது, இதை யாராவது உதறுவார்களா?

போசு: மன்னிக்கவும், நான் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டேன். விரைவில் என்னுடைய விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டீர்களானால் நல்லது.

மாண்டேவுக்கு ஏனோ போசை உடனே பிடித்துப்போனது.

மாண்டேகு: மிஸ்டர் போசு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை, அரசாங்கத்தில் சிறிய வேலை கிடைக்குமா என்று பல இந்தியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐ.சி.எஸ் (I.C.S) பலருடைய நிறைவேறாத கனவு. இதைக் கொண்டு நீங்கள் நிறைய சாதிக்கலாம். திடீரென்று ராஜினாமா செய்வதற்கான அவசியம் என்ன?.

போசு தீர்மானமான குரலில் சொன்னார் “நான் இந்தியா திரும்ப வேண்டும்”.

மாண்டேகு: இந்தியாவிற்கா? அங்கு என்ன செய்யப்போகிறீர்கள்?

போசு: மன்னிக்கவும் நான் வாதம் செய்ய விரும்பவில்லை. விரைவில் என்னை விடுவித்தால்…

மண்டேகு இடைமறித்தார் சொல்லுங்கள்… இந்தியாவில் என்ன செய்யப்போகிறீர்கள்.

போசு: இந்தியாவில் செய்வதற்கு நிறைய இருக்கிறது, என்னால் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டும்.

மாண்டேகு: அங்கு பதற்றமான சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தியர்கள் ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போசு: இல்லை இந்த எதிர்ப்பு போதாது

மாண்டேகு: நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

போசு அமைதியாக அவரை உற்றுப் பார்த்தார்.

போசு: விவாதிக்க எனக்கு நேரமில்லை. இப்போது என்னுடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா இல்லையா?

மாண்டேகுவால் மறுவார்த்தை பேச இயலவில்லை.

The negated verb establishes the contradiction, and removing however even http://writemypaper4me.org strengthens the point

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 4”

அதிகம் படித்தது