மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலை கீழாய் வளரும் தக்காளி

ஆச்சாரி

Apr 12, 2014

“சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ” என்றார் பாரதியார். இந்தியர்கள் தற்போது உலகெங்கிலும் அனைத்து நாடுகளுக்கும் சென்று வசிக்கின்றனர். ஆனால் கலைச் செல்வங்களை தமிழகத்துக்கு எந்த அளவு கொண்டு சென்றுள்ளனர் என்பது கேள்விக்குறியே. இந்தியாவின் பாரம்பரிய தொழிலாக விளங்குவது விவசாயம். இந்தியாவில் பயன்படும் வகையில் உள்ள விவசாய தொழில்நுட்பங்கள் வெளி நாடுகளில் எத்தனையோ உள்ளன. அவற்றில் ஒரு சில எளிமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தலாம் என்ற முனைப்பில் இந்த இதழில்  தலைகீழாக தக்காளியை வளர்க்கும் தொழிநுட்பம் பற்றி பார்ப்போம்.

பொதுவாக தக்காளி செடியின் வேர் கீழ் நோக்கியும் தண்டு பகுதி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கியும் வளர்வது வழக்கம். இதுவே தக்காளியை மேலிருந்து கீழ் நோக்கி வளர்த்தால் எப்படி இருக்கும்?. இந்த முயற்சியை தான் Topsy Turvy என்ற நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில் விற்பனை  செய்து மிகுந்த வெற்றியும் பெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் வெவ்வேறு வகையான தொட்டியை வடிவமைத்து விற்க ஆரம்பித்தனர். இன்றும் அமெரிக்காவில் பலரது தோட்டங்களில் இந்த  வகைத் தொட்டியைக் காணலாம்.

இது மிகவும் எளிமையான தொழிற்நுட்பம் ஆகும். சாக்குப்பை போன்று ஒரு பையை மேலே தொங்க விட்டு அதன் அடிப்பகுதியில் தக்காளிச் செடியை சொருகி வைக்க வேண்டும்.  செடியானது கீழ் நோக்கி வளர ஆரம்பிக்கும். அதே போல்  சாக்குப்பையைச் சுற்றிலும் மூன்று அல்லது நான்கு ஓட்டையை விட்டு அந்த ஓட்டைகளில் செடிகளை சொருகி ஒரே பையில் மூன்று அல்லது நான்கு செடியை வளர்க்கலாம். இம்முறையில்  தக்காளிச் செடியை வளர்க்கும் போது முதலில் நீள வாக்கில் வளர ஆரம்பித்து பிறகு கீழ் நோக்கி வளர ஆரம்பிக்கும்.  நிலத்துடன் ஆன தொடர்பு செடிக்கு நேரிடையாக இல்லாததால் பூச்சுகளின் தாக்குதலும் ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. வேரிலிருந்து உணவுப்பொருள் மேலிருந்து கீழ் நோக்கி புவி ஈர்ப்பு விசையின் பாதையில் செல்லும் போது அதிக உணவு பொருள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து தேவைப்படும் இடத்துக்கு (Source to Sink) எளிதில் செல்லும் என கணிக்கிறார்கள். இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

அமெரிக்காவில் நிறைய பேர் பால் கேனை வரிசையாக ஒரு கொடியில் மேலே கட்டி தொங்கவிட்டு இது போன்றே தக்காளி வளர்த்து முயற்சி செய்துள்ளனர். இது போன்ற மாதிரிகளை உருவாக்குவதும் மிக எளிது. உர சாக்குப்பையைக் கிழித்து வட்ட வடிவில் தைத்து இதே போன்ற planter களை எளிதாக நாமே உருவாக்கலாம். இதே முறையில் நிறைய செடிகளை வளர்க்கவும் புதிய வகை மாதிரிகளை எளிதில் உருவாக்கலாம். இந்தியாவில் இது போல் புதிய மாதிரிகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்றால் உற்பத்தி செய்பவருக்கு பணமும் கிடைக்கும்.

மக்களும் வீட்டிலே காய்கறி வளர்க்க வாய்ப்பும் கிடைக்கும். முக்கியமாக நகர்ப் புறங்களில் குடியிருப்போருக்கு மாடியில் வைத்து தக்காளி செடியை வளர்க்க இந்தமாதிரி உறுதுணையாயிருக்கும். முக்கியமாக கிராமப்புற சுயஉதவி குழுக்கள் மூலம் இதை உற்பத்தி செய்வதன் மூலம் கிராமப்புறத்தில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

விவசாய நிலம் குறைந்து வரும் இந்த நாளில் மாடுகளுக்கு விளை நிலமே இல்லாமல் புல் வளர்ப்பது எப்படி என்பது பற்றி பின் வரும் இதழில் காண்போம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலை கீழாய் வளரும் தக்காளி”

அதிகம் படித்தது