மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- பகுதி-7

ஆச்சாரி

Apr 19, 2014

தினை பாயசம்

தேவையான பொருட்கள்:

தினை (வறுத்து பொடி செய்தது) – ஒரு கோப்பை

கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

பச்சைப் பயிறு – 1 தேக்கரண்டி

வெல்லம் – தேவையான அளவு

ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

முந்திரிபருப்பு – 1 தேக்கரண்டி

உலர் திராட்சை -1 தேக்கரண்டி

நெய் – 1 தேக்கரண்டி

காய்ச்சிய பால் – ½ கோப்பை

செய்முறை:

கடலைப்பருப்பு மற்றும் பச்சைப் பருப்பு இவ்விரண்டையும் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் தினை கலந்து 4 கோப்பை தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். பின் பொடித்து வைத்த வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக ½ கோப்பை பால் சேர்த்து இறக்கிவிடவும். பின் நெய்யில் வறுத்த உலர் திராட்சை மற்றும் முந்திரி பருப்பை சேர்த்தால் சுவையான தினை பாயசம் தயார். இதனை சூடாக பரிமாறவும்.

மாதுளை மனப்பாகு

தேவையான பொருட்கள்:

மாதுளை சாறு – ½ கோப்பை

சர்க்கரை – 1 கோப்பை

சுக்கு (பொடி செய்தது) – ½ தேக்கரண்டி

செய்முறை:     

மாதுளை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து வேகவைக்கவேண்டும். மிதமான சூட்டில் வைத்து தொடர்ந்து கிளறிக்கொண்டிருக்க வேண்டும். ஓரளவுக்கு கெட்டியாக வரும் பதத்தில் இறக்கிவிடவும். கடைசியில் சுக்குப்பொடியை சேர்த்தால் சுவையான மாதுளை மனப்பாகு தயார்.

ஓமவல்லி பச்சடி

தேவையான பொருட்கள்:

ஓமவல்லி இலை – 4

உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி

பச்சைமிளகாய் சிறியது – 1

இஞ்சி – 5 கிராம்

துருவிய தேங்காய் (தேவையெனில்) – ½ தேக்கரண்டி

தயிர் – 2 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு – ½ தேக்கரண்டி

சீரகம் – ½  தேக்கரண்டி

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:

உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், துருவிய தேங்காய், பச்சைமிளகாய் ஆகியவற்றை செந்நிறமாகும் வரை வறுத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

சுத்தம் செய்த ஓமவல்லி இலையை சிறிது எண்ணெய் ஊற்றி சுருங்கும் வரை வதக்க வேண்டும். இதனுடன் அரைத்துவைத்த பொடியை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். பின் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கடைசியாக கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து இதனுடன் சேர்க்க வேண்டும். தாளிக்காமலும் இதனைப் பரிமாறலாம்.

பிரண்டை சட்னி

தேவையான பொருட்கள்:

பிரண்டை – 1 சிறிய கோப்பை

(முனைகளை நீக்கி நறுக்கியது)

உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

புளி – 20 கிராம்

இஞ்சி – 5 கிராம்

மிளகு – 4

காய்ந்த மிளகாய் – 3

கறுப்பு எள் – 1தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பிரண்டை இலையை ½ தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்க வேண்டும்.

உளுந்தம்பருப்பு, இஞ்சி, எள், மிளகாய், மிளகு சேர்த்து நன்கு தனியாக வறுக்க வேண்டும்.

வதக்கிய இலையை வறுத்த பொருட்களுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

கீழ்வாதத்திற்கு இது மிகவும் உகந்தது.

முடிவுரை:

திருமூலரின் திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் சித்தமருத்துவம். வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும் ஓரளவு நெறிமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சித்தமருத்துவம் கூறுகிறது. மனஅழுத்தம்(Stress) என்பது இன்றைய நாளில் ஒரு பரீட்சயமான வார்த்தையாகிவிட்டது. இந்த மனஅழுத்தத்தை அறவே குறைக்கும் வழியை நாடு, அல்லது மனஅழுத்தத்தை குறைக்கும் மாற்றுவழியைத் தேடு என்று சொல்வதும் இந்த மருத்துவ முறைதான். அசுவகந்தா சூரணம், மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு நல்ல மருந்தாகும்.

எந்த மருத்துவமுறையும் முழுமையானது அல்ல என்பதுதான் உண்மையான நிலையாகும். எனவே மருத்துவமுறைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று உதவிடும் வகையிலும் (Complementary Approach) ஒருங்கிணைந்த சிகிச்சை என்ற முறையிலும்  (Integrated Approach)  வருவது பொதுமக்களுக்கு நன்மையளிக்கும். எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற ஆன்றோர் வாக்குப்படி ஆரோக்கியமாக, இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறையை வாழ அனைவரும் முயற்சி செய்வோம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- பகுதி-7”

அதிகம் படித்தது