மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கண்டிராத குழப்பம் – 2014 தேர்தல்

ஆச்சாரி

Apr 19, 2014

வீதியெங்கும் வண்ண வண்ண நிறங்கள், வான வேடிக்கைகள், எங்கும் பல குரல்களின் இரைச்சல்கள், பணத்திற்கு பஞ்சமில்லை, வீதியில் தவழும் கடைகளுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி, சாரை சாரையாகச் செல்லும் மகிழ்வுந்துக்கள். திருவிழாதான், ஆனால் மக்களுக்கு எரிச்சலோ எரிச்சல், கோபமோ கோபம், குமுகாய/மானுடவியலாளருக்கோ பெரும் கவலை. என்ன திருவிழாவிலே மக்களுக்கு ஏன் வருத்தம் என்று நினைக்கிறீர்களா? நான் விவரித்தது ஊர்த்திருவிழா அல்ல, தேர்தல் திருவிழா. ஐந்தாண்டிற்கு ஒருமுறை வந்து போகும் திருவிழா. தத்தம் தொகுதியின் வேட்பாளர்களை கடைசியாகக் காணும் திருவிழா.

இந்தத் தேர்தல் குமுகாய வல்லுநர்களுக்கும், களப் போராளிகளுக்கும் ஒரு பெரும் எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது என்பது மட்டும் உண்மை. நீண்ட காலத்திற்குப்பின் தமிழகத்தில் பல்முனைப்போட்டி நடக்கவுள்ளதுதான் இந்த எதிர்ப்பார்ப்பிற்குக் காரணம். ஒருவராலும் இத்தேர்தலைக் கணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. தமிழக வாக்காளர்களும், என்றும் தேர்தல் கணிப்பாளர்களுக்கு உண்மை நிலையைக் கூறியதில்லை. எனவே கணிப்பாளர்கள் தங்கள் விருப்பத்தின் படி கணிப்புகளை அறிவிக்கிறார்கள்.

தமிழகத் தேர்தல்களில் திமுக-வோ அல்லது அதிமுக-வோ தான் கடந்த 45 ஆண்டுகளாக வெற்றியடைந்து வந்திருக்கின்றன. அவர்களுடன் கூட்டணி அமைத்த தேசியக்கட்சிகளும், சிறிய வட்டாரக்கட்சிகள் ஒரு சில இடங்களில் வென்றிருக்கின்றன. இந்தத் தேர்தலில் அனைவரும் கணிக்கும் உண்மையாதெனில், தேசியக்கட்சிகள் அனைத்தும் (காங்கிரசு, பாசக, கம்யூனிஸ்டுகள்) முற்றிலும் தமிழக மக்களால் நிராகரிக்கப்படவுள்ளன என்பதுதான். யார் வெற்றியடைந்தாலும் தமிழக மக்களுக்கு இவர்களால் எவ்வித பயனும் கிடைத்ததில்லை. நல்லவர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்ல முடிவதில்லை. பெரிய கட்சிகள் சார்பாக தில்லி செல்பவர்கள் யாவரும் கட்சியின் தலைமையை மீறி செயல்பட முடியாது. தமிழக நலன் குறித்து எவருக்கும் அக்கறை கிடையாது. பொருள் சேர்ப்பதும், மந்திரி பதவியை அடைவதும்தான் குறி.

ஆனால் இத்தேர்தலில் ஒரு சிலர் வென்றால் தமிழகத்திற்கு நலன் கிடைக்கும் என்று சிலர் எண்ணுகிறார்கள். மதிமுக-வின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் மீண்டும் விருதுநகரில் போட்டியிடுகிறார். இம்முறை அவர் வெற்றிபெறுவதற்கு சாத்தியம் என்று கணிப்பாளர்கள் நம்புகிறார்கள். திரு.வைகோ வெல்ல வேண்டும் என்பதில் நமக்கும் உடன்பாடே. தமிழ்/தமிழின உணர்வுள்ள வெகுசிலரில் வைகோவும் ஒருவர். அவர் தில்லி சென்றால் தமிழர்க்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

அடுத்து எளிய மக்கள் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் முனைவர் சுப.உதயகுமாரன் அவர்கள். அமெரிக்காவில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மக்கள் பணிக்காக பதவியை உதறி, குடும்பத்துடன் நாகர்கோவிலில் குடியேறினார். அணு உலையின் ஆபத்தை உணர்ந்த அவர் இடிந்தகரை, அதை சுற்றியுள்ள பல கிராம மக்களுக்காக கடந்த 3 ஆண்டுகள் அர்ப்பணித்து கூடங்குளம் அணுவுலையை எதிர்த்து போராடிவந்தார். காந்தியத்தின் வழிகாட்டுதலில் அறவழியில் போராடிய அவர் மீதும், இடிந்தகரை மக்களின் மீதும் பல நூறு தேச விரோத வழக்குகள் போடப்பட்டுள்ளன. இம்முறை உதயகுமார் தேர்தல் மூலம் மக்கள் பணியாற்றலாம் என்கிற முடிவில் களத்தில் இறங்கியுள்ளார். அவர் வெற்றியடைய வேண்டும். படித்தவர், நல்லவர், மக்கள் நலனை முன்னிருத்தி வாழ்ந்து வருபவர். இவர் வென்றால் குமரி மக்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.திருமாவளவன் அவர்கள் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை திமுக கூட்டணியில் நின்று வென்றவர், இம்முறையும் அதே கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார். வெற்றி வாய்ப்பு இவருக்கு இருப்பதாக நண்பர்கள் மூலம் அறிகிறேன். வைகோ, உதயகுமாரன் போல் இவரும் ஒரு நல்ல தமிழின உணர்வாளர். இலங்கைக்குச் சென்று இராசபக்சேவை சந்தித்தது இவரது பொதுவாழ்வின் அழிக்க முடியாத களங்கம். இதைப் போக்க இவர் அவ்வப்பொழுது ஈழத்தமிழர்களுக்காக தனி ஆளாக போராடிவருகிறார். இவர் வென்றால் தமிழர் சிக்கலுக்கு ஆதரவு தருவார்.

இம்மூவர் வெல்ல வேண்டுமென்பதில் தமிழுணர்வாளர்களுக்கு மாற்றுக்கருத்தேதும் இருக்க வாய்ப்பில்லை. இத்தேர்தலில் தேசியக்கட்சிகள் அனைத்தும் தோற்று மாநிலக் கட்சிகள்தான் தமிழகத்தில் வெல்ல முடியும் என்பதை மீண்டும் தமிழகம் தெள்ளத்தெளிவாகக் காட்டப்போகிறது. இத்தேர்தலில் மகிழ்ச்சிக்குரிய செயல் அதுமட்டும்தான். மாநில உரிமைகளை மதிக்காத எந்த தேசியக் கட்சிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதுதான் தமிழக மக்களின் தெளிந்த தீர்ப்பாக இத்தேர்தல் முடிவுகள் இருக்கப்போவது நிச்சயம்.

Download http://spyappsinsider.com mobile spy for free and start tracking a cell phone now

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கண்டிராத குழப்பம் – 2014 தேர்தல்”

அதிகம் படித்தது