மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேசிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்

ஆச்சாரி

Apr 19, 2014

இந்தியாவின் அடிப்படையே வேற்றுமையில் ஒற்றுமையே. உலகளவில் இந்தியாவின் பெருமையான அடையாளமும் அது தான்.

26 அரசு அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்

6 வேறு மதங்கள்

7 வெவ்வேறு இனங்கள்

முற்றிலும் மாறுபட்ட உணவு, உடை பழக்கங்கள், பண்பாடு, சமூகக்கட்டமைப்பு என்று எண்ணற்ற மாறுபாடுகளை உள்ளடக்கிய இந்தியாவில், நாட்டை ஆளும் அரசியல் கட்சிகள் மட்டும் எப்படி ஒன்றோ அல்லது இரண்டு மட்டும் இருக்க முடியும்?

இந்த ஒன்றிரண்டு தேசிய கட்சிகளால் எப்படி ஒட்டு மொத்த இந்தியர்களையும் புரிந்து கொள்ளமுடியும்?

இந்த ஒன்றிரண்டு கட்சிகளால் எப்படி நாட்டில் அனைத்து மக்களுக்கும் பொதுவான நல்லாட்சி கொடுக்க முடியும்?

கடந்த 67 ஆண்டுகளில் மக்களை புரிந்துகொள்ளாத இந்த தேசிய கட்சிகளின் ஆட்சியில் இந்தியா சாதித்தது என்ன?

- 25 கோடி மக்கள் தினம் பசியோடு தூங்கச் செல்கின்றனர்.

- சுதந்திரத்தின் பொழுது அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்த ரூபாய் இன்று 60 மடங்கு மதிப்பு குறைந்திருக்கின்றது .

-இந்தியாவிலிருந்து ஆண்டிற்கு சுவிஸ் வங்கிக்கு செல்லும் கள்ளப்பணம் 20 இலட்சம் கோடி.

- ஒவ்வொரு மணி நேரத்திலும் 7 கற்பழிப்புகள்.

- 35 கோடி மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

- சுதந்திரத்தின் பொழுது வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்தவர்கள் பத்து சதவிகிதம், ஆனால் இன்று ஏறத்தாழ எழுபது சதவிகிதம்.

இன்னும் எத்தனையோ புள்ளி விவரங்களை பட்டியலிட முடியும் என்றாலும், மனச்சோர்வை (depression) தவிர்க்க இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். இன்றைய இழிநிலைகள் அனைத்திற்கும் தேசிய கட்சிகள் மட்டும் தான் காரணம் என்று கூற முடியாது என்றாலும், மிகப் பெரிய காரணம் நம்மை ஆண்ட தேசிய கட்சிகளே.

பெரும்பாலும் ஒரே மாதிரியான இனம், மொழி அல்லது வாழ்க்கை முறைகளை உள்ளடக்கிய இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு தேசிய கட்சிகள் பயனுள்ளதாக இருக்கலாம். முரண்பாடுகள் முற்றிய இந்தியாவிற்கு தேசியக்கட்சிகள் பொருந்தாத காலணி போன்றது.

இந்த தேசியக்கட்சிகள் என்று கூறிக் கொள்பவைகள், உண்மையில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கான கட்சிகளே அன்றி தேசம் முழுவதற்குமான கட்சிகளல்ல. இந்த 67 ஆண்டு சுதந்திர இந்தியாவை 47 ஆண்டுகளாக பிரதமராக ஆண்டவர்கள் உத்திர பிரதேசம் என்ற ஒற்றை மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே. (மீதி இருபது ஆண்டுகளில், 12 ஆண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ராஜ்யசபை உறுப்பினர்களால் ஆளப்பட்டிருக்கின்றோம்.) தேசியக் கட்சிகளை பொறுத்தவரை உத்திரப்பிரதேசம் மட்டும் தான் இந்தியாவா? மேகாலயாவிலிருந்து, காசுமீரில் இருந்து, தமிழ் நாட்டில் இருந்து, ஓடிசாவில் இருந்து பிரதமர்கள் வருவதற்கு இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆகுமா?

இப்படி தேசியக்கட்சிகள் ஒன்றிரண்டு மாநிலங்களை மையமாக வைத்து செயல்படுவதால், அவற்றையே கண்ணாடியாகக் கொண்டு மொத்த இந்தியாவையும் பார்க்கின்றார்கள். அந்த ஒன்றிரண்டு மாநிலங்களுக்கு ஒத்து வரும் கொள்கைகளை நாடு முழுவதும் திணிக்கின்றார்கள். இதற்கு அருமையான உதாரணமாக இந்தித் திணிப்பை கூறலாம். உத்திரபிரதேசத்தின் மாநில மொழியை, இந்தியாவின் தேசியமொழியாக்க தேசிய கட்சிகள் எவ்வளவு பாடுபட்டனர் என்பதை நாடறியும். இன்றும் ஆண்டிற்கு நூற்று கணக்கான கோடிகளை இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கான திட்டங்கள் என்று வெட்டியாக செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களில் சென்று பணி  செய்ய இந்தி தேவை என்று பரப்பினார்கள். இன்று வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வந்து பணி  செய்பவர்களிடம் வேலைவாங்க இந்தி அவசியம் என்று பரப்புகிறார்கள். மொழி இடம் சார்ந்தது என்ற அடிப்படையைக் கூட உணரமுடியாத நிலையில் இருக்கின்றன நமது தேசிய கட்சிகள். இந்தித் திணிப்பை முன்னின்று நடத்திய காங்கிரசு கட்சி மட்டுமல்ல, பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி உட்பட அனைத்து தேசிய கட்சிகளுமே இந்தித் திணிப்பில் ஒரே நிலைப்பாடு உடையவர்களே.

நிறம், மொழி, இனம் வேறுபாடு இல்லாத இந்தியாவை கட்டமைப்பதை விட்டுவிட்டு சில மாநிலங்களையே மையமாக வைத்து செயல்பட்டதால், மக்களுக்குள் இந்தியர்கள் என்ற ஒற்றுமையை வளர்க்க முற்றிலும் தவறிவிட்டனர் தேசியக்கட்சிகள். தலைநகர் டில்லியிலேயே வடகிழக்கு மாநில மக்களை இனவெறியோடு தாக்கி கொலை செய்கின்றனர். நாங்களும் இந்தியர்களே என்று வடகிழக்கு மாநில மக்கள் நாடெங்கும் பேரணி நடத்தி வருவது தேசிய ஒற்றுமையில் விழுந்த கரும்புள்ளியே. மஞ்சள் தோலுடன், சப்பை மூக்குடன் ஒருவராவது நம் நாட்டின் பிரதமராக அமர்ந்திருந்தால், இன்று வடகிழக்கு மாநில மக்களுக்கு இந்நிலை வந்திருக்குமா?

தேசிய கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்கு வங்கிகளை வைத்துக்கொண்டு நடுநிலையாக செயல்படுகிறோம் என்று நல்லதின் பக்கம் நிற்காமல் நல்லதிற்கும் கெட்டதிற்கும் நடுவில் நின்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். உதாரணத்திற்கு காவேரி, முல்லை பெரியாறு சிக்கல்கள் தீராமல் இழுக்கப்படுவதற்கு தேசிய கட்சிகளின் போலியான இரட்டைவேட நடுநிலையே காரணம். தமிழ் நாட்டிற்கு மட்டும் இந்நிலை இல்லை, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா உட்பட பல மாநிலங்களில் பாயும் அனைத்து ஆறுகளிலுமே நீர் பங்கீடு பெரும் சிக்கலுடனே இருக்கின்றது. பங்களாதேஷ் உடனும், பாகிஸ்தானுடனும் சிக்கல் இல்லாமல் நீரைப்பிரித்துக் கொள்ள முடியும் தேசிய கட்சிகளின் அரசால், ஏன் மாநிலங்களுக்குள் நீரைப்பிரித்துக் கொடுக்க முடியவில்லை?

தேசியக்கட்சிகள் குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் பெரும்பாலான மக்களின் தேவைகளுக்கு எதிரான முடிவுகளையே தொடர்ந்து எடுத்துவருகின்றன. உதாரணத்திற்கு பல  மாநிலங்கள் வால்மார்ட் கடைதிறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் தொடர்ந்து ஆதரிப்பது, மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு  நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்தாலும் பின்வழியில் நடைமுறைப்படுத்த முற்படுவது போன்ற பலவற்றை எடுத்து காட்ட இயலும்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் நலனை அனைத்து மாநில தலைவர்களும் ஒன்றிணைந்து தான் அடைய முடியுமே ஒழியே, ஒரு சில மாநிலங்களையே சுற்றி வரும் தேசிய கட்சிகளால் அனைத்து மாநிலங்களுக்கும் சரியான வளர்ச்சி கிடைக்க வாய்ப்பில்லை. தலை பெருத்து, கால்கள் சூம்பிய ஊனமுற்ற இந்தியாவைத்தான் தேசியக் கட்சிகளால் உருவாக்க முடியும்.

மாநிலக்கட்சிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட முந்தைய அரசுகளால் நிலையான ஆட்சியைக்கொடுக்க முடியவில்லை என்று தேசியக் கட்சிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் ஒன்றை வசதியாக மறந்துவிடுகின்றார்கள். அது அந்த ஆட்சிகளை கலைத்ததும் தேசிய கட்சிகள் தான் என்பதே. தேசியக் கட்சிகள் தடை செய்யப்பட்டு மாநில கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு கொள்கைகளின் ஒப்பந்த அடிப்படையில் ஒரு அரசு உருவானால் மட்டுமே உண்மையான மக்களாட்சி நடைபெற முடியும். அன்று தான் இந்தியா வளர்ச்சி  பாதையில் நடைபோடத் தொடங்கும். இன்றைய நிலையில் இது சாத்தியமற்றதாக தோணலாம். வரும் ஐந்தாண்டிற்கு நிலையான ஆட்சியைத் தருபவர்களை தேர்ந்தெடுப்பது எளிதாகத் தெரியலாம். என்ன செய்வது வாழ்க்கையில் கெட்டவைகள் எளிதாக கிடைக்கின்றன, நல்லவைகள் மிகுந்த சிரமத்திற்கு பின்னர் தானே கிடைக்கின்றன.

தேசியக் கட்சிகள் கடந்த தேசத்தைத் தேடுவோம்.

The write my essays for http://writemyessay4me.org/ second, introduction to management, for msc finance students, is offered in the second semester, and is assessed by coursework only

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தேசிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்”
  1. Ilakkuvanar Thiruvalluvan says:

    உண்மையைக் கூறும் சிறந்த கட்டுரை.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

அதிகம் படித்தது