மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சோழர் காலத்தின் சித்திரைத் திருவிழாக்கள்

ஆச்சாரி

Apr 26, 2014

சோழர் காலத்தில் சித்திரைத் திருவிழாக்கள் எவ்வாறு கொண்டாடப்பட்டன என்பதனை கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நமக்கு அறியத் தருகின்றன.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரசாட்சி செய்த உத்தமசோழரின் (கி.பி. 970-985) செப்பேடுகளும்[1] முதலாம் குலோத்துங்கரின் (கி.பி. 1070-1120) கல்வெட்டுகளும்[2] சோழநாட்டின் கோயில்களில் சித்திரைத் திருவிழா எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதையும், அதற்கான செலவினங்கள் பற்றியத் தகவல்களையும் அளிக்கின்றன.

கல்வெட்டுகள் வழங்கும் தகவல்களின்படி, சித்திரைத் திருவிழா, சித்திரை மாதத்தின் சித்திரைத் திருநாளுக்கு (சித்திரை நட்சத்திரம் வரும் நாள்) ஏழு நாட்களுக்கு முன்னரும், சித்திரைத் திருநாளுக்குப் பிறகு ஏழு நாட்களும் என ஆக மொத்தம் 15 நாட்கள் விழா நடத்தப்பட்டிருக்கிறது. இச்சித்திரைத் திருவிழாக்கள் சிவன், திருமால் கோயில்களில் நடை பெற்றிருப்பதும், விழாச் செலவுகளுக்காக தானமாக பொதுமக்கள் அளித்த செல்வங்கள், இறையிலி (அரசாங்க வரியற்ற) நிலங்கள்,  பொன்கழஞ்சுகள் ஆகியவை ஒழுங்காகக் கணக்கிடப்பட்டு சாட்சிக் கையெழுத்துகளுடன் வருமானமாக வரவு வைக்கப்பட்டதையும் குறிக்கிறது.  மேலும்  பொன்கழஞ்சுகள்  நெல்லாக மாற்றப்பட்டு, அவை முதலீடாகக் பாவித்துக் கடனாக வழங்கப்பட்டதும், அக்கடனுக்கு வட்டியாக நெல் பெற்று, அந்த நெல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகக் கோயில்கள் என்றாலே இயல், இசை, கூத்து இன்றி வழிபாடுகள் அமைவதில்லை.  திருவிழாக்களும் அவ்வாறே.  இசையும் கூத்தும் திருவிழாக்களின் முக்கிய நிகழ்சிகள்.  அன்னதானங்களும் திருவிழாக் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதி.  இவற்றைத் தவிர பூசைக்குத் தேவையான மலர், சந்தனம் போன்றவற்றிற்குச் செலவிட்ட தகவல்களும் நமக்குக் கல்வெட்டுகள் வழியும் செப்பேடுகள் வழியும் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே கோயிலுக்கான இசைக்கருவிகள் வாசிக்கும் ‘உவச்சர்கள்’ என்னும் இசைக் கலைஞர்கள் இருந்தபோதும் சித்திரைத் திருவிழாவிற்காகச் சிறப்புக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சன்மானமும் வழக்கப்பட்டுள்ளது.

சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் உள்ள உத்தமசோழரின் செப்பேடுகள், கச்சிப்பேடு(கச்சிப்பேட்டை) நகரின் ஊரகப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா நடந்த பொழுது ஏற்பட்ட வரவு செலவுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இச்செலவினம் எண்ணெய், நறுமணம் கொண்ட மலர்கள், மணம் ஊட்டப் பெற்ற சந்தனம், கொட்டி செய்யும் தேவர் அடியார்க்குக் கொற்றுக்கும் பூசைக்கும், பிராமணர் உணவுக்கு, இறைவனுடைய பள்ளியறைச் சிவிகையைச் சுமப்பார்க்கு, விழாவுக்கென்று சிறப்பாக அழைக்கப் பெற்ற இசைக் கலைஞர்களுக்கு, கண்டழிவு செலவுகள் (பல்வேறு வகை செலவுகள்/miscellaneous) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கம்புழான்பாடியார், அதிமானப்பாடியார், கஞ்சகப்பாடியார், எற்றுவழிச்சேரியார் என்ற ஊர் மக்கள் நால்வர் வழங்கிய பொற்கழஞ்சுகள் 200 க்கான  வட்டித் தொகையான முப்பது பொன்கழஞ்சு விழாச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டதும், விழாவிற்கான செலவு செய்த பின்னர் கணக்கு வரவுக்கும் செலவுக்கும் சரியாக நேர் செய்யப்பட்டுள்ளதை செப்பேட்டு ஆவணம் அறியத் தருகிறது.

கோயில்கள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறைகள் 16 பிரிவுகளைக் கொண்டது, இதனை ‘ஷோடசோபசாரம்’ என்றழைப்பர். இப்பதினாறு பிரிவுகளில் வாத்திய இசை பதினைந்தாகவும், நாட்டியம் பதினாறாவதாகவும்அமைகிறது. இவையிரண்டும் திருவிழாக் காலத்து வழிபாட்டிலும் இடம் பெருகின்றன. தமிழிலக்கியங்கள் வாயிலாக கூத்துகள் பொதுவாக ‘சாந்திக்கூத்து’, ‘விநோதக்கூத்து’ என இருவகைகளாக பகுக்கப்பட்டது தெரிகிறது. இவ்விரு பிரிவுகளுக்குள்ளும் மேலும் சில உட்பிரிவு வகைகளும் உண்டு.  சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நால்வகையாகப்பட்டது சாந்திக்கூத்து எனவும்; குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என விநோதக்கூத்து ஆறு வகைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது.  இவற்றிற்கும் மேலாக  சாக்கைக் கூத்து, ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து போன்ற கூத்துக்களும் சோழர் காலத்தில்  கோயில் விழாக்களில் இடம்பெற்றன.

கும்பகோணம் அருகில், மானம்பாடி எனும் சிறு கிராமத்தில் உள்ள ‘நாகநாத சுவாமி கோயில்’ என்ற பெயரில் அழைக்கப்படும் சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டு, இக்கோயிலில் சித்திரை மாதத் திருவிழாவில் தமிழ்க்கூத்து நடைபெற்றதைத் தெரிவிக்கிறது. முதலாம் இராஜேந்திர சோழர் காலத்தில் கையிலாயநாதர் கோயில் என்று அழைக்கப்பட்ட இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன (Annual Report of Epigraphy 1931-32). நகரத்தார் என அழைக்கப்படும் வணிகர்கள் குலம் இக்கோயில் நிர்வாகத்தில் பங்கேற்றிருந்ததையும் கல்வெட்டுகள் குறிக்கிறது.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவில், இறைவன் ‘திருவோலக்கம்’ என அழைக்கப்படும் கோயில் திருமண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போது ‘விக்கிரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராஜ பயங்கர ஆச்சாரியன்’ என்பவர் ‘தமிழ்க்கூத்து’ நடத்தினார் என்றும் இக்கூத்து இவ்விழாவில் 5 முறை நிகழ்த்தப்பெற்றதாகவும் கல்வெட்டு குறிக்கிறது. கோயில்களில் பலவகைக் கூத்துக்கள் நடைபெற்ற தகவல்கள் கிடைத்தாலும், தமிழ்க்கூத்து  நடந்ததற்கான சான்றைத் தருவது முதலாம் குலோத்துங்க சோழரின் 18ம் ஆட்சியாண்டைக் குறிக்கும் இக்கல்வெட்டு (கல்வெட்டு எண். 3: ARE 90/1931-32, முதலாம் குலோத்துங்கசோழனின் 18ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகாலம்: கி.பி. 1088) மட்டுமே என்பது இக்கல்வெட்டின் தனிச் சிறப்புமாகும். கூத்தாடும் கூத்தருக்கு நிலம் (கூத்தாட்டு காணி) வழங்கப்படுவதும், அந்நிலம் மூலம் பயனுறும் கூத்து கட்டுபவர் கோயிலுக்காக கூத்து நடத்த வேண்டும் என்பதும் அக்கால வழக்கம். கூத்தாடுபவரின் சந்ததியினரும் தொடர்ந்து கூத்துக்கட்டி இறைச்சேவையைப் புரிவாரானால், அவர்களும் நிலத்தின் மூலம் பெறும் பயனை தொடர்ந்து அனுபவிக்க உரிமை கொடுக்கப்பெற்றார்கள்.

இக்கோயிலின் மற்றொரு கல்வெட்டு (கல்வெட்டு எண். 5 : ARE 93/1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 36ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1106), பல ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் (நகரத்தார்) குழுவினர், அரசாங்க வரி நீக்கப்பட்ட இறையிலி நிலத்தை தானமாக அளித்தனர் என்றும், அது சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் தொடங்கிய பின்னேழு நாட்களில் நடத்தப்பட்ட விழாவில் இறைவன் திருக்கயிலாயமுடையாருக்கு அமுது படைப்பதற்கான செலவுக்காகக் கொடுக்கப்பட்டது என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இவ்வூருக்கு வடக்கில் உள்ள நம்பி நங்கை என்றழைக்கப்பட்ட குளத்திலிருந்து நாளொன்றுக்கு 2000 செங்கழுநீர்ப் பூக்கள் வீதம் ஏழு நாட்களுக்கு (இச்சேவை முன் ஏழு நாட்களா அல்லது பின்னேழு நாட்களா என அறியக்கூடவில்லை) 14000 பூக்கள் பறித்து, கருவறையில் உள்ள மூலவருக்கும், நகருலா நாயகரான உற்சவ மூர்த்திக்கும் மலர் அலங்காரத்திற்கு (கோயிலின் பூந்தோட்டப் பூக்களை  மலர்மாலைகளாகவும் சரங்களாகவும் தொடுத்து இறைவனுக்குச் சார்த்தும் பணி அல்லது ‘திருப்பள்ளி தாமம்’ செய்வதற்கு) வீரநாராயணபுரத்து நகரத்தார் தானமளித்தனர் என்பதையும் மற்றொரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 6: ARE 95/1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 36ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1106) குறிப்பிடுகிறது.

மேலும் ஒரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 7 : ARE 91 / 1931-32 – முதலாம் குலோத்துங்கசோழனின் 38ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காலம்: கி.பி.1108) சித்திரை திருவிழாவிற்கான அனைத்து நாட்களிலும் நடைபெறவுள்ள சிறப்பு பூஜைகளுக்கும், இறைவன் திருவீதிஉலா வரும் பொழுது பணி செய்யும் சிவனடியார்களுக்கும் இறைவனுக்கும் அமுது செய்விக்க நிலம் ஒன்று தானமாக வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.  இத்தானத்தை வழங்கியவர்கள் அணுக்க நம்பி, வாடிமங்கலமுடையான் வெண்காடு தேவர் திருச்சிற்றம்பலமுடையான், வெண்காடு தேவன் பொன்னம்பலக்கூத்தன், நம்மன் பும்மாண்டான், வெண்காடு சோழன், மற்றும் காறாயில் கயிலாயம் என்னும் ஆறு பேர் அடங்கிய வியாபாரிகள் குழு ஒன்றாகும்.

இன்னமும் ஒரு கல்வெட்டு (கல்வெட்டு எண் 8 : ARE 95 / 1931-32) சித்திரைத் திருவிழா செலவினங்களுக்காக வணிகர் நம்பன் சூரியதேவன்  என்பவர் பொற்கழஞ்சுகளும் அளித்துள்ளார் என்பதை குறிப்பிடுகிறது. அது போல நெல் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலும் கல்வெட்டு வழி தெரிய வருகிறது. அதன்படி விழா வேலைகளில் பங்களித்த பணியாளர்களுக்கு அவர்களது உழைப்பிற்கு ஊதியமாக நெல் வழங்கப்பட்டதும் தெரிகிறது.

இவ்வாறாக சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளுக்காக பொன்னையும், பொருளையும், நிலங்களையும் தானாமாகப் பெற்று வரவு வைத்தும், அவற்றை முதலீடாகாக் கொண்டு அவற்றில் இருந்து கிடைக்கும் வட்டியில் திருவிழாவின் பற்பல செலவினங்களுக்கும் அளிக்கப்பட்டதையும் சோழர் காலக் கல்வெட்டுகளில் ஆவணப்படுத்தப் பட்டதால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வளநாட்டில் எவ்வாறு சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது என்றும் அத்திருவிழாவின் நிகழ்ச்சிகளைபற்றியும், அதற்கான செலவினங்கள் மூலமாகவும் அக்கால சித்திரைத் திருவிழா பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

சான்றுகள்:

[1] சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் – 4, மு. நளினி, http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1047

[2] தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து – 1 & 2, தொடர்: சிதையும் சிங்காரக் கோயில்கள், பால.பத்மநாபன், http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1193 &

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1204


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சோழர் காலத்தின் சித்திரைத் திருவிழாக்கள்”
  1. Rajeshkumar says:

    மிகச் சிறந்த கட்டுரை.

அதிகம் படித்தது