வறுமையின் மொழி இந்தி!
ஆச்சாரிMay 3, 2014
இந்தியை அரசு அலுவல் மொழியாக்க செயல்படும் அலுவல் மொழித் துறை கடந்த பத்தாண்டுகளில் இருநூறு கோடி ரூபாய் நிதி பெற்றிருக்கின்றது. இந்த அலுவலகத்தின் அறிவுரைப்படி இந்தியை பரப்ப ஒவ்வொரு நடுவண் அரசு துறைகளிலும் பல பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தோராயமாக 300 கோடி ரூபாய்க்கு குறைவில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்திக்கென நமது பணம் செலவழிக்கப்படுகின்றது.
மாற்று மொழி மக்களிடம் இந்தியைக் கொண்டு செல்ல தீவிர கவனம் செலுத்தும் அரசு, இந்தி பேசும் மக்களின் முன்னேற்றத்தில் சிறிதளவேனும் அக்கறை காட்டுகின்றதா?
கீழ்கண்ட ஒன்பது மாநிலங்களை இந்தி மாநிலங்கள் (Hindi Belt) என்று அழைக்கின்றனர்.
பீகார்
மத்திய பிரதேசம்
உத்திர பிரதேசம்
ஜார்கண்ட்
சட்டீஸ்கர்
ராஜஸ்தான்
உத்தரகண்ட்
ஹரியானா
ஹிமாச்சல் பிரதேஷ்
மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய மனித மேம்பாடு குறியீட்டில் இந்தி பேசும் மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன.
பீகார் கடைசி இடமான 28 ஆம் இடத்திலும், மத்திய பிரதேசம் 26 ஆம் இடத்திலும், உத்திர பிரதேசம் 25 ஆம் இடத்திலும், ஜார்கண்ட் 24ஆம் இடத்திலும், சட்டீஸ்கர் 23ஆம் இடத்திலும், ராஜஸ்தான் 21ஆம் இடத்திலும், உத்தரகண்ட் 13 ஆம் இடத்திலும், ஹரியானா 11ஆம் இடத்திலும், ஹிமாச்சல் பிரதேஷ் 8ஆம் இடத்திலும் இருக்கின்றன. இந்தி பேசாத மாநிலங்களான கேரளா முதல் இடத்திலும், கோவா, மிசோராம் மாநிலங்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களிலும் இருக்கின்றன. இந்தியை முற்றிலும் ஒதுக்கிய தமிழ்நாடு பத்தாம் இடத்தில் இருக்கின்றது.
இந்தி பேசும் மாநிலங்களில் மக்கள் படும் பெருந்துயரத்தை இந்தப் புள்ளி விவரங்களுக்குள் அடக்கிப்பார்ப்பது நமது அறிவின் ஆணவம். இம்மாநிலங்களில் பெரும்பாலான கிராமங்களுக்கு மின்வசதி கிடையாது. அனைத்து வீடுகளுமே மழைக்கு ஒழுகும் கூரை வீடுகள். அவ்வப்போது வெள்ளத்திலும், நெருப்பிலும் ஊர் மொத்தமும் அழிந்து மீண்டும் பிறக்கும். பல கிலோமீட்டர் நடந்தால் ஐந்தாவது வரை படிக்கலாம். ஆண்கள் அனைவரும் தினக்கூலி ஐம்பது ரூபாய்க்கு வேலைக்கு செல்ல, பெண்களுக்கு அதற்கும் குறைவான கூலிக்கு என்றாவது வேலை கிடைக்கும். கழிப்பறை, மிதிவண்டி, செருப்பு எல்லாம் ஆடம்பர பொருள்கள். திரைப்படக் கொட்டகைகளில் மட்டுமே அவர்களால் மருத்துவமனை, நீதிமன்றம் ஆகியவற்றைப் பார்க்க இயலும். நாம் என்றுமே செய்யாத பணிகளைத் தான் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தினம் செய்துவருகின்றனர்.
இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்கள் ஏன் பெரும்பாலும் இவ்வளவு பின் தங்கிய நிலையில் இருக்கின்றன என்பது ஆய்விற்குரிய பொருள். இத்தனைக்கும் இம்மாநிலங்களிடையே இந்தியாவின் வளமான ஆறுகள் பாய்ந்தோடுகின்றன. கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் அத்தோடு புதைந்து கிடப்பதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?.
இரண்டாயிர ஆண்டு வரலாற்றில் வளமாக இருந்த பகுதி, முகலாய மன்னர்கள் வரை செழிப்பாக இருந்த இடங்கள் சுதந்திர இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றதன் மர்மம் என்ன?
மொழிக்கும் பொருளாதாரத்திற்கும் இருக்கும் தொடர்பினை சில காலங்களாக ஆராய்ந்து வருகின்றனர். மக்களின் சிந்தனை மற்றும் பண்பாட்டை தீர்மானிப்பதில் மொழிக்கு முக்கிய பங்கிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. உதாரணத்திற்கு மிகவும் செழுமையான லத்தீன் மொழியில் ஆண்களின் பெண் நண்பர்களை குறிப்பதற்கு சொல் கிடையாது. அன்றைய பண்பாட்டில் ஆண்களுக்கு பெண் நண்பர்கள் இருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத செயலாக இருந்து வந்தது. மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே மொழி இருந்து வருகின்றது. நாம் பனி என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுவதை எஸ்கிமோ மக்கள் விழுந்து கொண்டிருக்கும் பனி, தரையில் விழுந்த பனி, தரையில் கிடக்கும் பனி, மேலும் பனியின் பல தன்மைகளை பொறுத்து வெவ்வேறு சொல் கொண்டு குறிப்பிடுகின்றனர். அவர்களின் வாழ்க்கையும் மொழியும் பனியோடு பிணைந்திருக்கின்றன.
மொழிக்கும் மக்களின் பண்பாட்டிற்கும் இருக்கும் தொடர்பைப் போன்றதே, மக்களின் வாழ்க்கை தரத்திற்கும் பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பு. முன்னேற்ற சிந்தனையுள்ள பண்பட்ட சமுதாய மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டதாக இருக்கின்றது.
இன்றைய சூழ்நிலையில் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற அடிப்படைத் தொழில்கள் உட்பட அனைத்து தொழில்களிலும் தொழில்நுட்பம் நுழைந்துவிட்டது. முன் காலத்தில் அண்டை ஊர் பொருள்கள் வார சந்தைக்கு வருவதைப் போன்று, உலகத்தின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் இன்று எளிதாக தெருக்கடைகளில் கிடைக்கின்றன. இன்றைய உலகில் பிழைப்பு நடத்துவதற்கு தொடர்ந்து புதுப்புது தொழில்நுட்பம், யுக்திகள், தகவல்கள் தேவைப்படுகின்றன.
ஏதோ சில காரணங்களால் இந்தி பேசும் மக்களுக்கு இவைகள் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
உலகமயமாக்கலுக்கும் ஆங்கில மொழிக்கும் சிறிது தொடர்பு இருந்தாலும்,மக்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் கட்டாயம் இல்லை. உலக பொருளாதாரத்தில் அமேரிக்காவிற்கு அடுத்து இரண்டாவது, மூன்றாவது நான்காவதாக இருக்கும் சீனா, ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு ஆங்கிலம் அறவே தெரியாது, இருப்பினும் அந்த நாடுகளில் வாழும் மக்கள் உலக சந்தையில் பெரும் வெற்றியடைந்து வருகின்றனர். உலகத்தின் அத்தனை அறிவு பொக்கிசங்களையும் அந்நாட்டு அரசாங்கம் உள்ளூர் மொழிகளில் கிடைக்கச் செய்கின்றது. ஆனால் இந்தி பேசும் நாற்பது கோடி மக்களுக்கு அரசாங்கம் என்ன செய்து இருக்கின்றது?.
உத்திர பிரதேசம், ஜார்கண்ட் சிறு நகரங்களில் மேலை நாட்டு மென்பொருள் நிறுவனங்கள் தொடங்குவதற்கு மொழி சிக்கலாக இருக்கலாம். வாகன தயாரிப்பு, இயந்திர தொழிற்சாலைகள் தொடங்குவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? ஆயிரம் பள்ளிகளையும், நூறு கல்லூரிகளையும் தொடங்கி மக்களுக்கு கல்வி முன்னேற்றம் கொடுப்பதை தடுப்பது எது? அரசு ஊக்குவித்தால் சிறு தொழில்கள், விவசாயம், வளராமலா போய்விடும்? இந்தி பேசும் மக்கள் சொந்த நாட்டிற்குள்ளே ஏன் அகதிகளாய் மாநிலம் மாநிலமாய் இடம் பெயர வேண்டும்? செல்லும் இடங்களில் அவர்களுக்கென்ன நல்ல வாழ்க்கையா அமைகின்றது?. கல்வி அறியும், தொழில் பயிற்சி இல்லாததால் செல்லும் இடங்களில் எல்லாம் அடிமட்ட பணிகளில் கசக்கி பிழியப்படுகின்றனர். உள்ளூர் மக்கள் 300 ரூபாய்க்கு செய்யும் வேலையை இவர்கள் நூறு ரூபாய்க்கு செய்யத் தயாராக இருக்கின்றனர்.
இதற்கெல்லாம் அரசியல்வாதிகளின் சுயநலம் ஊழல் ஆகியவற்றை மட்டும் காரணமாக கூற முடியாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் செய்த ஊழல்களை விட அதிகமாகவா இந்தி பேசும் மாநில அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றனர்?
இந்தி பேசும் மக்களை முன்னேற்றாமல் இந்தியாவை முன்னேற்ற முடியாது. இந்தி மொழியின் மீது காட்டும் கரிசனத்தை “இந்தி”யர்களிடம் காட்டட்டும் அரசு.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வறுமையின் மொழி இந்தி!”