மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்திற்குள்ளான பறவை இனங்களின் தகவமைப்பு

ஆச்சாரி

May 17, 2014

உலகை உலுக்கிய ஒரு நிகழ்வான உக்ரைன் நாட்டின் செர்னோபில் அணுமின் நிலைய விபத்து நிகழ்ந்து சென்ற மாதத்துடன் (ஏப்ரல் 2014) இருபத்தியெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏப்ரல் 26, 1986 அன்று யூனிட் 4 அணு உலை (Unit 4 reactor) வெடிப்பின் விளைவாக, கடுமையான, அளவுக்கு மீறிய கதிரியக்கத் தாக்கத்தை எதிர்கொண்ட அணுமின்நிலைய ஊழியர்களும், விபத்தின் விளைவுகளை  கட்டுப்படுத்தப் போராடிய தீயணைப்பு படையினர் பலரும் சில வினாடிகளுக்குள் இறந்தனர். அல்லது உடல் உறுப்புக்களும் திசுக்களும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட சில வாரங்களுக்குள் இறந்தனர்.

செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு அருகில் இருந்த பல இடங்களை வாழத் தகுதியற்ற இடங்கள் எனக் கைவிட்டு மக்கள் வெளியேறினர். அப்பகுதியில் இருந்த பிற உயிரினங்களும், தாவரங்களும் மிகவும் பாதிக்கப்பட்டன.  உடல் ஊனமும், குறைகளும் தோன்றி விலங்குகளின் வாழ்வு பாதிக்கப்பட்டது.  அப்பகுதியைச் சூழ்ந்திருந்த பைன் மரக்காடுகளில் மரங்கள் பட்டுப் போய் அதன் ஊசியிலைகள் செங்கல் நிறத்தை ஒத்த செவ்வண்ணம் பெற்று மரங்களும் சில நாட்களில் உயிரிழந்தன.  அப்பகுதியே இதனால் சிவப்பாகிவிட, அக்காட்டுப்பகுதி “செந்நிறக்காடு” (The Red Forest) என்றழைக்கப்பட்டது.

கதிர்வீச்சின் அளவு ‘மணிக்கு இத்தனை மில்லெர்ரங்கென்ஸ்’ (milliroentgens per hour – mR/h) என அளவிடப்படுகிறது. [குறிப்பு: இயற்கையிலேயே கதிர்வீச்சுகள் உள்ளது, அத்துடன் அனைத்துக் கதிரியக்கமும் உடலுக்கு ஊறு விளைவிப்பதில்லை. அவ்வாறு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் கதிர்வீச்சு  'மைக்ரோசீவர்ட்ஸ்' (microSieverts per hour) என்ற அலகால்  அளக்கப் பெறும். அது மேலே குறிப்பிட்ட  மில்லெர்ரங்கென்ஸ் என்ற அலகில் இருந்து மாறுபட்டது]. அணுஉலை கதிர்வீச்சின் அளவு, மேலும் அதன் தாக்கத்தின் விளைவுகள் இவற்றின் அடிப்படையில் செர்னோபில்  பகுதி அறிவியல் அறிஞர்களால் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

முதல் பகுதி (The first zone ) – கதிர்வீச்சின் அளவு 500 mR/h அல்லது அதற்கு அதிகமான அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதி. இப்பகுதியில் உயிரினங்கள் பேரழிவிற்கு உள்ளாகும்.

இரண்டாம் பகுதி (The second zone) – கதிர்வீச்சின் அளவு 200–250 mR/h உள்ள பகுதியில் உள்ள மரங்கள்  25–40% வரை அழிந்துவிடும்.

மூன்றாம் பகுதி (The third zone) – கதிர்வீச்சின் அளவு 50–200 mR/h உள்ள பகுதியில் வளர்ந்த மரங்கள் பாதிக்கப் பட்டாலும் உயிர் பிழைக்கும். ஆனால் இளம் மரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்துவிடும்.

நான்காம் பகுதி (The fourth zone) – கதிர்வீச்சின் அளவு 20 mR/h உள்ள பகுதியில் உயிர்ச் சேதம் இருப்பதில்லை, ஆனால் வளர்ச்சியில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இந்த மூன்று மற்றும் நான்காம் பகுதியில், கதிர்வீச்சின் அளவு குறைவாக இருக்கும் இடங்களில் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளன என்பதை கடந்த கால்நூற்றாண்டாக சில உயிரியல் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள்.  அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழக  உயிரியல் அறிஞர் திம்மோத்தி மூசவ் (University of South Carolina, Biologist Timothy A. Mousseau, http://cricket.biol.sc.edu/Mousseau/Mousseau.html).

கடந்த இருபத்தியெட்டு ஆண்டுகளில் பலமுறை தொடர்ந்து செர்னோபில் பகுதிக்குச் சென்று குறைந்த அளவு கதிர்வீச்சை எதிர்கொள்ளும் உயிரினங்களில் என்ன மாறுதல்கள் நிகழ்கிறது என்று ஆராய்ந்து வருகிறார். தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது கதிர்வீச்சு ஏற்படுத்தும் நீடித்த விளைவுகள் பற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா, ஜப்பான், அணு உலைகளின் விபத்திற்குப் பிறகு அங்கும் ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். இவ்விரு இடங்களில் அணுவுலை விபத்தின் காரணமும், ஏற்பட்ட விதமும் வேறாக இருந்தாலும், அதிக பரப்பளவுள்ள இடங்கள் அணுவுலைக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது என்ற முடிவு ஒன்றே.

இவரது ஆய்வுக்கு பல உயிரினங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.  பல பறவை இனங்கள், பூச்சி இனங்கள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், வெளவால், எலிகள், சிலந்திகள் என்ற பலவகை உயிரினங்கள் இவரால் ஆராயப்பட்டு வருகின்றன. சிலந்தி வலைகளை படம் பிடித்து, கதிர்வீச்சின் தாக்கத்தால் அவற்றின் வலை பின்னும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும், பாதிக்கப்பட்ட எலிகளின் இனங்களில் மரபணுக்களில் வேறுபாடுகள் உள்ளனவா என்றும் இவரால் ஆய்வுகள் நிகழ்த்தப் படுகின்றன.

குறைந்த அளவுள்ள தொடர் கதிர்வீச்சு உடனே மரணத்தைத் தருவதில்லை.  ஆனால் அது உயிரினம் எவ்வளவு நாட்கள் வாழும் என்பதை நிர்ணயிக்கும்,  புற்றுநோய்களால் பாதிக்கப்படுதலையும் விளைவிக்கும். பாதிக்கப்பட்ட உயிரினங்களில் மரபணு மாறுபாடுகளும், கண்புரைகளும் காணப்படுவதுண்டு.  பாதிக்கப்பட்ட உயிரினங்களின் மரபணுக்களில் டி என் ஏ இழைகள் கதிர்வீச்சால் சிதைவுறுகிறது. மரபணு மாற்றங்களின் விளைவு காரணமாக கதிர்வீச்சுப் பகுதிகளில் வாழும் உயிரினங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைவாகக் காணப்படும்.

மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பறவைகளில் பெரும்பான்மையானவை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதும்,  அவற்றின் அலகுகளில் குறைபாடுகள் தோன்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்ற ஏப்ரல், 2014 வெளியீடான ‘ஜர்னல் ஆஃப் பங்க்க்ஷனல் இகாலாஜி’ (Journal Functional Ecology, http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2435.12283/pdf) ஆய்வுச் சஞ்சிகையில்  திம்மோத்தி மூசவ் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை, கதிர்வீச்சின் விளைவைப் பற்றிய எதிர்பாராத தகவல் ஒன்றினைத் தருகிறது. அந்த அறிக்கையின்படி சிலபறவை இனங்கள் கதிர்வீச்சிற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளவும் செய்கின்றன என்பது தெரிய வருகிறது.

இப்பறவைகளில் குறைந்த அளவிலான தொடர் கதிரியக்கத்தின்  தாக்கம், அதிக அளவு பாதுகாப்பை அளிக்கும் ‘ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்களை’ (antioxidants) உற்பத்தி செய்வதையும், அதனால் ‘ஃபிரீராடிக்கல்’ குறைவதையும்,  அதன் தொடர் விளைவாக மரபணுகளில் சேதம் ஏற்படுவதைக்   குறைத்துள்ளது. இது பரிணாம வளர்ச்சி விதியின்படி,  இயற்கைத் தேர்வு முறையில் உயிரினங்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு  தங்களைத் தகவமைத்துக் கொண்ண்டு வாழும் முறையினை ஒத்திருக்கிறது. இதிலிருந்து சிலபறவை இனங்கள் குறைந்தளவு தொடர் கதிர்வீச்சிற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. இவ்வாறு தகவமைத்துக் கொள்ளும் திறன் பறவைகளின் பல்வேறு இனங்களில் வெவ்வேறு விதத்தில் வேறுபடுகிறது.

சான்றுகள்:

[1] Chronic exposure to low-dose radiation at Chernobyl favors adaptation to oxidative stress in birds. Ismael Galván, Timothy A. Mousseau and Anders P. Møller et al.,

Functional Ecology, Wiley Online Library, 16-Apr-2014 [You have free access to this content]http://onlinelibrary.wiley.com/doi/10.1111/1365-2435.12283/pdf

[2] At Chernobyl, Hints of Nature’s Adaptation, By HENRY FOUNTAIN, The New York Times, MAY 5, 2014

http://www.nytimes.com/2014/05/06/science/nature-adapts-to-chernobyl.html

[3] Chernobyl: Capping a Catastrophe, By HENRY FOUNTAIN, The New York Times, April 27, 2014

http://www.nytimes.com/interactive/2014/04/27/science/chernobyl-capping-a-catastrophe.html

[4] 28 Years Later, The Animals Of Chernobyl Have Reclaimed Their Homeland… At A Price, by  Nick Visser, The Huffington Post,  05/06/2014

http://www.huffingtonpost.com/2014/05/06/chernobyl-animals_n_5275596.html

[5] Some Birds in Chernobyl Site have adapted to Radioactive Environment, by BUSTA SEBETSEBA, NewsTonight, 05/07/2014

http://newstonight.co.za/content/some-birds-chernobyl-site-have-adapted-radioactive-environment#ixzz31BwyG2A9

[6] The Red Forest – http://www.nuclearflower.com/zone/zone08.html

[7] Radiation: How much is harmful? – http://knowledge.allianz.com/environment/energy/?1458/radiation-how-much-is-harmful

Tinder claims the frequent app sees over 50 million people use the app every month, with 1

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்திற்குள்ளான பறவை இனங்களின் தகவமைப்பு”

அதிகம் படித்தது