மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வேண்டுமொரு சூதன்

ஆச்சாரி

May 24, 2014

செயமோகன் எழுதிவரும் மகாபாரத தொடரினாலேயே இந்த தலைப்பை வைக்கிறேன். மகாபாரதமே சூதர்களின் வாயிலாக வந்தது தானே! இந்த சூதர்களை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. காரணம் அவர்கள் கேட்டுணர்ந்த விஷயங்களை பிறரிடம் அறியாதவர்களிடம் சேர்க்கிறார்கள். காலத்தின் போக்கில் அவை நிலைபெற்றுவிடுகிறது. சமகால இலக்கியத்திற்கும் இப்படிப்பட்ட சூதர்கள் தேவைப்படுகிறார்கள். ஏன் என்று சொல்கிறேன்.

நேரம் கிட்டும் போதெல்லாம் இலக்கிய சந்திப்புகள் நிகழ்ந்தால் செல்லும் வழக்கம் கொண்டவன் நான். அப்படி செல்லும் இடங்களில் முன் பின் அறிந்திராத மனிதர்களுடன் பேசுவது வழக்கம். அப்படி ரசனீசு என்பவருடன் பேசும் போது நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைக்கின்றன. அப்படியொரு முறை கிடைத்தது மேனாட்டு இலக்கியங்கள் தமிழைக் காட்டிலும் அருமையாக உள்ளது என்பது. அந்த நண்பருடன் பேசுகையில் அவர் ஆல்பர்ட் கம்யூவின் அந்நியன் வாசித்துக் கொண்டிருந்தார். ஏன் என்று கேட்டேன். அவர் விரிவாக சொல்ல ஆரம்பித்தார். தமிழ் இலக்கியவாதிகளின் எழுத்தில் ஆழம் இல்லை. எடுத்துக் கொள்ளும் கரு சார்ந்த ஆழமான ஆய்வுகள் இல்லை என்பது போல பேசிக் கொண்டிருந்தார்.

அவர் சொன்ன எல்லா விஷயங்களையும் கேட்டு வந்துவிட்டேன். பதில் எதுவுமே சொல்லவில்லை. ஏன் எனில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தது சந்திப்பிற்கு முன்னால். அவர் பேசி முடிக்கும் போதே சந்திப்பு தொடங்கியிருந்தது. ஆதலால் ஏதும் சொல்லாமல் வந்துவிட்டேன். பிறகு யோசிக்கும் போது என் சின்ன வாசிப்பில் நான் அறிந்து கொண்ட விஷயங்கள் நினைவிற்கு வந்தன. ஒவ்வொரு நாட்டின் எழுத்தாளர்களும் அந்தந்த கலாச்சாரத்துடன் ஏதோ ஒரு வகையில் ஒன்றி இருக்கிறார்கள்.

நம் புனைவுகளை எடுத்துப் பார்த்தால் கூட நிறைய கதைகள் சொல்லும் தன்மையை பெரும்பான்மையானவற்றில் காண முடியும். அவை நுண்மைகளை சொல்லி செல்கின்றன. இந்த நுண்மைகளை அவர்கள் பெரிதாக பேசுகிறார்கள். இது என் அனுமானமே. தவறுகள் இருக்கலாம். இருபக்க இலக்கியங்களையும் நான் குறை சொல்லவில்லை. ஒரு உதாரணம் கொண்டு விளக்கப் பார்க்கிறேன்.

எஸ்.ராமகிருசுணன் தாசுதாயெவ்சுகியை கொண்டாடுபவர். அவருடைய எழுத்திலும் தாஸ்தாயெவ்ஸ்கியின் சாயல் தெரிவதை உணர்ந்திருக்கிறேன். ரசுனீசும் இதையே சொன்னார். சாயலே தவிர பூரணம் அல்ல. தாசுதாயெவ்சுகியின் நாவல்களிலெல்லாம் ஒரு பெரிய கரு இருக்கும். அந்த கருவிற்கு இயைந்த மாதிரி தனிமையை வளைத்திருப்பார். குற்றமும் தண்டனையும் நாவலில் கூட குற்றவுணர்ச்சி சார்ந்த தனிமை தான் நாயகனை பீடித்து வைத்திருக்கிறது. புவர் ஃபோக் நாவலில் தனிமையை ரசிக்கிறான். வெண்ணிற இரவுகளில் தனிமையை பகிர நினைக்கிறான் நாயகன். இப்போது எஸ்.ராவிற்கு வருவோம். ஒரு கருவை எடுத்து வரைபடமாக வரைய நினைத்தால், அது எந்த நாவலாக இருந்தாலும் சரி. அப்படி வரைந்தால் அதன் cause and effects பகுதிகள் நீண்டு கொண்டே செல்லும். காரணங்களிலெல்லாம் சில கதைகளை உருவாக்கலாம். பாதிப்புகளிலெல்லாம் சில கதைகளை உருவாக்கலாம். இதையெல்லாம் செய்யும் போது அந்த கரு நீளமானதாக முழுமையடைவதாக ஆகிறது. இந்த தன்மையை தன்னுடைய எல்லா நாவல்களிலும் செய்கிறார். அதன் எல்லா கிளைகளிலும் அதற்கொப்ப தனிமையை உருவாக்குகிறார். இங்கே தனிமையை கொண்டாடும் சாமான்யன் வேறொரு உலகில் சஞ்சரிப்பவன். நாம் கூட்டுக் குடும்ப வேரிலிருந்து வந்தவர்கள். தனிமையை நம்மால் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியாது. இந்த நுண்மையை கூட தன்னுடைய சமீபத்திய நாவலான நிமித்தம் வரை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

இதனால் தான் முதலிலேயே சொன்னேன் இரண்டையும் வாசிக்க வேண்டும். ஆனால் ஒன்றை விட ஒன்று உயர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு நிலவியலும் அந்தந்த காலத்திற்கேற்ப சமூக விஷயங்களையும் கற்பனை தன்மைகளையும் பதிந்து கொண்டே தான் இருக்கிறது. சிலருக்கு பிடித்து விடுகிறது சிலருக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. எல்லாம் ஒரு மோஸ்தர்!

மேலும் எஸ்.ராமகிருசுணன் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. எல்லா வகை இலக்கியங்களும் நம் மொழியில் இருக்கின்றன. நாம் தேடுதலில் சோம்பல் கொண்டிருக்கிறோம். தேடல் எனும் போது தான் ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது. சென்னை சென்றிருந்த போது சாம் என்னும் நண்பரை சந்தித்தேன். அவரும் இலக்கிய உபாசகர். எல்லோரும் ஏன் வாசிக்க மறுக்கிறார்கள் என்று கேள்வி கேட்டேன். அவர் சொன்னார் இன்றைய இளைஞர்களின் போக்கு முழுக்க அவசரத்தில் மூழ்கி இருக்கிறது. அமைதி இருக்கும் பட்சத்தில் மட்டுமே வாசிக்கிறோம். எப்பேர்பட்ட தீவிர வாசகராக இருந்தாலும் சும்மா இருக்கும் நேரத்திலெல்லாம் வாசித்திர மாட்டார்கள். ஒரு அக அமைதி வாசிப்பிற்கு தேவைப்படுகிறது. இத்தனை மணிக்கு இந்த பேருந்தை பிடிக்க வேண்டும் அந்த நேரத்திற்குள் அந்தந்த வேலைகளை முடிக்க வேண்டும் என்று போக்குவரத்து நெரிசலிலும் வேலைப்பளுவிலும் ஓடுகிறார்கள். இவர்களின் ஓட்டத்தை நிறுத்தி அமைதிபடுத்தி இலக்கியத்தை வாசிக்க வைக்க வேண்டுமெனில் அது பெரும் பணி. பெங்களூரு போன்ற இடங்களில் ஐ.டி நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களில் சிலர் பேருந்தில் செல்லும் போது இலக்கிய நூல்கள் வாசிக்கிறார்கள். ஆச்சர்யமே கொள்கிறேன். என் நண்பரொருவர் ஒரு நாளைக்கு ஐம்பது பக்கம் வாசிக்கிறேன் என்றார். நன்மருந்து என்றேன்.

இதையெல்லாம் சொல்வதன் காரணம் எம்மொழி இலக்கியமாக இருந்தாலும் சரி அதிலிருந்து உய்த்துணர்ந்ததை வெளி சொல்லும் சூதன் ஒருவன் எல்லா வாசக மனதிலும் இருக்க வேண்டும். பேச்சின் வழியாகவோ எழுத்தின் வழியாகவோ இந்த உணர்தலை வெளி சொல்ல வேண்டும். நான் நுகர்ந்த இலக்கியம் என்று பள்ளிகளில் பேச்சுப் போட்டி வைப்பார்கள். இப்போது அது தான் தேவையாக இருக்கிறது. எழுத்தாளனுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதே அளவு இது போன்ற சூதர்களின் தேவையும் நம் இலக்கிய சமூகத்தில் இருக்கின்றன. நல்ல படைப்புகள் தன் பாதையை தானே கண்டடையும் என்னும் சொலவடை உண்டு. இது காலாவதியாகிவிட்டது என்றே உணர்கிறேன். இல்லையெனில் என் வாசிப்பு எப்போதோ தேக்க நிலையில் நலிவடைந்திருக்கும் ஒவ்வொரு முறை புத்தக கடைக்குள் செல்லும் போதும் நான் வாசிப்பதில் இவ்வளவு பெரிய கடனை வைத்திருக்கிறேனே என்று தான் தோன்றுகிறது. குற்றவுணர்ச்சி.

ஆயுளும் வாசிப்பும் இரு வேறு முனைகள்!

With the prevalence of identity thefts, trymobilespy.com sexual predators, sexting, oversharing, and cyberbullying it’s vital parents are able to monitor this aspect of a teen’s activity

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேண்டுமொரு சூதன்”

அதிகம் படித்தது