மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வள்ளலாரும் பழந்தமிழ் இலக்கியமும்

ஆச்சாரி

Jun 21, 2014

vallalaar1முன்பு ஒரு கட்டுரையில் தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம் என்று குறிப்பிட்டிருந்தேன். தாழ்வு மனப்பான்மையின் ஒரு கூறு, தன் ஆற்றலை உணராமல், பிறரை (தன்னைவிட ஆற்றலில் குறைந்தவர்களைக்கூட) மிகவும் போற்றுவதும் அவர்களுக்குப் பயப்படுவதும் ஆகும். இதற்கு இங்கு மத உதாரணங்கள் சிலவற்றைச் சொல்லலாம். தமிழனுக்குத் தன் நாட்டுச் “சாமி”கள் (தெய்வங்கள்) பிடிப்பதில்லை. என்னதான் பழந்தமிழ்ச் சாமியாக இருந்தாலும் இப்போது ஆந்திரத்திலிருக்கும் வேங்கடாசலபதியும், கேரளத்தின் ஐயப்பனும், மற்றும் பண்டரிபுரத்து பகவானும், காசி விசுவநாதனும்தான் வேண்டியவர்கள். இவர்களுக்காக வருடா வருடம் படையெடுப்பதன்றி தாங்கள் உழைத்துச் சேர்த்த செல்வத்தையும் அர்ப்பணிப்பார்கள்.

ஞானிகளைப் பாராட்டுவதிலும் அப்படித்தான். இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தமிழ்நாட்டில் எத்தனை எத்தனை மடங்கள்? வள்ளலாருக்கு அவர் பிறந்த தென்ஆர்க்காட்டு மண்ணுக்கு அப்பால் எங்கேனும் நிறுவனங்கள் உண்டா? சாயிபாபா என்ற வடநாட்டு மகானுக்கு எத்தனை கோயில்கள்? எந்தப் புதிய நகர்‘, ‘காலனிஉருவானாலும் அங்கே ஒரு சாயிபாபா கோயில் வந்துவிடுகிறது. அவரைவிட மேம்பட்ட தத்துவங்களை போதித்த வள்ளலாருக்கு எங்கேயாவது கோயில்கள் உண்டா? கேட்டால், சாயிபாபா பகவானின் அவதாரம், வள்ளலார் ஒரு மனிதர் என்று நம் தாழ்வு மனப்பான்மை கூறிவிடும். இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து நம் தாழ்வு மனப்பான்மையின் அளவைச் சோதித்துக் கொள்ளுங்கள்.

ஆழ்வார், நாயன்மார் வரிசையில் தமிழ்நாட்டில் கடைசியாகத் தோன்றிய ஞானி இராமலிங்க அடிகளார். வெறும் ஆன்மிகவாதி மட்டுமல்ல, தத்துவஞானி. அவரே கூறுவதுபோல வாழையடி வாழையென வந்த ஆன்மிக அறிஞர்களின் வரிசையில் ஒருவர். அவருடைய தத்துவம், வழக்கமான சைவ சித்தாந்தத் தத்துவம் அன்று. அவருடைய வாழ்க்கைதான் அவருடைய தத்துவம். அன்பு, நேர்மை, தூய்மை, ஆன்ம நேயம், கடவுள் தன்மை ஆகிய அனைத்தின் உருவமாகவும் வாழ்ந்தவர்.

சென்னையில் தியசாபிகல் சொசைட்டி ஏற்படுத்திய கர்னல் ஆல்காட், மேடம் பிளவாட்ஸ்கி, லெட்பீட்டர், அன்னீ பெசண்ட் போன்றவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்திய ஆன்மிக மறுமலர்ச்சியின் ஒரு பகுதி என்பார்கள். இவர்கள் எல்லாம் இராமலிங்க அடிகளாருக்குப் பின்னவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்திய ஆன்மிக இயக்கத்துக்குத் தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதியாகத் திகழ்பவர் அடிகளார்தான். தியசாபிகல் சொசைட்டிக்கு முன்னோடியும் அவர்தான் என்று மேடம் பிளவாட்ஸ்கி குறிப்பிடுகின்றார் (அந்தக் கழகத்தின் இதழான தியாசபிஸ்ட் என்பதில், 1882 ஜூலை இதழில்.) ஆனால் தமிழ்நாட்டில், அதுவும் பிள்ளைமார் சாதியில் பிறந்ததனாலோ என்னவோ இராமகிருஷ்ணரை, சாயிபாபாவைப் போற்றிய இங்குள்ள பார்ப்பனர்கள், இராமலிங்கரைப் போற்றவுமில்லை, பிற மாநிலத்தவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தவுமில்லை. அப்படிச் செய்ய அவர்களின் சாதிப் பெருமை இடந்தரவில்லை. இராமலிங்கர் புகழும் பரவவேண்டிய அளவுக்குப் பரவ வில்லை. இக்கட்டுரையின் நோக்கம் அது அல்ல. இராமலிங்கரின் கோட்பாடுகள் யாவும் பழந்தமிழ் மக்களின் கோட்பாடு என்பதை வலியுறுத்துவதே இங்கு நோக்கம்.

அடிகளார் தமக்கெனத் தனியானதோர் கொள்கையை உருவாக்கியவர் என்று சொல்ல இயலாது. தமிழில் பெரும்புலமையும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஞானமும் வாய்த்த அடிகளார், பழந்தமிழ்க் கொள்கையைத்தான் சமரச சன்மார்க்கம், ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றெல்லாம் பெயரிட்டு அழைத்தார். சன்மார்க்கம் என்ற சொல் முதன்முதலில் திருமூலரின் திருமந்திர நூலில் வருகிறது. தாயுமானவரும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

தம்முடைய தத்துவத்தை இராமலிங்க அடிகளார் இப்படிச் சொல்கிறார்: “என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம், இயற்கைத் தொன்மையாம் சன்மார்க்கம், ஆனந்த சமரச சன்மார்க்கம்.” உலகிலுள்ள தாவரங்கள் விலங்குகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்கள்மீதும் அன்பு செலுத்துவதுதான் சன்மார்க்கம்.

vallalaar2அடிகளாரின் சமரச சன்மார்க்கம் என்னும் முழுத்தூய அன்பு, சமணம், பௌத்தம் ஆகிய மதங்களின் அன்புநெறியை ஒட்டியது. நம் பாடப்புத்தக மனப்பாடப் புலிகளைக் கேட்டால் அகிம்சை என்ற கொள்கையை காந்தியடிகள் உருவாக்கினார் என்பார்கள். கிறித்துவத்திற்கும் ஐந்து நூற்றாண்டுகள் முன்பு தோன்றிய சமண மதத்தின் அடிப்படைக் கொள்கையே அகிம்சைதான். எந்த உயிரையும் கொல்லவோ, அதற்குத் தீங்கிழைக்கவோ கூடாது என்பது சமணத்தின் கொள்கை. பௌத்தமோ, உலகத்தின்மீதுள்ள பற்றும் பாசமும்தான் துன்பத்தை அளிக்கின்றன, எனவே அவற்றைத் துறக்கவேண்டும் என்கிறது. அதற்காகச் சரியான நெறியைப் பின்பற்ற வேண்டும் என்கிறது. இரண்டு மதங்களுமே துறவை முதன்மையாக வலியுறுத்திய காரணத்தால் அவற்றின் கொள்கை வாழ்க்கையில் செயல்படுத்தக்கூடிய கருணையாகவும் அன்பாகவும் அமையவில்லை, வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியவர்களின் கருணை என்பதாகவே இருந்தது.

அதனால் துறவிகளின் மனத்தளவிலான கருணைக்கும் அன்புக்கும் வலிமை இல்லை என்பதல்ல. அதனால் ஏற்படுகின்ற ஆன்மிக சக்தி வலுவானது என்றுதான் நூல்கள் சொல்கின்றன. புத்தரின் அற்புத சக்திக்குக் காரணம் அதுதான் என்பார்கள். அவருடைய அற்புத ஆற்றல் மனிதர்களை மட்டுமல்ல, அவர் எதிர்ப்பட்ட விலங்குகளையும் ஈர்த்தது என்பார்கள்.

வள்ளலார் கண்ட சன்மார்க்கம், சமணத்தின் அகிம்சையையும், பௌத்தத்தின் பேரன்பையும் அன்றி அதற்கும் மேலான தன்மைகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த மேலான தன்மைகள் என்பவை, பழங்காலத்திலிருந்து தமிழ் மண்ணுக்கே உரியனவாக அமைந்தவை.

மற்றவர்களுக்காகவே மனிதர்கள் வாழ்வதனால் தான், சமூகத்திற்காக எதையும் தியாகம் செய்யும் கருணை படைத்தவர்கள் இருப்பதனால்தான் உலகம் இருக்கிறது என்பது பழந்தமிழ்க் கொள்கை. புறநானூற்றின் 182ஆம் பாடல் இதனைத் தெளிவாகச் சொல்கிறது. உண்டாலம்ம இவ்வுலகம்….எனத் தொடங்கும் அக்கவிதை, “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென பிறர்க்கென முயலுநர் உண்மையானே, இவ்வுலகம் உண்டால் அம்ம” என்கிறது. அதாவது தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள் இருப்பதனால்தான் இந்த உலகம் இருக்கிறது என்பது பொருள்.

(ஆனால் பிறருக்காக வாழ்வது என்பது தொல்லை தரும் கொள்கை. காந்தியடிகளின் இப்படிப்பட்ட வாழ்க்கை, இந்துக்களுக்கு இழப்பாகவும், முஸ்லிம்களுக்கு ஆதாயமாகவும் அமைந்தது. பழந்தமிழரின் இப்படிப்பட்ட வாழ்க்கை, வந்தவர்களை வாழ வைத்தல் என்ற பெயரால் எல்லாருக்கும் அடிமைப்பட வைத்தது. தனிமனிதக் கொள்கை சமூகக் கொள்கையாக உதவுவதில்லை. இதனைத் தெளிவாக உணர்ந்ததனால்தான் போலும், தனிமனிதக் கொள்கையில் கொல்லாமையை வலியுறுத்தும் வள்ளுவர், சமூகக் கொள்கையில் தீயவர்களைக் களையெடுப்பதுபோல் நீக்க வேண்டும் என்கிறார்.)

பழங்காலத்தில் தமிழர் தாவரங்கள், விலங்குகள் மீதும் பேரன்பு செலுத்தினர் என்பதைப் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்ச்சியும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்த நிகழ்ச்சியும் நிரூபிக்கின்றன. இந்த வகையான அன்பைத்தான் வள்ளலாரும் வலியுறுத்துகின்றார். இன்றைக்கு இயற்கையே அழிக்கப்பட்டு உலகத்தின் சுற்றுச்சூழல் பாழாகின்ற நிலையில் நமக்கு உடனடித் தேவையும் இந்த வகையான அன்புதான்.

       எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல்லின்புறச் செயவும்

       அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும்

       செவ்வையுற்றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்று கூத்தாடி

       ஒவ்வுறு களிப்பால் அழிவுறாதிங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய். (6-20-18)

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்

நீடிய பிணியினால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்

ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

(6-21-58)

அவர் எழுதிய சீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூலின் கருத்துகள் ஆன்மிகத்தின் முதற்படியாக அமைகின்றன. சீவ காருண்யம் என்றால், எல்லா உயிர்களின்மீதும் காட்டும் கருணை என்று பொருள்.

vallalaar3ஆன்மிக சாதனை புரிபவனின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இராமலிங்கஅடிகளார் தமது பாக்களில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். சுத்ததேகம், பொன்னுருவம், அன்புருவம், அருளுருவம், இன்புருவம் என்றெல்லாம் அதைச் சொல்கிறார். அவரவரின் ஆன்மிக பலத்துக்கேற்ப இவை வாய்க்கின்றன என்று அடிகளார் கருதுகிறார் போலும். இந்த ஆன்மிக பலத்தைச் சோதிப்பதற்கு அவர் குளிகையொன்று செய்துவைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். அந்தக் குளிகையை ஆன்ம பலமற்றவர் கையில் கொண்டால் தாங்க முடியாத வெப்பத்தை உண்டு பண்ணும். ஆன்மிக சக்தியுள்ளவர்கள் கையில் ஏந்தினால் அவரவர் ஆன்மிக பலத்துக்கேற்ப எவ்வளவு நேரம் முடிகிறதோ அவ்வளவு நேரம் தாங்கமுடியும். சாதாரணமாக அதைத் திருநீற்றில் வைத்திருப்பார்கள் என்றும் அவரது சீடர்கள் கையில் அதைக் கண்டதாகவும் அடிகளாரின் வரலாற்றாசிரியர் வேலாயு முதலியார் குறிப்பிடுகிறார்.

(ஆனால் நாம் சிந்தனைகளுக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டுமே ஒழிய, இம்மாதிரி அற்புதச் செயல்களில் கருத்தைச் செலுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை தேவை. இன்றும் வள்ளலார் நீரில் விளக்கெரித்தார் என்றும், பல இடங்களில் ஒரே சமயத்தில் தோன்றினார் என்றும் அற்புதச் செயல்களைப் பாராட்டுபவர் இருக்கிறார்கள். அற்புதச் செயல்களில் ஈடுபட்டு, அதற்காக பக்தி செலுத்துவது பாமரமனம். இதில் தனக்கு மேலான ஒன்றின் பேரில் ஏற்படும் பயமும் வியப்பு உணர்ச்சியும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. கொள்கையை ஏற்று அதைக் கடைப்பிடிப்பதுதான் உயர்ந்தநிலை.)

அடிகள் கண்ட அருட்பெருஞ்சோதி என்ற கருத்தும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ளதுதான். திருமுருகாற்றுப்படையின் தொடக்கத்தில்,

       உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

       பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு

       ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி

என்ற அற்புத அடிகள் வருகின்றன.

இறைவனின் ஓயாது வழங்கும் ஒளியை அவிர் ஒளி என்கிறார் நக்கீரர். இதனைத் தான் அருட்பெரும் சோதி என்று ஏற்றுக்கொண்டார் வள்ளலார்.

ஞாயிறு கடல்நீரை ஆவியாக்கி, உவர்நீரை (உப்புநீக்கி) உண்ணும் நீர் ஆக்கி மழையாகத் தருகிறது. அந்தச் சமயத்தில் அதன் நீர்ம(திரவ) வடிவமும் மாறி ஆவி வடிவமாகிறது. அதுபோல இறைவனின் அருட்பெரும் சோதி, இந்த மனித உடலின் உவர்ப்பை (கெட்ட தன்மைகளை) நீக்கி, நீரை ஆவியாக்குவதுபோல் பௌதிக திட இருப்பை நீக்கிச் சுத்ததேகம் ஆக்குகிறது என்பது வள்ளலாரின் கருத்தாகத் தோன்றுகிறது.

திருமுருகாற்றுப்படையின் இறுதிப்பகுதியில் வரும் இந்த அடிகளும் நோக்கத் தக்கவை. திருமுருகாற்றுப்படை, ஓர் ஆன்மிகப் பரிசிலன் இறைவனிடம் பரிசில் வேண்டிச் செல்வதாக அமைகின்ற நூல்.

       இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து, ஒரு நீயாகித் தோன்ற

       விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி

என்பது அந்தப் பரிசிலன் இறைவனிடம் கேட்கும் பரிசு.

வள்ளலார் கூறிய ஆன்மநேயம் என்ற கருத்து இதுதான். திருமுருகாற்றுப்படையின் இந்தப்பகுதியில், இந்த முழு உலகமாகவும் தான் ஆக வேண்டுமென ஆன்மிகப் பரிசிலன் வேண்டுகிறான். (ஒரு நீயாகித் தோன்றுவது என்றால், உன்னைப் போலவே நானும் முழு உலகமாகவும் ஆகவேண்டும் என்று அர்த்தம்.) முழு உலகமாகவும் ஒருவன் ஆகுதலே சாகா வரமல்லவா? இதனைத்தான் மரணமிலாப் பெருவாழ்வு என்று அடிகளார் உரைக்கின்றார்.

இவ்வாறு, வள்ளலாரின் அனைத்துக் கருத்துகளும் தத்துவங்களும் பழந்தமிழ் வாழ்க்கையிலிருந்தும், இலக்கியங்களிலிருந்தும் பெறப்பட்டவை என்பதை நாம் காண இயலும். தமிழ்நாட்டின் தனிப்பெரும் ஞானியான வள்ளலார் தமது தத்துவத்தைத் தனியாக எழுதிவைக்கவில்லை. அவை திருவருட்பாவின் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களில், 40000 செய்யுளடிகளில் பொதிந்து கிடக்கின்றன. மேலும் அவருடைய உரைகளிலும் சீடர்களுடன் அவர் உரையாடிய பேச்சுகளிலும் அவை உள்ளன. அவற்றைக் கண்டறிந்து திறமாக வெளிப்படுத்துவது கற்றறிந்தோர் கடமையாகும்.

This demonstrates an important difference between apa and essays online to http://order-essay-online.net mla stylethe information provided to the reader

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வள்ளலாரும் பழந்தமிழ் இலக்கியமும்”

அதிகம் படித்தது