மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

என்கையே எனக்கு உதவி

ஆச்சாரி

Jun 28, 2014

enkaye 8“கல்யாண சமையல் சாதம்

காய்கறிகளும் பிரமாதம்”

என்ற பாடலின் காட்சியைப் பார்க்கும் பொழுது நாக்கில் நீர் ஊறும். “என்னப்பா நீ எப்டி இங்க” என்று தெரிந்தவரைப் பார்த்து கேட்கும்பொழுது வரும் பதில் “எல்லாம் வயித்துப் பிழைப்புக்குத்தான்”என்ற பதில்தான் வரும். ஏன் இன்று வெளிநாட்டில் போய் உட்கார்ந்து சொந்தத்தையெல்லாம் விட்டு பணம்தான் வேண்டும் என்று போகிறவர்களும் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

வேளைக்கு சரியாக சாப்பிடாமல் உடல்நிலையை கெடுத்துக் கொண்டு சம்பாதிக்கிறோம். அப்படி சம்பாதித்த பணத்தை உடல்நிலையை சரிசெய்துகொள்ள செலவழிக்கிறோம்,இன்றைய நிலை இதுதான். நினைத்துப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. இதில் குடும்பத்தை விட்டு வேலைக்காக வந்து சரியான உணவு கிடைக்காதவர்களை நினைத்துப் பார்த்தால் எதற்கு இந்த வேலை என்றுதான் தோன்றும்.

நேற்றுவடித்து மீதமிருந்த சோற்றுடன் தக்காளி சாஸை வைத்து சாப்பிட்டு விட்டு வாந்தி எடுப்பவர்களையும், நூடுல்ஸை சாப்பிட்டு கோளாறு வந்தவர்களும் தான் இன்றுள்ள பெரும்பான்மையானவர்கள். இவர்கள் சற்று முயன்றால் ஓரளவு இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

திருமணமாகாத, திருமணமான ஆண்,பெண் இருவருக்கும்தான் இது. குடும்பத்தைவிட்டு வெளியில் தனியாக இருப்பவர்களுக்காக சில எளிய மதிய உணவு முறைகளை கொடுத்துப்பார்ப்போம் என்றுதான் இந்த முயற்சியை எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

முதலில் சமைக்க வேண்டியவர்களுக்கு வேண்டியது.

சமைக்க வேண்டும் என்ற எண்ணம், பிறகு சற்று பொறுமை இவை இரண்டும் இருந்துவிட்டால் நாளடைவில் நளனாக மாறிவிடலாம்.

முதலில் சாதம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.

enkaye 2-1

200 கிராம் அரிசிக்கு 3 கோப்பை தண்ணீர் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையும் கலந்து குக்கரில் வைத்து 3 சத்தம் வரும்வரை வைத்து பிறகு திறந்தால் உதிர் உதிரான மல்லிகைப்பூப் போன்ற சாதம் தயார்.

தயாரான சோற்றை ஒரு தட்டில் பரவலாக வைத்து ஆறவிட வேண்டும். இப்பொழுது அடிப்படையான சோறு தயார்.

1.சீரக சாதம்:

enkaye 3

சீரகம் – 4 தேக்கரண்டி

மிளகு –½தேக்கரண்டி

உப்பு –தேவையான அளவு

இம்மூன்றையும் அரவை இயந்திரத்தில் பொடிசெய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியின் மேல் நன்றாக சூடுபடுத்திய நெய் 3 தேக்கரண்டி விட வேண்டும். நெய்யில் பொரிந்த சீரகத்தூளை சாதத்தில் கலந்து சாப்பிட சீரணக்கோளாறுகள் சரியாகும்,சாப்பிடவும் ருசியாக இருக்கும். சிதம்பரம் நடராசர் கோவிலில் இதைத்தான் “சம்பா சாதம்”என்ற பெயரில் கொடுப்பார்கள்.

2. தக்காளி சாதம்:

enkaye 4

வெங்காயம் – இரண்டு

தக்காளி – இரண்டு

எண்ணெய் – 4 தேக்கரண்டி

கடுகு –சிறிது

கடலைப்பருப்பு –சிறிது

மிளகாய்த்தூள் – ¼தேக்கரண்டி

உப்பு –½ தேக்கரண்டி

வெங்காயத்தையும்,தக்காளியையும் பொடியாக நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு தாளித்து அதிலேயே வெங்காயத்தை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். பிறகு தக்காளியை போட்டு மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இந்தக் கலவையில் ஆறவைத்து இருக்கும் சாதத்தை போட்டு மெதுவாக கலக்க வேண்டும். தக்காளி சாதம் தயார்.

3. எலுமிச்சை சாதம்:

enkaye 5

எலுமிச்சம் பழம் – 2

மஞ்சள்தூள் – ¼தேக்கரண்டி

எண்ணெய் – ½தேக்கரண்டி

கடுகு –சிறிது

கடலைப்பருப்பு –சிறிது

கருவேப்பிலை –சிறிது

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,கருப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள்,உப்பு,பெருங்காயத்தூள் போட்டு வைக்கவும். தாளித்த சாமான்களை இந்தப் பாத்திரத்தில் போடவேண்டும். பிறகு இதில் எலுமிச்சம் பழங்களை,விதைகளை நீக்கிவிட்டு சாறை பிழியவும். இந்தக் கலவையில் தயாராக உள்ள சாதத்தை கலந்து விடவும். மிக சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

4. தயிர் அவல்:

enkaye 7

அவல் – 150 கிராம்

எண்ணெய் – 3 தேக்கரண்டி

கடுகு –சிறிதளவு

கருவேப்பிலை –சிறிதளவு

தயிர் – 2 கப்

உப்பு – சிறிதளவு

அவலை நன்றாக களைந்து அவல் நனையும் வரை தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை இரண்டையும் தாளிக்கவும். தாளித்த சாமான்களை இரண்டு கப் கடைந்த தயிரோடு போட்டு தேவையான உப்பு போட்டு கலக்கவும். ஊறிய அவலை நன்றாகப் பிழிந்து தயிருடன் கலந்து வைக்கவும். சுவையான தயிர் அவல் தயார்.

5. வெண்பொங்கல்:

enkaye 6

அரிசி – ¾டம்ளர்

பாசிப்பருப்பு – ¼டம்ளர்

சீரகம் – 2 தேக்கரண்டி

மிளகு – ¼தேக்கரண்டி

மஞ்சத்தூள் – ஒரு சிட்டிகை

நெய்யில் வறுத்த முந்திரி,கறிவேப்பிலை –சிறிது

உப்பு –தேவைக்கு

அரிசி,பாசிப்பருப்பு,சீரகம்,மிளகு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து மஞ்சத்தூள் போட்டு 4 டம்ளர் தண்ணீர் தண்ணீர்விட்டு குக்கரில் 4 விசில் வரும்வரை வைக்கவும். ஆவிபோனதும் குக்கரை திறந்தால் பொன்னிற பொங்கல் மணக்கும். அதில் தேவைக்கு உப்பு,நெய்யில் வறுத்த முந்திரியும்,கறிவேப்பிலையும் கலந்தால் வெண்பொங்கல் தயார்.

Student has not made a significant contribution to the research study other than data look here collection

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என்கையே எனக்கு உதவி”

அதிகம் படித்தது