மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

என் கையே எனக்கு உதவி – பகுதி 2

ஆச்சாரி

Jul 5, 2014

உடலாலும்,மனதாலும் உழைப்பவர்களுக்கு வெறும் அரிசிச்சோறு மட்டும் சாப்பிட்டால், தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது அல்லவா? எனவே சோற்றுடன் சாப்பிடக்கூடிய சில எளிதான செய்முறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

காய்கறி பச்சடி:

enkaye2-1

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் – பாதி

கேரட் – 1

வெங்காயம் – 1

வெள்ளரிக்காய் – பாதி

தக்காளி – 1

மாதுளம்பழம் – 1

மிளகுதூள் – ஒரு சிட்டிகை

உப்பும் – அரை தேக்கரண்டி

எலுமிச்சம்பழம் – ஒன்றில் பாதி

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்ட காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியின் உள் இருக்கும் விதைப் பகுதியை நீக்கி தோலுடன் கூடிய சதைப் பகுதியையும் பொடியாக நறுக்கிக் இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையில் பாதி மாதுளம்பழத்தையும் உதிர்த்து கலக்க வேண்டும். மிளகுதூளும்,உப்பும் கலந்து ஒரு மூடி எலுமிச்சம் பழமும் பிழிந்தால் சுவையான சாலட் தயார்.

இந்த கலவையுடன் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். முளைக்கட்டிய பயிறு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தயிர் பச்சடி:

enkaye2-7

தேவையான பொருட்கள்:

தக்காளி – 1

பச்சைமிளகாய் – 1

உப்பு –தேவையான அளவு

தேங்காய் துருவல் – ஒரு தேக்கரண்டி

தயிர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தக்காளி மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி லேசாக எண்ணெயில் வதக்கி ஒரு கரண்டி தயிரில் சிறிது உப்பும் போட்டு கலக்கவும். அதனுடன் தேங்காய் துருவலும் கலக்க சுவையான தயிர் பச்சடி தயாராகி விடும்.

தக்காளி பச்சடி:

enkaye2-2

தேவையான பொருட்கள்:

கடுகு –சிறிது

கடலைப்பருப்பு –சிறிது

தக்காளி – 1

வெங்காயம் – 1

சாம்பார் பொடி – 1 தேக்கரண்டி

உப்பு –தேவையான அளவு

கொத்தமல்லி இலை –சிறிது

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு தாளித்து வெங்காயத்தை நறுக்கி பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளியையும் நறுக்கி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் 1 தேக்கரண்டி சாம்பார் பொடி,தேவைக்கான உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு நன்கு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாகக் கொதித்தபின் பச்சை கொத்தமல்லியை நறுக்கி போட்டு சோற்றுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

இனிப்பு மாங்காய் பச்சடி:

enkaye2-3

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1

வெல்லம் – 1 தேக்கரண்டி

அரிசிமாவு – 1 தேக்கரண்டி

கடுகு –சிறிது

மிளகாய் வற்றல் – 1

செய்முறை:

மாங்காயை தோல்சீவி துண்டுகளாக்கி,ஒரு தம்ளர் தண்ணீரில் வேகவிடவும். மாங்காய் வெந்ததும்,ஒரு கரண்டி அளவு பொடி செய்த வெல்லத்தை போட்டு கரைந்ததும்,ஒரு தேக்கரண்டி அரிசிமாவை சிறிது நீர் விட்டு கரைத்து மேற்சொன்ன கலவையில் விட்டு அடுப்பை சிறியதாக எரியவிட்டு கொதிக்க விடவும். அரிசி மாவு விட்டு கொதித்ததும் ஓரளவு கெட்டியாக பாகு பதத்திற்கு வந்துவிடும் இந்த இனிப்பு மாங்காய் பச்சடி. இதில் சிறிது கடுகும்,மிளகாய் வற்றலும் தாளிக்க சுவையோ சுவைதான்.

அவல் உப்புமா:

 enkaye2-4

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1

பச்சைமிளகாய் – 1

தக்காளி – 1

குடைமிளகாய் – 1

காரட் – 1

உருளைக்கிழங்கு – 1

பச்சை பட்டானி – 1 கோப்பை (கைப்பிடியளவு)

வறுத்த வேர்கடலை – 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

அவல் – ஒரு கோப்பை

எலுமிச்சம்பழம் – ஒரு மூடி

சீரகம் – ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை:

வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, குடைமிளகாய், காரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டானி, வறுத்த வேர்கடலை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி நன்றாக உப்பு, மஞ்சள் பொடி போட்டு வதக்க வேண்டும். வதக்கிய காய்கறிகளுடன் நன்கு களைந்து ஊறவைத்த அவல் சேர்த்து,ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிந்தால் சுவையான காலை உணவு தயார். ஒரு தேக்கரண்டி சீரகம் தாளித்து சிறிது பச்சை கொத்தமல்லியும் நறுக்கி போட சுவை இன்னும் அள்ளும்.

முந்தைய வாரம் சொன்னது போல அடிப்படையான சோறு தயாரித்து வைத்துவிட்டு, அதனுடன் சேர்த்து சாப்பிட சில பொடி வகைகள் தயார் செய்யும் முறையை இப்பொழுது பார்க்கலாம்.

பருப்பு பொடி:

enkaye2-5

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு – 200 கிராம்

மிளகாய் வற்றல் – 4

பெருங்காயத்தூள் – ½தேக்கரண்டி

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் வெறும் வாணலியில் போட்டு நன்றாக சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து,ஆறியதும் அரவை இயந்திரத்தில் போட்டு ரவை பதத்திற்கு பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். இதை அப்படியே சோற்றில் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். முடிந்தால் கடுகு,கறிவேப்பிலை,முந்திரி பருப்பு நெய்யில் தாளித்து பொடியுடன் கலந்துவைத்துக் கொள்ளலாம்.

தனியா பொடி:

enkaye2-8

தேவையான பொருட்கள்:

தனியா – 100 கிராம்

கடலைப்பருப்பு – 50 கிராம்

உளுந்தம்பருப்பு – 50 கிராம்

மிளகாய் வற்றல் – 4

பெருங்காயத்தூள் – ½தேக்கரண்டி

உப்பு –தேவையான அளவு

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை வாணலியில் தனித்தனியாக சிறிது எண்ணெய் விட்டு நன்கு வாசனை வரும்வரை சிவக்க வறுக்க வேண்டும். வறுத்த சாமான்களுடன் தேவைக்கு உப்பு சேர்த்து அரவை இயந்திரத்தில் பவுடராக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியும் சோற்றில் சாப்பிட சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை பொடி:

enkaye2-6

தேவையான பொருட்கள்:

உதிர்த்த பச்சை கறிவேப்பிலை – 1 கோப்பை

கடலைப்பருப்பு – 50 கிராம்

உளுந்தம் பருப்பு – 50 கிராம்

மிளகாய் வற்றல் – 2

மிளகு – 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் – ½தேக்கரண்டி

 செய்முறை:

மேலே கொடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் வாணலியில் எண்ணெய் விட்டு தனித்தனியாக நன்றாக வறுக்க வேண்டும். கறிவேப்பிலையும் ஈரம்போக வறுக்க வேண்டும். தேவைக்கு உப்பு சேர்த்து அரவை இயந்திரத்தில் நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். இதுவும் சோற்றுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ரசம்:

enkaye2-9

தேவையான பொருட்கள்:

தக்காளி – 1

மிளகாய் வற்றல் -1

மிளகு –½தேக்கரண்டி

தனியா – 2 தேக்கரண்டி

துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக அரவை இயந்திரத்தில் போட்டு நன்றாக மிருதுவாக அரைத்து 1 தம்ளர் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் அளவு சற்று குறைந்து அரைத்த சாமான்கள் நன்றாக கொதித்த பின்பு மேலும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு மேலே நன்றாக நுரை வரும் பொழுது இறக்கி விடவும். நெய்யில் கடுகும், கறிவேப்பிலையும் தாளித்தால் திடீர் ரசம் தயார்.

When you don’t tell your child communication is important for http://www.besttrackingapps.com/ a good relationship between you and your teen, and we believe that talking to them about monitoring is the most effective and healthy way to maintain that relationship

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என் கையே எனக்கு உதவி – பகுதி 2”

அதிகம் படித்தது