மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயிர் வலி – காட்சிக்கு காட்சி!

ஆச்சாரி

Jul 5, 2014

uyirvali 1“நான் அளித்த பேரறிவாளனின் வாக்குமூலங்கள், நான் கொடுத்த அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதில் அவர் ‘எனக்கு இதுபற்றியெல்லாம் ஏதும் தெரியாது’ என்கிறவைகளை பதிவு செய்யவில்லை. இந்த வாக்குமூலத்தின்படியும் சரி, உளவுத்துறையிலுள்ள வேறெந்த ஆவணங்களிலும் சரி பேரறிவாளனின் மீது குற்றங்கள் நீரூபிக்கபடவில்லை. ஒருவர் அநியாயமாக தண்டிக்கப்பட்டதில் நான் ஒரு முக்கிய காரணம் என்பதனை எண்ணி வருந்துகிறேன்”

-திரு.தியாகராஜன்.ஐ.பி.எஸ்.

உயிர்வலி எனும் ஆவணப்படம்:

uyirvali 3இராசீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் திரு.பேரறிவாளன் அவர்களை மையமாக வைத்து, மரண தண்டனைக்கு எதிரான காட்சிப் போராட்டமாக, ‘மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின்’ படைப்பாக வெளிவந்துள்ளது.

இந்த ஆவணப்படத்தில், பேரறிவாளனின் வாக்குமூலத்தை டேப் செய்த சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் அவர்கள் மனம் வருந்தி சொல்லிய வார்த்தைகள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

23-ஆண்டுகால ஒரு நெடிய போராட்டத்தின், உயிர் ஊசலின் அரசியலையும், அயோக்கியத்தனங்களையும், அநீதிகளையும் கண்ணீர்த் துளிகளாகவே காட்சிகள் நகர்த்தியிருக்கின்றன.

இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் எந்தவித தொடர்பும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் சிறையும், மரணதண்டனையும் பெற்றுள்ளவர்களின் மீது இல்லை என்பது யாவரும் அறிந்த பட்டவர்த்தனம். ஆனாலும் நீதியை சனநாயகக் நாட்டில் எதிர்பார்க்கவே முடியவில்லை அல்லது முடிவதில்லை.

ஒரு ஆவணப்படத்திற்கே உரிய எல்லாக் கோணங்களோடும், பெரிய திரைக்கான வரவேற்பு காட்சிகளையும் அமைத்து ஒரு அழகியலை கொடுத்துள்ளனர். ‘docu-drama’ எனும் பட வகையில் அமைந்துள்ளது இந்த படம். அதாவது உண்மைகளை சில அழகியல் வேலைகளோடு வடிவமைத்துச் சொல்வது.

பிரகதீஸ்வரனின் இயக்கத்தில், பா.விஜயின் பாடல் வரிகளுக்கு குரல் தந்துள்ளார் உன்னி கிருஷ்ணன். மேலும் ஜேம்ஸ் வசந்த் இசையில் நகர்கிறது முழுப்படமும்.

இதுவரை மரண தண்டனைகளை தடை செய்துள்ள நாடுகளின் எண்ணிக்கையையும், உலகில் அதிகமாக மரணதண்டனையை அளித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலோடும் துவக்கமாகிறது. மரணதண்டனை நீதிக் கொலைகள் ஆகிய இரண்டையும் பற்றிய சிலவற்றை பேசும் படம், இந்தியாவில் இதுவரையில் நடந்துள்ள, நிறைவேற்றியுள்ள மரண தண்டனைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாக வரிசைப்படுத்துகிறது. இறுதிக் காட்சிகளில், இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு பின்னரான காலங்களில் நிரபராதி எனவும், அக்கைதி தூக்கிற்கு உகந்தவரல்ல என்று அறியப்பட்டவர்களின் விவரங்களையும் விவரிக்கின்றது. இதில் ஏனோ எந்தவித ஆதாரங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், வெறும் கூட்டு மனசாட்சி என்கிற விநோத முடிவில் தூக்கு பெற்ற அப்சல் குருவை நினைவு கூறவில்லை?

நீதியரசர்.கிருஷ்ணய்யரின் எதிர்ப்புக் குரலோடு, இவ்வழக்கில் தூக்கு தண்டனையை வழங்கி தீர்ப்பு அளித்த நீதிபதி.கே.டி.தாமஸின் மன உறுத்தல்களையும், தீர்ப்பு சரியானது இல்லை என்கிறதினை அவரின் வார்த்தைகளில் இருந்தே பதிவு செய்துள்ளனர். மேலும் இதில், ‘வாழும் கலையின்’ திரு.ரவி-சங்கர் அவர்களும் தன்னுடைய எதிர்ப்புக் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

மக்களிடம் எடுக்கப்பட்டுள்ள கருத்துக்களில் பலரும் தூக்கு தண்டனைக்கு எதிராகவும், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான விடுதலையையுமே வேண்டுகின்றனர். மக்களில் ஒருவர் இப்படிச் சொல்கிறார்: “தவறே செய்திருந்தாலும் கூட மன்னிப்புண்டு, இத்தனை ஆண்டுகாலம் சிறை முறையானது இல்லை” என.

தமிழகத்தின் முதலமைச்சர்.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின், கருணை மனு மீதான மறுபரிசீலனைக்கான சட்டமன்ற தீர்மான வாசிப்புக் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனடுத்து சமீபத்தில் இவர் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாகவும், மேலும் கால அவகாசங்களை கொடுத்து விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்றிய தீர்மானங்களெல்லாம் இதன் பின்னால் நிகழ்ந்தவைகள்.

uyirvali 2மரண தண்டனைக்கு அநீதமாக ஆளானது பேரறிவாளன் மட்டுமில்லை என்றாலும், இவர் மூலம் படம் எல்லோருக்குமான குரலை எழுப்புகின்றது. பேரறிவாளனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி என பல முகாந்திரங்களில் அவருக்கு இருந்த திறன், நல்ல குணங்களை படம் பிடித்ததோடு, அவரின் சிறை வாழ்க்கையில் அவரின் மனிதாபிமான நடவடிக்கைகளையும், நன்னடத்தைகளையும், சீரிய திறன்களையும், சிறைத்துறை அதிகாரிகள் வாயிலாகவும், சிறைக் கல்லூரி பேராசிரியர்கள் வாயிலாகவும், தன்னோடு சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியிலுள்ள சிறைத் தோழர்கள் வாயிலாகவும் அடுக்கடுக்காக பதிவு செய்துள்ளனர்.

பேரறிவாளனின் ஆசிரியர்கள், உடன் பயின்றவர்கள் போன்றோர்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதைகளை படம்பிடித்து அப்படியே அவருக்காக இன்னும் உயிர்ப்போடு போராடிக் கொண்டிருக்கும், அவரின் அம்மா, அற்புதம் அம்மாவின் வலியான வார்த்தைகளும், போராட்டச் செயல்களும் கூறப்படுகின்றன. மேலும் அவரின் உடன் பிறந்த சகோதரிகள், சகோதரிகளின் கணவர்கள் ஆகியோரின் கண்னீர்களையும், அவரின் அப்பா குயில்தாசனின் குரலையும் வலியோடு காட்டுகிறது காட்சித் திரை.

சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு ஆதரவாக தமிழக வீதிகளில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின், அமைப்புகளின் போராட்டக் களங்களின் காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரறிவாளனின் உடன் இருந்து வெளிவந்துள்ள ஒரு முன்னாள் சிறைவாசி இப்படிச் சொல்கிறார்; ‘வெளியில இருந்து தப்பு செஞ்சிட்டு உள்ள போனேன், உள்ள போயி ஒரு நல்ல மனிதரோட பழக்கத்தால இப்போ நல்லபடி வாழ்ந்திட்டு இருக்கேன்’ என்றும், இன்னொருவர் சொல்கிறார்; ‘எனக்கு படிப்பெல்லாம் எதுக்கு என்றேன், அவர்தான் படி படினு சொல்லி படிக்க வச்சாரு, நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகி வெளிய வந்தேன்’ என்றவாறு.

ஏன் இப்படி பம்பரமாக ஓடுகிறீர்கள் எனக் கேட்ட தோழரிடம், உங்களைப் போன்று எனக்கில்லை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரைதான் என்னை வெளியில் விடுவார்கள் என சொல்லிவிட்டு, இப்படிச் சொன்னாரம் பேரறிவாளன். “நான் நிலவினைப் பார்த்து பல்லாண்டு காலம் ஆகிவிட்டது” என…!

‘சோ’ வென்று வீசும்

உணதோசை

‘சா’ வறியா அந்த

நாட்களைக் கேட்கிறது

நனெங்கே போவேன்

ஆகையால்

மழையே

திரும்பிப் போய்விடு”

இது மழைக்காலத்தில் சிறையில் பேரறிவாளன் எழுதிய ஒரு நெடுங்கவிதையில் சில வரிகள். மழையே திரும்பிப் போயிவிடு எனும் இம்முழுக்கவிதையும் திரையில் நனைந்தது.

ஒரு நீதியின் அபயக் குரலை அப்படியே படம்பித்துக் காட்டியுள்ளது இந்த ஆவணப்படம். நான் மேலே சொல்லியுள்ளபடி விடுபட்டுள்ள அப்சல் குருவின் விடயம் மட்டுமே ஒரு சின்ன மறதியாக பார்வையாளனின் புறமிருந்து சொல்லிக் கொள்கிறேன்.

“உயிர் வலி” காட்சிக்கு காட்சி கண்ணீரோடு கடக்கின்றது. ஒரு உயிரைக் காப்பாற்றும் பணியைக் கொண்டுள்ள இவ்வாவணப்படத்தை எடுத்துள்ள படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

The introduction why not discover more to the dissertation should set out the background to the research study and address the following areas the context in which the research took place what is the background, the context, in which the research took place

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயிர் வலி – காட்சிக்கு காட்சி!”

அதிகம் படித்தது