மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வேட்டிக்கு வந்த வேதனை; வீட்டுக்குத் திரும்பாத விருந்தாளிகள்

ஆச்சாரி

Jul 19, 2014

vettikku vandha vedhanai1இருநூற்றாண்டுகளாய் இன்னொருத்தனிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய தேசம், சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தி 66 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. பிரிட்டிசு வகையிறாக்கள் வெளியேறிவிட்டாலும் கூட இத்தேசத்தில் அடிமை விலங்கு அகலவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பிரிட்டிசு சென்றாகிவிட்டது, ஆனால் இங்கு சுதந்திரம் என்பது எள்ளளவும் இல்லை என்பதுவே மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உண்மை.

பிரிட்டிசு வெளியேறிவிட்டாலும், அவர்களின் வழமையான நடவடிக்கையாக அவர்களின் கைப்பாகைகளை ஆட்சியில் அமர்த்திவிட்டுத்தான் சென்றனர். அவ்வகையில்தான் காங்கிரசு இங்கு பிரிட்டிசு கையாளாக தனது அரசைத் தொடர்ந்தது. இதே நிலையில் சற்றும் மாற்று இல்லாது காங்கிரசின் வெளிப்படையான முகமாக உதயமானதுதான் பாரதிய ஜனதா கட்சி. இவர்களின் தலைமை ஆர்.எஸ்.எஸ். இதனின் மூல மந்திரம் ‘இந்து,இந்தி,இந்தியா’ என்பது. அதாவது இந்துத்துவம். இப்படி இத்தேசத்தை பிரிட்டிசிற்குப் பிறகு ஆண்டவர்கள், ஆண்டு கொண்டிருப்பவர்கள் யாரென்பது நமக்கு நன்றே தெரிந்துள்ளது. உலக அரங்கில் இந்தியன் என்றால் ஏமாளி, என்பதும், இந்திய அரங்கில் தமிழன் இளிச்சவாயன் என்பதும் இங்கு எழுதப்படாத நிலைப்பாடுதான்.

இந்தியாவை பிடித்து உலுக்கும் ஆரியத்தினை எதிர்த்து நிற்பது தமிழினம் என்கிற வகையில், இந்தியா தமிழகத்தை ஒழிக்க நினைப்பது, தமிழர்களை அழிக்கத் துடிப்பது என்பதானவைகளானது இன அடிப்படையிலான எதிர்வினைகள். இந்த ஆரியமும் சரி, பிரிட்டிசும் சரி பாசிச ஏகாதிபத்தியவாதிகள் என்பது பட்டவர்த்தனமானவைகள். ஏகாதிபத்தியங்களுக்குள் என்றுமே ஒரு சுமூக இணக்கம் இருந்து வருவதுதான் வரலாற்று உண்மை. இந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, அல்லது ஒரு போலியான இனத்திற்கு எதிராக, அல்லது இம்மண்ணிற்கே சொந்தமில்லாதவர்களுக்கு எதிராக என்றுமே தமிழினம் நிற்கும். எப்படியும் தம் மண்ணை உரிமை கொண்டாடி எழுவார்கள் என்பதாலேயே, தமிழர்கள் பல குறிகளில் குறிவைத்து அடிக்கப்படுகிறார்கள், இன அழிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது திண்ணம். இதே வகையில்தான் ஆரியத்திற்கு, இந்தியத்தை விட்டு தங்களின் தேசத்தைக் கேட்கும் காசுமீரிகளும்,. இதேபோலத்தான் தங்கள் மண்ணை கேட்டு உயிர்விட்டுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களும், இஸ்ரேலுக்கு.

ஆக உலக அரங்கில் குறிப்பிட்ட சில இனங்களை அழிப்பது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. நம் தாய் தமிழகமும் அதற்கு இரையாகிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்துதான், தமிழக கிரிக்கெட் மன்றம் சமீபத்தில் வேட்டிக்கு காட்டிய தடாவைப் பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த 11-07-1014 அன்று மாலை, சென்னை சேப்பாக்கத்திலுள்ள, தமிழ்நாடு கிரிக்கெட் மன்றத்திற்கு, முன்னாள் நீதிபதி எழுதிய ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பின் பேரில், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பரந்தாமனும் மற்றும் இரண்டு வழக்கறிஞர்களும் ‘வேட்டி’ அணிந்து கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் வேட்டி கட்டிக் கொண்டு மன்றத்திற்குள் நுழையக் கூடாது என மன்றக் காவலர்கள் தடுத்து திருப்பியும் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, தமிழர்களின் பாரம்பரியத்துக்கு பெருத்த அவமானமாக அனைத்து தமிழர்களாலும் பார்க்கப்பட்டு, கண்டனத்திற்கு உள்ளானது. ஆனால் இதனை வெறுமனே அப்படிப் பார்த்து கடந்துவிட இயலாது. கிரிக்கெட் என்பது இங்கிலாந்தின் பொருள். இவர்களின் நாகரீகம், கலாச்சாரம், மரபு என்பவைகளெல்லாம் நமக்கு கிஞ்சிற்றும் ஒவ்வாத ஒன்று. இவர்கள் தங்கள் பொருளை இங்கு சந்தைப்படுத்துவதன் வாயிலாக அவர்களின் நடைமுறைகளைத் திணிப்பதானது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டுவரும் தந்திரங்களில் ஒன்றுதான்.

vettikku vandha vedhanai8ஆங்கிலம் என்பது எப்படி ஒரு அறிவு என்கிற வட்டத்தைக் கடந்து, ஒரு கெளரவம் என்கிற தோற்றம் இங்கு விதைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறதோ, அதற்கு நிகர் இந்தக் கிரிக்கெட் எனும் விளையாட்டையும் சொல்லலாம். விளையாட்டுகள் பொழுதுபோக்கு மற்றும் உடல்கூறுகளுக்கான பயிற்சி என்கிற நிலை கடந்து, அரசு இவைகளை வாணிபமாக்கியதில் தொடங்குகிறது இந்த முரண்கள். விளையாட்டை வியாபாரமாக்க, அவைகளை ஊதிப் பெரிதாக்கி, விளையாடுபவர்களை ஆகப்பெரிய நாயகர்களாக்கி, ஒருவித மனநிலையை மக்கள் மத்தியில் உண்டுபண்ணி வைத்துள்ளது அரசு. முன்னர் மன்னர் ஆட்சிக் காலங்களில், மக்கள் துயர், பஞ்சம், பட்டினி காண நேரிடும்போது அவர்களுக்கு இரவுக் கூத்துக்களை, நாடகங்களை ஏற்பாடு செய்து திசை திருப்பிவிடுவார்கள், அதே வழமைகளைத்தான் சனநாயக அரசுகளும் கையிலெடுத்துக் கொண்டுள்ளன, சில கால மாற்றங்களுக்கு உட்பட்டு.

vettikku vandha vedhanai5இதனையெல்லாம் விட அரசு இதுபோன்ற விளையாட்டுகளில் பெற்றுள்ள அசைக்க முடியாத வெற்றியானது, விளையாட்டிற்குள் தேசிய உணர்வை வளர்த்து வைத்திருப்பதுதான். விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியா, பாகிஸ்தான் விளையாடினால் எதோ இருநாட்டு இராணுவங்களுக்கு இடையேயான போரைப் போல ஊதித் தள்ளுகின்றன ஊடகங்கள். நம் இன இளையோர்களும் அப்படியே மகுடி ஊதிய பாம்பாக, தங்கள் வீட்டிற்குல் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தேசிய கீதம் பாடத் தொடங்கிவிடுகிறார்கள். இதில் பல நுட்பமான அரசியல்கள் அடங்கியிருப்பதைத்தான் நாம் காண வேண்டியுள்ளது. ஒன்று இதன் மூலம் தங்களின் கலாச்சாரத்தைத் திணிக்கும் அந்நியர்களின் சூழ்ச்சி, தம் மக்களை திசை திருப்பி மூளை மழுங்கியவர்களாக ஆக்கி, தங்களுக்கான இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளும் நமது அரசின் நரித்தன ஆகியன இதில் அடங்கியுள்ளன. இதெல்லாம் கிரிக்கெட் போன்று இன்னும் சிலவற்றுக்கு பொருந்தும். இக்கட்டுரையின் மைய நோக்கம் இதுவல்ல எனினும் இது இவற்றைப் பேசுகிற பொழுது வந்து விழக்கூடிய சாரல் துளிகள் அல்லது துணை அரசியல்கள்.

சரி விடயத்திற்கு வருகிறேன்…!
சமீபத்தில் தமிழக கிரிக்கெட் மன்றம் செய்த வில்லத்தனத்தை மேலே நான் குறிப்பிட்டிருந்தேன். இதுதான் இக்கட்டுரையின் பேசு பொருளும் கூட. கிரிக்கெட் மன்றத்தின் இந்தச் செயல்பாடு, அப்பட்டமான மேலை நாட்டுச் சிந்தனையில் உதித்த ஒன்றாகும். வேட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்றாகும். வேட்டிக் கட்டிக் கொண்டு தங்களது மன்றத்திற்குள் நுழையக் கூடாது என்று சொல்வதிலிருந்து புரிகிறது இதன் பின் இவர்கள் கொண்டுள்ள அரசியல் போக்கு. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கே இப்படி எனில் சாமானியர்களுக்கு அந்நியக் கைகூலிகள் என்ன மாதிரியான மரியாதைகளைச் செய்யப் போகிறார்கள்?

வெளிநாட்டுச் சரக்கிற்கு இங்கு கடை போட்டுக் கொண்டு, அதில் நுழைய இங்குள்ளவர்களுக்கே கட்டுப்பாடுகள் விதிக்கும் போக்கு, அவமானப்படுத்தும் போக்கில் மறைமுகமாய் செயல்படுவது ஆக்கிரமிப்பு அரசியலேதான். ஆக்கிரமிப்பு நடந்தால் அழிப்பு தவிர்க்க இயலாதது. ஆக ஆக்கிரமிப்பு மீண்டும் அந்நியனுடையதாகவும், அழிப்பு இம்மண்ணின் மைந்தர்களாவும் இருக்கிறார்கள் என்பதுதான் வேட்டி கிளப்பியுள்ள அரசியலில் உள்ளது.

vettikku vandha vedhanai6இறுதி ஈழப்போருக்குப் பிறகு, தமிழ்ப்பகுதிகளில் உள்ள, தமிழீழப் பெண்களை திருமணம் செய்யும் சிங்கள இராணுவவீரர்களுக்கு சிறப்பு பதவிகள், பணமுடிப்புகள் வழங்கப்படும் என சிங்கள அரசு தெரிவித்தது. இதன் உள்குத்து என்ன?                                   இனக் கலப்புதான். ஆயுதம் தூக்கி ஒரு இனத்தை அழிப்பது ஒருவகையெனில், ஒரு இனத்தோடு இன்னொரு இனத்தைக் கலந்து அதன்மூலம் சிறுபான்மை இனத்தை இல்லாமல் ஆக்குவது என்பது குள்ளநரி வம்சத்தின் இன்னொருவகை இன அழிப்பாகும். அந்தவகையில் சிங்களர்கள், தமிழ்ப் பெண்களை திருமணம் செய்து அதன்மூலம் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள வாரிசுகளைப் பெருக்கிவிட்டால், நாளடைவில் தமிழர்கள் எனப்படுவோர் அங்கு யாருமே இருக்க முடியாது. பிறகு எப்படி அடுத்த தலைமுறையினர் இனப் போரட்டத்தினை நடத்துவார்கள்? எந்த இனத்திற்கான போராட்டத்தினை முன்னெடுப்பார்கள்?

இதே இன அழிப்புக் கண்ணோட்டதிற்கு எவ்வித மாற்று கருத்துக் கொண்டதல்ல, தமிழகத்தில் அமர்ந்து கொண்டு, தமிழர்களின் பாரம்பரியங்களுக்கும், கலாச்சாரத்திற்கும் தடை போடுவது. சமீபத்தில் ஜல்லிக் கட்டு, தற்போது வேட்டி.

கிரிக்கெட் மன்றங்கள் மட்டுமல்ல, சென்னையிலுள்ள பல மகிழ் மன்றங்களிலும் இதேபோன்ற நிலைப்பாடுகள்தான் உள்ளன. ஆடை என்பது தனி மனித உரிமைகளுக்குள் ஒன்றான விடயம். ஆடை கட்டுப்பாடு எதேச்சதிகாரமானது, அப்பட்டமான தனி மனித உரிமை மீறல்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்லும் உரிமை அடுத்தவர்களுக்கு கிடையாது.

vettikku vandha vedhanai3ஏன் என் மன்றத்திற்கு என நான் சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளேன், இவைகளுக்கு உடன்பாடு எனில் உள்ளே வா, இல்லையேல் வராதே என்று மன்றங்கள் சொல்லலாம், அப்படிச் சொல்ல உரிமையும் உள்ளது. ஆனாலும் மன்றங்களின் உள் நிபந்தனைகளில் கூட வேட்டி கட்டி உள்ளே வரக் கூடாது என்று இல்லையே, நாகரீகமான உடைகள் அணிந்து வரவேண்டும் என்றுதானே உள்ளது. அப்படியெனில் இந்த நாகரீகத்தில் வேட்டி இல்லையோ?

அப்பொழுது நாகரீக உடை என்று இவர்கள் எதைச் சொல்கிறார்கள் கோர்ட் சூட், பேண்ட்களையா? வேட்டியில் என்ன நாகரீகம் இல்லை என்று கருதுகிறார்கள்? இல்லை வேட்டி தங்களின் நாகரீகம் இல்லை என கருதுகிறார்களா?

அப்பொழுது எங்கு அமர்ந்து கொண்டு, யாருடைய நாகரீகங்களை, அநாகரீகம் என்று சொல்கிறார்கள்? கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல 66 ஆண்டுகாலம் ஆகியும் விருந்தாளிகள் இன்னும் அவர்களின் வீட்டிற்குப் போகமல்தான் உள்ளனர் என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

ஏற்கனவே ஆங்கில மோகத்தைக் கட்டமைத்து வலுவாய் வைத்துக் கொண்டுள்ள சூழலில், மீண்டும் கட்சி மாற்றமாய், ஆள் மாற்றமாய் இந்தியாவில் வந்திருக்கும் புதிய அரசு, புதிய பிரதமர் இந்தித் திணிப்பில் முனைப்பு காட்டுகிறார் என்பது இன்னொருபுறம்.

முன்னர் சொன்னபடி, கிரிக்கெட் மன்றங்களில் மட்டுமில்லை இன்னும் பல பெரும் பல்பொருள் அங்காடிகளும், Mallsகளில் கூட இவைகள் செய்யப்பட்டுக் கொண்டுதான் உள்ளன. தங்கள் பகுதியில் தங்களின் வியாபாரத்தைத் துவங்கிய Mall ஒன்று, உள்ளே லுங்கி கட்டிக் கொண்டு வர விடாதபடியால், விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவஸ் தலைமையில் ‘லுங்கிப் பிரவேசம்’ என்று உரிமைப் போராட்டம் நடந்தது. நாம் இனி செய்ய வேண்டியதும் இவைகள்தான் நமது உடைகளுக்கு தடை என எந்த தனியார் மையங்கள் சொன்னாலும், நாம் அதற்குள் நமது பாரம்பரியத்தோடு நுழைவோம். யாருக்காகவும் நாம் நமது அடையாளங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.

vettikku vandha vedhanai711-07-2014 அன்று நிகழ்ந்த இந்த தமிழர் விரோதச் செயலுக்கு, கண்டனம் தெரிவித்து, 16-07-2014 அன்று தமிழக சட்டமன்றத்தில், தமிழக முதலமைச்சர்.ஜெயலலிதா அவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார், அதில்; இதுபோன்று வேட்டி கட்டிக் கொண்டு வருவதை அனுமதிக்காத மன்றங்களுக்கு தடைவிதிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். இதே விடயத்தை வைத்து முந்தைய திமுக அரசையும் ஒரு கிள்ளு கிள்ளி விட்டு தனது ஆதாயத்தையும் தேடிக் கொண்டார் என்பது, இங்கு பார்க்கப்பட வேண்டியது இல்லை.

வேட்டிப் பிரச்சனைக்கு பொங்கியுள்ள, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள முதல்வர் அவர்கள், கூடங்குளத்தில் இரண்டரை ஆண்டுகளாக போராடி வருபவர்களின் குரலுக்கு செவிமடுப்பதில்லை.

காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் அழிவுப் பொருளாதார திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஸ்டெர் லைட் ஆலைகளுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை. இப்படி நிறைய தமிழர் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கும் எதற்கும் இவர் வாய்திறக்கவில்லை. இராசீவ் காந்தி கொலை வழக்கில தண்டனை பெற்று வரும், நிரபராதிகளான பேரறிவாளன் உட்பட ஆறு பேரை வைத்து மிகவும் நன்றாக அரசியல் செய்தும், இதுபோன்ற வேட்டி பிரச்சனைகளில் அதிரடி தீர்ப்பு வழங்கியும் தன்னை தமிழர் நலனில் அக்கறை கொண்ட முதல்வராக காட்டிக் கொள்ள மட்டும் தவறுவதில்லை.

தமிழர்கள் இன்று நாம் மிக அதிகமாகவே நம் சுய அடையாளங்களை இழந்து நிற்கிறோம். ஈழத்திலே பீரங்கி முனையில் பொசுங்கினோம், இங்கோ வாழ்வாதாரங்களை இழந்தும், கலாச்சார மரபு அடையாளங்களை இழந்தும், வெளியேறப் போகிறோமோ? என்பவைகளை நாம்தான் எண்ணித் தெளிவடைய வேண்டும், ஏதோ வேட்டிப் பிரச்சனை என்கிற அளவில் இதனை கடத்திவிட முடியாது. இதில் உள்ள நச்சு நம்மைத் தாக்க பல காலமாகும், ஆனால் தாக்கப்படுவோம் என்பது மட்டும் உறுதியான ஒன்று.

A sample reference list is provided https://pro-academic-writers.com with the final draft of jorges paper later in this chapter

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வேட்டிக்கு வந்த வேதனை; வீட்டுக்குத் திரும்பாத விருந்தாளிகள்”

அதிகம் படித்தது